உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


மானுட பிரக்ஞை இயற்கையின் ஆதார இயக்கங்களை மிகவும் நேரடியாக மிகவும் ஆற்றலுடன் உள்வாங்குகையில் தன்னுள் ஏற்படும் பிம்பங்களைக் கொண்டு எழுவதே புராணப்பார்வை எனலாம். எனவேதான் மரண உலகத்தை நோக்கிய பயணம் – மாண்ட துணையின் உயிரினை மீட்டுவரும் முயற்சி ஆகிய புராணப் படிமங்கள் உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையிலான முயற்சி மானுடத்திற்கு மட்டுமல்ல மானுடத்தின் மனப்பிரபஞ்சத்தில் எழுந்த அதிமானுட சக்திகளுக்கும் உரியது. பாரத புராணங்களில் சத்தியவான்-சாவித்திரி அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரியாத ஒரு மரணம் வென்ற காதல் கதை ருரு-ப்ரியம்வதா கதை. ருரு-ப்ரியம்வதா, சத்தியவான்-சாவித்திரி ஆகிய இரண்டுமே மகாபாரதத்தில் உள்ளவை. இவை இரண்டுக்கும் ஒரு வளர்ச்சி தொடர்பும் உள்ளது. மத்திய ஆசிய மத பிரக்ஞையின் தொல் ஊற்றுக்கண்ணான பாபிலோனிய புராணங்களில் (அவற்றிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று விவிலயத்திலிருந்து) மேற்குக்கு பரவிய சரித்திர முலாம் பூசப்பட்ட புராணக்கதையாடல்களில் மற்றும் கிரேக்க-ரோமானிய புராணங்களில் இந்த படிமம் உள்ளது.

இவற்றினை சிறிது விரிவாக பார்க்கலாம்.

மரணத்தை சந்தித்தல் – 1.நசிகேதன்

நமக்கு மிகவும் தெரிந்த ஒரு தொன்மக் கதை கட உபநிடதத்தில் வருகிறது. ரிஷி வாஜசிரவஸ் யாகத்தின் போது கிழட்டு பசுக்களை தானமாக கொடுக்கிறார். இதனைச் சுட்டிக்காட்டிய மகன் நசிகேதனிடம் வெகுண்டு அவனை யமனுக்கு தானமாக அளிப்பதாக கூறுகிறார். உபநிடதத்தின் வார்த்தைகளில்:
நசிகேதன் தந்தையிடம் சென்று, “அப்பா என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்கு தந்தை, “உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன்.” என்று கூறினார். [கட உபநிடதம் 1.1.4]

பின்னர் கலங்கும் தன் தந்தையை ஆறுதல் படுத்திவிட்டு எமனுலகு செல்கிறான் நசிகேதன். நசிகேதன் சென்ற போது எமன் அங்கு இல்லை. மூன்று நாட்கள் எமன் மாளிகையில் நசிகேதன் இருக்கிறான். மூன்று நாட்கள் மூன்று இரவுகள் அன்ன ஆகாரமின்றி தங்கியிருக்கும் நசிகேதனுக்கு மூன்று வரங்களை அளிக்கிறான் யமன். முதல் வரமாக நசிகேதன் தன் தந்தை தன்னிடம் ஆத்திரம் நீங்க வேண்டுமெனக் கோருகிறார். இரண்டாவது வரமாக சொர்க்கம் செல்லும் மார்க்கத்தினை கேட்கிறார். சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் யாகத்திற்கான அக்கினி இதயக்குகையில் இருப்பதாக எம தர்மன் கூறுகிறார். அவர் சொல்கிறார்:

நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப் பற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புற்றவனாக கேள். சொர்க்கத்தை தருவதும் பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது.[கட உபநிடதம் 1.1.14]

மூன்றாவதாக மரணத்துக்குப் பின்னால் மனிதன் நிலை குறித்து நசிகேதன் வினவுகிறார். எமனோ அது தேவர்களுக்கும் ஐயப்பாடு உள்ள இரகசியம் என்றும் வேறெதை வேண்டுமென்றாலும் கேள் என்றும் கூறுகிறார். ஆனால் நசிகேதனோ தமது நிலையில் உறுதியாக நிற்கிறார். நூறாண்டு வாழ்க்கை, புத்திர பாக்கியம், பொன், பொருள், குதிரை, பரந்த அரசு, பூமியில் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றிடும் வரம், நல்ல தேர்கள், அழகிய பெண்கள் என அனைத்தையும் அளிப்பதாகவும் நசிகேதன் தனது நிலையிலிருந்து விலகிட வேண்டும் எனவும் எமன் கூறுகிறார். ஆனால் நசிகேதன் இந்த ஆசைக்காட்டலுக்கு கூறும் மறுமொழி அழகானது.

மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் எல்லாம் நிலையற்றவை. அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள் ஆடல்கள் பாடல்கள் உன்னிடமே இருக்கட்டும். [கட உபநிடதம் 1.1.14]

இறுதியில் எமன் மரணமில்லா பெருவாழ்வின் இரகசியத்தை நசிகேதனுக்கு உபதேசிக்கிறார். நசிகேத மகரிஷி இந்த இரகசியத்தை உணர்ந்ததன் மூலம் மரணமில்லா பெருவாழ்வினை அடைகிறார்.

இந்த உபநிடத கதையில் பல தொன்மக் கூறுகளை காணலாம்.

மறுக்கப்படும் ஞானம்:
மனிதருக்கு கிடைக்காமல் ஞானமானது ஒளித்து வைக்கப்படுகிறது. ஞானத்தின் குறியீடான அக்னி ப்ரொமீதஸால் ஸீயஸ் தேவனிடமிருந்து எடுத்து வரப்பட்டது. விவேகத்தை அளிக்கும் கனி மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்ததாக யூத புராணம் கூறும். இங்கும் எமன் நசிகேதனிடம் மறையறிவு விலக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் மேற்கத்திய புராணங்களில் விலக்கப்பட்ட ஞானத்தை தேடி அடைந்தவர்கள் நித்திய தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இங்கோ “மரணமில்லா பெருவாழ்வை அடைந்து இறை நிலை அடைகின்றார் நசிகேத மகரிஷி. மட்டுமல்ல இந்த ஞான மார்க்கத்தின் மூலம் அனைத்து மானுடமும் மரணமில்லா பெருவாழ்வை அடைந்திட முடியும்.

ஆசை காட்டல்:
பின்னாட்களில் புராணங்கள் அனைத்திலும் தவம் செய்யும் முனிவர்களின் தவத்தை கலைத்திட தேவர்கள் அனுப்பும் தேவலோக பெண்களின் தொடக்கத்தை இங்கு காண்கிறோம். அவ்வாறே பௌத்த புராணத்தில் தவமிருக்கும் சித்தார்த்தரின் தவத்தினை கலைத்திட மாறன் முயன்றதையும் நாம் காண்கிறோம். ஏசு குறித்த புராண விவரணத்தில் அவரை சைத்தான் சோதிக்கிறான். ஏசுவுக்கு காட்டப்படும் ஆசைகள் அரசதிகாரம் சார்ந்தவை என்பதையும் புத்தருக்க்கு காட்டப்படும் ஆசைகள் புலனின்ப வகையைச் சார்ந்தவை என்பதையும் ஜோஸப்காம்பெல் குறிப்பிடுவார். ஆனால் நசிகேதனில் இருவித ஆசைகளும் காட்டப்படுவதை கவனிக்கலாம்.

மூன்று நாட்கள் மரணத்தினோடு: பின்னாளில் ஏசுவின் மரிப்பு மற்றும் உயிர்த்தெழுதல் எனும் கிறிஸ்தவ புராண சித்திகரிப்பில் இதே மூன்று நாட்கள் எதிரொலிப்பதைக் காணலாம். பின்னர் மரணம்-உயிர்த்தெழுதல் குறித்த புராணங்களை தனித்தனியாக காண்கையில் இதனை விளக்கமாக காணலாம்.

அடுத்து நாம் காண இருக்கும் புராண வீர-வீராங்கனைகள் ஞானத்தை தேடி மரணத்தை சந்திப்பவர்கள் இல்லை. மாறாக மரணத்தினை இவ்வுலக வாழ்விலேயே வெல்லத் துணிந்து மரணத்தை சந்தித்தவர்கள்.

————————————————————————-
நன்றி: கட உபநிடதம்:மரணத்திற்கு பின்னால் (விளக்கியவர் சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர்)

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு. மனித இனம் பரிணமித்தது முதல் அதன் ஒரு முக்கிய செயல்பாடாக கதைகள் திகழ்கின்றன. அக்கதைகளில் மிகவும் ஜீவனுடன் காலங்கள் கடந்து வாழ்ந்து நிற்பவை புராணங்கள். ஆஸ்திரேலிய பூர்விகக் குடிகள் ஆகட்டும், நவஜோ அமெரிக்க பூர்விகக் குடிகள் ஆகட்டும், பாரதம் ஆகட்டும் பண்டைய மெசபடோமியா ஆகட்டும் அல்லது ஏக இறை கோட்பாட்டினை வலியுறுத்துவதாக கூறும் ஆபிரகாமிய மதங்கள் ஆகட்டும் புராணக் கதைகள் அவை அனைத்திலும் இருக்கின்றன. புராணங்கள் வெறும் கற்பனையா? வரலாற்று நிகழ்ச்சிகளின் அதீத கற்பனையின் விளைவா? அல்லது இரவு வானிலும் சுற்றி நிற்கும் இயற்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகள் மனித மனதில் ஏற்படுத்திய பிம்பங்களா? ஆழ்மன வெளிப்பாடுகளா? சமூக பொருளாதார காரணிகளால் மாற்றங்களால் ஏற்பட்டவையா? இவை அனைத்துமேவா? இன்றைக்கும் இப்புராண கதைகள் வாழ்வதற்கு ஏதேனும் நியாயம் இருக்கிறதா? இவை அனைத்தையும் ஆராயப்போகும் தொடர் இது.

1. ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் புனிதமான கனவு காலம் (Dream Time)

“ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்களின் இருப்பினை நம்புகின்றனர். இரு இணையாக ஓடும் இயக்கம். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். மற்றதோ கனவுக்காலம். முடிவற்ற ஆன்ம சுழற்சியான இக்காலம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது. இக்கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த பழங்குடி (பூசாரிகள்) இப்புனித கனவுக்காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.”

மேற்காணப்படும் மேற்கோள் இயற்பியலாளர் ப்ரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe’ எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் ஆன்மிக வெளிப்பாடுகள் செழுமையும் ஆழமும் கொண்டதோர் ஆன்மிக மரபினைக் காட்டுகின்றன. கனவுகாலம் என்பது கூட வெள்ளையரின் பதம் தானாம், வூல்ப் கூறுகிறார். ஆதிவாசிகளை பொறுத்தவரையில் கனவு என்பது நனவுலகுடன் இணைந்தியங்கும் ஒரு இருப்பு என்கிறார். (அருந்தா அல்லது அரண்தா எனும் ஆதிவாசி இனத்தாரின் ‘அல்கெரிங்கா’ எனும் பதத்தை ஸ்டானர் என்பவர் கனவுகாலம் என மொழிபெயர்த்தார்.)

ஆதிவாசிகளின் புராண நாயகர்கள் வீர புருஷர்கள் தம் சாகஸங்களை இந்த அல்கெரிங்காவிலேதான் செய்கின்றனர். ஆதிவாசி புராணங்களை ஆய்வு செய்த காரெட் பர்டெனின் வார்த்தைகளில் ‘அனைத்து புராணங்களும் உண்மையானவை ஏனெனில் அவை புனிதமானவை’. ஆனால், வூல்ப் வினவுகிறார், “எந்த அளவுக்கு கனவுகாலம் என்பது போன்ற ஒரு புராண ரீதியிலான கற்பனை உண்மையாக இருக்க முடியும்? இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரிசோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை”(பக் 149). வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது.

புராணம் என்பது பாரத மரபின் பதம். அதிசயிக்கத்தக்க வகையில் இப்பதத்திற்கு கொடுக்கப்படும் வியாக்கியானம் மேற்கண்ட ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் ஆன்மிக தரிசனத்திற்கு இணைத்தன்மை கொண்டுள்ளது. புராணம் = புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்).


aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்