உலக அரங்கில் தமிழ் இலக்கியம்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

சுந்தர ராமசாமி


அன்பார்ந்த நண்பர்களே,

இந்த எழுத்தாளர் மாநாட்டில் தலைமை உரையாக ஒரு சில வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

தமிழை, தமிழ் இலக்கியத்தைத் தேசிய அரங்கில் ஏற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். தமிழ் இலக்கியத்தை உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முழங்கிக்கொண்டு வருகிறோம். இப்படிச் சொல்லிக் கொள்வதற்கான தகுதி நமக்கு இருக்கிறது. நம் மொழி இரண்டாயிர வருட பாரம்பரியம் கொண்டது. கவிதைப் படைப்புகளும் பெரிய இடைவெளுகள் இன்றி நமக்குத் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. படைப்பில் சில சிகரங்களையும் அடைந்திருக்கிறோம். புலமை மனத்தையும் அமைப்பியல்வாதம் வரையிலும் வந்து விட்ட நவீன மனத்தையும் ஒருங்கே கவரும் தொல்காப்பியம்; அதன்பின் திருக்குறள்; சங்ககாலப் பாடல்கள்; சிலப்பதிகாரம், கம்பராமாயணம். இந்த நூற்றாண்டில் பாரதியும், பாரதிக்குப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தரமான இலக்கியங்களும். நாம் இந்த அளவுக்கு இலக்கியச் செல்வம் கொண்டிருப்பவர்கள்.

தமிழர்கள் தங்கள் இலக்கியத்தின் மேலான பகுதிகளை இந்தியாவிலுள்ள பிற மொழிகளுக்கும், உலக அரங்கில் உள்ள மொழிகளுக்கும் கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்படுவது மிக இயற்கையான காரியம். இந்த அடிப்படையில் தொடர்ந்து மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறோம். ஆங்கில மொழி வழியாக இந்திய இலக்கிய அரங்கையும், உலக இலக்கிய அரங்கையும் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில், வரலாற்றுக் காரணங்களால் நமக்குக் கூடிவந்திருக்கும் ஆங்கில மொழியில் நம் இலக்கியங்களை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். திருக்குறள், சங்ககாலப் பாடல்களின் பகுதிகள், கம்பராமாயணத்தின் பகுதிகள், சிலப்பதிகாரம், பாரதிப் பாடல்கள் ஆகியவை ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. இந்திய அரங்கைப் பிடித்து விட்டதாகவும் உலக அரங்கில் கொடி நாட்டிக் கொண்டிருப்பதாகவும் கற்பனையான பேச்சுகள் மேடை முழக்கங்களில் வெளுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் என்று பேசத் தொடங்கும் போது எப்போதுமே யதார்த்தப் பார்வையைக் கைவிட்டு விடுகிறோம். கற்பனைத் தளங்களில் நின்று நிகழாதவற்றையெல்லாம் நிகழ்ந்ததாகப் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

நாம் கற்பனை செய்து கொள்வது போல் நம் இலக்கியங்கள் உலக அரங்கில் பரவி விடவில்லை. தேசிய அரங்கிலும் பரவி விடவில்லை.

இந்திய மொழிகளைச் சேர்ந்த பலருக்கும் நம் இலக்கியம் பற்றித் தெரியவில்லை. படித்தவர்களிடையேகூட நம் இலக்கியம் பற்றிய அறிவு மிகக் குறைவாக இருக்கிறது. பிற இந்திய மொழிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்குக்கூட நம் இலக்கியம் பற்றி அதிகம் தெரியவில்லை. திருவள்ளுவரின் பெயரையோ, அல்லது பாரதியின் பெயரையோ மேடைப்பேச்சு என்ற சமூக நிகழ்வுக்காக ஒருவர் தெரிந்து வைத்திருப்பதில் நாம் அதிக மகிழ்ச்சி கொள்ள வேண்டியதில்லை. திருக்குறள் பற்றியும் பாரதிப் பாடல் பற்றியும் சாராம்சமாக பலருக்கும் தெரியாமல் இருப்பதில்தான் நாம் ஏமாற்றம் கொள்ள வேண்டும். இந்திய மொழிகளிலே நம் இலக்கியம் போய்ச் சேரவில்லை என்றால் உலக அரங்கிலுள்ள மொழிகளில் நாம் போய்ச் சேராததில் வியப்பில்லை.

மொழிபெயர்ப்புகள் மூலம் இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் நம் இலக்கியம் பரவ முடியும். இதில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் இன்று வரையிலும் நாம் செய்திருக்கும் மொழிபெயர்ப்புகளை மறு பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இவ்வாறாக மூலத்துடன் ஒப்பிட்டு மறு பரிசீலனையிலிருந்து பல உண்மைகள் நமக்குத் தெரிய வரலாம்.

எனக்குத் தெரிந்த வரையில் ஒரு சில உண்மைகளை வரிசைப் படுத்திக் கொண்டு போகிறேன். ஒரு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சேற்றிவிட்டால் அதை ஒரு வெற்றி என்று கருதுகிறோம். இவ்வாறான முயற்சிகள் அமைச்சர்களுக்குத் தங்கள் சாதனைகளின் புள்ளி விபரங்களை முன் வைக்கும்போது பயன்படலாம். அரசியல்வாதிகளுக்குப் பயன்படலாம். நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயன்படலாம். ஆனால் மொழிபெயர்ப்பு அச்சேறிவிட்டதாலேயே வெற்றி எனக் குறிப்பது கலாச்சாரப் பார்வை அல்ல. எத்தனை வாசகர்கள், எத்தனை படிப்பாளிகள், எத்தனை விமர்சகர்கள், நம் படைப்பைப் புதிதாகத் தெரிந்து கொள்ளக் காரணமாக நம் மொழிபெயர்ப்பு அமைந்தது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். இந்த யோசனை நமக்கு இன்று வரையிலும் இல்லை.

மொழிபெயர்ப்பு எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் மூலம் கூடுதலாக இலக்கிய வீச்சை எந்த அளவுக்குப் பெற்றோம், மொழிபெயர்ப்பில் மூலம் பெற்ற விமர்சனங்கள் என்ன, நம் மொழிபெயர்ப்பில் நேர்ந்து விட்ட குறைகள் என்ன, குறைகள் இருப்பின் மேற்கொண்டு நாம் செய்யவிருக்கும் மொழிபெயர்ப்புகளில் அதை எப்படித் தவிர்க்கலாம் போன்ற சிந்தனைகள் எதுவும் தமிழ்க் கலாச்சாரச் சூழலில் இன்று வரையிலும் உருவாகவில்லை. மொழிபெயர்த்து அச்சேற்றுவதையே ஒரு சாதனை என்று சொல்லிக் கொண்டிருப்பதில் நம் உற்சாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வேறு ஒரு விதத்தில் சொன்னால் நுட்பமான, உண்மையான தளத்தில் நிகழ வேண்டியக் காரியங்களை பிரச்சாரத் தளத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். போதிய வெற்றி கிடைக்காத நேரத்திலும், வெற்றி பெற்று விட்டதாகக் கற்பனை செய்து மகிழ்ந்து கொள்கிறோம்.

உலக அரங்கிலும் இந்திய அரங்கிலும் நமக்குத் தகுதியிருக்கும் அளவுக்குக்கூட நாம் செல்வாக்கு பெறாத நேரத்தில் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பல தேசத்து இலக்கியங்களும் வெற்றிகரமாக உலக இலக்கியத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருக்கின்றன. அர்ஜென்டினா, பிரேசில், சிலி, க்யூபா, கொய்டிமாலா, மெக்சிகோ, நிகராகுவே, பராகுவே, பெரு, உருகுவே, வெனிசூலா போன்ற தேசங்களின் இலக்கியங்கள் உலக அரங்கில் ஏறிவிட்டன. அளவில் மிகச் சிறிய தேசங்கள் இவை. ஒருசில தேசங்கள் தமிழ் நாட்டில் பெரிய மாவட்டங்களை விடச் சிறியவை.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்யும் போது பெரும்பாலும் அது ஆங்கில வாசகர்களின் திருப்திக்கு ஏற்ப அமைவதில்லை. இதைச் சொன்னால் பூரணலிங்கம் பிள்ளை, வ.வே.சு. ஐயர், ராஜாஜி, பேரா. கே. சுவாமிநாதன், க.நா.சு. இவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தெரியாதா என்று கேட்பார்கள். சண்டைக்கு வருவார்கள். விருப்பு வெறுப்பின்றி விஷயங்களைப் பார்க்கத் தெரியாத வரையிலும் சண்டைகளை நடத்திக் கொண்டிருக்கலாம். சாதனைகளை நிகழ்த்த முடியாது.

எல்லா மொழிகளையும் போல் ஆங்கிலமும் பல கூறுகளும், பல வண்ணங்களும், பல அடுக்குகளும், அலகுகளும், அழகுகளும் கொண்டது. எல்லா மொழிகளையும் போல் ஆங்கிலத்திலும் படைப்பு மொழிக்கும் பொது மொழிக்குமான வித்தியாசம் அதிகமானது. பொது மொழியின் தேர்ச்சியைச் சார்ந்து ஒரு படைப்பை மொழி பெயர்க்க முடியாது. படைப்பை மொழிபெயர்க்க படைப்பு மொழியில் பிடிப்பு இருக்க வேண்டும். படைப்பு மொழியை புத்தக அறிவு மூலம் கற்றுக் கொள்வதும் கடினம். அம்மொழி பேசும் இடங்களில் வாழ்ந்து அம்மொழியைத் தாய்மொழியாகப் பயன்படுத்தும் விதங்களை உணர்ந்து அதன் நளினங்களையும், அதன் அழகுகளின் ஓசைகளையும் அனுபவித்து தன்னுள் அம்மொழியை முழுமையாக வாங்கிக் கொண்ட நிலையில்தான் படைப்புமொழியில் பிடிப்பு ஏற்படும். ஒரு எளிய ஆங்கில வாக்கியத்தை நாம் அமைக்கும் விதத்திற்கும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அமைக்கும் விதத்திற்கும் இருக்கும் வேற்றுமையை நினைத்துப் பார்க்க வேண்டும். கல்வி மூலம் ஆங்கிலம் கற்று ஆனால் வாழ்நிலையில் ஆங்கில மொழியில் திளைக்காதவர்கள் செய்யும் மொழிபெயர்ப்புகள், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட வாசகர்களுக்குப் பெரும்பாலும் அந்நியமாகவே இருக்கின்றன.

படைப்புக்குள் நுழைந்து படைப்பின் சாராம்சங்களைக் கண்டறிய நாம் பயன்படுத்தி வரும் ஆங்கிலம் அவர்களுக்குத் தடையாகவே இருந்து வருகிறது. இன்று வரையிலும் நாம் செய்திருக்கும் மொழிபெயர்ப்புகளில் சங்கப் பாடல்களையும், ஆழ்வார் பாடல்களையும், மொழிபெயர்த்திருக்கும் ஏ.கே.ராமானுஜம்தான், அதிக வெற்றி பெற்றிருக்கிறார். அவர் மீதும் விமர்சனங்கள் உள்ளன. மொழிபெயர்ப்புத் திறன்பற்றி விமர்சனம் இல்லை. மொழி பற்றி விமர்சனம் இல்லை. உலக அரங்கில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் இடைவெளுயின்றி அவரது மொழிபெயர்ப்பை படிக்க முடிகிற காரணத்தால், படைப்பு மொழியில் இருப்பதால் நம் படைப்பு உலகத் தரத்திற்கு சென்றுவிட்டது. மூன்றாம் உலகக் கவிஞர்களைப் பற்றி இன்றைய உலகக் கவிஞர்கள் பேசுவதைப் போன்று 21ஆம் நூற்றாண்டில் சங்கக் கவிஞர்களைப் பற்றியும் அவர்கள் பேசலாம்.

ஏ. கே. ராமானுஜம் கண்டிருக்கும் சாதனையின் கூறுகளை நாம் ஆராய்ந்து கொண்டு போனால் என் வாதங்கள் மேலும் சிறிது வலுப்படலாம். ஏ.கே. ராமானுஜம் ஆங்கில இந்தியக் கவி ஆவார். அதனால் ஆங்கிலத்தை படைப்புமொழியில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர். உலக அறிவுகள், உலக இலக்கியங்கள், சார்ந்த தேர்ச்சிகள் கொண்டவர். தொடர்ந்து பல ஆண்டுகள் ஆங்கிலம் வாழ்க்கை மொழியாக இருக்கும் ஒரு தேசத்தில் வாழ்ந்த காரணத்தால் ஆங்கில மொழியின் ஓசைகள் மூலம் அம்மொழியின் படைப்பு குணங்களை தன்னளவில் வாங்கிக் கொள்ளக்கூடிய அரிய சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.

இந்திய அரங்குக்கும் உலக அரங்குக்கும் நாம் நம் இலக்கியங்களைக் கொண்டு போகும்போது பதிப்பின் வடிவ நேர்த்தி என்பது மிக முக்கியமானது. நவீன வடிவ நேர்த்தியில் தோற்றுப் போய் விட்டோம் என்றால் உள்ளடக்கம் மேலாக இருந்தாலும் இன்று அதை எந்த வாசகர்களிடையிலும் எடுத்துக்கொண்டு போக முடியாது. அத்துடன் பதிப்பு நவீனப் பார்வை உட்பட்டிருக்க வேண்டும். இன்றையப் பார்வையில் நேற்றையப் புத்தகங்களைப் பார்க்கத் தெரிய வேண்டும். நாம் நம் புத்தகங்களுக்கு எழுதும் முன்னுரைகள் சாராம்சமில்லாதவைகளாக, தற்பெருமை பேசுபவையாக உலக மொழியில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிய வேண்டும். மொழிபெயர்ப்பைப் படிக்க நேரும் புதிய வாசகர்கள் நூலின் தரத்தை உணரவேண்டும். இந்த விளைவு ஏற்பட வேண்டுமென்றால் நம்முடைய படைப்பு சார்ந்த பார்வைகள் எப்படி உருவாக வேண்டும் என்றும் நாம் யோசிக்க வேண்டும். இந்திய அரங்குக்கும் உலக அரங்குக்கும் போக நாம் இன்று வரையிலும் செய்த காரியங்களின் தீவிரமான மறுபரிசீலனையும் ஒரு நவீனப் பார்வையும் நமக்குத் தேவை.

குமரிக் கலைக்கழகத்தில் ஆற்றிய உரை – 27.10.98

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி