ஆசாரகீனன்
‘ஒரு மலையாளியின் மனநோயாளியின் உளறல்கள் ‘ என்று இளையபாரதி பிதற்றிய – மனிதத்தன்மையற்ற, பிறர்மேல் சேறு பூசுகிற – வார்த்தைகளை திண்ணை வெளியிட்டிருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, நபும்சகன், திருடன் என்றெல்லாம் ஜெயமோகன் மேல் இளையபாரதி அள்ளி வீசுகிற அருவருக்கத்தக்க பட்டங்கள் வேறு. இளையபாரதியின் கட்டுரையை திண்ணை இப்படிப்பட்ட வார்த்தைகளுடன் அப்படியே வெளியிட்டதன் காரணம் என்ன ? இளையபாரதியின் திருமுகம் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதால் என்கிற சப்பைக்கட்டு பதில்கள் திண்ணைக்கு இருக்குமேயானால், அவரின் இப்படிப்பட்ட முகத்தை இத்தகைய தரம்கெட்ட வார்த்தைகளின் மூலம்தான் திண்ணை வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டுமா என்ன ?
கருணாநிதி உரைப்பது இலக்கியமா, ஜெயமோகன் எழுதுவது இலக்கியமா என்கிற கேள்விகளையெல்லாம் எடுத்துக் குப்பையில் போடுங்கள். மலையாளி, மனநோயாளி, நபும்சகன் என்று எழுதுவதெல்லாம் எத்தகைய நோய் என்று முதலில் ஆராய்வோம். கண்டதுக்கெல்லாம் கையெழுத்து வேட்டை நடத்துவது தமிழ் இலக்கிய உலகில் தற்போதைய பேஷனாகி விட்டது. இத்தகைய விஷம் கக்கும் வார்த்தைகளையெல்லாம் எதிர்த்து எந்த இலக்கிய சிகாமணியும் கையெழுத்து வேட்டை நடத்தாவிட்டால்கூட பரவாயில்லை; கண்டிப்பார்களா என்று ஏக்கமாய் இருக்கிறது. இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து தன் அசிங்கமான அகத்தைக் காட்டிய இளையபாரதியை கோமல் சாமிநாதனின் ஆவிகூட மன்னிக்காது.
தமிழ் மூச்சைப் பிறர்மேல் விடமாட்டேன் என்றும் எல்லா மொழியும் இனிது என்றும் எழுதிய ஞானக்கூத்தன் கருணாநிதி கூட்டத்தில் பேசியது குறித்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தவறில்லை. இளையபாரதியின் இந்த வார்த்தைகளைக் கண்டித்தும் பேட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாமா ? இல்லை, ‘தவளையின் கூச்சல் கேட்டுத் தமிழ் கூச்சல் என்றான் கம்பன் ‘ என்று எழுதிய ஞானக்கூத்தன் இளையபாரதியின் காட்டுமிராண்டித்தனமான வெறிக்கூச்சலுக்கு மெளனம் சாதிப்பது ‘காலத்தின் கட்டாயம் ‘ என்று ஞானமெய்திவிடுவாரா ?
புதுமைப்பித்தனுக்கே ‘வீரவணக்கம் வேண்டாம் ‘ என்று எழுதிய மதிப்பிற்குரிய தி.க.சி. அவர்களின் அரும்புதல்வர் வண்ணதாசன், கருணாநிதியைப் பாராட்டிப் பேசுவது தந்தைக்காற்றும் உதவியாக இருக்கட்டும். தவறில்லை. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கச் செய்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். ஆனால், கற்றுக் கொடுக்கிற சகமனிதர்கள் என்றெல்லாம் தன் கவிதைகளில் மானுடம் பாடுகிற வண்ணதாசன் இளையாபாரதியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மனிதாபிமானம்தான் மலையாளி என்று பேசுவதும், மனநோயாளி என்று பேசுவதும், நபும்சகம் என்று விளிப்பதும் என நினைத்து அமைதி காப்பாரா ?
அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சுயம்வரம் ‘ என்ற மலையாளப் படத்தைப் பார்த்து, பாதிக்கப்பட்டு, ‘சுயம்வரம் ‘ எழுதிய கலாப்ரியா, மலையாளி என்று சகஎழுத்தாளனை இளையபாரதி கட்டம் கட்டுவதற்கு ஏதேனும் சொல்வாரா ? இல்லை புதுக்கவிஞர்கூட யாரும் தொடாத, தவிர்க்கிற படிமங்களான மலம், சிறுநீர், பிச்சைக்காரி, போஸ்டர் ஒட்டுபவன் போன்றவற்றை சிறப்பாகத் தன் கவிதைகளில் பயன்படுத்தியதாகப் பாராட்டப்படும் கலாப்ரியா மனநோயாளியும் அத்தகைய ஒரு கவிப்படிமம் என்று இளையபாரதி எழுதியதைப் படித்து இறும்பூதெய்துவாரா ? மற்றபடிக்கு சின்ன வயதில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய கலாப்ரியா பரிணாம வளர்ச்சியடைந்து கருணாநிதி ரசிகராக முதிர்ச்சியடைந்திருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும், பால்ய காலத்திலிருந்து கலாப்ரியாவுக்கு இருக்கிற திராவிட இயக்க பாதிப்புகளை அறிந்திருந்தும் அவர் கருணாநிதியைப் பாராட்டியது குறித்து ஜெயமோகன் வெதும்புவது சரியில்லைதான். ‘அவள் அழகாய் இல்லாததால் எனக்குத் தங்கை ஆகிவிட்டாள் ‘ என்கிற கலாப்ரியாவின் கவிதையிலிருந்துகூட அவரின் திராவிட இயக்க மூலங்களை ஜெயமோகன் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஏகமாய் கலாப்ரியாவின்மீது எதிர்பார்ப்பு வைத்து ஏமாந்துபோன தவறு ஜெயமோகனுடையதே.
ஞானக்கூத்தன், வண்ணதாசன் மற்றும் கலாப்ரியா ஆகியோரை மட்டும் முன்னிறுத்தி மேலே எழுதியதற்குக் காரணம், இளையபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில் தாங்கள் கலந்து கொண்டது பற்றியும் அந்தக் கூட்டத்தில் தாங்கள் பேசியது பற்றியும் அவர்கள் கடமையுணர்வுடன் வாசகர்களுக்குக் கொடுக்கிற தன்னிலை விளக்கங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன என்பதனால். ஆனால், மலையாளி, மனநோயாளி, நபும்சகன் என்பது பற்றியெல்லாம் அன்னார்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று அவர்களின் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அவர்களின் வாசகர்களாக சொல்லிவைக்கிறோம்.
நாச்சார்மட விவகாரம் என்கிற அங்கதச் சிறுகதையை ‘எழுத்தாளனின் மீதான தனிப்பட்ட வன்முறை ‘ என்று காலச்சுவடு எதிர்த்துக் கொடுத்த குரலுக்கு நடுநிலையாளர்களும் செவிசாய்த்தனர். ஆனால், சிறுகதையாகவோ அங்கதமாகவோ கூட அல்லாமல், நேரிடையாக ஓர் எழுத்தாளரை மலையாளி என்றும் மனநோயாளி என்றுமெல்லாம் எழுதுகிற தனிப்பட்ட வன்முறை குறித்து காலச்சுவடு என்ன சொல்லப் போகிறது ?
இளையபாரதியை இதன்பொருட்டு கண்டிக்க விரும்பாமல் இருப்பதற்கு நியாயங்கள் தேடுகின்ற எந்த இலக்கியவாதியும், வெந்ததைத் தின்று விடிந்ததும் பேளப் போகின்ற சாதாரண மனிதர்கள் தங்கள் கருத்துக்களை உரத்துச் சொல்வதில் காட்டுகின்ற நேர்மையைக்கூடக் காட்டும் தெம்பும் திராணியும் இல்லாதவர்கள். மானுடம் பாடுகிறேன் என்று பம்மாத்து செய்வதை விட்டுவிட்டு அவர்கள் எல்லாம் மற்றவை பாடப் போகலாம்.
அரைவேக்காட்டுத்தனமான சரித்திரக் கதைகளை தொலைக்காட்சித் தொடராக எடுத்து சின்னத் திரையை உய்வித்த இளையபாரதி, மலையாளி என்றும் மனநோயாளி என்றும் பேசுவதன் தாத்பரியம் புரிகிறது. ஆனால், அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘மலையாளியான ‘ அடூர் கோபாலகிருஷ்ணனையும் ‘ஜப்பானியரான ‘ அகிரா குரசோவாவையும் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?
‘தத்துவ மேதை ஜே.கே. என்கிற ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு நிகராக, ஜெ.கே. என்கிற ஜெயகாந்தனுக்கு மேலாக பிரேமிள் கலைஞரை நிறுவுவதை நினைவில் கொள்ளச் ‘ சொல்கிற இளையபாரதி ‘சுபமங்களா நேர்காணல்களின் ‘ முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘பாரதி – புதுமைப்பித்தன் என்று வளரும் தமிழிலக்கிய மரபின் நாயகன் த.ஜெயகாந்தன் அவர்களின் நேர்காணல் எடுக்கப்படாதது மகாதுரதிர்ஷ்டம். ‘ கருணாநிதியின் எழுத்துக்கள் ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு நிகரானது, ஜெயகாந்தனைவிட மேலானது என்கிற நம்பிக்கை இளையபாரதிக்கு உண்மையிலேயே இருந்திருந்தால் அவர் ‘பாரதி – புதுமைப்பித்தன் என்று வளரும் தமிழிலக்கிய மரபின் ‘ என்று சொல்லும்போது கருணாநிதியை அங்கே குறிப்பிட்டிருக்கலாமே. பேச்சுக்காவது, ‘பாரதி – புதுமைப்பித்தன் – கலைஞர் என்று வளரும் தமிழிலக்கிய மரபின் ‘ என்று கருணாநிதியைத் தாங்கிப் பிடித்திருக்கலாமே. தமிழிலக்கிய மரபுக்கு கருணாநிதி அருளிப்போந்த கொடையைப் பறைசாற்ற இப்போது எதற்கு பிரமிளின் தோள்கள் மீதேறி நிற்க வேண்டும் ?
‘கண்ணன் வாமன வடிவம் எடுத்து அளந்ததைப் போல் கலைஞர் தன் காலடியை வைத்தால் எங்கேயிருப்பார் ஜெயமோகன் என்ற நபர் ‘ என்று திராவிட இயக்கங்களின் பாணியில் மிரட்டுவது இளையபாரதி முரசொலி பல்கலைக்கழகத்தில் பெற்ற கல்வி எனலாம். ஆனால், திருமாலின் வாமன வடிவம் பற்றிப் பேசியே தீரவேண்டி இருக்கிற மஞ்சள்துண்டு பகுத்தறிவு மகாமித்தியமும் அங்கிருந்துதான் பெற்றாரா ?
இந்தத் ‘திராவிடத் திருவிளையாடல் ‘களால் நாளுக்கு நாள் தன் பெயரும் புகழும் வளர்ந்து வருவதைப் பார்த்து ஜெயமோகன் சந்தோஷப்பட வேண்டும். அவர் எழுத்தும் சாதிக்காத சாதனை இது!
கோஷ்டி கானம் பாடுவது ஒருசில தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் இலக்கியத் தொண்டென்று நாமறிவோம். கூவமாய் மணக்கிற கோஷ்டியின் தளபதியோ இளையபாரதி என்று எண்ண வைக்கிற கட்டுரையொன்றை எழுதியதற்கு அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அருவருக்கத்தக்க அவரின் வார்த்தைகளுடன் அக்கட்டுரை வெளியிடப்பட்டது திண்ணைக்கு பெருமை சேர்க்கிற விஷயம் அல்ல.
aacharakeen@yahoo.com
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- மனித வெடி
- வெளிநடப்பு!
- புனிதமாகிப்போனது!
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- Recipe: Fried Rice With Peas and Chicken
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- மாயக்கவிதை
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- திறவி.
- வேண்டாமா இந்தியா ?
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- கொடி — மரம்
- கவிதைகளே ஆசான்கள்
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- ஊர்க்குருவி
- வைரமுத்துக்களின் வானம்- 7
- எழுதாதக் கவிதை
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- விடியும்! (நாவல்) – (20)
- வெளிச்சம்
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- மொரீஷியஸ் கண்ணகி
- கலர்க் கண்ணாடி
- தழும்புகள்
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- தண்டனை போதும்!
- மொழிவன சில
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- சூரியக்கனல்
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா