இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

வே.சபாநாயகம்.



================

1. நான் என்னை என் எழுத்தில் கரைத்துக் கொண்டு, அதே சமயத்தில் ஒதுங்கி நின்று ரசிக்கவேண்டும் என்கிற
அற்ப ஆசை கொண்டவன்.

2. எனக்கு ஏற்பட்ட, நானறிந்த மற்றவர்களுடைய அனுபவங்களையுந்தாம், நான் எழுத்தில் காண முயற்சி செய்து வந்திருக்கிறேன். இதுதான் நேர்மையான விஷயம் என்று எனக்குப் படுகிறது. நான் சொல்லுகிற விஷயம் புதிது என்பதையோ அல்லது நான் எனக்காக எழுதுகிறேன் என்ற அசட்டுத்தனத்தையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

3. உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற அதிகப் பிரசங்கித்தனம் எனக்குக் கிடையாது. இலக்கியம் இத்தகைய
பொறுப்புக்களை மேற்கொள்ளவும் இயலாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு கலை நுணுக்கத்துடன் நோக்கி, மனிதன் தன்னுடைய எலும்புக்கூட்டைத் தானே பார்க்கும்படியான ஒரு கண்ணாடியைப் பிடிப்பதுதான் இலக்கியத்தின் வேலை. இதை நான் நன்குணர்ந்திருப்பதால்தான் என்னைச் சில விமர்சகர்கள் சினிக் என்று
சொல்லுகிறார்கள் போலிருக்கிறது.

4. என் எழுத்தில் ஆங்கிலச் சொற்கள் விரவி வருகின்றன என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நான் மொழியை வெறும் சாதனமாகத்தான் கருதுகிறேன். ஒரு கருத்தை எவ்வளவு வலுவாக, இயல்பு குன்றாமல் சொல்ல முடியும் என்பதுதான் என் அக்கறை. தமிழில் சொன்னால் நான் நினைக்கின்ற கருத்து வலுவாகச் சொல்லப்படவில்லை என்று தோன்றும்போது, ஆங்கிலத்தில் எழுதுகிறேன். இது ஒரு குறைதான். மறுக்கவில்லை. இது என் குறையை மட்டுமல்ல சமூகத்தின் பலஹீனத்தையே காட்டுகிறது.

5. எப்படி ஒரு காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவையாக இருக்கின்றதோ, அதைப்போலவே என்னைப் படிப்பதற்கு வாசகன் தேவையென்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். எதிரில் உள்ளவனைப்போய் அது அடைய வேண்டும் என்று நினைக்கிறேன். புரியாமல் எழுதுவதை ஒரு ஸ்டைல் என்று கொள்ள முடியாது.

6. என்னுடைய எழுத்தினால் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கருதுகிறேன். மாற்றம் என்றால் புரட்சி என்று அரத்தமல்ல. ‘மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு இலக்கியத்துக்கும் அர்த்தமில்லை’ என்று சொல்லலாம்.

7. Writing, basically is a kind of co-ordination. பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் மனதில் ஏற்றப்பட்டு, பாதிப்புடன்
கலந்து ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பொழுது இலக்கியம் பிறக்கிறது. கேரக்டர்களை வைத்துக்கொண்டுதான் நிகழ்ச்சிகளை நான் என் நாடகங்களில் உருவாக்குகிறேன்.

8. இலக்கியம் இலக்கியத்துக்காக, கலை கலைக்காக என்பதெல்லாம் பித்தலாட்டம். பழையகாலச் சிந்தனை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் Walter Pater ஆரம்பித்தான் Art for artsake என்று. தூய இலக்கியம் என்று ஒன்று கிடையாது. அடுத்த வீட்டுக்காரனைப்பற்றி நான் எழுதும்போதே அது ஒரு சமூகச்செயலாகவிடுகிறது. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்