எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

மனுஷ்ய புத்திரன்


அன்புள்ள ஞாநி

கடந்த ஜனவரியில் உயிர்மை பதிப்பகம் தொடங்கப்பட்டதிலிருந்து அதற்கெதிராக நீங்கள் கொண்டிருக்கும் எரிச்சலை விமர்சனம் என்ற பெயரில் தொடர்ந்து பதிவு செய்துவந்திருக்கிறீர்கள். இப்போது உயிர்மை இதழ் உங்கள் எரிச்சலில் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கிறது. ‘பாய்ஸ் ‘சர்ச்சையை முன்னிருத்தி உயிர்மைக்கும் சுஜாதாவுக்கும் உள்ள தொடர்புகளைப்பற்றி தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். சிறுபத்திரிகையாளர்கள் வெகுசன எழுத்ததாளர்களுடன் கொள்ளும் தொடர்புபற்றிய உங்கள் கவலைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் நான் இன்னொருவருடைய பினாமி என எந்தக்கூச்சமும் ஆதாரமும் இன்றி மறைமுகமாக எழுதினீர்கள். இப்போது சுஜாதா உயிர்மை பதிப்பகத்தின் எழுத்தாளர் என்பதால் பாய்ஸ் சர்ச்சையைப் பற்றி உயிர்மை மெளனம் சாதிக்கிறது என்பது தங்களது அரிய கண்டு பிடிப்பு. ( அழுகி நாறும் தமிழ்ச் சினிமாச் சூழலில் நீங்கள் ‘பாய்ஸ் ‘ ஸைப்பற்றிமட்டும் -முற்போக்கு முகாமில் உங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்காக -கூச்சல்போட்டுக்கொண்டிருந்தால் எல்லோரும் அதைப்பற்றி பேசியாகவேண்டியது கட்டாயமா ? எலுமிச்சம் பழம் அளவு தங்கம் வைத்திருந்த நாவிதனின் கதைதான் நினைவுக்கு வருகிறது) துரதிஷ்டவசமாக உயிர்மை நவம்பர் இதழில் இந்தச் சர்ச்சைக்கு எதிரான வெளிரங்கராஜனின் பதிவு வெளிவந்திருக்கிறது. உயிர்மை சுஜாதாவுக்கு ஆதரவாக எழுதுகிறது என்பது உங்கள் அடுத்த கண்டுபிடிப்பாக இருந்திருக்கும். ஆனால் காலச்சுவடு நவம்பர் இதழிலும் ரெங்கராஜனின் கருத்துக்கு இணையான கருத்தைக்கொண்ட ஒரு கட்டுரை அதன் ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது. காலச்சுவடு சுஜாதாவின் பதிப்பாளர் இல்லையென்பதால் உங்களது அபார தர்க்க மூலைக்கு கொஞ்சம் கூடுதல் வேலை ஏற்பட்டுள்ளது. நல்ல வேலையாக உயிர்மை நவம்பர் இதழில் ஜெயமோகன் கலைஞர் விவகாரத்தில் கலைஞரை கண்டிக்கும் தலையங்கம் ஒன்றை எழுதிவிட்டேன். இல்லாவிட்டால் கனிமொழி மனுஷ்ய புத்திரனின் நண்பர், அதனால்தான் உயிர்மை இதுபற்றி ஒன்றும் எழுதவில்லை என்ற ரீதியில் உங்கள் தர்க்கப் பாய்ச்சல் நிகழ்ந்திருக்கும்.

சுஜாதாவின் புத்தகங்களை நான் வெளியிட்டது மிகவும் வெளிப்படையான ஒன்று. நீங்கள் உங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு குஷ்புவை பேட்டி எடுத்ததுபோல மறைமுகமான ஒன்றல்ல.

ஒரு பதிப்பாளன் என்ற முறையில் நான் வெளியிடும் ஒரு எழுத்தாளர் தொடர்பான எல்லா சர்சைகளிலும் என்னை சம்பந்தப்படுத்தலாம் என்றால் நீங்கள் இதுவரை பணியாற்றியுள்ள ஊடகங்களின் நிலைப்பாடுகளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் எவ்வாறு வைத்துக்கொண்டிருந்திருக்கிறீர்கள் ? அந்த ஊடகங்கள் பல்வேறு பிரச்சினகளுக்காக விமர்சனத்திற்கு ஆளாகும்போது அதற்காக பதிலளிக்கவேண்டிய இடத்தில் நீங்கள் உங்களைவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்கிறதா ? நீங்கள் உங்கள் புகழுக்காகவும் பணத்தேவைகளுக்காவும் சார்ந்திருந்த, பயன்படுத்திக்கொண்ட வெகுசன ஊடகங்கள் அனைத்தும் உங்களுடைய ‘தார்மீக ‘மதிப்பீடுகளின் அடிப்படையில் விலக்கப்படவேண்டியவை. ஆனால் நீங்கள் எந்த ஊடகத்திலும் பங்குபெற்று உங்களுடைய ‘தனித்துவத்தை ‘ இழக்காமல் அதன் ஆதாயங்களை அடைந்துகொள்வீர்கள். மற்றவர்கள் அவர்களது தனித்துவங்களோடுமட்டும் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் பிறரோடு அவர்களோடு கொள்கிற எல்லா உறவும் சமரசமாகிவிடும் உங்கள் போலியான மதிப்பீட்டுத் தடியை அவர்கள் தலையில் போடுவீர்கள். வாழ்க உங்கள் அளவுகோல்கள்.

சிறிது காலத்திற்கு முன்பு சுந்தரராமசாமி கமலஹாஸனைப் போய்ப்பார்த்தார் என்பது ரகசியத்தகவல்களின் அடிப்படையில் நீங்கள் வெளிப்படுத்தும் ஒரு இலக்கிய விமர்சனம். எனக்குத் தெரிந்து ஒரு ஆள் இன்னொரு ஆளைப்போய் பார்ப்பதை இலக்கியவிமர்சனம் என்ற அளவுக்கு உயர்த்திய சிந்தனையாளர் நீங்கள்தான். விட்டால் நவீன இலக்கியவாதிகள் அனைவருக்கும் ஒரு chastity belt போட்டுவிடுவீர்கள் போலும்.

நடிகை லஷ்மியின் குரூரமான கட்டை பஞ்சாயத்து நிகழ்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதி பணம் பண்ணும் நீங்கள் பிறரிடம்போய் ‘நீ சுஜாதா புத்தகம் போடுகிறவனா ? கமலஹாஸனைப் போய் பார்க்கிறவனா ? கலைஞரைப் புகழ்கிறவனா ? ‘ என்றெல்லாம் சவடால் அடித்துக்கொண்டிருப்பது தமிழ் இலக்கியச் சூழலின் ஆபாசமான நகைச்சுவை.

உயிர்மை பதிப்பகமும் உயிர்மை இதழும் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் ஒரு ஆண்டுகூட பூர்த்தியாகவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அதில் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன். எம்.யுவன், ஆதவன், ஆகியோரின் நூல்களும் முக்கியமான மொழிபெயர்ப்புகளும் வெளிவரவிருக்கின்றன. உயிர்மை இதழ் சிறுபத்திரிகை சார்ந்த பதட்டங்களுக்கு வெளியே பரவலான பங்கேற்புள்ள ஒரு இதழாக வெளிவர போராடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் உயிர்மையைபற்றி என்ன பிம்பத்தை உருவாக முயற்சித்தாலும் அதன் ஒவ்வொரு செயல்பாடும் அப்பிம்பத்தைக் கலைத்துக்கொண்டே இருக்கும்.

ஞாநி இதுவரை மேற்கொண்டுள்ள பல தொழில்களைப்போல பதிப்பும் பத்திரிகையும் எனது தொழில். அந்த வகையில் எனக்கு சுஜாதாவும் எஸ்.ராமகிருஷ்ணனும் சமமான மதிப்புள்ள எழுத்தாளர்கள். என்னுடைய இலக்கியம் சார்ந்த பங்களிப்புகளுக்கு கடந்த பதினைந்தாண்டுகால நவீன இலக்கிய வரலாற்றில் பதிவுகள் இருக்கின்றன. நீங்கள் பரப்புகிற அவதூறுகளால் கலைக்கமுடியாத பதிவுகள் அவை.

வெகுசன ஊடகங்களில் உங்கள் இடம் காலியாகி தீம்தரிகிட மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபின் இலக்கிய விவாகரங்களைப் பற்றிய குறிப்புகளை எழுதுவதன் மூலம் சிறுபத்திரிகைவாசகர்களை ஈர்ப்பது என்பதற்குமேல் உங்கள் விமர்சனங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. கதை, நாவல் என்ற பெயரில் நீங்கள் எழுதிவந்திருக்கும் அசட்டுத்தனமான ‘இலக்கியப் பிரதிகளும் ‘ , இலக்கிய அபிப்ராயம் என்ற பெயரில் வெளிப்படுத்திவந்திருக்கும் வறட்டுத்தனமான முற்போக்கு மனிதாபிமானக் கருத்துக்களும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த பிரச்சினையில் நீங்கள் எந்த சம்பந்தமும் இல்லாத நபர் என்பதையே வெளிப்படுத்துகின்றன. தற்போதைய உங்களுடைய சமூக அரசியல் நிலைப்பாடுகளுக்காக நீங்கள் இருக்கவேண்டிய இடம் ஜெயாடிவியே தவிர சிறுபத்திரிகைச் சூழல் அல்ல.

எல்லோரும் இப்போது மதிப்பிடுகளைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதுதான். ஆனால் உண்மையான அக்கறையுடனும் நம்பிக்கையுடன் யாராவது அதைப்பற்றி பேசவரும்போது அவருக்குப் பேச சொற்களே இருக்காது. ஞாநி கொஞ்சம் சொற்களை மிச்சம் வையுங்கள்.

8.11.2003

————

lally@eth.net

Series Navigation

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்