எகிப்தை அழித்தது என்ன ?

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

4200 வருடங்களுக்கு முன்னர், எகிப்தின் மாபெரும் சமுதாயம் அழிந்தது எப்படி ?


எகிப்தின் ஃபரோ பேரரசர்கள் உலகத்தின் நின்று நிலைக்கும் பெரிய கிஜா பிரமிடுகளைக் கட்டினார்கள். 1000 வருடம் நின்று நிலைத்த இந்த சமுதாயம், மத்திய அதிகாரம் திடாரென நொறுங்கியது. அடுத்த 100 வருடங்களுக்கு நாடு குழப்பத்தில் ஆழ்ந்தது.

என்ன நடந்தது ? ஏன் நடந்தது என்பது இன்னும் விவாதத்துக்குரியதாக இருக்கிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஃபெக்ரி ஹாஸன் இந்த மர்மத்தை விடுவிக்க விரும்புகிறார். அதற்குத் தேவையான அறிவியல் தடங்களைத் தேடுகிறார்.

அன்க்டிஃபி என்ற பிராந்திய ஆளுனருக்காக பழங்காலத்தில் கட்டப்பட்ட தெற்கு எகிப்தில் இருக்கும் சிறிய கல்லறையில் ஹிரோகிலிஃபிக்ஸ் எழுத்துக்களில் ‘வடக்கு எகிப்தில் எல்லோரும் பசியில் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கொன்று தின்கிறார்கள் ‘ என்று எழுதியிருப்பது இவருக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

பல எகிப்து நிபுணர்களால், ‘மிகைப்படுத்தப்பட்டது ‘ என்றும் ‘கற்பனை ‘ என்றும் ஒதுக்கப்பட்ட இந்த வரிகளை உண்மை என்றும் நிச்சயமாக நடந்தது என்றும் ஃபெக்ரி நிறுவ முனைகிறார். இத்தகைய சோகத்தை உருவாக்கும் ஒரு காரணியையும் அவர் கண்டறிய வேண்டும்.

‘எகிப்தியர்கள் வாழ்ந்த சூழ்நிலையில் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்து நினைத்தேன் ‘ என்று கூறுகிறார். எகிப்திய வாழ்க்கைக்கு இதயமாக இருந்த நைல் நதியிலேயே இதற்கான காரணம் இருக்க வேண்டும் என்றும் இவர் நினைத்தார்.

7 ஆம் நூற்றாண்டிலிருந்து சரியாக குறிக்கப்பட்டிருக்கும் நைல் நதி வெள்ளங்கள் பற்றிய ஆவணங்களை ஆராய்ந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் நைல் நதி வெள்ளம் அளவில் மிகவும் மிகவும் வருடாவருடம் மாறுபடுவதையும் கண்டார். இந்த வெள்ளங்களே நிலத்தை பாசனம் செய்ய பயன்படுகின்றன.

ஆனால் கிமு 2200க்கு என்ன ஆவணம் இருக்கும் ? பக்கத்து இஸ்ரேலில் கண்டறியப்பட்ட புதுக் கண்டுபிடிப்பு இவருக்கு திடாரென உதவியது. ஜியாலஜிகல் ஸர்வேயில் பணிபுரியும் பார் மாத்யூஸ் என்பவர் டெல் அவீவ் நகரத்துக்கு அருகில் இருக்கும் குகைகளில் இருக்கும் ஸ்டாலசைட், ஸ்டால்கமைட் தூண்கள் பழங்காலத்திய தட்பவெப்பம் பற்றிய ஆவணங்களாக இருப்பதைக் கண்டறிந்தார். (ஸ்டாலசைட் என்பது குகையின் மேலிருந்து வழியும் சுண்ணாம்புத் தூண். ஸ்டால்கமைட் என்பது, சுண்ணாம்பு குகையின் தரையில் கொட்டுவதால் உருவாகும் தூண். மேலே இருக்கும் தூணும் கீழே உருவாகும் தூணும் மெல்ல மெல்ல வளர்ந்து இணையும். இந்த சுண்ணாம்பு வழிவது அங்கிருக்கும் தட்பவெப்பத்தைப் பொறுத்தது)

இவைகளை ஆராயும் போது, கிமு 2200 வருடத்தில், மழை திடாரென 20 சதவீதம் குறைந்திருப்பது தெரிந்தது. கடந்த 5000 வருடங்களில் மிகக்குறைந்த மழையளவு இது.

இஸ்ரேலும், எகிப்தும் வெவ்வேறு தட்பவெப்பங்களை கொண்டவை. எனவே ஃபெக்ரிக்கு உலகம் முழுவதும் நடந்திருக்கக்கூடிய தட்பவெப்ப நிகழ்ச்சியாக அது இருக்க வேண்டும் எனப்பட்டது. அப்படிப்பட்ட உலகளாவிய தட்பவெப்ப நிகழ்சியாக இருந்தால் மட்டுமே அது எகிப்தின் பழைய மன்னராட்சியையும் பாதித்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு தடயமும் அவருக்குக் கிடைத்தது.

கொலம்பியா பல்கலைக்கழத்தின் லாமாண்ட்-டோஹர்டி பூமி ஆராய்வகத்தில் பணியாற்றும் ஜ்யாலஸிஸ்ட் ஜெரார்ட் பாண்ட் அவர்கள் ஐஸ்லாந்தின் கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலைகளை ஆராய்கிறார். தெற்கு நோக்கிய இவைகளின் பிரயாணத்தில் அவை சில எரிமலை சாம்பலை கடலின் அடியில் விட்டுச் செல்கின்றன.

முழு அளவு உருகுவதற்கு முன்னர் அவை எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கின்றன என்பதை வைத்து அந்த வருடம் எவ்வளவு குளிராக இருந்திருக்கிறது என்று கண்டறியலாம். கடலடியில் இருக்கும் மண்ணை நேராக நோண்டி பரிசோதனை செய்வதன் மூலம், எந்த வருடம் எவ்வளவு குளிராக இருந்திருக்கிறது என்றும் ஆராயலாம். ஐரோப்பாவில் ஒவ்வொரு 1500 வருடங்களுக்கும் ஒரு முறை சின்ன பனியுகம் வருகிறது என்று கண்டறிந்தார். ஒவ்வொரு முறையும் இந்த பனியுகம் சுமார் 200 வருடங்களுக்கு நீடிக்கிறது என்றும் அறிந்தார். அப்படிப்பட்ட ஒரு சின்ன பனியுகம் கிமு 2200வில் வந்தது என்றும் கண்டறிந்தார்.

ஜெரார்டின் நண்பரான பீட்டர் டிமெனோகல் உலகம் முழுவதும் அதே நேரத்தில் எப்படி தட்ப வெப்பம் இருந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தார். மணலிலிருந்து, பூகந்தம் வரை எல்லாவற்றையும் ஆராய்ந்தால், பதில் ஒன்றுதான். இந்தோனேஷியாவிலிருந்து மத்திய தரைக்கடல் பிரதேசம் வரை, கிரீன்லாந்திலிருந்து வட அமெரிக்காவரை எல்லா இடங்களிலும் தீவிரமான தட்பவெப்ப மாறுதல் அதே வருடத்தில் நடக்கிறது.

ஃபெக்ரி நம்பிய எல்லாவற்றையும் அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள். தீவிர தட்பவெப்ப மாறுதல் காரணமாக 4200 வருடங்களுக்கு முன்னர் பெரும் மனித சோகம் நடந்தது. இப்போதுதான் அதை நாம் அறிந்து கொள்கிறோம்.

இந்தப் புதிரின் கடைசிப்பகுதிகளை விடுவிக்க ஃபெக்ரி எகிப்தில் இருக்கிறார். நைல் நதியிலிருந்தே தீவிரமான தட்பவெப்ப மாறுதலுக்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முயல்கிறார். இவர் பழங்காலத்திலிருந்து இன்றுவரை நைல் நதியின் துணை நதி வந்து நீர் நிரப்பும் ஒரு பெரிய ஏரியின் அடியில் இருந்து நெட்டுக்குத்தாக நோண்டி எடுத்த படிவங்களிலிருந்து அந்த ஆதாரத்தைக் கண்டுபிடித்தார்.

பழைய மன்னராட்சி நொறுங்கிய அந்தக் காலக் கட்டத்தில், அந்த மாபெரும் ஏரி முழுக்க முழுக்க காய்ந்து போய் இருந்தது என்பதைக் கண்டறிந்தார். வரலாற்றிலேயே அந்த ஒரு முறையே அந்த ஏரி முழுக்கக் காய்ந்திருக்கிறது. அன்க்டிஃபியின் கல்லரையில் எழுதப்பட்டிருந்த வரிகளை உண்மைதான் என்று கடைசியில் ஃபெக்ரி நிரூபித்து விட்டார். மக்களை அப்படிக் கொன்றது இயற்கைதான்.

பிபிஸி இரண்டில் வியாழக்கிழமை 26 சூலையன்று 2100 பிஎஸ்டி நேரத்தில் இந்த பழங்காலத்திய அழிவு பற்றிய விவரணப்படம் வெளியாகிறது.

Series Navigation