‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

வே.சபாநாயகம்.


1. என் கதைகளில் என்னையே தேடினேன். நான் கேட்டதையும், பார்த்ததையும், பேசியதையும், சுவைத்ததையும், தொட்டதையும், விட்டதையும், அறிந்ததையும், சிந்தைசெய்ததையும்தான் எழுதினேன்.

2.ஆரணி குப்புசாமி முதலியார், ரங்கராஜன், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியவர்கள் தழுவலாகவோ, சொந்தமாகவோ எழுதிய நாவல்களையும், கலைமகள், ஆனந்தவிகடன் உள்ளிட்ட மாத, வார இதழ்களையும் ஆர்வத்துடன் படித்ததால் நானும் ஏன் எழுதக்கூடாது என்ற அடங்காத ஆசை என்னுள் மூண்டது. இந்த ஆசை தவிர்க்கமுடியாத துன்பமாகி எழுதுகிற முயற்சியில் ஈடுபட்டேன்.

3. எனக்கு பத்திரிகையில் பெயரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது எனக்கு பதினைந்து பதினாறு வயசுதான் இருக்கும். எஸ்எஸ்.எல்.சி முடிப்பதற்குள்ளேயே ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி விட்டேன். எழுதிய கதைகளை கலைமகள், ஆனந்தவிகடன், பிரசண்டவிகடன் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். சில கதைகள் திரும்பி வரும். சில அங்கேயே தங்கிவிடும். ஆனால் யாருமே வெளியிடவில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியதன் பயனாக எனக்கு மொழியின்மேல் ஒரு ஆளுமை, கட்டுப்பாடு ஏற்பட்டது. இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன்.

4. பண்டிதர்களுடனோ, எழுத்தாளர்களுடனோ அப்போது எனக்குப் பழக்க மில்லை. எனக்கு சங்கோஜம் அதிகம். அதனால் நான் எழுதிய கதையை யாரிடமும் காண்பிப்பது கிடையாது. நான் பாட்டுக்கு எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பேன்.

5. சென்னையில தங்கியிருந்தபோது என் செலவுகளையும் பார்த்துக் கொண்டு, என்னுடைய பெரிய குடும்பத்தின் தேவைக்களுக்கும் பணம் அனுப்ப வேண்டிய சூழ்நிலை. அதனால் ஒவ்வொரு நாளும் பத்திரிகை அலுவலகங்களுக்கும், புத்தக வெளியீட்டு நிறுவனங்களுக்கும் அலைந்தேன். அவர்கள் எது கேட்டாலும் எழுதித் தர நான் தயாராய் இருந்தேன். ஆனால், என் தேவைகளுக்காக என் எழுத்தின் தரத்தைக் குறைத்து எப்போதுமே நான் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதில்லை.

6. என்னுடைய குடும்பச் சூழ்நிலை எனக்குச் சாதகமாக இல்லாதிருந்தும் கூட நானே விரும்பி எழுத்துப் பணியை மேற்கொண்டேன். என்னுடைய ஆன்மீகத் தேட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இலக்கியத் தேட்டத்தையும் நான் கருதுகிறேன். ஆனால் இதன் எல்லையை நான் இன்னும்தொடவில்லை. சாதிக்க வேண்டியது இன்னும் ஏராளம் உண்டு. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்