உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கருணாகரன்


உணர்தலில் நிகழ்கிற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள். ஆனால் அது அதிசயமல்ல. யதார்த்தம். யதார்த்த வெளியில்தான் உமா மகேஸ்வரி மையம் கொள்கிறார். அவருக்கு யதார்த்த வெளியிலேயே ஏராளம் அனுகூலங்களும் பிரதி கூலங்களுமிருக்கின்றன. அதிலேயே அவர் தனக்கான பெரிய உலகத்தை நிர்மாணிக்கிறார். அவருடைய இந்தப் பெரிய உலகம் சாதாரணமானது. ஆனால் அது அசாதாரணமானது. இப்படி ஒரு வேற்றுத்தன்மையும் நிலையும்கொண்ட படைப்பியக்கத்தின் வழி தன்னை உமா மகேஸ்வரி விரித்துச் செல்கிறார்.

உமா மகேஸ்வரியின் பலமே அவருடைய உணருகைதான். ஒவ்வொன்றையும் அவர் ஆழமாகவும் பல பரிமாணங்களிலும் உணருகிறார். தென்படும் ஒவ்வொன்றும் அவருக்குப் பல விதமான புலப்பாடுகளைக் கொடுக்கின்றன. எல்லாவற்றிலும் அவர் வௌ;வேறு அர்த்தங்களை உணருகிறார். அதிலும் ஆழமாக. அதிலும் பெண் அனுபவத்தினுமாகவும் பெண் நிலைப்பட்டும்.

பொதுவாகவே படைப்பாளியின் இந்த உணருகையில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறார்கள். அவரவரின் அறிவுத்தளம், அனுபவத்தளம், நோக்குநிலை என்பவற்றைப் பொறுத்து அவரவரின் உணர்கை நிகழ்கிறது. அவரவரின் உணருகைக்கேற்றமாதிரி அவரவரின் படைப்பு அமைகிறது.

படிக்கும்போது வியப்பும் அதிர்ச்சியும் கலந்த நிலையைக் கொண்டு வரும் உண்மை உலகத்தை உமா மகேஸ்வரி இத்தனை ஆச்சரியமாக எப்படி விரித்துக்காட்டுகிறார் என்று புரியவில்லை. இந்த ஆற்றல் மிக அபூர்வமானது. எல்லாவற்றையும் மிக ஆழமாகவும் நுண்மையாகவும் அவதானித்தல், உணர்தல் என்பதனடியாக இது சாத்தியமாகிறது என்றே நினைக்கிறேன். அதாவது தன்னையும் தன் சூழலையும் தன் காலத்தையும் வரலாற்றையும் அவர் அப்படி அவதானிக்கிறார், உணர்கிறார், அறிகிறார்;.

ஜெயமோகன் ஒரு தடவை சொன்னதைப்போல நுண்மையான உணர்திறன், அவதானிப்புத்திறன்தான் படைப்பின் நுண் அம்சங்களையும் உயிரையும் சிறப்பாக்குகிறது. உணர்வதும் பிறகு அதை மொழிவதும் இந்த நுண் அம்சங்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது.

நவீன கவிதையில் தேவதேவன், மனுஷ்யபுத்திரன், சல்மா, சித்தாந்தன், எஸ்போஸ், எம்.யுவன் போன்றோரிடம் இந்த உணருகை முறைமை மிக நுட்பமாக வெளிப்பாடு கொள்கிறதை அவதானிக்கலாம். ஈழத்துப் பெண் கவிஞர்களில் எப்போதும் சிவரமணிக்கு இந்த அடையாளம் சிறப்பாக உண்டு.

மனுஷ்யபுத்திரனின் நீராலானது தொகுதியும் ( பின்னர் வந்த அவருடைய கவிதைகளைப் பார்க்கக் கிடைக்கவில்லை) எம்.யுவனின் கை மறதியாய் வைத்த நாள் தொகுதியும் இந்தவகையில் முக்கியமானவை.

நெடுங்காலமாய்

பூட்டியிருக்கும் வீட்டில்

இரவெல்லாம்

அறையறையாய்

அலைந்து கொண்டிருக்கிறது

ஆளில்லாத

ஒரு சக்கர நாற்காலி

என்று மனுஷ்யபுத்திரன் எழுதும் போது நமது புலன்களில் அதிர்ச்சி தாக்குகிறது. அது வெறும் அதிர்ச்சியில்லை. அந்த அதிர்வு ஒரு விதை முளை கொள்ளும் போது நிகழும் அதிர்;வு. ஒரு மலர் உதிரும் போது நிகழும் அதிர்வு. நமக்குள் ரச மாற்றங்களை உருவாக்கும் விளைவுக்கான அதிர்வு.

இந்த அதிர்வு முறையை உமா மகேஸ்வரி தன்னுடைய முறையில் தன்னுடைய தளத்தில் நிகழ்த்துகிறார். அவர் அதை நிகழ்த்துகிறார் என்று சொல்வதை விடவும் அது அவருடைய இயல்பெனும் விதத்தில் நிகழ்கிறது.

எற்றி உடைத்துப் போன

பீங்கான் சிதறல்களைப்

பெருக்கிச் சுத்தப்படுத்துகையில்

கேவலத்தின் நுனியில் நிற்கிறேன்

தலைப்பில்லாத இந்தக்கவிதையில் சற்று முன்னோ எப்போதோ நடந்த ஒரு வன்னிகழ்வை அவர் உணர்ந்த விதம் தெரிகிறது. இதில் காட்சியும் மனதில் நிகழும் உள்வலியும் கலந்த வெளிப்பாட்டை காணலாம், உணரலாம்.

பொதுவாகவே பெண் தன் வாழ்வில் எப்போதும் அல்லது அநேகமாக சந்திக்கின்ற நிகழ்வொன்றை எளிய முறையில் சொல்வதன் மூலம் இந்த வன்முறையை அழுத்தமாக எதிர்ப்பு நிலைக்கு கொண்டு போகிறார் உமா.

இந்தக்கவிதையின் மீதிப்பகுதியில்

புறக்கணிப்புகளைத்

தொடுத்துக் கொள்கிறேன்

பூக்களைப்போல மென்மையாக.

முகச்சுழிப்புகளின் கசப்பில்

உப்பும் புளிப்பும் விரவி

உண்ணத்தகுந்ததாகப்

பதப்படுத்துகிறேன்.

என்று சொல்வதன் மூலம் பெண்ணின் கசப்பான பிராந்தியத்தை நமக்கு முன்னால் வைக்கிறார் பெருங்கேள்வியாகவும் சாட்சியாகவும்.

அதுவும் பெண் வாழ்வோடிணைந்த மொழியையும் சொற்களையும் பொருட்களையும் சூழலையும் வைத்து இதனை அவர் செய்கிறார். இங்கே பெண்ணின் அனுபவப்பிராந்தியம் ஒளிபெறுகிறது.

தன்னுடைய கோபம், விருப்பின்மை, மறுதலிப்பு எல்லாவற்றையும் பிரயோகிக்க முடியாத அவலத்தில், யதார்த்தத்தில் அவை எல்லாவற்றையும் புதைத்து விட்டு மீண்டும் வழமைக்கு திரும்பும் விதி மகா கொடுமையானது. எல்லாவற்றையும் விருப்பின்றியே உண்ணத்தகுந்ததாகப் பதப்படுத்துகின்றேன் என்று சொல்வதிலும் பெண் சமையலுடன் கொண்டுள்ள உறவுலகத்தைக் கொண்டு அதனூடகவே அவர் பேசுகிறார். அதையும் அடையாளப்படுத்துகிறார்.

இந்தக்கவிதையின் மீதியான இறுதிப்பகுதியில்

என் செத்த கோபத்தை மட்டும்

செய்வதறியாது

எறிகிறேன்

கழிவறைக் கோப்பைக்குள்

இங்கே சலிப்பும் இயலாமையும் பீறிட்டுக் கொதிப்புடன் பொங்குகிறது. பெண்ணின் கோவம் பெறுமதியற்றுப்போகும் அவலம் அப்படியே உள்ளது. உயிர்ப்போடு தகிக்கும் பெருந்தீயாய் இருந்த கோவம் இப்போது செத்துவிட்டது. செத்த கோவம் பெறுமதியற்றது. அது கழிவறைக் கோப்பைக்குள் போகிறது.

கழிவறை வரையிலும் பெண்ணின் பணி விரிகிறது. சமையல் கட்டில் தொடங்கி கழிப்பறை வரையிலும் அவளுடைய உலகம் அவளுக்காகவே விதிக்கப்பட்டிருக்கும் கொடுமை இங்கே பதிவாகிறது. உண்மையில் பேரதிர்ச்சியூட்டும் இந்தக்கவிதை பெண்ணரசியலைப் பேசும் அழுத்தமான குரலுடையது.

உமா மகேஸ்வரி இதுபோல பல கவிதைகளிலும் பெண் அடையாளத்தைக் கொண்டே முழு வெளிப்பாட்டையும் செய்கிறார்.

தாய், பிள்ளை, குழந்தை, என்ற வகையிலான கவிதைகள் பெண் அனுபவத்தின் பரவசத்தையும் பெண் பெறுகிற வலி நிரம்பிய கொடும் அனுபவத்தையும் கொண்டவை.

பரவசத்துக்கு எடுத்துக் காட்டாக

நான சமைக்கும் போது

உனக்கு நீயே

பேசியதென்ன …

கிலுகிலுப்பையின் சிரிப்பு

கலைந்த பொம்மைக் கூந்தல்

தேவதை நடனம்

மழையின் பாடல்

கடலின் கதவுகள்

நிலவின் உலா

சூடான உணவை

ஊதி உனக்கு ஊட்டும்போது

தேடுகிறேன் சிறுவாயில் …

யசோதை மனதளவு உலகம்.

இதுபோல வலி நிரம்பிய அவருடைய கவிதை ஒன்று

உதாசீனமாய் உதறியாடுகின்றன

விதியின் பெரும் பாதங்கள்

பொய்களும் நிஜங்களும்

கலந்து குழம்பும்

உறவுகளின் திரவக்குடுவை

நிரம்பி வழிய

அருந்தத் தூக்கிய கை நழுவி

விழுந்து சிதறிய

கண்ணாடிச்சில்லுகள்

பொடிந்தோடுகின்றன

துடைத்துத் தூய்மையாக்கவியலாத

சிக்கலின் வெளி நோக்கி

இவ்வாறு இருக்கும் மகேஸ்வரியின் உலகத்தில் மற்றொரு பரிமாணத்தில் நிகழும் கவிதைகளும் உண்டு.

தனித்த பேச்சாக

தன் வாசனையைப்பரப்பும் மலர்

உதிர்வதை மறந்து

உரக்கொள்ளும் ஒரு மனமாக

இந்த வரிகள் நவீன கவிதையின், நவீன மனதின் தனி அடையாளத்துக்குரியவை. மலரை அவர் பார்க்கும் விதம், அதனோடு அவர் கொள்ளும் உறவு, அதை அவர் புரிந்து கொள்ளும் நுட்பம் எல்லாம் மலர் குறித்த சித்திரத்தை, அதன் அடையாளத்தை மாற்றிவிடுகிறது. இங்கே மலர் இயக்கமுறுகிறது. ஒரு செயலாக. பெரும் வினையாக. எதுவோன்றும் அப்படித்தான். அதனதன் இருப்பில் அவற்றுக்கு என்று தனி இயங்கு தளமுண்டு. உமா மகேஸ்வரி இந்த இயங்குதளத்தை கண்டிருக்கிறார். அதை அவர் நமக்கு காண்பிக்கிறார்.

படைப்பென்பதே ஒரு வகையில் காண்பித்தல், உணர்வித்தல்தான்.

இன்னொரு கவிதையில் அவர் சொல்கிறார்,

புத்தகங்கள் ஜன்னல்கள் அலமாரிகள்

சமையல் பாத்திரங்களிலிருந்து

திடுமெனப்பீறிடும் கதறல்கள்.

வீடுதான் இதுவரையான பெண்ணின் அந்தரங்கத்திலும் வெளியிலும் ஆழமாகப்பதிந்துள்ளது என்பதற்கு இந்தவரிகள் இன்னொரு சாட்சி. வீட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பொருளும் பெண்ணுடன் கொண்டிருக்கும் உறவு பெரியது. அது ஆழமானது. மனிதருடனான உறவைப்போல பெண் இவற்றில் அந்தரங்கமாக நேசங்கொள்கிறாள். இந்த நேசம் வெறுமனே பொருளாதார நோக்கம் சார்ந்ததல்ல. அதாவது சொத்து என்ற அடிப்படையிலான விருப்பமாக அல்ல.

இவற்றினோடு புழங்கிய உயிரி ஒரு போது இல்லாதபோது இவற்றிலிருந்து கிளம்பும் குரல், அதன் தனிமை, துயரம் அந்தப் பெண்ணின் உறவுலகத்தைக்காட்டுகிறது. இதிலும் உமா மகேஸ்வரி பெண் அனுபவப்பிராந்தியத்தைக் கொண்டே பேசகிறார். அதே வகையான மொழியிலும் மொழிதலிலும்.

என்னை உள்ளிருத்தியிருக்கிறது

அந்த ஒற்றைக் கண்ணீர்த்துளி

வீட்டின் வலிய சுவர்கள்

கடின முறகையில்

அதன் வழுவழுப்பான நீர்மைக்குள்

புகுந்து கொள்கிறேன்.

இத்தனை எளிய சொற்களின் மூலம் மிக வலிமையான உணர்தல்களையும் தன்னுடைய அக, புறவுலகத்தையும் வலிகளையும் அன்பையும் அவர் பகிர முடிகிறதென்றால், அவர் தன்னுள் விளைந்திருக்கிற விதமே அதற்குக் காரணமாகும். உமா மகேஸ்வரியின் அடையாளம் அல்லது திசை என்பது பெண்ணின் பெரு மனவிரிவு கொண்ட வாழ்வே. அவளது காதலும் பெருகும் கருணையும் அன்பும் பரிவும் அவள் கொள்ளும் ஈடுபாடும் எண்ணங்களும் வலியும் துயரும் கோவமும் சலிப்பும் எதிலும் சரி நிகரானதே. அதிலும் இன்னும் ஆழமானதும் கூட. இதுவரை பொதுவில் அறிந்திராத பரப்பென்ற வகையில் பெண்ணனுபவங்களும் எண்ணங்களும் புதியவையும் வித்தியாசமானவையும் அதிக கவர்ச்சியுடையனவும் அதிர்ச்சி கூடியவையுமாகும்.

இந்த அனுபவமும் எண்ணமும் பெண் வாழ்விலும் அறிதலிலும் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது பெண்ணைக் கடந்து இவ்வாறு பொதுப்பரப்புக்கு வருவது புதிதாகவே இருக்கிறது. இத்தகைய பண்பில் ஏற்கனவே கவிதைகளோ கதைகளோ சினிமாவோ வந்திருக்கிறது என்று யாரும் சொல்லக்கூடும். ஆனால் அதுவல்லப் பிரச்சினை. இங்கே சொல்லப்படுவது, பெண் பிராந்தியத்தின் வலிமை பற்றிய பொதுப்பேச்சையே நான் வலியுறுத்துகிறேன்.

பெண்ணனுபவத்தை பதியவும் பகிரவும் கூடியவாறான சூழலின் விரிவு எங்கும் இன்று அதிகமாகி வரும்நிலையில் உமா மகேஸ்வரியின் இந்தக்கவிதைகள் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பெண்ணின் மேலான ஆணின் அதிகாரம் பால் ரீதியாவும் பாலியல் ரீதியாகவும் வன்முறையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகெங்கும் வன்முறை வாழ்வும் வன்முறை அரசியலும் வன்முறைச் சமூகமும் பெருகியிருக்கும் இன்றைய சூழலில் பெண் ஒரு பலி பீடமாகவே இன்னும் இருக்கிறாள். அப்படித்தான் இருக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறாள்.

அறிவும் தகவல் உலகின் விரிவாக்கமும் அவற்றின் விளைவான சமூக அசைவும் பெண்ணை எவ்வளவோ தூரம் முன்னுக்கும் வெளியிலும் கொண்டு வந்துள்ள போதும் இன்னும் அவவளுடைய பலிபீடம் ஈரமாகவேயுள்ளது. குருதியும் வலியும் கண்ணீரும் வேதனையும் இருளும் கொண்டதாகவேயுள்ளது.

ஈழத்தில் பெண்கள் அதிலும் தமிழ்ப்பெண்கள் அரச அதிகாரத்தினால் சந்திக்கின்ற வன்முறையும் நெருக்கடியும் இதற்கு இன்னொரு வகையான வலிமையான சாட்சி. கலாவின் கோணேஸ்வரி கவிதை இந்த வன்முறைக்கான சாட்சியத்தில் முக்கியமானது. அதில் அவர் பெண் சீற்றத்தின் மொழியை அப்படியே வெளிப்படுத்தியிருந்தார். அந்தக்கவிதை வந்தபோது பொதுவான வாசகப்பரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது இன்னொரு சுவாரசியமான பக்கம். அது மிக வேடிக்கையானதும் கூட. ஆனால் அந்தக்கவிதையின் எதிர்ப்புணர்வு வலியது. மிக மிக வலியது.

இங்கே இந்தத் தொகுதியிலுள்ள உமா மகேஸ்வரியின் கவிதையொன்று.

நீயாக எனை

விழைந்த நேரம்

முற்றத்தில் அந்தி வெயிற் சலனம்

தினவின் இறுகிய பிடிக்குள்

தோளோடு தோள் இணைந்தும்

நானிருந்தேன் தொலை தூரத்தில்

காறியுமிழும்

கலமாகக்குழிந்தேன்

உள்ளுணர்வைக்

குதறிப்போகின்றன

வெளியே இழையும் உடலிலிருந்து

நானறியாத மிருக நகங்கள்

உனது படுக்கையில் நீ

என்னைத்திறக்கையில்

மலைத் தொடரில் நிலைத்த

எனை நோக்கி நான்

விலகி நகர்ந்த கணம்

பிரிந்தாய் என்

சருமத்தின் குழைவை நீங்கி

இந்தக்கவிதை சொல்வதும் ஏறக்குறைய கலா சொல்வதன் சாரத்தையுடையதே. ஆனால் அது அரச பயங்கரவாதத்தின் அடியாகவும் இனவாதத்தின் அடியாகவும் வரும் ஆண் ஆதிக்கமும் வன்முறையும்.

இங்கே உமா மகேஸ்வரியோ அதை வேறு விதமாக தன்னுடைய வாழ்களச் சூழலோடிணைத்துக் கொண்டுவந்துள்ளார். இந்தக்கவிதை பெரும் மாற்றத்துக்கான சாவியை தன்னிடத்தில் கொண்டுள்ளது. அதேயளவுக்கு பெண்ணின் வலிமையான விலகலும் புறக்கணிப்பும் திரட்சி பெற்றிருப்பதையும் காணலாம்.

பௌதிக நெருக்கத்தை விடவும் உள்ளீடான நெருக்கமும் உறவுமே வாழ்வின் ஊற்றென்பதை அவர் உணர்த்துகிறார். இந்தக்கவிதையின் உளவியல் பரிமாணம் வன்முறைக்கு எதிரான அரசியற் பலமாகிறது.

உமா மகேஸ்வரியின் கவிதைகள் பெண் வாழ்வினதும் பெண் அனுபவத்தினதும் தொகுப்பு. அதை அவர்; தன்னுடைய பலமாகக் கொண்டிருக்கிறார். அதிலும் நடுத்தரவர்க்கத்து பெண் வாழ்வு பதியமாகியுள்ளது. தலித் பெண் வாழ்க்கை, அடிநிலைப் பெண்வாழ்க்கை என்பவை வேறானவை. அவற்றின் அடையாளமும் வேறு.

இந்தத் தொகுதியில் மிகுந்த அழுத்தத்தைத் தரும் கவிதைகள் பலவுண்டு. நெருக்கடியையும் வன்முறையையும் கடக்க வேண்டும் என்ற ஆவலின் விளைவு எல்லாவற்றிலும் தெரிகிறது. யாரையும் குற்றஞ்சுமத்தும் பாவனைகளை விடவும் பிரச்சினைகளை ஒரு வகையான உரையாடலினூடாக பகிரந்து உணர்த்துவதையே தன்னுடைய ஆதார முறையாக இவர் கொண்டிருக்கிறார். இந்த அணுகுமுறை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு போதாது என்றிருக்கும். பெண்ணரசியல் ஒரு கலகக் குரல் என்ற வகையில் இது பற்றிய பல வாதப்பிரதி வாதங்கள் எழலாம். ஆனால் இவை எதிர்ப்புக்கவிதைகள் என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா.

தொகுப்பில் சில கவிதைகள் சாதாரணமானவையாகவும் இருக்கின்றன. அவற்றை விலக்கிப்பார்த்தாலும் சரி சேர்த்துப்பார்தத்தாலும் சரி உமா மகேஸ்வரி நெருக்கமான ஒருவராகவே கவிதைகளின் வழி இருக்கிறார்.


தமிழினி பதிப்பகம் (2003)

poompoom2007@gmail.com

Series Navigation

கருணாகரன்

கருணாகரன்