இழப்பும் வலியும் : கல்யாண்ஜியின் “இன்னொரு கேலிச்சித்திரம்”

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

பாவண்ணன்


தத்தளித்துத் தவிக்கவைக்கிற வாழ்வின் நெருக்கடிகளையும், ஆதரவான ஒரு கைகுலுக்கல் அல்லது ஒரு பார்வை வழங்கக்கூடிய தற்காலிக நிம்மதியையும் சமஅளவில் கவிதைகளில் பதிவு செய்த முக்கியமான கவிஞர் கல்யாண்ஜி. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கும் அவருடைய கவிதை வரிகள் படிக்கும் கணத்திலேயே நெருக்கமாக உணரவைப்பவை. எளிமையும் ஆழமும் ஒருங்கே படிந்த அவ்வரிகள் தோற்றத்துக்கு ஒரு காட்சியையும் அதன் மொழித்திரைக்குப் பின்னால் வேறொரு உலகத்தையும் நுட்பமாக இணைத்துப் பின்னியவை. அவருடைய சமீபத்திய தொகுப்பு இன்னொரு கேலிச்சித்திரம்.

63 கவிதைகளைக் கொண்ட இத்தொகுதியில் பல கவிதைகள் மீண்டும்மீண்டும் படித்து அசைபோடத்தக்கவையாக உள்ளன. மிகக்குறைந்த கோடுகள் வழியாகவே கேலிச்சித்திரங்கள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றன. கல்யாண்ஜியின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளும் மிகக்குறைவான சொற்கள்வழியாகவே தம்மை நிறுவிக்கொள்கின்றன.

நகர்மயமாதலின் விளைவான அடையாள அழிப்பின் வலியை ஒருவித துயருடன் பகிர்ந்துகொள்கிற படைப்பு “எந்தக் குறிப்பும் இல்லா” என்ற கவிதை. இத்தொகுப்பின் மிகமுக்கியமான கவிதை இது. இன்றும் கிராமத்தில் வீடுகளின் அடையாளத்தை ஏதாவது ஒரு குறிப்பை முன்வைத்தே சுட்டிக்காட்டும் பழக்கம் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. வாசலில் இருக்கிற ஏதாவது ஒரு மரம், எதிர்ப்புறத்தில் இருக்கிற ஏதாவது ஒரு கடையின் பெயர், வாய்க்கால் அல்லது அரசு அலுவலகத்தின் பெயர் என எதன் பெயரையாவது முன்னொட்டாகச் சேர்த்துத்தான் ஒரு வீட்டின் அடையாளம் முன்மொழியப்படுகிறது. சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில் அந்த வீட்டில் வசிப்பவர்களiன் பூர்விக இருப்பிடத்தின் பெயர் அல்லது உடலமைப்பின் அடையாளம் என எதையாவது குறிப்பிடுவதும் உண்டு. கிராமம் நகரமாகவும், நகரம் பெருநகரமாகவும் வேகவேகமாக வளர்ந்துகொண்டே போகிற இன்று தனிவீடு என்னும் கருத்தாக்கமே இல்லாமல் போய்விட்டது. திரும்பும் பக்கங்களிலெல்லாம் அடுக்ககங்களாக நிற்கின்றன. வாசல்வரை வழுவழுப்பான தரையைக் கொண்ட அடுக்ககங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் தெருவில் ஒன்றிலிருந்து மற்றொன்றை வித்தியாசப்படுத்திச் சொல்ல எவ்விதமான விசேஷ அடையாளமும் இல்லை. அச்சில் வார்த்து நிற்கவைத்ததுபோல எல்லா இடங்களிலும் ஒரே தோற்றம். எதன்மீதும் விசேஷ அக்கறை கொள்ளாது, வேலை, சம்பளம், பிரிமியம், வருமான வரி, பங்குச்சந்தை என்ற ஒற்றைத் தடத்திலேயே பழகும் மாந்தர்களின் அகஉலகில் ஏற்கனவே ஒரு மொண்ணைத்தனம் படிந்தாகிவிட்டது. குறைந்தபட்ச அளவில் புற உலக வசிப்பிட அடையாளங்களே மக்களiன் அடையாளங்களாக எஞ்சியிருந்தன. ஆனால் அடுக்ககங்களiன் பெருக்கம் அந்த அடையாளத்தையும் அழித்தொழித்து அகஉலக மொண்ணைத்தனம் புற உலகிலும் படிவதற்கு வழிவகுத்துக்கொடுத்துவிட்டது. அடையாளமற்ற மனிதனைப்போலவே அடையாளமற்ற வீடு. வாழ்வே அடையாளமில்லாமல் ஒரு காகிதமாகப் பறந்து தொலைந்துபோகிற துரதிருஷ்டவசமான காலகட்டத்தில் வசிக்கிறோம் நாம். அந்தத் துயரம்தான் கவிதையின் இறுதி வரியில் எந்தக் குறிப்பும் இல்லா வகையில் இருக்கிற வீட்டை என்ன செய்ய என்ற குறிப்பை கல்யாண்ஜியை எழுதத் தூண்டியிருக்கக்கூடும். எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்பதைத்தான் என்ன செய்ய என்று வேறுவிதமான சொற்களாக மாற்றுகிறார் கல்யாண்ஜி.

ஒரு கல்யாணமண்டப வாசல் சித்தரிக்கப்பட்டிருக்கிற “முன்திசை” என்ற தலைப்பிலமைந்த கவிதையும் நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கக்கூடிய கவிதையாகும். வல்லநாடு பரமசிவனின் நலம்தானா வாசிப்பு மிதக்கிற வாசல் அது. பட்டுப்புடவை உடுத்திய பெண்களiன் நடமாட்டம் தொடங்கிவிட்டது. எதிரே உள்ள பூக்கடைகளில் ரோஜா மாலைகள் மும்முரமாகக் கட்டப்படுகின்றன. அப்போது ஒரு மரண ஊர்வலமும் தற்செயலாக அத்தெருவின் வழியாகச் செல்கிறது. அந்தத் தெருவை வாழ்வின் படிமமாகக் கொண்டால் ஒரு விளiம்பில் கல்யாணமண்டபத்தில் நிரம்பிவழியும் ஆனந்தம். இன்னொரு விளிம்பில் ஒரு மரணத்தால் விளைந்த துக்கம். குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இரண்டும் இடம்பெற்று அக்கணத்தை ஒரு மனஎழுச்சி மிகுந்த கணமாக மாற்றுகிறது. ஆனந்தமும் துக்கமும் தனிநபர் சார்ந்த ஒன்றாக மாறிவிட்ட நிலையில். வாழ்க்கைப் பாத்திரத்தில் இரண்டையுமே வெவ்வேறு தருணங்களில் மனிதர்களுக்குப் பரிமாறுகிறது இயற்கை. இது ஒரு கோணம். கவிதைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. கல்யாண மண்டபம், பெண்களiன் வரிசை, கடைகள் என விவரிக்கப்படுகிற எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம்கூட்டமாக இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ளூர பொங்கிவழிகிற மகிழ்ச்சியை அக்கூட்டம் பல மடங்காக மாற்றுகிறது. இதற்கு நேரெதிராக ஆளே இல்லாத இறுதி ஊர்வலம் நிகழ்கிறது. தீச்சட்டி தூக்கி நடக்கிற சிறுவனைத்தவிர அந்த ஊர்வலத்தில் யாருமே இல்லை. மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் கூட்டம் துக்கத்தை பல மடங்கு குறைக்கும் சக்தியுடையது. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஒரு கூட்டம் இல்லாவிட்டாலும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள ஒரு கூட்டம் அவசியம் தேவை. ஆனால் கவிதையின் சித்திரத்தில் இடம்பெறும் இறுதி ஊர்வலத்தில் பாடையைச் சுமக்கிற நான்கு பேர்களையும் தீச்சட்டியைத் தூக்கி நடக்கிற சிறுவனையும் தவிர வேறு யாருமே இல்லை. மரணமே மாபெரும் துயரம். அதைத் தனியாக எதிர்கொள்வது அதைவிட துயரம் மிகுந்தது. அந்தத் துயரத்தை சிறுவயதில் எதிர்கொள்ள நேர்வது இன்னும் துயரும் வலியும் மிகுந்தது. ஆதரவின் திசையே இல்லாத வெளியில் அவன் நடந்தபடி இருக்கிறான்.

மரணத்தைத் தீட்டிக்காட்டும் இன்னொரு சித்திரக்கவிதை “புலிப்பாய்ச்சலுக்கு”. புற்றுநோயில் இறந்துபோகிறான் ஒருவன். அவன் உடல் தரையில் கிடத்தப்பட்டிருக்கிறது. எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பவன் அவன். கூடல் சுகத்தை விரும்பித் துய்ப்பவன் அவன். தன்னுடன் கலந்த ஒரு பெண்ணைப் பெண்புலியென வர்ணித்தவன். அவளுடைய வேகமோ அல்லது வேட்கையோ அவனை அப்படிச் சொல்லவைத்திருக்கலாம். அல்லது இவனுடைய வேகமும் வேட்கையும் அவளையும் தொற்றிக்கொள்ள, ஈடுகொடுக்கிற வகையில் அவளும் ஆர்வத்தோடு அதே விதமாக இயங்கியிருக்கலாம். ஒரு காலத்தில் கூடலில் ஆண்புலியாக இயங்கியவன்தான் இன்று மரணமடைந்து வாசலில் கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் உடலை வானத்திலிருந்து பார்க்கும் நிலா தன்மீது தாவிவிழத் தயாராக உள்ளவனாக நினைத்து விம்முகிறது. கூடல் மனிதர்கள் நிகழ்த்தும் புலியாட்டம். மரணமோ இயற்கை நிகழ்த்தும் ஒரு புலியாட்டம். கூடல் புலியாட்டத்தின் மகத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள, அந்த ஆட்டத்தில் பங்கேற்பவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். மரணப் புலியாட்டத்தின் மகத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள யாரையும் காலம் அனுமதிப்பதில்லை.

மது அருந்தியபிறகு குற்றஉணர்வால் பலநூறு முறைகள் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிப் புலம்புகிற பலரை நாம் பார்த்திருக்கிறோம். மது அருந்துவதற்கு முன்னரேயே குற்றஉணர்வால் ஒரே ஒரு மிடறுகூட அருந்த இயலாதவனை ஒரு கவிதையில் சித்தரித்துக்காட்டுகிறார் கல்யாண்ஜி. அக்கவிதையின் பெயர் உடைந்தபோது. உண்மையில் மது அருந்துவதற்கான தயாரிப்புகளiல் அவன் முனைப்போடு செயல்படத் தொடங்குவதிலிருந்துதான் கவிதை ஆரம்பமாகிறது. மதுக்கிண்ணத்தை எடுத்துவைக்கிறான். பொன்னிறமான மதுவை அதில் ஊற்றகிறான். இரண்டு பனிக்கட்டிகளை எடுத்து மதுக்கிண்ணத்தில் போடுகிறான். அதுவரையில் எல்லாமே கச்சிதமாகவும் சரியாகவும் நிகழ்கின்றன. ஒருகணம் மதுவில் மிதக்கும் பனிக்கட்டிகளை அவன் கண்கள் இமைக்காமல் பார்க்கின்றன. அந்தப் பனிக்கட்டிகள் எதையோ அல்லது யாரையோ நினைவூட்டுகின்றன. பனிக்கட்டிகள் மதுவின் திரவத்துக்குள் கரையக்கரைய அவன் துக்கம் அதிகரிக்கிறது. யாருக்கோ துன்பமிழைத்த துக்கத்தோடு அந்தத் துக்கத்தை இணைத்துக்கொண்டு மனம் விம்முகிறான். சொல்லிப் புலம்பக்கூட துணையில்லாத தனிமையில் மது அருந்த வந்தவன் அவன். குற்றஉணர்வின் உச்சத்தில் ஒரே ஒரு மிடறுகூட அருந்தமுடியாதவனாக நிரம்பி வழியும் மதுக்கோப்பையை பார்த்தபடியே இருக்கிறான். என்ன அவலம் இது. எதனால் விளைந்த குற்ற உணர்வு என்பதை நம் ஊகத்துக்கே மெளனமாக விட்டிருப்பது கவிதைக்கு கூடுதலான வெற்றியைத் தருகிறது.

தொகுதியில் இறுதியாக இடம்பெற்றுள்ள “இப்போதும்” என்கிற கவிதை ஒரே கணத்தில் இடம்பெறும் மூன்று குரல்களின் கலவையாக உள்ளது. ஒரு குரல் மின்வெட்டால் நேர்ந்த இருளில் நிரந்தர அமைதிக்கும் அச்சத்துக்கும் இடையே புத்தரை நினைத்தபடி அமர்ந்திருப்பதை அறிவிக்கிறது ஒரு குரல். புத்தரின் பொன்மொழிகளையும் வரலாற்றுச் சம்பவங்களையும் தனக்கு வசதியாகத் திரித்தும் மாற்றியும் முன்வைத்து தன் வெற்றியைச் சாத்தியப்படுத்துகிற மானுடவேட்கையைக் கிண்டல் செய்தபடி ஒலிக்கிறது இன்னொரு குரல். தொடர்ச்சியாக தான் அடைந்த தோல்விகளை பட்டியலிட்டு, துயர்நிறைந்த தன்னிரக்கத்தோடு வெளிப்படுகிறது மற்றொரு குரல். குரல்களின் கச்சிதமான இணைவு கவிதையை மிகச்சிறந்த கவிதையாக மாற்றுகிறது.

புத்தரின் அமைதி வசீகரம் மிகுந்தது. அவர் போதித்த அன்பு வழி உன்னதமானது. எளiமைபோன்ற தோற்றத்தைத் தரும் அவர் வாழ்க்கை எல்லாரையும் கவர்ந்திழுக்கக்கூடியது. அமைதியையும் அன்பையும் எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டே இருக்கிற ஒரு மனிதன் மனத்தில் புத்தருக்கு எப்போதும் இடமுண்டு. எதிர்பாராத நேரத்தில் மின்வெட்டால் அடர்ந்த இருள், புத்தர் இல்லறத்தைத் துறந்து வெளியேறிச் சென்றபோது கவிந்திருந்த இருள்நேரத்தை நினைவூட்டக்கூடியதுதான். அந்த இருள் புத்தரைப்பற்றிய எண்ணங்களை அதிகப்படுத்தியிருக்கலாம். புத்தரைப்பற்றிப் பேசுவதோ, புத்தரைப்போல அமர்வதோ, அல்லது புத்தரைப்போல சிரிப்பதோ, நம்மை ஒருபோதும் புத்தராக்கிவிடாது. புத்தருக்கு அருகில்கூட அந்த முயற்சி அழைத்துச் செல்லாது. இயேசுவைப் பின்பற்றுவதல்ல, இயேசுவாக வாழத் தொடங்குவதுதான் முக்கியம் என்கிற ரஜனீஷின் புகழ்பெற்ற பொன்மொழியை, இக்கவிதை நினைக்கவைக்கிறது.

(இன்னொரு கேலிச்சித்திரம். கவிதைகள். கல்யாண்ஜி. சந்தியா பதிப்பகம். நியுடெக் வைபவ், 57, 53வது தெரு, அசோக் நகர், சென்னை-83 விலை.ரூ40)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்