எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

பாவண்ணன்


சூத்திரங்களும் சுழற்சியும்

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து என் கதைகளை வாசித்து வரும் நண்பரொருவர் தொலைபேசியில் ஒருநாள் அவசரமாக அழைத்தார். ‘உங்கள் சமீபத்திய கதை கழிமுகம் படித்தேன் ‘ என்றார். அவர் குரலில் பதற்றம் தொனித்தது. தொடர்ந்து பெரு மூச்சுடன் ‘என்னால் இந்தக் கதையை மறக்க முடியவில்லை, திரும்பத் திரும்பப் படித்தபடி இருக்கிறேன். இப்போது ஆறாவது முறை ‘ என்றார். சில நிமிஷங்களுக்குப் பிறகு வைத்து விட்டார். மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்தார். பதற்றம் குறைந்தவராகத் தென்பட்டாலும் வந்தவுடனே கழிமுகத்தைப் பற்றிப் பேசத் தொடங்கி விட்டார். கழிமுகத்துக்கு முன்னர் நுாறு கதைகளுக்கு மேல் எழுதியாகி விட்டது. அவற்றுள் முக்கால் பங்குக்கும் மேற்பட்ட கதைகள் அவர் படித்தவையே. அப்போதெல்லாம் எத்தருணத்திலும் வெளிப்படுத்தாத உணர்வை அவர் அன்று வெளிப்படுத்தினார். அவரது அந்தரங்கத்தில் ஏதோ ஒரு புள்ளியை அக்கதை ஆழமாகத் தொட் டு விட்டது என்று உணர்ந்து கொண்டேன். அது போன்ற அவஸ்தையை அனுபவத்து அறிந்தவன் என்கிற முறையில் அவரையே பார்த்தபடி இருந்தேன். கழிமுகம் கதையில் வரும் சிவபாலனைப் போலவே அவரும் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறவர் என்கிற எண்ணம் தாமதமாகத்தான் என் மனத்துக்கு உறைத்தது. சட்டென அவரைப் பார்க்க வருத்தமாக இருந்தது.

‘வாங்க ‘ என்று தோளில் கைபோட்டு அணைத்தபடி வீட்டுக்கு அருகில் இருந்த பூங்காவுக்கு அழைத்துச் சென்றேன். அவர் தன்னிச்சசையாக மீண்டும் மீண்டும் ‘கழிமுகம் கழிமுகம் ‘ என்ற சொல்லைச் சொன்னபடி வந்தார். ‘ரொம்ப அழகான படிமம் ‘ என்று திடாரென என்னை நிமிர்ந்து பார்த்தார். பூங்கா வந்து விட்டது. உட்கார்ந்தோம். அவசரமாக அவர் கை சட்டைப் பைக்குள் இருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தது. முதல் இரண்டு இழுப்புகளை வேகவேகமாக இழுத்தவர் புகையையும் பெ முச்சையும் ஒருங்கே வெளியே அனுப்பியபின் மூன்றாவது இழுப்பை நிதானமாக இழுத்தார். பிறகு, மெல்லப் பேசினார்.

‘ஒருபக்கம் கடல், மறுபக்கம் ஆறு. இடையில் கழிமுகம். கழிமுகம் எதன் பகுதி ? கடலின் பகுதியா ? ஆற்றின் பகுதியா ? இரண்டுக்கும் இடையே உள்ள பொதுப்பகுதியா ? அழகான படிமம். எதன் பகுதியாக இருந்தால் என்ன ? கழிமுகம் இல்லையென்றால், ஆறு, கடல் இணைப்புக்குச் சாத்தியமில்லை. ஆறு போலவோ கடல் போலவோ ஒதுங்கிக் கிடக்கிறேன் நான் ‘

அவர் தலை கவிழ்த்து மெளனமாகப் புகையை மீண்டும் இழுத்து விட்டார். திரும்பிய போது அவர் பார்வை அருகிலிருந்த மரத்தில் பதிந்தது. அக்கிளையில் இரண்டு கிளிகள். கீச்கீச்சென்று அதன் மொழியில் ஏதோ சத்தம். ஏதோ ஒரு கேள்வி கேட்டு மற்றொன்று பதில் சொன்னதைப் போல. சட்டென ஒரு கிளி பறந்து போனது. கிளையில் இருந்த கிளி பறந்து போன கிளியின் திசையையே பார்த்துக் கொண்டிருந்தது.

‘பாவம் அக்கிளிகள் ‘ என்று தடுமாறினார் அவர்.

‘அந்தக் கிளி ஏமாற்றி விட்டுப் போகிறது. அதற்கு இதைப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதைத்தான் கீச்கீச்சென்று சொல்லிவிட்டுப் போகிறது. என் மனைவியும் அப்படித்தான் சொல்லிவிட்டுப் போனாள். அவளைப் போலவே இதுவும் வராது. பாவம், இந்தக் கிளி. ‘

அவர் குரல் தழுதழுக்கத் தொடங்கியது. கழிமுகத்தில் இருந்து அவர் மனம் கிளியில் படிந்து தடுமாறத் தொடங்கி விட்டது. அவரை அமைதிப் படுத்தி வீட்டுக்கு அனுப்ப அன்று முழுநாளும் நான் அவருடன் செலவிட வேண்டியிருந்தது.

அன்று முதல், எந்த மரத்தில் எந்தக் கிளியைப் பார்த்தாலும் அவர் உருவம் நினைவுக்கு வருகிறது. தனிமைக் கிளி என்பது மாறி தனியாக உட்கார்ந்திருக்கிற எந்தப் பறவையைப் பார்த்தாலும் அவர் நினைவு மூண்டெழுகிறது. தனிமைப் படிமமாக அவருடைய படிமம் மனசில் பதிந்து விட்டது. ஆட்களின் முகங்களும் சம்பவங்களும் மட்டுமல்லாமல் படிமங்களாகவே மனத்தில் பதிந்திருக்கின்றன. அப்படிமப் பொருள் கண்ணில் படும்போதெல்லாம் அக்கதை மனசில் விரிந்து விடுகிறது. மனத்தில் பல விஷயங்கள் இப்படித்தான் படிமங்களாகப் படிந்து கிடக்கின்றன. ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு பொருளைப் பார்க்கும் போதெல்லாம் அப்பொருளோடு தொடர்புபடுத்தி ஞாபகம் வைத்துக் கொண்டிருந்த படிமம் விரிவடையத் தொடங்குகிறது.

சாதாரண மிக்ஸி, கிரைண்டரைப் பார்த்தால் கூட நினைவுக்கு வந்துவிடக் கூடிய கதை புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘ . அந்தப் படிமம் அந்த அளவுக்குச் சகலருக்கும் பொருந்தக் கூடிய அளவுக்கு வசீகரத்தைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.

மனிதனை யந்திரமாகச் சுட்டும் படிமம் பலவித எண்ண அலைகளை எழுப்புகின்றன. யந்திரம் மனிதனால் உருவாக்கப்பட்டது. பல மனிதர்கள் கூடிப் பல நாட்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு யந்திரம் செய்து முடித்து விடுகிறது. மனிதனும் ஒரு யந்திரம் என்றால், இந்த மனிய யந்திரத்தை உருவாக்கியது யாராக இருக்கும் ? எந்த வேலைகளை விரைவில் முடிக்க அல்லது எந்தச் சாதனையைச் செய்ய இந்த மனிய யந்திரம் உருவாக்கப்பட்டது ? இக்கேள்வியின் எல்லை விரிவாகும் இடத்துக்கு நாமும் நகர்ந்து விடுகிறோம்.

எல்லா யந்திரத்துக்கும் ஒரு தொழில் நுட்பம் உண்டு. அந்தச் சூத்திரப்படியே மாறாமல் இயங்குகிறது யந்திரம். அதற்குக் களைப்பு இல்லை. சலிப்பும் இல்லை. ஒரு தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள யந்திரம் நாள்முழுக்க இயங்கிக் கொண்டே இருக்கிறது. யந்திரங்களை இயக்கிப் படிய வைக்கும் சூத்திரங்களைப் போல மனிதர்களை இயக்கிப் படிய வைக்கும் சூத்திரங்கள் எவை ? ஏன் அவை ஒருபோதும் மாறுவதில்லை ? மாறிக் கொண்டே இருக்கிற மனம் மாறாத சூத்திரத்துக்கு எப்படிக் கட்டுப்படுகிறது ? மனம் தன் சுபாவமான எழுச்சிகளையெல்லாம் அடக்கிக் கொண்டு ஏன் சூத்திரங்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் ? அது என்ன மாதிரியான சூழல் ? நம் மனத்தில் எழும் கேள்விகளுக்கு அளவே இல்லை. ஒவ்வொன்றையும் நம் வாழ்வோடு பொருத்தி விவாதிக்க இயலும்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளைளையப் பற்றிச் சொல்லும் புதுமைப்பித்தன் ஏமுடுக்கிவிடப்பட்ட பழுதுபடாத யந்திரம் ஒன்று நினைவுக்கு வரும்ஏ என்று தரும் குறிப்பு முக்கியமான ஒன்றாகும். எதனால் அவர் முடுக்கிவிடப் படுகிறார் ? ஏன் அவர் பழுதடைவதில்லை ? எந்த ஒன்றுக்காக அவர் முடுக்கிவிடப்பட்ட மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறாரோ, அந்த ஒன்றுதான் அவரை யந்திரமாக்கி வைத்திருக்கிறது. குடும்பம்தான் அந்த ஒன்று என எந்த இடத்திலும் புதுமைப்பித்தன் சொல்லவில்லை. ஆனால் அதை உணரப் போதுமான எல்லா வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறார். உப்புப்புளி பற்று வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்கக்த்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அறிந்தவர் அவர் என்பதுவும் ஒரு காரணம். பற்று வரவுக் கணக்கு வழியாக மனித சித்தத்தை எப்படி அளப்பது ? பற்று வரவு வைத்துத்தான் வாங்க வேண்டும் என்று யாருமே தொடக்கத்தில் நினைப்பதில்லை. ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தாலும் பணமுடையாலும் அந்த நிலை ஏற்பட்டு விடுகிறது. நாளடைவில் பழக்கமாகவும் அது படிந்தும் போகிறது. வருமானம் கிட்டும் போது பற்று வரவு வைக்கப்படுகிறது. இல்லாத போது பாக்கித் தொகை ஏறுகிறது. பாக்கி மிகுதியாக உள்ளவர் பல்லைக் காட்டித் தலையைச் சொரிந்து சமாளிக்கலாம். ஏதோ புரட்டி பாக்கியில் பாதியைக் கழித்து மறுபடியும் தொடரலாம். மாத சம்பளத்துக்காரர்கள் பலரும் பால், தயிர், மளிகை, துணிகள் எனப் பல இடங்களில் பற்று வரவு உள்ளவர்களே. பற்று வைத்துக் கொண்டு பொருளைத் தருபவர்கள் கூடுதல் விலைக்குத் தருபவர்கள் என்பது தெரிந்தும் பற்று வைப்பதை உதற முடிவதில்லை. மொத்தமாக எப்போதாவது கையில் பணம் கிடைத்தால் யார் கண்ணிலும் படாமல் மொத்தவிலைக் கடைக்குள் புகுந்து வருவதையும் மாற்றிக் கொள்ள இயல்வதில்லை. பற்றுக்குப் பொருள் கொடுக்கும் கடைக்காரனும் முதலில் மொத்தவிலை கொடுத்து வாங்குகிவர்களுக்கெல்லாம் கொடுத்து அனுப்பிவிட்டுத்தான் வேண்டுமென்றே தாமதமாகத்தான் தருகிறார். கண்முன்னாலேயே நின்றாலும் பார்க்காததைப் போல நடந்து கொள்கிறார் அவர். தெரிந்தாலும் வாங்க வந்தவர்களால் எதையும் செய்ய இயல்வதில்லை. மான அவமானம் பார்க்க முடிவதில்லை. பொய்ப்புன்னகை புரியவேண்டி இருக்கிறது. பொய்யாக குசலம் விசாரித்து, ஊர்கதை பேசி நிற்கும் அலுப்பைப் போக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் புரிதல்தான் மீனாட்சி சுந்தரத்தை இயக்கும் சூத்திரம். இரண்டே வரிகளில் இந்த விஷயத்தைச் சொல்லி விட்டு வேறு விஷயத்துக்குத் தாண்டிப் போகிறார் புதுமைப் பித்தன்.

பற்று வரவு பற்றித் தமிழில் பல கதைகள் வந்து விட்டன. ஒவ்வொன்றும் அவலச் சித்திரம்தான். வாழ்வின் அவலமே எழுத்தில் காட்சியாகப் பதிகிறது. காட்சிச் சித்தரிப்பின்றி தொனிப்பொருளால் உணர்த்தும் தன்மையாலேயே புதுமைப் பித்தனின் இக்கதை நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டது.

பற்று வரவுக் கணக்குகளை அற்புதமாகத் தீர்த்து வைக்கக் கூடிய மீனாட்சி சுந்தரம் என்னும் யந்திரம் நாற்பத்தைந்து ஆண்டுகளாக எந்தப் பழுதுமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதே பாதை. அதே வீடு. அதே பலசரக்குக் கடையின் கமறல். அந்த வாழ்வே அவரை யந்திரமாக்கி விடுகிறது. உடல், மனம், சிந்தனை எல்லாவற்றையும் ஒரு பழுதுபடாத யந்திரத்தின் உறுப்புகளாக மாற்றி வைத்திருக்கிறார் அவர்.

நாற்பத்தைந்து ஆண்டுகளாக இயங்கி வரும் அந்த யந்திரத்தில் ஒருநாள் இரவு ஆசை பற்றிக் கொள்கிறது. யந்திரத்தை இயக்கும் சூத்திரக் கயிற்றை அந்த ஆசை பற்றி இழுக்கிறது. கெளரவமான வாழ்வுக்கான ஏக்கம்தான் அந்த ஆசை. முதல்முறையாக அந்த யந்திரம் தன் இயக்கத்திலிருந்து பிசகி ஆசையின் இயக்கத்துக்குக் கட்டுப்படுகிறது. கல்லாவிலிருந்து காசை எடுத்துக் கொண்டதும் ஆசையின் இயக்கம் தொடங்கி விடுகிறது. உடனே தடுமாறத் தொடங்கி விடுகிறது அந்த யந்திரம். கடைச்சாவியைக் கையோடு எடுத்துக் கொள்கிறார். செருப்புகளைப் போட மறந்து போகிறது. ஸ்டேஷனில் சீட்டு தருகிறவனிடம் சத்தமுடன் பேச முடியவில்லை. பெட்டிக்குள் யாரைப் பார்த்தாலும் பயம் பரவுகிறது. எண்ணக் கொதிப்பேறி வியர்த்து வியர்த்து வழிந்து கொண்டே இருக்கும்போது வண்டி புறப்பட மணியடிக்கிறது. பொறுக்க முடியாத அவர் வண்டியை விட்டு இறங்கி விடுகிறார். ஆசையின் இயக்கத்திலிருந்து விடுபட்டு வழக்கமான சூத்திரங்களுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் யந்திரமாக மறுபடியும் மாறுகிறார் அவர்.

மீனாட்சி சுந்தரத்தால் ஏன் பயணம் செய்ய இயலவில்லை என்பது முக்கியமான கேள்வியாகும். மனிதர்களுக்குள் ஆயிரம் கனவுகள் இருக்கலாம். ஆயிரம் ஆசை இருக்கலாம். ஆனால் ஆசையின் இழுப்புக்கெல்லாம் மனிதர்களால் ஓடிக் கொண்டிருக்க முடியாது. ஓட முடியாது என்பதால் ஆசைப்படாமல் இருக்கவும் முடியாது. அதுதான் நடுத்தட்டுச் ச்முகத்தின் மனம். ஒரு நம்பிக்கை சார்ந்து இயங்குவது நடுத்தட்டுச் ச்முகம். அந்த நம்பிக்கையை அது தன் மரபிடமிருந்து பெறுகிறது. மொத்தச் ச்முகத்தில் தன் பெறுமதி/கெளரவம் என்ன என்பது அதற்குத் தெரியும். அதற்குக் களங்கம் ஏற்பட்டு விடாத வண்ணம் கவனமாக இருக்கும். தன்னாலோ மற்றவர்களாலோ தன் படிமத்துக்குப் பழுது வராதபடி பதற்றத்துடன் பாதுகாக்கும். தன்னை உடனடியாக யந்திரமாக மாறற்ிக் கொள்வதன் வழியாகத்தான் அது தொடர்ந்து இயங்க முடியும். தனது நம்பிக்கை சார்ந்து, தான் எந்த வகையான யந்திரம் என்று அதுவே தீர்மானத்துக் கொள்கிறது.

கதை முடியும் இடத்தில் படிமத்தை மேலும் விரிவடையச் செய்கிறார் புதுமைப் பித்தன். காற்றாட விசிப்பலகையில் துாங்குகிற முதலாளியை எழுப்பிக் கடையை மூடிவிட்ட செய்தியைச் சொல்கிறார் மீனாட்சி சுந்தரம். உடனே ஏதோ ஒரு வேலையை அவரிடம் சொல்லிவிட்டுக் கொடுங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொள்கிறார் முதலாளி. இதுவரையில் மீனாட்சி சுந்தரத்தை மட்டும் யந்திரமாக எண்ணிக் கொண்டிருந்த நமக்கு முதலாளியும் இன்னொரு வகையான யந்திரம் என்ற காட்சி தரிசனமாகிறது. வேறு வகையான சூத்திரங்களுக்குக் கட்டுப்பட்ட யந்திரம். வேறு வகையான நம்பிக்கைகளுக்கும் மரபுகளுக்கும் படிந்து சுழலும் யந்திரம். அருகருகே இயங்கும் இரண்டு யந்திரங்களாக இருவரையும் காட்டிவிட்டு இறுதிக் காட்சி நிறைவுறுகிறது.

இப்போது நம் மனம் உலக மனிதர்கள் அனைவரையும் யந்திரங்களாகப் பார்க்கத் தொடங்குகிறது. இந்த உலகே எப்போதும் யந்திரங்கள் இயங்கும் ஒரு தொழிற்சாலையாகிறது. தொடர்ந்து ஓசையெழ படபடவென்று ஓடிக் கொண்டிருக்கும் யந்திரங்களின் காட்சி மனத்துள் விரிகிறது. இவற்றில் நம்மைப் பிரதிபலிக்கும் யந்திரம் எது என்கிற கேள்வி ஒவ்வொரு யந்திரமாக உற்றுப் பார்க்கத் துாண்டுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதைப் படித்த போது புதுமைப் பித்தனின் நல்ல கதைகளுள் ஒன்று என்கிற எண்ணம் எழுந்தது. யந்திரம் என்கிற படிமம் என்னை வசீகரித்தது. நடுத்தட்டு மக்களுக்குப் பொருத்தமான படிமம் என்று தோன்றியது. ‘மாடர்ன் டைம்ஸ் ‘ படத்தில் திருகாணிகளைத் திருகித் திருகிப் பழகிய கைகளைச் சும்மா வைத்திருக்க இயலாமல் திருகாணியின் அமைப்பைக் கொண்ட எதைப் பார்த்தாலும் திருகத் துடிக்கிற சார்லின் சாப்ளினைப் பார்த்த போது ஒரு சூத்திரத்துக்கு மனிதன் எப்படிக் கட்டுப்படுகிறான் என்பது தெளிவாகப் புரிந்தது. தொழிலாளி மட்டுமல்ல, முதலாளியும் ஒரு யந்திரம், மனித குலமே யந்திரக்கூட்டம்தான் என்ற பொருளைக் கண்டடைந்த போது புதுமைப் பித்தனின் மேதைமை புரிந்தது. அன்று முதல் இந்தக் கதை என் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டது. வீட்டில் மாவு அரைக்கும் யந்திரம் கண்ணில் படும் கணத்தில் கூட மனத்தில் உறைந்திருக்கும் மனித யந்திரப் படிமம் மலர்ந்து விடுகிறது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்

1 Comment

Comments are closed.