திருமாவளவன்
இருப்பு
சிறு தொட்டி
சுவர் நான்கும் கண்ணாடி
நஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர்
நீரிடை மிதக்கும் செயற்கைத் தாவரங்கள்
மட்டுப்படுத்தப்பட்ட மின் வெளிச்சம்
மின் சூடாக்கியின் கணகணப்பு
பதனிட்டு தயார்செய்யப்பட்ட உணவு
நேரம்தவறாத உபசரிப்பு
சொகுசு சிறைக்குள்ளிருந்து
தன் வாழ்வின் துயரைப் பாடுகிறது
மீன்குஞ்சு
***
பின்பனிக்காலம் 2001.
ஒரு புகலிடத்துப் பட்டியல்
கவுனாவத்தை, காட்டுவைரவர் முதலாய
சிறு தெய்வங்கள்
இன்னும் ஊர் எல்லையில் காவலிருக்க
மீதி பெரும் கடவுளர் எல்லோரும்
புலம் பெயர்ந்து
கோவில் கொண்டாயிற்று
ஊருக்குத் தலா மூன்று
என்ற அடிப்படையில்
சங்கங்கள் முந்நுாறைத் தாண்டிற்று
பத்திரிகைகள் சமூகத்தின் கண்ணாடி
என்பதில்
தமிழர்க்கு கண்ணாடிகள் பதினாறுக்கு மேல்
தகவல் சொல்ல – வழிகாட்டவென
தனி “வழிகாட்டிகள்“ சில
சிறுபத்திரிகை – இலக்கியங்கள் கூட
ஆளாளுக்குத் தனித்தனி வட்டமும் இயக்கமும்
தனிச்சங்கம் கண்டதில்
நாடகம் இங்கு உச்ச வளர்ச்சியெனப்
பாரிய விளம்பரங்கள்
இருபத்து நான்கு மணியும் தமிழ் வானொலி
ஒன்றல்ல – பதினொன்று
இப்போ புதிதாக
முழுநேரத் தொலைக்காட்சிச் சேவைகள்
மூன்று
இருந்தென்ன ?
அடுக்குமாடிக் கட்டடத்தின்
பதினாறாம் மாடிப் பல்கனிக்கு நேரே கீழே
தரையில் தலை சிதறுண்டு கிடக்கிறது
அவளது உடல்
இவள்
தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்ட
நுாற்று முப்பத்தேழாவது
தமிழ்ப்பெண்
***
இளவேனில்-2001
கூதல்தேசக் கறவை
உறைபனி
உயிர்ப்பை வேருள் பதுக்கி
ஆசையுழக் காத்திருக்கும் புற்கள்
நிலம் உலர
குறி உயர்த்திப் பூப்பூக்கும்
எனக்கு
உறைதலுமின்றி உலர்தலுமின்றி
உருகல் நிலை சொதசொதப்பு
செக்குமாட்டுச் சீவியம்
நாள் கோள் விசும்பு
காற்று, மழை, கூத்து, கும்மாளம்
காதல், கலவி, கூடல்
குண்டுவெடிப்பு
குழந்தையின் அழுகுரல்
கொலை குருத, குருதி வெடில்
போர்
போரின் எதிர்க்குரல்
சாவு
சாவின் துயர் மீட்டும் ஒப்பாரி
எதையும்
இயல்பென எண்ண மறுக்கிறது
மனது
பேரிரைச்சலுடன் உருளும் உலகில்
எந்திரமாய் உழல்கிறேன்
காதலி பதித்த முத்தங்கூட
உலர்ந்து கிடக்கிறது
இக் கவிதையில்
ஒருதுளி உயிர்ப்பை ஒட்டிவைக்க
முயன்று தோற்றுப் போகிறேன்
கனிந்தொழுகும் தாலாட்டில்
இழைக் கீற்றாய்
குஞ்சிழந்த குருவியின் பிசிறல்
பாலகர் மரணத்தைக்
கூவி விற்பதில் குறித்திருக்கிறது
வானொலி அறிவிப்பாளனின்
இருப்பு
நகரும் கடிகாரமுள்ளின்
ஒவ்வொரு அதிர்வும்
டொலர் பெறுமானத்தில்
மோதிச் சிதைந்து
மனிதப் பிண்டமாய் குவிந்து கிடக்கிறேன்
வீடு வேலை மெத்றோவில் ஒட்டம்
அலைகிற வாழ்வு
வைக்கோல் திணித்து இணக்கிய
பொம்மைக் குட்டியென
எப்போதும்
என்முன்னால் மிதந்து செல்கிறது
ஒரு பெரும் கனவு
நக்கி
இரங்கி
சுரக்கிறேன் டொலரில்.
***
பின்பனிக்காலம்-2001
ஈரம்
இன்னும் இருக்கிறது
என் ஊர்
தாழம்பூ மணங்கமழ
இதழ்பரப்பி
றங்குப் பெட்டியுள் பத்திரப்படுத்திய
அம்மாவின் கூறைச்சேலையைப் போலும்
சித்திரைச் சிறுமாரியிடை
நனைந்து
காரைப் பற்றையுள் பிடித்த
பொன்வண்டின் குஞ்சை
நெருப்புப் பெட்டியுள் பதுக்கி
அடிக்கடி திறந்து
கிளுவந்துளிர் ஊட்டி கிளர்வுற்றிருந்த
பால்ய நினைவினைப் போலும்
இன்னும் இருக்கிறது
குளக்கரையிருந்து
தென்னங் கோம்பையுள் மருதங்காய்
நிரவித் தீமூட்டி
புகைக்கப்பல் விட்டு மகிழ்ந்திருந்த காலம்
ஈரம்
பலாக்கொட்டைக் குருவியை போலும்
பத்திரமாய் இருக்கிறது
என் சின்னக்கிராமம்
பனியிலும் குளிரிலும்
பொத்திப் பாதுகாக்கிறேன்
தினமும் எடுத்து
புரட்டிப் பார்த்து மூடிவைக்கிறேன்
ஒரு உலோபியைப் போலும்
நொடிப் பொழுதில்
சைக்கிள் கட்டையில்
விளாவெளி ஒழுங்கையை
சுற்றி வரவும்
சங்கத்தாவத்தைக் கிணற்று
துலாக்கொடிபற்றி மிதியில் காலுதைத்து
நீரள்ளிப் பருகவும்
அன்னப்பிள்ளைகாணி முன் நின்று
அரட்டை அடிக்கவும்
பாண்டிமாவுக்கு கல்லெறியவும்
வேப்பந் துாவலில்
பூக்கொத்தை கிள்ளி முகர்ந்து பார்க்கவும்
முடிகிறது இன்றும்
முச்சந்தி மதிற்சுவரில்
வீட்டுக்கு நேரே புள்ளடியிட்ட
தார்ச்சுவடின் தடம் இன்றும்
முற்றாய் அழியவில்லை
மாமரக் கொப்பிருந்து
நாவறள
கரைகிறது காகம்
யார் வரவும் இல்லை
சங்கக் கடையின் ஒற்றைக் கதவு
திறந்தபடி
காற்றோடு பறைகிறது
முற்றத்து முருங்கையில்
உலாந்தாக்காய் நெற்றாகித் தொங்கிறது
வீணில்
வேலியோரப் பூவரசெல்லாம்
பூத்துச் சொரிகிறது
தன்னார வாரம்
கொத்தியாலடி சுடலை மடச் சுவரில்
கிள்ளிப் பிடிக்க இடமிலாதளவுக்கு
கரித்துண்டால் குறித்துவைத்த
தோற்றம் – மறைவுக் குறிப்புகள்
ஆனாலும்
ஆனி பன்னிரண்டு, 1990ற்குப் பின்
யார் குறிப்பும் இல்லை
***
kudil35@hotmail.com
***
த்தட்டச்சு : ஜெயரூபன் மரிய தாஸ்
jeyaruban@sympatico.ca
- 33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா
- முதியவனை நினைவிருக்கிறத ‘ ?
- தனிமை வேண்டுகிறேன்
- அறிவியல் மேதைகள் இராமாநுஜம் (Ramanujam)
- புதியன அறிதலின் மகிழ்ச்சி
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டாஃபென் ஹாக்கிங்
- புளூட்டோவைத் தாண்டி இருக்கும் கிரகம் ?
- சுடர் விட்டெரியும் வாழ்வு
- மனசாட்சியின் கதவு (எனக்குப் பிடித்த கதைகள் -32 -மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘மஸுமத்தி ‘)
- கண் உறங்கா….!
- திண்ணை அட்டவணை- அக்டோபர் 13, 2002
- அழுக்கும் நானும்
- ஈரம் தொற்றிய இருப்பின் கவிதைகள்
- மழைத்துளியா ?மறுபிறவியா ?
- மருந்து
- பாரதியாக முயன்று….
- சூத்ரதாரியின் மூன்று கவிதைகள்
- தொல்லை
- சொல்லே வெடிகுண்டு : தேவை பொறுப்புணர்வு
- நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12)
- பரிசு
- ஒரு பேனா
- கோபம்
- நடந்தாய், வாழி
- பாலி- சகிப்புத்தன்மையும் அழகும் கொண்ட ஒரு பிம்பத்தை வெடிகுண்டுகள் உடைக்கின்றன
- வருக… அடுத்த முதல்வர் டாக்டர் பாரதிராஜா அவர்களே…
- மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும்
- தெளிவு
- 33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா
- இன்னுமா மெளனம் ?
- சில விவாதங்கள்
- குறும்பாக்கள்
- இயலை விஞ்சி விட்ட செயல்
- முல்லை = பாலை
- அம்மா நீ ரொம்ப மோசம்!