“உனையே மயல் கொண்டு” – உண்மைகளைச் சொல்ல வந்திருக்கும் ஒரு துணிந்த படைப்பு

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்



டொக்டர் நடேசனின் புதிய நாவலான ” உனையே மயல் கொண்டு ” படித்தபோது தமிழரின் கடந்த கால இலக்கியப்படைப்புக்கள் பற்றிச் சில ஞாபகங்கள் எனது மனதில் உதிர்த்தன.

60ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த எஸ். பொன்னுத்துரையின் இலக்கியப்படைப்புக்களில் பாலியல் பற்றிய விடயங்கள் இருந்ததாக, இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் பாரிய விமர்சனம் கிடைத்தது. இலங்கையின் வடக்கில் சாதிக்கொடுமை விசுவரூபம் எடுத்துக் கோயில்களில்’ சாதிகுறைந்த தமிழர்கள்’ போகக்கூடாது என்று அடங்காத் தமிழன் சுந்தலிங்கத்தின் தலைமையில் யாழ்ப்பாணத்து மேற் சாதியினர் போற்கொடியுயர்த்தினர். போலிசார் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ‘சாதி குறைந்த(????????!!!!—எனக்குப்பிடிக்காத, என்னால் தயக்கமில்லாமல் எழுத முடியாத சில தமிழ்ச் சொற்களில் இவையும் சில) தமிழர்களையும் அவர்களுடன் சேர்ந்து சாதிக்கொடுமையை எதிர்த்த முற்போக்கு தமிழ் சக்திகளான கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர்கள், தொழிலாளர்கள் என்போரைத்தாக்கினார்கள். அந்தக்காலத்தில் வெடித்த சங்கானைச்சாதிக்கலவரம் இன்று தமிழருக்கு விடுதலைதேடும்(!!!!!!) சக்திகளால் மறைக்கப்பட்டுவிட்டது, மறக்கப்பண்ணப்பட்டிருக்கிறது.
சாதிப்பிரச்சினை தலைதூக்கி தமிழரின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம், இலக்கியப்படைப்புக்களில் இடம்பிடித்துக்கொண்ட அந்தக்கால் கட்டத்தில் சமுதாயப்பிரச்சினகள் பற்றி எழுதாமல் ஒரு சாதாரண மனிதனின் அக உணர்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுத்து இலக்கியம் படைத்ததாகப் பொன்னுத்துரை விமர்சிக்கப்பட்டார்.
இன்று புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியவாதிகளிற் சிலரிடமிருந்து பாலியல் உணர்வுகள், உறவுகள் பற்றிப் பல படைப்புக்கள் வந்து விட்டன. கலாமோஹனின் யதார்த்தமான சில படைப்புக்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல சர்ச்சைகளை எழுப்பின.இலங்கைப்பிரச்சினை பற்றி எழுதாமல் ‘ அன்னிய’மான படைப்புக்களைப் படைப்பதாக விமர்சிக்கப்பட்டார்கள். இலக்கியம் என்பது படைப்பாளியின் சுதந்திர சிந்தனையின் சிறு துளிகள். ஆயிரம் விடயங்கள் மனதில் பட்டாலும் தனது மனதுக்கு உகந்ததை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுபவன் உண்மையான படைப்பாளி.

நடேசனின்’ “உனையே மயல் கொண்டு”எல்லோருக்கும் தெரியவேண்டிய ஒரு முக்கிய விடயத்தைச்சொல்லும் நாவல்.
‘பைபோலார் டிஸீஸ்-bipolar dieases-disordes (manic depression) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு மனவியாதியால் துயர் படும் ஒரு பெண்ணையும் அவளைத் திருமணம் செய்து அல்லற்படும் கணவரையும் பின்னிப்பிணைந்த நாவல்.
மன நலம் பாதிக்கப்பட்ட ஆணோ பெண்§ணோ என்றில்லாமல் சாதாரண மனிதர்கள் மாதிரி வாழ்க்கை நடத்துவது கடினம். தாம்பத்திய
வாழ்வின் முக்கிய அம்சமான ‘பாலியல்’ உறவை மன நலம் பாதிக்கப்பட்டவர்களால் சந்தோசமாக அனுபவிக்க முடியாது.

பாலியல் உறவுக்கு ஆரோக்கியமான மனநிலை முக்கியம். உதாரணமாக,மனநிலை பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையின் பூரண விறைப்பையடைவதும் தாம்பத்திய உறவை அனுபவிப்பதும் மிகவும் கடினம். இதைப்புரியாமல் பலர் தங்களுக்கு ஏதோ ‘ பிழை’ இருப்பதாக நினைத்துக் குடிக்கதொடங்கி. அடுப்பில் இருந்து நழுவி நெருப்பில் விழுந்து அழிந்த கதையாக வாழ்க்கையை முடித்துக்கொள்வதுமுண்டு.

நடேசனின் நாவல் ‘ பைப்போலர்’ வருத்தம் வந்த சோபா என்ற பெண்னின் வாழ்க்கையைப் பற்றியது. பைப்போலார் வருத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி மூட் மாறும்(Mood swings) . மிக மிக சந்தோசமும் ஆழமான சோகமும் ( Deep depression) இவர்களை ஆட்டிப்படைக்கும்.
அமெரிக்காவில் 2.3 கோடி மக்கள் இந்த மனவருத்ததால் கஷ்டப்படுகிறார்கள். அதில் 20 வீதமானவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.
இந்த வருத்ததிற்குக் காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும் ஒருமனிதனின் வாழ்க்கையில் நடந்த அதி துக்கமான சம்பவங்களும்(Trauma) , சிலவேளைகளில் பாரம்பரியமும்(genetic) காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஆசிய நாட்டுப்பெண்களில் 6 %வீதமானவர்கள் ஏதோ ஒரு வித மன வருத்ததிற்கு ஆளாகிறார்கள் என்று லண்டன் மனவைத்திய அமைப்புக்கள் கணிப்பிட்டுகின்றன.இவர்களில் பலர் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதுமுண்டு(self harming).

நடேசனின் ” “உனையே மயல் கொண்டு”அவுஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழ்த் தம்பதிகளுக்குள் நடக்கும் பாலியற் பிரச்சினை, அந்தப்
பிரச்சினை வருவதற்கான உந்துகோல்கள், பிரச்சினை வரும்போது ஒரு சாதாரண மனிதனின் சாதாரண உணர்வுகளின் போராட்டம், மனதை வெல்ல முடியாமல் காமத்தின் தணலுக்குள் வீழ்ந்துபோகும் அனுபவம் அதன் மூலம் தெரிந்து கொண்ட உண்மைகள், அந்த உறவாற்
கிடைத்த குற்ற உணர்வு, கிடைத்த தண்டனை என்பனபற்றி மிகவும் எளிமையாகவும் யதார்த்தமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.
மனவியாதி பற்றிய தமிழ்ச் சமுகத்தின் கணிப்பும் கதாபாத்திரங்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் சோபாவுக்கு வந்த அதிர்ச்சிகளில் 83ம் ஆண்டு இனக்கலவரம் மட்டுமன்றி, சோபாவின் தமயன் கார்த்திக்கின் மரணமும் ஒன்று. அவன், டெலோ இயக்கத்தில் இருந்தான் என்ற குற்றத்தால் புலிகளால் எரித்துக்கொல்லப்பட்டவர்களில் ஒரு தமிழன்.
அந்தச் சம்பவம் அந்தக்குடும்பத்தின் அத்திவாரத்தையே அழித்த சம்பவம் என்பது சோபாவின் வாழ்க்கையின் குழப்பத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
‘சிங்களவர் வீடுவாசலை எரித்தார்கள்,ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் என் பிள்ளையை எரித்துக் கொன்று விட்டார்கள். சிங்களவன் நாங்கள் தமிழர்கள் என்ற காரணத்தால் எங்களை அடித்தார்கள்.யாழ்ப்பாணத்தவர்கள் என்ன காரணத்தால் என்பிள்ளையைக்கொன்றார்கள்” என்ற இராசம்மாவின் புலம்பல் இயக்கங்களில் சேர்ந்து இறந்த பல இளைஞர்களின் புலம்பலும் சோகமுமாகும்.

” எப்போது எனக்கு இந்த மனநிலையில் ஒரு மாற்றம் வந்தது? எண்பத்தி மூன்றில் காடையர்கள் என்னை நிர்வாணமாக்கியபோதா? கார்த்திக்கின் எரிந்த உடலை பார்த்தபோதா? கார்த்திக்கும் அவனது நண்பர்களும் எப்படித் தோட்டங்கள் வீடுகள் என ஒளிந்தபோது துரத்தித் துரதிச் சுட்டான்கள் எனக்கார்த்திக்கின் நண்பர்கள் விபரித்தபோதா” எனப்பலவாறு சோபாவின் மனம் குமைந்தது, என்கிறார் ஆசிரியர்.

இன்றைய கால கட்டத்தில் எனக்குப்பிடித்த தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் அ. முத்துலிங்கம், பொ. கருணாஹரமூர்த்தி நடேசன் போன்றோரின் எழுத்தில் இலக்கியத்திறமை மட்டுமன்றி யதார்த்தமும் இருப்பதாகக் கூறுவேன்.இவர்கள் வார்த்தைகளை வைத்து ‘இலக்கிய விளையாட்டு’ விளையாடாதவர்கள். சொல்ல வந்ததை நேர்மையாகச் சொல்பவர்கள். சொல்லும் விடயத்தை, முடிந்தவரைக்கும் விளக்கமாகச் சொல்பவர்கள். இலக்கியத் தரத்துடன் சொல்பவர்கள். ‘புதிய உத்திகள்’ என்று எப்படியெல்லாமோ, எதையோ சொல்லி வாசகர்களைக்குழப்பாதவர்கள். தாங்கள் கண்ட அனுபவத்துடன் வாசகர்களையும் இனைத்துக்கொள்பவர்கள். எழுதும் விடயத்தை விறு விறுப்பாக எழுதுபவர்கள்.

நடேசனின் நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களின்’ பழைய’ வாழ்க்கையின் ஏக்கத்தையோ, புதிய உலகின் எதிர்பார்ப்பையோ காட்டாமல் நடைமுறைச் சம்பவங்களைக்கோர்த்த ஒரு யதார்த்தப்படைப்பு.
பல மனிதர்கள் சொல்ல விரும்பாத, சொல்லத்தயங்கும், மன நலப்பிரச்சினைகளும் அதன் பாதிப்பால் வரும் பாலியற் பிரச்சினைகளும் கதைப்பொருளாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நடேசன் வைத்தியத் துறையனுபவம் உள்ளவர் என்பதால் இந்தநாவலின் நாயகர்களான் கணவன் , மனைவி, காதலி என்போரின் மனநிலைப்பிரச்சினையை விரிவான, சமுதாய,பாலியல், விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கவும் உதவி செய்கிறார்.

கதைச் சுருக்கம்:

கதாநாயகன் சந்திரன், இலங்கை யூனிவர்சிட்டியில் தான் காதலித்த மஞ்சுளாவைத் திருமணம் செய்யமுடியவில்லை. தகப்பனின் சடுதியான மரணத்தால் குடும்பப்பொறுப்பைத்தாங்கிக் கொண்ட மஞ்சுளா நையீரியாவுக்கு ஆசிரியையாகப் போய்விட்டாள். அவுஸ்திரேலியாவில் மேற்படிப்புக்கான ஸ்கொலர்ஷிப் கிடைத்த சந்திரன் தூரத்து உறவுப்பெண்ணான சோபாவைத் திருமணம் செய்து கொள்கிறான்.
83ம் ஆண்டுக்கலவரத்தில் கொழும்பில் தங்களின் உடமைகளையிழந்து, இனவாதிகளிடம் அகப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட, புலிகளால் எரித்துக்கொலைசெய்யப்பட்ட தமயனின் உடலைக்கண்ட துயர் ஞாபகங்களுடன் போராடும் இளம்பெண் சோபா தாய் தகப்பனின் சொற்படி சந்திரனை மணக்கிறாள்.
மணவாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினையேற்படுகிறது. அவளால் சிலவேளைகளில் சந்திரனின் பாலியற்தேவைகளை நிறைவேற்றமுடியவில்லை. சிலவேளைகளில் பலியல் உறவு அவளைத் துன்பப்படுத்துகிறது.அவளின் மனநிலையைபுரிந்து கொள்ளாத, பாலியல் உறவில் விரக்தியான சந்திரனுக்கு ஜூலியா என்ற வெள்ளைப்பெண்ணின் உறவு ஆதரவு கொடுக்கிறது.
” எனக்கு சோபாவுடன் வாழும் வாழ்க்கை நிறைவில்லை.மனநீதியாகவும் உடல் ரீதியாகவும் அவளை நெருங்க முடியவில்லை. எனது காதல் வாழ்க்கை ஆபிரிக்க நாடுகளின் அகதிகளின் உணவு நிலைபோன்றது.எவ்வளவு காலம் இப்படி வாழ்க்கை நடத்த முடியும்? மனிதாபிமானத்தில் நான் சோபாவோடு ஒன்றாக வாழ்ந்தாலும் அது எப்படி தாம்பத்திய வாழ்வாகும்” என்று தனது மனச்சாட்சியுடனும் ஜூலியாவிடமும் கேட்கிறான்.

தானும், சிறுவயதில் பாலியற் கொடுமைக்கு ஆளாகியதாகவும் அதனால் மன நலப் பிரச்சினையால் கஷ்டப்பட்டதாகவும் சோபாவையும் மனோ வைத்தியரிடம் காட்டுதல் நல்லது என்று ஜூலியா சொல்கிறாள்.

ஜூலியாவின் ஆலோசனையுடன் சந்திரன் தனது சோபாவை மனவைத்தியரிடன் காட்டுகிறான்.
சாதாரண உறவாக ஆரம்பித்த சந்திரன்- ஜூலியா உறவு ‘செக்சுவலாக’ மாறுகிறது.

சோபாவின் நலனில் மிகவும் அக்கறைகாட்டும் ஜூலியாவின் நேர்மை அவனுக்கு ஆச்சரியத்தைக்கொடுக்கிறது.

” சந்திரன், உன்னை எனது நல்ல நண்பனாகக் கருதுகிறேன். நீ திருமணவன் எனத் தெரிந்துகொண்டே உன்னுடன் உறவு கொள்கிறேன். இது சரியா பிழையா பிழையா எனத் தற்போது நான் சிந்திக்கப் போவதில்லை. ஒருவிதத்தில் உனக்கும் எனக்கும் இப்படியான உறவு தேவையாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட அதே வேளையில் எங்களையும் நாங்கள் ஏமாற்றவில்லை. உன்மனைவி மகனுக்கு நீ முதலிடம் தரவேண்டும். அவர்கள் உன்னை நம்பி வாழ்கிறார்கள். நீ வராமல் இருந்தால் எனக்கு ஏமாற்றம் இராது எனப் பொய் சொல்ல நான் தயாரயில்லை. ஆனால் கோவிக்க மாட்டேன்” என ஜூலியா சொல்கிறாள்.

அவளிடமிருந்து கிடைக்கும் அதி மிகுந்த காமத்துக்குத் தன்னைப்பறிகொடுத்த சந்திரன் தனது மனைவிக்குத் தான் செய்யும் துரோகம் பற்றி வெட்கப்படுகிறான்.துக்கப்படுகிறான். தன்னை நம்பியிருக்கும் மனைவியைச் சரியாகக் கவனிக்காமல் தனது ‘ செக்ஸ்’ தேவையைத் தேடியலைவதைப்பற்றிப் பலவிதங்களில் சிந்திக்கிறான்.
‘ ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு சமமான தேவை என்றாலும் ஆணின் உடம்பு பெட்றோல் போல் பற்றிக்கொள்கிறது. பெண் உடல் நிலக்கரிபோல் மெதுவாகச் சூடேறுகிறது.ஆழமான கடலில் ஆழ்ந்தெடுத்த முத்தைப்பார்த்த சந்தோச திருப்தியில் மனம் திளைக்கிறது. ஜூலியாவின் உடல் உறவின்பின் ஆன்மீகம், பொருளாதாரம், ஏன் அரசியல் கூடப் பேசமுடிகிறது. சோபாவின் உடல் அழகு மனதைக்கவர்ந்தாலும் அவள் ஒரு நோயாளி என்ற எண்னம் மனதை நெருடுகிறது……” என்று இரு பெண்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை அலசுகிறான் சந்திரன். மனைவைத் தவிர்த்து இன்னொரு பெண்ணை நாடும் அல்லது கணவனைத் தவிர்த்து இன்னொரு ஆணை நாடும் பெண்ணுக்கும் வரும் மனப்போராட்டம் இது.
தாம்பத்திய உறவில் ஒருத்தருக்குத் தேவையான எல்லாவற்றையும் மற்றவர் கொடுக்க முடியாது.உறவுகளில் செக்ஸ் மட்டும் முக்கியமல்ல. பலதேவைகளுக்கு மனித மனம் அலைபாய்கிறது. செக்ஸ் தேவையின் உச்சம் தணிந்தவுடன் மற்றத்தேவைகளுக்கான ( ஆன்மீகம், அரசியல், பொது தர்க்கவாதம் ) எதிர்பார்ப்பு தலையெடுப்பது இயற்கையான விடயம். சமுதாயத்துக்கும் சமுதாய, சமயக் கட்டுக்கோப்ப்புகளுக்கும் பயந்து மனிதன் தனது சிறிய உலகத்திற்குள் குறுகி விடுகிறான். இந்தக் கதாநாயகன், ஒடுங்கிய இலங்கையிலிருந்து அகன்ற அவுஸ்திரேலியாவுக்குப் போனவன். தேவைகளைத் திருப்திக்கொள்ள வாய்ப்புக்கள் வந்தபோது வசதியாக அனுபவித்து விட்டுப் பின் ‘பரம்பரைக் குற்ற மனப்’ பான்மை வந்ததும் தனகுத் தானே குமுறுகிறான்.

மனைவியடம் செக்ஸ் மட்டும் எதிர்பார்க்கும் கணவர்கள் இப்படி மன உழைச்சலை எதிர்கொள்வது குறைவு. கவுரவுத்துக்குள் தங்களைப் புதைத்துகொண்டு தங்கள் தேவைகளுக்கு வெளியில் ‘ மேய்ந்து’ விட்டு வருவார்கள். பொருளாதார, சமய அல்லது சமூக ரீதியாக இவர்களுக்கு இருக்கும் அந்தஸ்து இவர்களின் ‘மேய்ச்சலைக்’ கண்டு கொள்ளாது ( இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் ‘சின்ன வீடுகள்’ வைத்திருப்பதைக் கவனத்தில் கொள்க).

இந்நாவல் கதாநாயகன், புலம் பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்துடன் ஒட்டிக்கொள்ளாதவன். கொழும்பில் வாழ்ந்த மாமன் மாமியாரும் அப்படியே என்பதால் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் தாங்களே கட்டிக்கொண்ட ‘ஒரு சிறு தீவில் வாழ்கிறார்கள்’. மனக் குறைகளைப் பேசித்
தீர்க்கக்கூட சோபாவுக்கு யாரும் கிடையாது. சந்திரனும் தனது வாழ்க்கையைப்பற்றிப்பேச, அவுஸ்திரேலிய ஜுலிய்யவையோ அல்லது ஆந்திராவைச்சேர்ந்த குண்டல் ராவைத்தான் தேடுகிறான்.

” என்னால் எதுவும் முடிவு எடுக்க முடியவில்லை. இவ்விடயத்தை உன்னோடு பகிர்ந்து கொள்லும்போது ஆறுதலாக இருக்கிறது. எங்கள் நாட்டைச்சேர்ந்தவர்களோடு இது பற்றிப்பேசினால் என்னைச் சமூகவிரோதியாகப் பிரகடனம் செய்துவிடுவார்கள்…….” என்று ஜூலியாவுக்குச் சொல்லிக் குமுறுகிறான்.

கணவன் தன்னிடமிருந்து விலகுவதை உணர்ந்த சோபா,அவனது நடவடிக்கைகளுக்குத் தன் நோய்தான் காரணம் எனச் சோபா சிந்திக்கிறாள்.
”நல்ல உணர்வுகளும் கெட்ட உணர்வுகளும் மாறி மாறி வருவதைத்தான் ‘பொபோலார் நோய் என்கிறார்களா?என்னால் எப்படிக்கெட்ட நினைவுகளிலிருந்து மீளமுடியும். அப்பா அம்மவுக்குக் கூட என்னைப்புரியாது. என்னை நோயாளி என நினைத்துச் சிறு குழந்தைபோல் கவனிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சந்திரனும் என்னை விட்டுப்போய்விட்டாரா? வாழ்க்கையில் என்னோடு தொடர்ந்து வருவார் என நினைத்திருந்தேன். வாரத்துக்கு ஒரு முறை என்னைப்பார்க்கவா அல்லது மகனைப்பார்க்கவா” என்று தன்னைத் தானே கேள்வி கேட்கிறாள்.

இரு பெண்களின் உறவுக்குள் தன்னை மாட்டிக்கொண்ட சந்திரன், மனைவிக்கு இனியும் துரோகம் செய்யக்கூடாது என்பதற்காக ஜூலியாவிடமிருந்து தனது உறவைத் துண்டித்துகொள்ள யோசிக்கிறான்.
” இப்படியான அப்பாவிப்பெண்ணை ஏமாற்றி நான் இரட்டை வாழ்க்கை வாழ்கிறேன்,இன்மேல் ஜூலியாவின் பக்கம் போகக்கூடாது. அவளுக்குத் தொலைஒபேசியில் விளக்கமாகச்சொல்லி விடவேண்டும். நோய்காரியாக இருந்தாலும் உண்மையானவனாக இவளுடன் வாழ்வது ஆத்மாவுக்கு நல்லது.இரட்டை வாழ்வு மற்றவர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தாலும் என்னை நான் ஏமாற்றுகிறேனே. இது தவறு என்பதால் குற்ற உணர்வு உள்ளத்தில் ஏற்படுகிறது.நல்ல கணவனாக வாழாவிட்டாலும் சுமனுக்கு நல்ல தகப்பனாக வாழவேண்டும்” என்று நினைக்கிறான்.
இதற்கிடையில் யாரோ தமிழன் மூலம் சந்திரனின் இரகசியம் சோபாவுக்குத் தெரிய வருகிறது (குடும்பங்களைக் குலைப்பதில் எங்கள் இனத்தார் மிகவும் திறமை சாலிகள்!).

ஜூலியாவுக்கும் தனது கணவனுக்கும் உள்ள உறவைத்தெரிந்து கொண்ட சோபா,அவனை வீட்டை விட்டுத் துரத்துகிறாள். மன உழைவுடன் ஜூலியா வீட்டுக்குப்போகும் சந்திரன், ஜூலியா, சார்ள்ஸ் என்பவனுடன் நெருக்கமாஇருப்பதைக்கண்டு குமுறுகிறான். அவளை மறக்க விபச்சாரவிடுதிக்குப் போகிறான். ஜூலியாவைக்கொலைசெய்யுமளவுக்குக் கோபக் கனவுகள் வருகின்றன

திருமணமான சந்திரனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தனது நீண்ட நாளைய நண்பனும், புத்திஜீவியும், அண்மையில் மனைவியைப் பறிகொடுத்தவனும் தன்னிடமிருந்து எதையும் பெரிதாக எதிர்பார்க்காதவனுமாகிய சார்ள்ஸ¤டன் உறவைத்தொடர யோசிப்பதாக ஜூலியா சந்திரனுக்குச் சொல்கிறாள். ‘உன்னிடமிருந்து எவ்வளவோ படித்திருக்கிறேன். உனது அன்புக்கு நன்றி, நாங்கள் நீண்ட காலச் சினேகிதர்களாக இருப்போம்” என்கிறான் சந்திரன்

கதையின் பரிமாணங்கள்.

-இலங்கையிலிருந்து மேற்துறைப்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குப்போய் அங்கு வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தமிழ் குடும்பஸ்தனைப்பற்றிய கதையிது.
-அவனது மனைவிக்குக் குழந்தைபிறந்தபின் மன நலப்பிரச்சினையேற்பட்டுக் குடும்பவாழ்க்கையின் அர்த்தத்தைக் கேள்விகேட்கப்பண்னுகிறது. குடும்ப வாழ்வில் ஏற்படும் பாலியல் உறவின் வெறுமை கணவனுக்கும் மனைவிக்குமிடையில் எத்தனை பிளவையும், வெறுமையையும், சந்தேகங்களையும் சங்கடங்களையும் உண்டாக்குகிறது என்பதைப் பகிரங்கமாகச் சொல்கிற நாவல் இது.
-மன நலப் பிரச்சினை வந்தால் ஆணோ பெண்ணோ தங்களின் பாலியலின் தேவைகளை எப்படி இழக்கிறார்கள், உணரும் சக்தியிழக்கிறார்கள் என்பதைச் சாதாரணமானக் குடும்பக்கதையூடாகக் காட்டியிருக்கிறார் நடேசன்.
-ஆசிய மக்களிடையே மனநல நோய் பற்றிக் கடைப்பிடிக்கும் இரகசியங்கள், பொய்மைகளை உடைத்து உண்மைகளுக்கு முகம் கொடுக்க இந்நாவல் மிகவும் உதவியாயிருக்கும்.

மனிதன் பேசத்தெரிந்த ஒரு மிருகம். மூன்று பெரு உணர்வுகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. பசி,செக்ஸ், பாதுகாப்பு என்பன மிகவும் முக்கியமானவை.இன்றைய கால கட்டத்தில் மத்தியதர வாழ்க்கை நடத்தும் மனிதன் பசியை வெல்லத் தன் படிப்பைப் பாவித்துப் பிழைத்துக்கொல்கிறான்.
பசியை வெல்ல எடுத முயற்சிகளில் வெற்றி கொண்டதுபோல் பாலியலில் வெற்றி கொள்ளப் பெரும்பாலானவர்களால் முடியவில்லை. வயிறு நிறைந்தால் பசிபோய்விடும். பாலியிற் தேவை நினைவுகள் இரவும் பகலும் ஒரு மனிதனை ஆட்டிப்படைப்படைப்பதாகச் சொல்லப்படுகிறது. குடித்தால் வெறிப்பது மது, பெண்னைப் பார்த்தால் வெறிதருவது காமம் என்பதன் உண்மையை இந்நாவலின் பல இடங்களில் ஆசிரியர் படம் பிடிக்கிறார்.

எதையும் எளிதாக வாங்க முடியுமான மேற்கைய நாகரிகத்தில் உண்மையான அன்பை வாங்குவது கஷ்டம் என்பதும் கதையினூடே சொல்லப்படுகிறது.
கடந்த வாழ்க்கையின் தொடர்கள் எப்படி மனிதனை வாட்டுகிறது, உருக்குலைக்கிறது, உருப்படியாக்குகிறது, மாற்றுகிறது என்பதை இந்நாவலை ஆழமாகப் படிப்பவர்களுக்குப்புரியும்.
ஒரு நாவலைப்படித்து அது பற்றிய விமர்சனத்தை எழுதும்போது, படித்து விமர்சனம் செய்தவர் அந்த நாவலிற் கண்ட விடயங்களை மற்றவர்களும் உணரவேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒரு பிறவி.
எங்கள் சமூகத்தில் சொல்லப்படாத சில விடயங்களை டாக்டர் நடேசன் சொல்கிறார்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த துயர் சம்பவங்கள் எப்படி அவள் வாழ்க்கையைப்பாதிக்கிறது, அந்தப்பாதிப்பை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை இந்நாவல் படிப்பவர்கள் உணர்வார்கள்.
பாலியல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பல பெண்கள் மனம் விட்டுப்பேச மாட்டார்கள். மனத்தின் அடியில் புதைத்து விடுவார்கள்.

நல்லா சாப்பாடு இல்லாத ஏழையைத் தொற்றுவியாதிக்கிருமிகள் தாக்கினால் ஏழையின் உடம்பு தாங்காது.
அதேபோல் மனதில் பல குழப்பங்களைப்புதைத்து வைத்திருக்கும் பெண்ணுக்கும், அவளின் வாழ்க்கையை சரியான விதத்தில் கொண்டு நடத்த அவள் மன நிலை விடாது. ‘ மூட்’ அடிக்கடி மாறும். ஒரு நேரம் சந்தோசமும் மறு நேரம் துக்கமுமாகித் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். இதை ஆங்கிலத்தில்’ பைபோலார்’ நோய் என்று கூறுவார்கள்.

இந்த மன நிலைஉள்ளவர்களுடன் வாழ்க்கை நடத்துவது றள்போல் நடப்பதற்குச் சமம். இதைப்புரிந்து கொண்டு வைத்தியம் தேடாமல் இருப்பவர்கள் பலர். அதிலும் ஆசியா நாட்டவர்களைப் பொறுத்தவரையில் ‘ மன நலம்’ பற்றிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவைக்கப்படுகின்றன. தோல்வியான வாழ்ழ்கையாக மதிக்கப்படுகிறது. மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக பூட்டி வைத்திருக்கப்பட வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டம் இன்றும் எங்களிடையே பரவலாக இருக்கிறது.

எங்கள் தமிழர்களிற் பலர், ‘விசர்’ பிடித்தவர்கள் என்று மற்றவர்கள் சொல்லி விடுவார்கள் என்பதற்காக எதையும் மறைத்து வைத்து விடுவார்கள். இலங்கையில் எட்டு மாகாணங்களும் அங்கொடை என்ற பைத்திய வைத்தியசாலை மட்டும் இருக்கும்போது வடக்கு மாகாணத்திற்கு மட்டும் மேலதிகமாக இன்னுமொரு வைத்தியாசால மந்திகையில் தேவைப்படுகிறது என்பதன் மூலம், எங்களில் எத்தனைபேர் மன நல சேவையை வேண்டி நிற்கிறார்கள் என்பது புரியவரும்.

மன நலப் பிரச்சினைகள் மறைக்கப் படத்தேவையற்றவை. அதிகப்படி வேலைசெய்யும் இயந்திரம் பழுதடைவதுபோல் அதிகப்படி துன்ப துயர் அனுபவித்த மனங்களும் சிலவேளை குழம்பிப்போகின்றன. இவை சமுதாயத்திலிருந்து மறைத்து வைக்கப்படவேண்டியவையல்ல. மனிதர்கள் ஒருத்தருக்கொருத்தர் உண்மையான அன்பு காட்டுவதன் மூலமோ அல்லது மன நலத்தைச் சீர் படுத்தும் மருந்துகள் கொடுத்தோ குணமாக்கப்படவேண்டியவை என்பதை இக்கதைமூலம் சொல்லித் தமிழ் மக்களுக்கு ஒரு அரிய சேவை செய்திருக்கும் நடேசனுக்கு எனது பாராட்டுக்கள்.

கனடாவில், நடேசனின் புதிய நாவலான ‘உனையே மயல் கொண்டு’ அறிமுகக் கூட்டம் எதிர்வரும் Dec 29ம் திகதி சனிக்கிழமை மாலை 2 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்ரரில் (Scarborough Civic Center) நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.

Contact SABESAN (T)415 2861 654 (M) 416 8011 654


Series Navigation

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்