எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

நேச குமார்


இப்போதெல்லாம் ஸ்டார்-விஜய் டிவியின் பரம ரசிகனாகிவிட்டேன் நான். முதன் முதலாக சீரியல் மோகம் தான் என்னைப் பீடித்தது – ஆம், அதில் வரும் ‘காதலிக்க நேரமில்லை’ தொடரிலிருந்தே இந்த டிவி மோகம் என்னைப் பற்றியது. நான் மிகவும் ரசித்த தொடர் அது. பொதுவாக அழும் சீரியல்களுக்கு மத்தியில் இளைய தலைமுறையினரை பிரதிபலிப்பது போன்றிருக்கவே பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், இப்போதெல்லாம் அதன் நேரத்தை மாற்றி ப்ரைம் டைமில் அதைக் கொண்டுவந்து விட்டார்கள். முன்பெல்லாம் பொறுமையாக எனது வேலைகளை முடித்து வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது சீரியல் பார்த்துக் கொண்டே சாப்பிடுவேன். இப்போதோ வீட்டுக்கு வரும்போது அந்த சீரியல் முடிவடைந்து ‘கனாக்காணும் காலம்’ சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவும் எனக்குப் பிடித்த சீரியல் தான் – அடிக்கடி எனது கடந்த காலங்கள் நினைவில் ஓடுவதால். அவ்வப்போது பார்ப்பது, அவ்வப்போது வீட்டாரிடம் விடுபட்ட எபிசோட்களைப் பற்றி கதை கேப்பது என்று எனது நிகழ் காலம் கனாக்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

***

எனக்கு இப்போதைய ரேட்டிங் என்னவென்று தெரியவில்லை. ஆனால், சன் டிவியை ஸ்டார்-விஜய் டிவி தூக்கிச் சாப்பிட்டிருக்கும் அல்லது இன்னும் இல்லையென்றால் விரைவிலேயே தூக்கிச் சாப்பிட்டுவிடும் என்று தோன்றுகிறது. புதுமை தான் காரணம். மனித மனம் எப்போதுமே புதுமையை நாடிச் செல்ல வல்லதாய் இருக்கிறது. இதுதான் மனதின் இயல்பான குணம். இதனாலேயே பழமையைப் பேணுவதே மனதை அடக்க, அழிக்க போதிக்கும் மதத்தின் நோக்கமாக இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. இப்போது விஜய்டிவியில் ‘இப்படிக்கு ரோஸ்’ என்றொரு நிகழ்சி நடக்கிறது. கம்பேர் செய்வது ஒரு திருநங்கை. முதலில் பார்க்கும் எவருக்கும் இது அதிர்ச்சியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அரவானி, அலி, ஒம்போது போன்ற வார்த்தைகளை விட்டு திருநங்கை என்ற நவீன பதத்துக்கு மாறுவதே ஒரு மனமாற்றத்தை, முதிர்ச்சியை, ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை கொண்டு வருகிறது என்று எண்ணுகின்றேன்.

***

திருநங்கை என்ற பதத்தை முதலில் நான் பார்த்தது வலைப்பதிவுகளில்(Blogs) தான். லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கையின் பதிவுகளை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். வலைப்பதிவுகளால் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, முடிகிறது, அதன் குறைபாடுகளையும் மீறி. அப்படி எனக்கு கிட்டிய அரிய ஞானம் இது. அந்தப் பெண் தான் எப்படி திருநங்கையானேன், அதில் கிட்டிய துரதிர்ஷ்ட அனுபவங்கள், பார்த்த மனிதர்கள் என்றெல்லாம் ஒரு நூலும் எழுதியிருக்கிறார். கிழக்குப் பதிப்பகம் பதிப்பித்திருக்கும் நூல்களில் அரிதான, வித்தியாசமான, மிக முக்கியமான நூல் அது. என்னதான் கி.பதிப்பகத்தை அ.மார்க்ஸ் போன்றவர்கள் சாடினாலும், வணிக கண்ணோட்டத்துடன் பெரிய சமுதாய மாற்றத்தையும் கலக்க முடியும் என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல உதாரணம். படித்துவிட்டு கொஞ்சம் கலங்கித்தான் போனேன் என்றால் அது மிகையல்ல. காரணம், நான் திருநங்கைகளைப் பற்றி கொண்டிருந்த பல கருத்துக்களை மாற்றிப்போட்டது அந்த நூல். உதாரணம், நம்மிடம் காசு கேட்டு தொல்லை செய்யும் திருநங்கைகள். பல சமயங்களில் நான் எரிச்சலடைந்தும், பணம் தர மறுத்தும், அருவறுப்புடன் அவர்களைப் பார்த்துமிருக்கிறேன். நன்கு படித்த திருநங்கையான வித்யா (அவர் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார் ) முதன் முதலாக பிச்சை கேட்ட அனுபவத்தை விவரித்தபோது கண்கள் கலங்கி விட்டன. சமூகம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில், வேலை தர மறுக்கும் நிலையில், வெளியே சாதாரணமாக பார்க்க மறுக்கப்பட்டு தொல்லைகளுக்கு ஆளாகும் நிலையில் இவர்களுக்கு தங்களது இயல்பான அடையாளத்துடன் இருக்க விரும்பினால், பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலுக்கு போவது, சட்டத்திற்கு புறம்பான தொழில்களில் ஈடுபடுவது (வித்யா இந்த மூன்றாவது வகையைப் பற்றி எழுதவில்லை, அல்லது அவருக்கு அந்த அனுபவமில்லை என்று நினைக்கிறேன் ) என்ற இந்த வழிகளே அவர்கள் வாழ்வதற்கான வழிகளாக திறந்திருக்கின்றன. ‘நான் (சரவணன்) வித்யா’ என்ற அந்த நூல் வழக்கம் போல வாங்கிப் படித்தவுடனேயே சர்க்குலேஷனில் போய்விட்டது(முன்பெல்லாம் குமுதம் வந்தவுடன் வீட்டில் போட்டி போட்டுக் கொண்டு ஆளுக்கால் பிடுங்கிப் படித்த காலம் நினைவுக்கு வருகிறது). நூல் மீண்டும் கைக்கு வந்தவுடன், மேற்கோள்களுடன் விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

***

வித்யாவையும் பேட்டி கண்டார் ‘ரோஸ்’. பார்த்த எனக்கு என்ன அச்சசலாக பெண் மாதிரியே இருக்கிறாரே இவர் என்று தோன்றியது. கல்லூரியில் படிக்கும் எந்தப் பெண்ணையும் போல சல்வார் அணிந்து, பெண்ணுக்கே உரிய மிகச் சாதாரணமான முகபாவங்களுடன், உடல் அசைவுகளுடன் பேசினார். பொதுவாக திருநங்கைகள் என்றாலே அதீத பெண்மைத்தனத்தை வெளிப்படுத்துவார்கள், அதன் விளைவாகவே அவர்கள் பெண் என்று ஏற்பதற்கே கஷ்டமாக இருக்கும். ஆனால் இவரிடமோ மிகவும் இயல்பான பெண் தன்மையை பார்க்க முடிந்தது மிகவும் ஆச்சரியம். நூலில் எழுதும்போது அரவாணிகள் கையை ஓங்கி கொட்டுவது, பலவித வித்தியாசமான அசைவுகளை வெளிப்படுத்துவது எல்லாம் ஒரு பாதுகாப்புக்காக என்கிறார் வித்யா. இங்கே எழுதும்போது அரவாணி என்ற பதத்தை ஏன் பயன்படுத்துகிறேன் என்றால், அந்த வார்த்தையுடன் இயல்பாக நம்முள் ஒரு பிம்பம் வந்துவிடுகிறது – தொந்தரவு செய்யும் அரவாணி, தாதாவான அரவாணி, பிச்சை கேட்கும் அரவாணி, பாலியல் தொழிலில் ஈடுபடும் அரவாணி – இப்படி. திருநங்கை என்று எழுதும்போது மிகவும் இயல்பான வித்யா நினைவுக்கு வருகிறார். முழுமையான அங்கீகாரத்தை சமூகம் கொடுக்காமல், அவர்களை சமுதாயத்தின் அடியாழங்களில் வைத்து மறைக்க முயலும் வரை, சட்ட ரீதியான முழுமையான உரிமைகளை, பாதுகாப்புகளை அவர்களுக்கு வழங்காதவரை இந்த அரவாணி – திருநங்கை பேதப்படுத்துதல் தொடரும் என்று நினைக்கிறேன். வித்யாவுடன் இன்னும் இரு திருநங்கைகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார், ஒருவரை மணந்து வாழ்க்கை நடத்துகிறார். வித்யாவும் தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார். நல்லபடியாக வாழவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

***

அதே ரோஸ் நளினி ஜமீலாவையும் பேட்டி கண்டார். இந்த நளினி ஜமீலா பற்றி கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு முன்பு திண்ணையில் எழுதியிருக்கிறேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20608254&edition_id=20060825&format=html). ஆனால், நானே இதுவரை அவரது புகைப்படத்தையோ பேட்டியையோ கண்டதில்லை. ஸ்டார்-விஜய் டிவி புண்ணியத்தில் பேட்டியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இரு பாலியல் தொழிலாளிகள், ஒரு ஓரமாய் சிங்கம் போல சாரு என்று அமர்க்களமாய் இருந்தது பேட்டி. சிங்கம் போல சாரு என்று எழுதியது பகடியல்ல என்பதை இங்கே சொல்லிவிட வேண்டும். பகடி, கபடி என்று பெரும் ஓட்டமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது தமிழிலக்கிய உலகில் சமீப காலமாக. சாருவின் பாலியல் தொழிலாளிகளுடனான அனுபவங்களைக் கேட்டபோது இதோ கன்னத்தைப் பாருங்கள் என்று எதோ சொல்லி மழுப்பினார் சாரு. இது என்ன இப்படியொரு அபத்தமான கேள்வி என்று தோணலாம். ஆனால், சாருவோ தான் பதில் சொன்னேன் ஆனால் எடிட்டிங்கில் அதையெல்லாம் வெட்டி விட்டார்கள் என்றார். பெருமாளின் தாய்லாந்து அனுபவங்களைப் பற்றி எழுதியிருந்தாராம் சாரு. இது நிச்சயமாக பகடிதான் – பெருமாள் சாருவின் ஆல்டர் ஈகோ என்று சொல்பவர்களை, இலக்கியமே தெரியாதவர்கள் என்று ஒரு கூட்டம் சாடுகிறது. எனக்கென்னவோ பெருமாள் ராஸலீலாவில் புலம்புகிற புலம்பல்களை, விடுகிற பெருமூச்சுகளைப் பார்க்கும்போது, அது சாருவின் ஜெஜெ என்றே தோன்றுகிறது. பின் வேறு யாருக்கு மணியுடன் ஒப்பிட்டு தன்னை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டேன் என்கிறாள் என்று புலம்பத் தோணும்?

***

சாருவும் சமீபத்தில் வெளிப்படையாகவே புலம்பியிருந்தார். கருணாநிதி அவர்களைக் கூட பகடி செய்ய முடிகிறது ஆனால் சிறுபத்திரிகை எழுத்தாளர்களை தொடவே முடியவில்லை என்று(http://charuonline.com/newarticls/paalam.html). அவரது எழுத்தில் தென்படும் நகைச்சுவையை அடிக்கடி ரசிப்பேன். இது அவரது சமீபகால நகைச்சுவை எழுத்து என்று நினைக்கின்றேன். ஜெயமோகனுக்கும் அவருக்கும் சமீபகாலமாக ஒரு போர் நிகழ்ந்து வருகிறது என்கிறார்கள் நண்பர்கள். ஜெமோ அவரை கிண்டலடித்திருந்ததையும், சாரு பதிலுக்கு ஜெமோவை கடுமையாக சாடுவது போன்று எழுதியிருந்தார். ‘கடுமையாக சாடுவது போன்று’ என்று நான் சொல்வது எதனால் என்றால், அந்த எழுத்து முழுவதும் ஜெமோ மீதான ஒரு வாஞ்சை தெரிந்தது. அடிக்கடி நான் நண்பர்களிடம் சொல்வது ஒன்று என்னவென்றால், இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஜெயமோகனும், சாருவும் எதிரெதிர் துருவத்தில் இருக்கிறார்போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் இந்த இடத்திற்கு வேறெவரையும் வரவிடாமலும் செய்து வருகிறார்கள் – இது கூட்டுச் சதியெல்லாம் இல்லை, இயல்பாகவே இப்படி தமிழ்ச்சமுதாயத்தில் நிகழ்ந்து விடுகிறது. ஆரிய மாயை – திராவிட மாயை, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய்-சூர்யா இப்படி தொடர்ந்து நிகழ்ந்து வருவது தமிழ் மண்ணின் இலக்கணமாகவே இருக்கிறது. இதில் தற்காலத் தமிழிலக்கியத்தில் ஜெயமோகனும் – சாரு நிவேதிதாவும் இரு துருவங்களாக இருந்து தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

***

ஜெயமோகன் இந்துத்துவத்தை ஆதரிக்கின்றார், சாரு எதிர்க்கிறார் என்பது கூட தவறுதான். அடிப்படையில் இந்துத்துவத்தை மிகவும் ஆழமாக, நுண்ணியமாக ஆதரிப்பது சாருநிவேதிதாதான் என்பது எனது எண்ணம். இந்து அல்லது இந்துத்துவம் என்பதன் அடிப்படை நிறுவனப்படா தன்மை கொண்ட ஆன்மீகம் என்று கொண்டால் அதை பெரிதும் கொண்டாடுபவர் சாருநிவேதிதா – ஜெயமோகனின் எழுத்தின் நிறுவனப்பட்ட இந்து சிந்தனையின் மீதான ப்ரேமம் வெளிப்படையாகத் தென்படும். விஷ்ணுபுரத்தின் பிட்சுக்கள் எல்லாம் எனக்கு நிறுவனப்படுத்தப்பட்ட இந்தியத்துவத்தின் பிரதிநிதிகளாகவே தென்படுகிறார்கள். இன்று இலங்கையில் நிகழ்ந்து வரும் போர் கூட இந்திய சிந்தனையின் இரு வேறு நிலைப்பாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் சச்சரவாகவே தென்படுகிறது எனக்கு. இந்த நிறுவனப்படுத்தப்படும் முயற்சிகளுக்கெதிரான போராட்டமே மிக அற்புதமான சிந்தனைகள் கூட நிறுவனப்படுத்தப்பட்டு விட்டால் எந்த அளவுக்கு அசுரத்தன்மையடைய முடியும் என்பதற்கு இலங்கையின் பவுத்த நிறுவனமே மிகச் சிறந்த உதாரணம்.

***

தமிழர்களின் சைவ – வைணவ இயக்கங்கள். பவுத்தத்தை வைணவமாக மாற்றி செரித்து பின் பவுத்தம் பரவியிருந்த இடங்களில் எல்லாம் ஊர்ந்து முன்னெறியது, நிறுவனப்படாத பவுத்தமான வைணவம். அயோத்தி தாசரோ பெருமாள் கையில் இருக்கும் சங்கே, பவுத்த சங்கத்தின் குறியீடு என்கிறார். பவுத்த சங்கம் என்ற அபாயகரமான ஜந்துவை, fossil ஆன சங்காக மாற்றி, குறியீடாக எடுத்துக் கொண்டது எத்தனை நுணுக்கமான தாக்குதல் என்று திடீரென்று மனதுக்கு தோன்றியது திராவிட இயக்கங்களின் பிரச்சாரத் தாக்கமாகக் கூட இருக்கலாம்( என்று பிறகு தோன்றியது). அடிக்கடி இந்த குழப்பம் வந்துவிடுகிறது – சுய சிந்தனை என்று இருந்தாலே இப்படி எதிரும் புதிருமாக குழம்புவது இயல்பான விஷயமல்லவா?


.

http://nesamudan.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்