இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

ஞாநி


லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘கலைத் தமிழ்-கலையாத தமிழ் ‘ என்ற தலைப்பில் பேசிய கமல் ‘ இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும். ஆரோக்கிய சினிமா உருவாக அது வழிவகுக்கும். இங்குள்ள கூட்டம் சினிமாவில் இணைய வேண்டும். இதையும் சினிமாவையும் இணைக்கத் தவறியவர்கள் நீங்கள்தான். முந்தைய காலகட்டத்தில் கல்கி போன்ற பெரிய பெரிய எழுத்தாளர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். இப்போதோ நிலை வேறு. சுஜாதாவையே நிறையக் கஷ்டப்பட்டுதான் சினிமாவுக்கு இழுத்து வர வேண்டியிருந்தது ‘ என்று பேசினார்.

அடுத்து ‘தீராநதி ‘ இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியிலும் ‘ நியாயமான பணிவுடன் சில எழுத்தாளர்களை உபசரித்து சினிமாவுக்கு வாருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறேன். வெகு சிலரே வந்திருக்கிறார்கள். மற்ற சிலர் இங்கு வந்தால் அசிங்கம் என்றிருக்கிறார்கள். சிலர் வெட்கப்படுவார்கள். அதில் ஏனோ சிலருக்கு பாகவதர்த் தனமிருக்கிறது. இந்த மேடையில் பாடமாட்டேன் என்கிற மாதிரி… கெஞ்சிக் கேட்டுத் தண்ணீர் தெளித்துத்தான் சுஜாதாவையெல்லாம் சினிமா பக்கம் நகர்த்திக் கொண்டு வர முடிந்தது. ‘ என்று சொல்லியிருக்கிறார் கமல்.

இலக்கியவாதி என்பதற்கு கமலுடைய வரையறை என்ன என்று நமக்குத் தெரியாது.

வெகுஜன பத்திரிகை, சிறு பத்திரிகை என்று வெவ்வேறு தளங்களில் இயங்கும் பல படைப்பாளிகளுடன் அவருக்கு நீண்ட காலமாகத் தொடர்பு இருந்து வருகிறது. மறைந்த சுப்ரமண்ய ராஜு, பாலகுமாரன்,அசோகமித்திரன்,புவியரசு, சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், ம.வே.சிவகுமார், ஞானக்கூத்தன்,மதன், பிரளயன் என்று நீளுகிறது இந்த வரிசை. அண்மையில் கமல்ஹாசனை சந்தித்த இலக்கியப் பிரமுகர் சுந்தர ராமசாமி என்று சென்னை இலக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலக்கியவாதிகளை சினிமாவுக்கு வரும்படி கமல் அழைப்பது, தொடர்ந்து ‘நியாயமான பணிவுடன் ‘ முயற்சிப்பது எல்லாம் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இப்படி அழைப்பதில் கமலின் நோக்கம் அவரே சொன்னபடி ‘ஆரோக்கிய சினிமா ‘ வரவேண்டும் என்பதுதான்.

அதாவது இலக்கியவாதிகள் ஒதுங்கி நிற்பதால் சினிமா மோசமாக இருக்கிறது என்று இதற்குப் பின்னால் ஒரு கருத்து இருக்கிறது.இவர்கள் உள்ளே போய்விட்டால் சினிமா மாறிவிடுமா ?

இந்தத் தருணத்தில் தமிழ் சினிமாவுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இருந்துவந்த உறவு எப்படிப் பட்டதாக இருந்திருக்கிறது என்று பார்க்கலாமா ?

தமிழ் சினிமாவின் ஆரம்ப ஆண்டுகளில் அதற்குள் சென்று செயல்பட்ட இலக்கியவாதிகள் பலர். ச.து.சு.யோகி, வ.ரா என்கிற வ.ராமஸ்வாமி, கல்கி, பாரதிதாசன், புதுமைப்பித்தன்,பி.எஸ்.ராமைய்யா,விந்தன்,வல்லிக்கண்ணன் ஆகியோரைக் குறிக்கலாம்.

( இவர்களின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களுக்கு மறைந்த அறந்தை நாராயணன் எழுதிய சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் நூலைப் பார்க்கவும்).

புதுமைப் பித்தன் தன் சினிமா முயற்சிகளின் லெளகீக வெற்றி மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார் என்று தெரிகிறது. கல்கி ஒருவர்தான் சினிமாவிலும் ஜெயித்தார் என்று சொல்லலாம். பின்னாளில் ஜெயகாந்தனின் வெகு ஜன சினிமா வெற்றிக்கு பீம்சிங் பங்களிப்பு போல கல்கியின் வெற்றிக்கு (தியாக பூமி) கே.சுப்ரமணியத்தைச் சொல்லலாம்.

கல்கி ஜெயித்தார். ஆனால் ஏன் புதுமைப்பித்தன் தோற்றார் ? புதிய வரவான சினிமா வடிவத்தைப் புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல, அதற்கும் பழைய மரபுக்கும் இருந்த உறவைப் புரிந்து கொண்டு சம கால விஷயங்களுக்கு அந்த மரபைப் பயன்படுத்திக் கொள்ளாததும் காரணம் என்று தோன்றுகிறது.

பாப்புலர் கல்ச்சர் என்று இன்று நவீன பண்டிதர்கள் கண்டுபிடித்திருக்கிற வெகுஜன ரசனை என்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. அதுதான் நிகழ்கலை மரபு. தமிழரின் மரபான நிகழ்கலையான கூத்தின் கதைகள் எல்லாமே இலக்கியம் சார்ந்த புராண, இதிகாச, வரலாற்றுப் புனைகதைகள்தான். இயல், இசை, நாட்டியம் என்ற மூன்றும் இணைந்த வடிவம் கூத்து. கூத்திலிருந்து சில சிதைவுகளுக்குப் பிறகு உருவானது தமிழ் மேடை நாடகம். இதன் கதைகளும் உரையாடல்களும் கூட வாய்மொழி புராண இலக்கியக் கதைகளைச் சார்ந்திருந்தன. சமஸ்கிருத மரபில் கூத்துக்கு நிகரான தொன்மை வடிவம் எதுவும் இல்லை. அதில் நாடகமும் நாட்டியமும் பிரிந்தே இருந்தன. எனினும் அதிலும் கதைப் பொருள் புராண இலக்கியம் சார்ந்ததுதான்.

இந்தியாவுக்குள் சினிமா தொழில் நுட்பம் வெளியிலிருந்து வந்தபோது இந்த கூத்து மரபு, நாடக மரபுகளிலிருந்தே இந்திய சினிமாவின், தமிழ் சினிமாவின் கதை வசனம் பாடல்கள் கலந்த வடிவம் உருவாக்கப்பட்டது.

இந்தக் கதை வசனம் பாடல்கள் மரபை நிராகரிக்காமல் கல்கி வேலை செய்தார்.கே.சுப்ரமணியம் வேலை செய்தார். இந்த வடிவத்துக்குள் தன் சம காலப் பிரச்சினைகளை கல்கி எடுத்துக் கொண்டார்.விடுதலைப் போராட்டம், காந்தியம், தீண்டாமை ஒழிப்பு, மேல் சாதி குடும்பத்துக்குள் உருவாகத் தொடங்கியிருந்த படித்த பெண்ணின் சமத்துவம் நோக்கிய கலக உணர்ச்சி போன்ற விஷயங்கள், பழைய மரபான இசை நாடக வழியில் கதை சொல்லலுடன் காட்சி உத்திகளை இைணைத்துச் சொல்லப்பட்டன. கே.சுப்ரமணியத்தின் சினிமா இசை, வசனம் இரண்டையும் நிறையவே பயன்படுத்திய போதும் வெறும் டாக்கியாக இருக்கவில்லை. சினிமாவின் காட்சிப்படுத்தல் மொழியைக் கல்கி விளங்கி வைத்திருந்தார் என்பது அவருடைய வெகுஜன ரசனைக்குரிய எழுத்து முறையிலேயே வெளிப்பட்டது.

ஆனால் புதுமைப்பித்தனும், ஓரளவு பாரதிதாசனும் சினிமாவிலிருந்து சீக்கிரமே விடைபெறப் போகிற சரித்திர, புராணக் கதைகளிலேயே வேலை செய்தார்கள். எழுத்தில் சரித்திரக்கதைகள் எழுதிய கல்கி சினிமாவில் சமூகக் கதையில் வெற்றி பெற்றதற்கு நேர் மாறாக, சமூகக் கதைகள் எழுதி வந்த புதுமைப்பித்தன் சினிமாவுக்கு வந்தபோது தியாகராஜ பாகவதரின் புராண- ராஜா ராணிக் கலவைக் கதைகளில் சிக்கிக் கொண்டார். புதிதாக உருவாகத் தொடங்கிய நகர்மயக் கலாச்சாரத்தில் தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டவரான புதுமைப்பித்தனுக்கு சினிமாவில் அதை பிரதிபலிக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை.

எந்த காலகட்டத்திலும் சூப்பர் ஸ்டாருக்கு இலக்கியவாதி வேலை செய்யப் போனால் என்ன ஆகும் என்பதற்கு இன்றைய எஸ். ராமகிருஷ்ணனும் அன்றைய புதுமைப் பித்தனும் அடையாளங்கள்.

எஸ்.எஸ்.வாசனின் ஜெமினிக்காக புதுமைப்பித்தன் எழுதி பயன்படுத்தப்படாத ஒளவையார் ஸ்கிரிப்ட்டை ஏன் வாசன் பயன்படுத்தவில்லை என்பது எளிதில் புரிகிறது. அது இன்றைய இன்குலாபின் புரட்சிகரமான பார்வையோடு எழுதப்பட்டுவிட்டது என்பதற்காக நிச்சயம் நிராகரிக்கப்படவில்லை. அந்த மாதிரி பார்வை எதுவும் அதில் இல்லை.

சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ் சினிமாவில் இலக்கியவாதிகளான அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் வெற்றி பெற்றபோதும் அதற்குக் காரணம் அவர்களுடைய நாடக மரபும், சமூக உணர்வும், அன்றைய ஸ்டூடியோ சிஸ்டமும் என்று சொல்லலாம்.அவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வெற்றி பெற்றவரான இளங்கோவனுக்கும், பின்னர் வந்த ஸ்ரீதருக்கும் இலக்கியப் பரிச்சயம் உண்டென்றாலும் அவர்கள் இலக்கியவாதிகளல்ல.

தமிழ் சினிமாவின் மொழி அறுபதுகளில் மாறத் தொடங்கிவிட்டது.

இதில் இரண்டு விதமான போக்குகள் உள்ளன. இந்திய- தமிழ் சமூகம் பழைய நிலப்பிரபுத்துவ விவசாய அமைப்பிலிருந்து முதலாளித்துவ தொழில் உற்பத்தி முறைகளுக்கு மாறத் தொடங்கியது. அதே சமயம் சமூக மதிப்பீடுகள் முழுக்கவும் நவீனமும் ஆகாமல், முற்றாக பழைமையிலும் தேங்கியிராமல்,இரண்டுக்கும் இடையில் ஆரோக்கியமான சமனையும் அடையாமல், குழப்பமான சிதைவுகளுக்கு உட்பட்டிருந்தது. இந்த நிலைதான் இன்று வரை தொடர்கிறது.

வியாபார நோக்கம் மட்டுமே உடைய வெகுஜன சினிமாவின் மொழி ஹாலிவுட் பார்முலாவைப் பின்பற்றத் தொடங்கியது ஒரு போக்கு. இதுதான் பிரதானப் போக்கு.

சமூக அக்கறை உடைய சினிமாவுக்கான முயற்சி என்பது சிறுபான்மையாக இருந்த போக்கு. அதன் சினிமா மொழி ஐரோப்பிய யதார்த்தவாத சினிமாவைப் பின்பற்றியது. இது வளரவே இல்லை. அதை ஒரு குறைப் பிரசவம் என்று சொல்லலாம். அதற்குக் காரணம் அது முதல் வகையை – ஹாலிவுட் பாணியை – நிராகரிக்கும்போது கூடவே சேர்த்து தன்னுடைய மக்களையும் நிராகரித்துவிட்டது. மரபிலிருந்தும் வேர்களிலிருந்தும் ஆரோக்கியமான பகுதிகளை சேர்த்து அது புறக்கணித்ததால், மக்களிடம் பேச, உறவாட, அதன் மொழியால் இயலவில்லை. ( ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன் ‘ இதற்கு உதாரணம். ஐரோப்பிய யதார்த்த வாதத்தைப் பின்பற்றிய இந்தப் படம் மக்களால் ஆதரிக்கப்படவில்லை. அதே சமயம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ இந்திய- தமிழ் மரபின்படி பாடல்களுடன் கதை சொல்லும் பாணியைப் பின்பற்றி வெற்றி பெற்றது.)

ஹாலிவுட்டைப் பின்பற்றிய தமிழ் – இந்திய வியாபார சினிமா, நமது மரபிலிருந்து கிடைத்த இசை, பாட்டு என்ற சொத்தைக் கைவிடவில்லை. இரண்டையும் இணைத்து ஒரு புதிய வீரிய விளைச்சல் தரக்கூடிய கலப்பு பார்முலாவை அது உருவாக்கிக் கொண்டது.

சமூக அக்கறை,அரசியல் நோக்கம், சீர்திருத்த முனைப்பு கொண்டிருந்த அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பெற்ற வெற்றியை ஆராய்ந்தால், அவர்களும் இரண்டாவது வகையான ஐரோப்பிய யதார்த்த வாதத்தைப் பின்பற்றாதவர்கள் என்பது புரியும்.( இன்று வரை ஐரோப்பிய மாதிரிகளைப் பின்பற்றுகிற நவீன தமிழ் இலக்கியத்துடன் கலைஞருக்கு எந்தத் தொடர்பும் இல்லாதிருப்பதை இதன் தொடர்ச்சியாகவே காண வேண்டும்.)

உண்மையில் உலக சினிமா வடிவத்துக்கு இந்திய- தமிழ் சினிமா அளித்துள்ள பங்களிப்பு என்பதே திரைப்பட இசைதான். இந்த இசைத்திறமையினால்தான் நமது இளைய ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் உலகின் பிற இசைகளை எளிதாக எடுத்து கலப்பு மணம் நடத்த முடிகிறது.( சி ராமச்சந்திரா முதல் ஆர்.டி பர்மன் வரையிலான இந்தி இசையமைப்பாளர்களுக்கும் இது பொருந்தும்) உலகில் வேறு எந்த மேலை நாட்டிலும் அங்குள்ள திரை இசைக்கலைஞர்கள் இந்த மாதிரி கிழக்கத்திய இசையைத் தேர்ந்து எடுத்து பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிப்பது கூட இல்லை. உலகில் வேறு எந்த நாட்டு சினிமாவிலிருந்தும் ஒரு கண்ணதாசனோ, வாலியோ, வைரமுத்துவோ, சாஹிர் லுதான்வியோ உருவாகவே முடியாது.

இது பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டுமே தவிர வருத்தப்படவோ, வெட்கப்படவோ தேவையில்லை. இந்த மரபின் நீட்சியான வடிவம், எத்தகைய மதிப்பீடுகளுக்கு ( நேத்து ராத்திரி யம்மாவுக்கா, அன்பே சிவத்துக்கா)பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி மட்டுமே வருத்தமும் வெட்கமும், சுயவிமர்சனமும், தேவை.

இலக்கியத்தில் அறுபதுகளிலிருந்து தீவிர இலக்கிய வாதிகளாக அடையாளம் காணக்கூடிய – படைப்பாளிகள்- வாசகர்கள் பலர் மத்தியிலும், இந்திய- தமிழ் சினிமாக்களில் ஆடலும் பாடலும் இருப்பது அருவெறுப்பானதாகவே கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஹாலிவுட்டின் வியாபார பார்முலாவுக்கு எதிர்வினையாக ஐரோப்பிய யதார்த்தவாதத்தை அவர்கள் விரும்பியது மட்டும அல்ல. கலைவாதிகளும் சரி, சோஷலிசவாதிகளும் சரி, இலக்கியத்திலும் பிரெஞ்ச், சோவியத் சிந்தனை வடிவங்களைப் பின்பற்றியதுதான். நல்ல சினிமா என்று பேச ஆரம்பித்ததுமே பாட்டு இல்லாத சினிமா முற்போக்கானது; மேலான தரமுடையது என்ற ஒரு மயக்கம் இன்னும் கூட இருக்கிறது.

இந்தச் சூழலில் வியாபார தமிழ் சினிமாவிலிருந்து இலக்கியவாதிகள் அந்நியப்பட்டிருந்ததற்கு மதிப்பீடு பிரச்சினைகள், தனக்கு உகந்த மரியாதை பற்றிய சந்தேகங்கள் மட்டும் காரணமல்ல.அதன் வடிவமே அவர்களுக்கு பிடிபடாததாகிவிட்டது.

தவிர ஒரு இலக்கியவாதி அவருடைய துறையில் எத்தனை மேம்பட்ட திறனுடன் இருந்தாலும், அதுவே சினிமாவுக்கு எழுதுவதற்கான தகுதியாகிவிடாது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு சிறந்த சினிமா நடிகரையோ இயக்குநரையோ கட்டுரையும், கவிதையும், சிறுகதையும், நாவலும் எழுதச் சொன்னால், அவர்கள் உடனே சிறந்த படைப்பை அளித்துவிடுவார்கள் என்று எந்த கேரண்ட்டியும் இல்லை அல்லவா. அதே போலத்தான் சினிமா தொழில் நுட்பத்தை அறியாத இலக்கியவாதியின் சினிமா முயற்சியும் இருக்கும்.

எனவே சினிமா மொழி அறியாத இலக்கியவாதிகள் கல்கி, விந்தன்,பாரதிதாசன், ஜெயகாந்தன் போல, சினிமா தெரிந்த கே.சுப்ரமண்யம், பீம்சிங், எல்லிஸ் ஆர்.டங்கன் போன்ற இயக்குநர்களின் வசம் தங்களை ஒப்படைத்துக் கொள்ளும்போது அந்தக் கூட்டு முயற்சி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாகிறது.

இலக்கியவாதிகளை சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிற கமல்ஹாசன் சினிமாவின் சகல தொழில் நுட்பங்களையும் குழந்தை நாள் முதல் துறையிலிருந்து நேரடியாகக் கற்ற கலைஞர். அப்படிப்பட்டவர் அழைத்துச் செல்கிற இலக்கியவாதிகள் இதுவரை அவருடன் சேர்ந்து என்ன சாதிக்க முடிந்திருக்கிறது என்று பார்ப்போம். (இப்போதே ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்.எந்த இலக்கியவாதியின் துணையும் இல்லாமல் கமல் எழுதிய தேவர் மகன் ஸ்கிரிப்ட்தான் இன்று வரை அவருடைய சிறந்த ஸ்கிரிப்ட்.)

கமலின் இலக்கிய நண்பராக இருந்த மறைந்த சுப்ரமண்ய ராஜு கமலின் சினிமா எதிலும் சம்பந்தப்பட்டதில்லை என்பது முதல் ஆச்சரியம். ராஜு வெகுஜன பத்திரிகை எழுத்தாளர். சிற்றிதழ் இலக்கியவாதி அல்ல. எனினும் வெகுஜன இதழ்களில் சிற்றிதழ்கள் பற்றியும், சிற்றிதழ் படைப்பாளிகளின் படைப்புகள் அவ்வப்போது வெளியாவதற்கும் வெகுஜன இதழ் வாசகர் கவனத்துக்கு அவை செல்வதற்கும் உழைத்த முன்னோடி சுப்ரமண்ய ராஜுதான். ( ‘காலச்சுவடு ‘ இதழில் சிபிச்செல்வன் சொல்வது போல சுஜாதா அல்ல. ராஜுதான் எழுபதுகளில் இதற்காக சாவியை சம்மதிக்க வைத்து வேலை செய்தவர். சுஜாதா ஆரம்பக் கட்டங்களில் சிறு பத்திரிகைக் காரர்களை தன் பிரபலக் கதைகளில் அவ்வப்போது ஜோல்னாபைக்காரர்களாக நகைச்சுவைக்கும் கிண்டலுக்கும் த்ரில்லுக்கும் பயன்படுத்தியதே அதிகம்.பின்னால்தான் அவர் மனம் மாறியது.)

ராஜுவுக்கும் கமலுக்கும் இன்னொரு நண்பரான பாலகுமாரன் கமலின் ராஜபார்வை படத்திலும் பிறகு நாயகன் படத்திலும் பணியாற்றியிருக்கிறார். ராஜபார்வை எழுபதுகளின் ஆர்ட் பிலிம் பார்முலாவையும் கமர்ஷியல் பார்முலாவையும் ஏதோ ஒரு விகிதத்தில் போட்டுக் கலக்கி புது பார்முலாவைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் செய்த படம்.( ‘அவள் அப்படித்தான் ‘ இன்னொரு உதாரணம்).கண் தெரியாத கதாநாயகனுக்கு நீச்சல் சொல்லித் தரும் கதாநாயகி கைகளால் டைவ் அடிப்பதை அபிநயித்து சொல்லிக் காட்டும் விசித்திரம் இந்தப் படத்தில் உண்டு. கமல்- மணிரத்னம் கூட்டில் பாலகுமாரன் வேலை செய்த நாயகன் வெற்றிகரமான ஹாலிவுட் பார்முலா படம். பாலகுமாரன் நேரடியாக சினிமாவில் பாலச்சந்தர் யூனிட்டில் சிறிது காலம் வேலை செய்து சினிமா தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டு பிறகு ஷங்கர் போன்ற மெகா கமர்ஷியல் இயக்குநர்களுக்கு வெற்றிகரமாக வசனம் எழுதப் பழகிக் கொண்டவர்.

கமல் ‘நிறையக் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு இழுத்து வந்த ‘ சுஜாதா அவருக்காக எழுதிய முதல் முக்கியமான படம் ‘விக்ரம் ‘. விக்ரமுக்குப் பிறகு கமலுடன் சுஜாதா பணியாற்றியது ஷங்கரின் ‘இந்தியன் ‘ படத்துக்குத்தான். விக்ரமுக்கு முன்னால் பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும் ‘. விக்ரம் அணு ஆயுதத்தைக் கடத்தும் நவீன வில்லன் மசாலா படங்களின் முன்னோடிப் படம். மூன்று கதாநாயகிகள். எல்லாரும் கமலுக்காக ஏங்குபவர்கள்.இதில் மனைவி தன்னையறியாமலே கணவன் உயிரைக் காப்பாற்ற, தன் நெற்றிப் பொட்டில் சரியாகக் குங்குமம் இருக்கும் இடத்தில் வில்லனின் துப்பாக்கி குண்டை வாங்கிக் கொண்டு செத்துவிடுவாள்.இன்னொரு கதாநாயகி அந்நியக் கலாசாரத்தைச் சேர்ந்த அரசிளங்குமரி. முஸ்லிம் நாடாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கற்பனை நாட்டில் எல்லாமே கீழானதாகவும் இளவரசி மட்டுமே அந்த சேற்றில் பூத்த செந்தாமரையாகவும் காட்டப்பட்டிருக்கும். மூன்றாவது கதாநாயகி கம்ப்யூட்டர் அறிஞி. ஆனால் அவள் ஏங்குவதோ கதாநாயகனுடன் ஒரு டப்பாங்குத்து ஆடும் வாய்ப்புக்குத்தான்.

கமலின் இலக்கிய நண்பர் வட்டத்தைச் சேர்ந்தவராக அறியப்படாத ரா.கி.ரங்கராஜன் ஒரு படத்தில் வசனத்தில் பணியாற்றியிருக்கிறார். ‘ மகாநதி ‘ படத்தின் களம் தஞ்சாவூர் மாவட்டம் என்பதாலும், படத்தில் வரும் சிறைக்காட்சிகளில் ரா.கியின் ஒரு சிறுகதையின் சாயல் இருப்பதாலும், அந்த ஊர்க்காரரான ரா.கியை ஊர் மணம் கமழச் செய்ய கமல் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.

சுப்ரமண்ய ராஜுவைப் போலவே கமலுக்கு நெருக்கமாக இருந்தும் கமலின் சினிமாவில் முக்கிய பங்கு எதுவும் பெறாதவர் கவிஞர் புவியரசு. ஏதாவது பங்களிப்பு இருந்திருந்தாலும், அது பெரிதாக அறிவிக்கப்பட்டதும் இல்லை. கமலின் இலக்கியவாதிகள் வட்டத்தில்- கடைசியாக கார்ட்டூனிஸ்ட் மதன் வரை – வெகுஜன எழுத்தாளர்களே அதிகம். விதி விலக்கானவர்கள் ‘வானம்பாடி ‘ புவியரசு, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், பிரளயன். இதில் ஞானக்கூத்தன் ‘ ஹே ராம் ‘ படத்தில் சிறிய பங்களித்திருக்கிறார். என்ன பங்கு என்பது விளக்கமாகச் சொல்லப்படவில்லை.

சினிமா பற்றி சிறந்த ஞானம் உடையவரும், வாசனின் ஜெமினி விளம்பர இலாகாவில் பணியாற்றியவரும், சினிமா உலகம் பற்றிய மிக சிறந்த நாவலான ‘கரைந்த நிழல்கள் ‘ எழுதியவருமான அசோகமித்திரன் ஏனோ கமலின் சினிமாபரிசோதனைகளில் இடம் பெறவில்லை.

இடதுசாரி தெரு நாடகக் கலைஞரான பிரளயனின் பங்கேற்பு அண்மையில் வந்த கமலின் ‘அன்பே சிவம் ‘ படத்தில். இது ஒரு விசித்திரம். படத்தின் வசனகர்த்தா மதன். இவர் கார்ட்டூனிஸ்ட்டாக, நகைச்சுவையாளராக நிறையவே ஆக்கப்பூர்வமாக சாதித்திருந்தாலும், கூடவே விகடன் குழும இதழ்களில் சுமார் இருபதாண்டுகளாக இழையோடும் விடலைத்தனத்துக்கு (மணியன் போட்ட வித்துக்கு) நீரூற்றி விருட்சமாக வளர்த்தவர். பிரளயனோ இந்த விடலைத்தனத்தை தொடர்ந்து எதிர்த்து விமர்சனம் செய்துவரும் இடதுசாரி அணியைச் சேர்ந்தவர். இந்த இருவரையும் ஒன்று சேர்த்து கமல், அன்பே சிவம் என்று பிரகடனம் செய்ய முயற்சித்திருக்கிறார்.

விளைவு என்ன ? மதனுடைய பலமாகிய நகைச்சுவைக்கும் ஓரளவுக்கு மேல் இடமில்லை. பிரளயனின் பலமாகிய தெரு நாடகத்துக்கும் ஒரு பாட்டுக்கு மேல் இடமில்லை. Planes, trains and automobiles என்ற சாதாரண ஆங்கில நகைச்சுவைப் படத்தின் வடிவத்தை எடுத்துக் கொண்டு அதற்குள் கமல் சொல்ல சமூகத்துக்குச் சொல்ல விரும்புகிற அன்பே ஆன்மிகம் என்ற சிந்தனையையும், கமலிடம் ரசிகர்களும் விநியோகஸ்தர்களும் எதிர்பார்ப்பதாக நம்பப்படுகிற ஹீரோயிசத்தையும் எப்படியாவது கலக்க முயற்சித்ததுதான் இதற்குக் காரணம்.

தெரு நாடகத்தில் ஒரு ஹீரோ பத்து பேரை அடித்து வீழ்த்தும் சாகசங்களுக்கு இடமில்லை என்று ஆனந்த விகடனில் பேட்டி தருகிறாார் பிரளயன்.ஆனால் கமல் தெரு நாடகக்காரனாக நடிக்கும்போது படத்தில் பத்து பேரை புரட்டி எடுக்கிற ஸ்டண்ட் காட்சி இடம் பெற்றாக வேண்டியிருக்கிறது. கூட உதவிக்கு வரும் சக நாடகக்கலைஞர்களைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கமலே வில்லன் ஆட்கள் அத்தனை பேரையும் அடித்து நொறுக்குவதற்கும், தெரு நாடகத்திற்குப் பின்னால் இருக்கும் கூட்டு முயற்சி சித்தாந்தத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ?

இடதுசாரி பார்வையுள்ள தொழிற்சங்க இயக்கம், தெரு நாடக இயக்கம் இரண்டுக்கும் அடிப்படையான அம்சம் இவை கூட்டு நடவடிக்கைகள் என்பதுதான். ஒற்றைத் தலைவன்/தலைவி பின்னால் மற்றவர்கள் மந்தைமாதிரி திரளுகிற வேலையல்ல இது.

தொழிற்சங்க இயக்கத்தின் செயற்குழுக் கூட்டங்கள், அதில் பலவித பார்வைகளின் விவாதம், இறுதியில் எடுக்கப்படும் முடிவுக்கு மற்றவர்களும் கட்டுப்படுதல் என்ற யதார்த்தங்களுக்கு படத்தில் நேரம் இல்லை. பெயரளவில் ஒரே ஒரு காட்சி. தொழிற்சங்கத்தில் நல்லா பாத்திரம் தவிர மற்றவர்கள் எல்லாம் டம்மிகளாகக் காட்சியளிக்கிறார்கள். அல்லது காமெடியன்களாக. பல லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுப் பணத்தைப் பெற்று வர ஒரிசா செல்லும் தலைவர் நிஜ வாழ்க்கையில் நிச்சயம் தனியாகப் போகப் போவதில்லை. சங்கத்திலிருந்து குறைந்தது இரண்டு மூன்று முக்கியஸ்தர்களேனும் ஒன்றாகச் செல்வதுதான் நடைமுறை.ஆனால் அப்படிச் செய்தால், PTA படத்தின் கதைக்குப் பொருந்தி வராதே.

எம்.ஜி.ஆர் பார்முலாப்படி கதாநாயகன் எதிர்க்கிற முதலாளியின் பெண்ணே அவனைக் காதலிக்கிறாள். காதலைத் தியாகம் செய்தால் தொழிலாளர்களுக்கெல்லாம் சம்பள உயர்வு கிடைக்கும் என்றதும் ஹீரோ தியாகம் செய்துவிட்டு வாலாட்டும் நாயுடன் ( இலக்கியவாதிகளின் குறீயீடா ?) தன்னந்தனியனாகப் போகிறான். உலகமயமாக்கல் முதல் நுகர்வுக் கலாச்சாரம் வரை, விவசாயக் கூலிகள் முதல் ஆலைத்தொழிலாளர் வரை எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் எவ்வளவு சுலபமான தீர்வு. எதற்கு உள்ளூர் முதலாளிகளின் பெண்ணைக் கவர வேண்டும் ?உலக வங்கியின் சேர்மன் மகளை நம்மைக் காதலிக்கச் செய்தால் போதும். காதலை பேரம் பேசி உலகமயமாக்கலையே நிறுத்திவிடலாமே.

தெரு நாடகங்களில் தனி கதாநாயகன்/கதாநாயகிபாத்திரங்கள் கிடையாது. ஆனால் கமலின் சினிமாவில் இது கமல் என்ற தனி நபரின் திறமையை வெளிப்படுத்துகிற தனி நபர் ஆடல் பாடல் காட்சியாக மாறிவிடுகிறது. தெரு நாடகங்களில் நடிக்க முன்வரும் பெண்கள் நிஜ வாழ்வில் அபூர்வம்.அப்படி முன்வரும் பெண்கள் நிஜ வாழ்க்கையில் வீட்டிலும் வெளியிலும் எத்தனை விதமான சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் சொல்ல படத்தில் நேரம் கிடையாதுதான் என்றாலும், காட்டப்படும் ஒரே பெண் எப்படிப்பட்டவளாக இருக்கிறாள் ? ‘விக்ரம் ‘ படத்தில் கமலுக்காக ஏங்கும் கம்ப்யூட்டர் அறிஞிக்கும் இவளுக்கும் வித்யாசம் கிடையாது. இருவரும் படபடவெனப் பொரிவார்கள். அந்த பொரிதலுக்குப் பின்னால் இருப்பது ஹீரோ மீதான வேட்கை.

அன்பே சிவம் படம் தொழிற்சங்க இயக்கம் பற்றியதோ, தெரு நாடகம் பற்றியதோ இல்லையே; அது இரண்டு மாறுபட்ட மனிதர்கள் சில மணி நேரம் ஒன்றாக இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஒருவர் மற்றவரை எப்படி பாதிக்கிறார் என்பது பற்றியதுதானே; அதில் ஏற்படும் நகைச்சுவை, நெகிழ்ச்சி இவைதானே விஷயம் என்று கேட்கலாம். அதேதான். அவ்வளவுதான் விஷயம். இது இன்னொரு ஹீரோயிசப் படம். ஹீரோவின் இமேஜை உயர்த்தும் ஆக்ஷன், காதல், டான்ஸ் எல்லாம் இருக்க வேண்டும். வித்யாசமான ஹீரோயிசம், அவ்வளவுதான். வித்யாசமாயிருப்பதற்காக ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய பின்னணியைத்தேடுவது போல இதற்கு எதை வைத்துக் கொள்ளலாம் ?, கொஞ்சம் தொழிற்சங்கம், கொஞ்சம் தெரு நாடகம். தொ.சவோ தெ.நாவோ ஹீரோயிசத்துக்கு ஒத்து வராவிட்டால், அவற்றை வசதிக்கேற்ப வளைத்துக் கொள்ளலாம்.

மார்க்சிய ஆன்மிகமான அன்பே சிவமானாலும் சரி , பிஜேபி ஆன்மிகமான பாபாவானாலும் சரி, ஹீரோயிசத்தைக் கைவிடவே முடியாது என்பதுதான் கமல், ரஜினி இருவருக்கும் இருக்கும் யதார்த்த நிலைமை.

இந்தச் சூழ்நிலையில் எதற்காக இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வரவேண்டும் ? சிற்றிதழாட்கள் சினிமா மேஸ்திரிகளுக்கு சித்தாளாவதற்கா ?

தியாகராஜ பாகவதருக்கு புதுமைப்பித்தனும், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணிக்கு பாரதிதாசனும் கூண்டுக் கிளிக்கு விந்தனும் எழுதியவை மறக்கப்பட்டுவிட்டன. புதுமைப்பித்தனின் சிறுகதைகளும் பாரதிதாசனின் கவிதைகளும் விந்தனின் மனிதமும் அழியாமல் இருந்துகொண்டிருக்கின்றன. காரனம் பின்னவை, இந்த இலக்கியவாதிகள் தாங்கள் செய்ய விரும்பிச் செய்தவை. முன்னவை சினிமா வியாபாரிகளின் தேவைகளுக்காக எழுதிக் கொடுத்தவை.

என்றைக்கு இலக்கியவாதி – படைப்பாளி தன்னுடைய படைப்பை தானே முழுமையான சினிமாவாக உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ அன்றைக்குத்தான் வரமுடியும்; வர வேண்டும். அதற்கு அவன் சினிமா மொழியைக் கற்றுத் தெளிய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. மேற்கத்திய ஹாலிவுட் மரபுகளிலிருந்து சினிமாவைப் பார்க்காமல், நமது மரபுகளிலிருந்து வளர்த்தெடுக்கக்கூடிய சினிமா எப்படி இருக்க வேண்டும் என்ற பார்வையும், உழைப்பும் அதற்குத் தேவை.

ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் ஹீரோயிசத்துக்கு – அது எந்த ரூபத்தில் இருந்தாலும் சரி – அதற்கு முட்டுக் கொடுக்கத்தான் தன்னுடைய படைப்பாற்றலை அவன் தர வேண்டுமென்றால் அது சினிமாவை வளர்ப்பதற்கு பதிலாக இலக்கியவாதியை சீரழிப்பதில்தான் முடியும். கொஞ்சம் பணம் சம்பாதிக்க மட்டுமே அங்கே எட்டிப் பார்க்கிறேன் என்று இலக்கியவாதிகள் சொல்லி விடுவார்களானால் அது வேறு விஷயம். புதுமைப்பித்தன் அப்படித்தான் எட்டிப் பார்த்தார்.சம்பாதிப்பதற்கு முன்பாகவே செத்தும் போனார்.

நல்ல சினிமா வராமல் இருப்பதற்குக் காரணம் இலக்கியவாதிகள் அங்கே செல்லாதது அல்ல. சினிமாவில் இருந்து கொண்டிருப்பவர்கள் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களாக இருப்பதுதான். கொஞ்ச நஞ்சப் பரிச்சயத்தையும் சினிமாவின் மோசமான மதிப்பீடுகளை பலப்படுத்த மட்டுமே பயன்படுத்துவதுதான். இலக்கியப் பரிச்சயம் உள்ள (இலக்கியவாதிகள் அல்லாத) ஸ்ரீதரும் பாலச்சந்தரும் மகேந்திரனும் பாரதி ராஜாவும் பாலு மகேந்திராவும்தான் ஒரு சில நல்ல முயற்சிகளைச் செய்திருக்கிறார்களே தவிர இலக்கியவாதிகளாக இருந்து சினிமா உள்ளே நுழைந்தவர்கள் எல்லாம் ஹீரோக்களின் எழுத்து அடியாட்களாகத்தான் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு நல்ல சினிமா வர வேண்டும் என்பதில் இருக்கும் காதல் மதிக்கத்தக்கது. நேற்று ராத்திரியம்மாவுக்கும் ஓ,ரங்காவுக்கும் மேரி ஜானுக்கும் பரிகாரத்தைத் தானேதான் செய்ய வேண்டும் என்று அவருக்கு இருக்கும் ஆதங்கம் மதிக்கத் தக்கது. வணிக சினிமாவுக்குள்ளேயே புரட்சிகரமான கருத்தையெல்லாம் சொல்லிவிட முடியும் என்று அவருக்கு இருக்கும் நம்பிக்கை வியக்கத்தக்கது.

நல்ல சினிமா தழைக்க வேண்டுமென்றும் அதற்கு இலக்கியம் உதவ வேண்டும் என்றும் கமல்ஹாசன் விரும்பினால், அசோகமித்திரன் முதல் ஜெயமோகன் வரை கி.ராஜநாராயணன் முதல் பாமா வரை பலருடைய நல்ல இலக்கியப் படைப்புகளை, இலக்கிய ரசனை உடைய இளம் இயக்குநர்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் டெலி பிலிம்களாகத் தயாரிக்கலாம். இயக்கலாம். எல்லாவற்றிலும் தானே நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை நடிக்காமல் தயாரிப்பாளனாக இருந்து செய்தது போல இதைச் செய்யலாம். தனக்குப் பொருத்தமான பாத்திரம் என்று தேடாமல், பாத்திரத்துக்குத் தான் பொருத்தமாயிருந்தால் நடிக்கலாம். இத்தகைய டெலிபிலிம்களை தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பலாம். பிறகு தியேட்டர்களிலும் வெளியிடலாம். கமலுக்கு இருக்கும் பிரபலம், பிராண்ட் வேல்யூவுடன் இது செய்யப்பட்டால் நிச்சயம் வர்த்தக வெற்றியும் அடையும் என்பதில் சந்தேகமில்லை.

சினிமாவும் இலக்கியமும் கை கோர்ப்பதற்கு ஏற்ற பாலம் தொலைக்காட்சி.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். சினிமாவையும் மேம்படுத்தலாம். மெகா சீரியல்களிலிருந்து நமது பார்வையாளர்களை விடுவிக்கலாம். ஆரோக்கியமான சினிமாவுக்கு இதுவே வழி.

இலக்கியவாதிகளுக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டேயிருக்கும் கமல் அவர்களே. இந்த அறைகூவல் உங்களுக்கு.

(தீம்தரிகிட பிப்ரவரி 2003. dheemtharikida@hotmail.com)

Series Navigation

ஞாநி

ஞாநி