உடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நேற்று இரவில் வெளிப்பட்ட
பல நூறு கொம்பு முளைத்த மனிதன்
பச்சைப் புறாக்களின் மாமிசத்தை
குருரத்தோடு தின்று கொண்டிருந்தான்.

விழிப்பும் சூட்சமமும் கொண்டதொரு கணத்தில்
வழிநெடுக அலைந்து திரிந்து
தின்று தீர்க்க கிடைத்த
குழந்தைகளை கைப்பற்றிய மகிழ்ச்சியில்
உலகம் முழுவதும் தன்னிடம் மண்டியிட
வரம் ஒன்றையும் கேட்டு
கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டான்.

கூக்குரல்கள் தெருவெங்கும் கேட்க
ஒலங்களின் ரத்த சுவடுகளினூடே
மிதந்து வந்ததொரு அம்பின் கீறலில்
நுரையீரல்குலைகள் அறுபட்டு தெறித்தன.

வெளிப்பட்ட இறைநாமத்தை உச்சரித்தவாறே
காணாமல் போன ஒட்டகம்
தன் திசைவழியை தேடித் தவித்தது.

நீண்ட நேர மெளன இருளில்
உடைந்த புல்லாங்குழல்களை
ஒன்று திரட்டிய நிஷாப் பெண்
உடைந்து சிதறி இழந்து போன
தன் உதடுகளையும் தொலைத்து
பிண்டமாகி உருண்டலைந்தாள்.

காலக்குதிரை கவிழ்த்துவிட்ட
பெருங்கனவுகளை தேடித் தேடி
புற்றில் முளைத்த பறவைகள்
அங்குமிங்கும் அலைபாய்கின்றன.

ரத்தம் சொட்டக் கிடக்கும் உடல்களை பற்றியிழுத்து
வன்புணர்ச்சியினூடே சொன்னான் கொம்பன்
கொடிபிடிக்கும் குறிகளின் அதிகாரத்தைக் கொண்டே
எந்த பரலோகத்தையும் வெல்வேனென.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்