நரேந்திரன்
Law grinds the poor, and rich men rule the law.
— Oliver Goldsmith
abc தொலைக்காட்சி சேனலின் ஜான் ஸ்டஸ்ஸல் (John Stossel) எழுதிய ‘Give Me a Break: How I Exposed…. ‘ பற்றிய எனது பார்வை தொடர்கிறது.
மேற்படி புத்தகத்தில், அமெரிக்க அரசாங்கம் வேலை செய்யும் விதத்தினையும், அரசாங்க வரிவிதிப்புச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி பணக்கார அமெரிக்கர்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள், இலாபமடைகிறார்கள் என்பதனை மிகவும் சுவாரசியாமாக எழுதியிருக்கிறார். புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதியைக் கீழே மொழி பெயர்த்திருக்கிறேன்.
மேலே போவதற்கு முன்னால் ஒரு self-confession.
கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவானாலும் ஒருவரின் தாய்மொழியில் எழுதுவது மிக எளிதான காரியம். அதே சமயம், பிற மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பை ஒருவரின் தாய்மொழியில் மொழி பெயர்ப்பது என்பது மிக மிகக் கடினமான வேலை. பெரும்பாலான மொழி பெயர்ப்புகளில், எத்தனை கவனத்துடன் முயன்றாலும் மூலத்தில் தென்படும் சாரமும், நடையழகும் காணாமல் போய்விட்டிருக்கும். இரண்டு மொழிகளிலும் பண்டித்யம் உள்ள, இலக்கிய அறிவுள்ளவர்களால்தான் நல்ல மொழி பெயர்ப்புகளை உருவாக்க முடியும் என்பது என் எண்ணம். அந்த வகையில், எனக்கு பண்டித்யமும் குறைவு. இலக்கிய அறிவும் குறைவு. எனவே, எனது கீழ்க் கண்ட மொழி பெயர்ப்பில் குற்றம் இருப்பின் பொறுத்தருள்க.
****
ஒரு சேம நல ராணியின் (Welfare Queen) ஒப்புதல்கள்.
ரொனால்ட் ரீகன், அமெரிக்க அரசு நிதியின் பெரும்பகுதியைச் சுருட்டுபவர்களை ‘சேம நல ராணிகள் ‘ என்றார் ஒருமுறை. அவரறிந்த சேம நல ராணிகளில் அதிகமானோர் பெரும் பணக்காரர்கள் என்பதை ஏனோ அவர் வெளியில் சொல்லவில்லை. தேர்தல் நிதிகள், விமானப் பயணங்கள், இரவு விருந்துகள், கோல்ஃப் விளையாட்டு இன்ன பிற கேளிக்கைகளை தங்குதடையின்றி அள்ளித் தெளித்து, அரசியில்வாதிகளைத் தங்கள் கைக்குள் போட்டு, அதன் மூலம் வரிப்பணத்தின் பெரும்பகுதியைக் கொள்ளை அடிக்க ஏதுவான சட்டங்களை செனட்டில் வெற்றி பெறச் செய்ய முட்டி மோதிக் கொண்டிருக்கும் லாபியிஸ்ட்கள் ஒருபுறம். இவர்களுடன், கால்பந்து, ஹாக்கி போன்ற பணத்தை அள்ளிக் குவிக்கும் விளையாட்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரும் அந்தந்த அணிகளின் சொந்தக்காரர்களான மல்ட்டி-மில்லியனர்கள், பணக்கார விவசாயிகள், பெரும் கம்பெனிகள், அரசியல் தொடர்புடையவர்கள் இன்னொருபுறம் என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு ‘சேம நல ராணி ‘களாக இருக்கிறார்கள்.
இவ்வளவு ஏன் ? சில பணக்கார தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் கூட ‘சேம நல ராணிகள் ‘தான்! ஆம். நானும் கொஞ்சம் அமெரிக்கர்களின் வரிப் பணத்தை சாப்பிட்டிருக்கிறேன்.
1980 வருடத்தில் கடற்கரையோரம் ஒரு அழகான வீடு கட்டினேன். நான்கு படுக்கை அறைகள் கொண்ட, எந்த அறையில் இருந்து பார்த்தாலும் அட்லாண்டிக் கடல் தெரிவது போலக் கட்டப்பட்ட அருமையான வீடு அது. இருப்பினும், அந்த இடத்தில் வீடு கட்டியதே ஒருவிதமான பைத்தியக்காரத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். கடலுக்கும், நான் கட்டிய வீட்டிற்கும் இடையே இருந்தது வெறும் நூறு அடி மணல் மட்டும்தான். கட்ட ஆரம்பிக்கும் போதே, ‘கடலுக்கு இத்தனை அருகில் வீடு கட்டுவது மிகவும் ஆபத்தானது ‘ என்றார் என் தந்தை.
என்னுடைய ஆர்க்கிடெக்ட் விடவில்லை. ‘அதிலென்ன ஆபத்து இருக்கிறது ? கடல் உங்கள் வீட்டை அழித்தால், புதிதாக இன்னொரு வீட்டைக் கட்டிக்கொள்ள அரசாங்கம் பணம் தரும். எனவே, அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள் ‘ என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த இடத்தில் வீடு கட்டுவது ஆபத்தானது என்பது குருடனுக்குக் கூடத் தெரியும். பின் எதற்காக அரசாங்கம் இது போன்ற செயல்களுக்கு ஆதரவு தரவேண்டும் ? கிறுக்குத்தனமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், அதுதான் உண்மை. கடல் என் வீட்டை அழித்தால், அமெரிக்க அரசாங்கம் அதே இடத்தில் புதிதாக இன்னொரு வீடு கட்டிக்கொள்ள National Flood Insurance Program மூலம் முழுப்பணத்தையும் தரும்!
ஆற்றோரம், கடலோரம் வீடு கட்டுபவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் அளிக்க எந்த தனியார் கம்பெனியும் முன் வருவதில்லை. அவர்களுக்கென்ன சித்தமா கலங்கி இருக்கிறது ? எனவே, அமெரிக்க அரசாங்கமே ஒரு சட்டத்தின் மூலம் இந்த மகத்தான சேவையைச் செய்து வருகிறது. அதே இடத்தில் வீடு கட்டி, எத்தனை முறை திரும்பத் திரும்ப அழிந்தாலும் அரசாங்கம் பணம் கொடுக்கும். நம்புங்கள். இத்தனை முறைதான் கட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடோ, உச்ச வரம்போ எதுவுமே இல்லை. வீடு இடியும் ஒவ்வொரு முறையும் அமெரிக்க அரசாங்கம் (அதிகபட்சம்) $250,000 டாலர்கள் வரை வாரி வழங்கும். அத்தனையும் அப்பாவி அமெரிக்கர்களின் வரிப்பணம்.
வாழ்க.
மேற்கூறிய அரசாங்க இன்ஸ்யூரன்சிற்கு நானும் ப்ரீமியம் கட்டி வந்தேன். அதிகம் ஒன்றுமில்லை. வருடத்திற்கு சில நூறு டாலர்கள் மட்டுமே.
எல்லாம் சரிதான். எதற்காக அமெரிக்க அரசாங்கம் இப்படியொரு சீப்பான இன்ஸ்யூரன்ஸ் பாலிசியைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்வியை, எனது 20/20 நிகழ்ச்சியில் Federal Emergency Management Agency-ஐச் சேர்ந்த லீ விட் (Lee Witt) இடம் கேட்டேன். ‘இந்தத் திட்டத்தினால் அமெரிக்க அரசாங்கத்திற்கு பணம் மிச்சமாகிறது ‘ என்றார் அவர். ‘இப்படியொரு இன்ஸ்யூரன்ஸ் திட்டம் இல்லாவிட்டாலும், அமெரிக்கர்கள் ஆபத்தான இடங்களில் வீடு கட்டுவதை நிறுத்தப் போவதில்லை. அவர்களுக்கு அளிக்கும் வெள்ளச் சேத நிவாரணத்தொகை இதை விடவும் பல மடங்காக இருக்கும் ‘ என்பது அவர் வாதம்.
முன் பின் யோசிக்காமல் இப்படியான ஒரு இடத்தில் வீட்டைக் கட்டும் மடையர்களைத் தடுப்பது கடினமான காரியம். எப்படியாகினும் அவர்களுக்கு, நிவாரணம் என்ற பெயரில், அரசாங்கம் பணம் கொடுத்தே ஆகவேண்டும். எனவே இந்த பாலிஸியை விற்பதன் மூலம் சிறிது பணம் ஈட்டலாம் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் லாஜிக்.
ஆனால், இந்த இன்ஸ்யூரன்ஸ் மேலும் பலரை ஆற்றோரங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் வீடு கட்டத் தூண்டி இருக்கிறது என்பதுதான் உண்மை. National Flood Insurance Progam-தான், அமெரிக்காவிலேயே மிகப் பெரிய ப்ராப்பர்ட்டி இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி. ஏறக்குறைய $640 பில்லியன் டாலர் சொத்துக்கள் இந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தின் கீழ் இருக்கின்றன. இந்த திட்டத்தில் சேர்ந்து மிகக் குறைந்த ப்ரீமியம் கட்டுபவர்களில் கலிஃபோர்னிய மாலிபூவில் வாழும் பெரிய திரைப்பட நடிகர்களும், Kennebunkport போன்ற இடங்களில் வாழும் மிகப் பெரும் பணக்காரர்களும் அடங்குவர் (ஜார்ஜ் புஷ்ஷின் குடும்பத்தாருக்குச் சொந்தமான விடுமுறைக்கால வீடு அங்குதான் இருக்கிறது).
எஙகளின் 20/20 படக்குழு வடக்கு கரோலினா மாநிலத்தின் கடற்கரையில் இதனைப் படமாக்கிக் கொண்டிருந்த போது, அங்கு வசிக்கும் ஒருவர் எங்களை அவர் வாடகைக்கு எடுத்திருக்கும் படாடோபமான அவரின் வீட்டிற்குள் அழைத்தார். அந்த வீட்டிற்குள் நுழைந்த எனது தயாரிப்பாளர், குளிர் சாதனப் பெட்டியின் மீது ஒட்டப் பட்டிருந்த ஒரு புகைப்படத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார். அது அமெரிக்க செனட்டரான ரிச்சர்ட் கெப்பார்ட்டின் (Richar Gephardt) படம். தனது ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘இது யாருடைய படம் ? ‘ என்றார் எங்கள் தயாரிப்பாளர்.
‘அவர்தான் இந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் ‘ என்று பதில் வந்தது.
ஆஹா, நமது செய்திக்கு அற்புதமான ஒரு திருப்பு முனை கிடைத்து விட்டது என்ற எண்ணத்துடன், ரிச்சர்ட் கெப்பார்ட் அலுவலகத்தை அழைத்தேன். அவருடன் ஒரு நேர்காணல் செய்யும் நோக்கத்துடன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருவருமே ‘சேம நல ராணிகள் ‘ பாருங்கள்! பேட்டியில், ‘ஆம். இந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டம் மோசமானது. கடற்கரையோரம் வீடு கட்டும் பணக்காரர்களுக்கு இது உதவக்கூடாது…நான் இதை மாற்ற முயல்வேன்…. ‘ என்பது மாதிரி ஏதாவது சொல்வார் என்றே எதிர்பார்த்தேன். மாறாக, முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி, சிறு புன்னகையுடன், ‘இதைப் பற்றி விசாரிக்கிறேன் ‘ என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார்.
என்னைப் பொறுத்தவரை, Federal Flood Insurance payment என்பது நன்றாகக் குடித்துவிட்டு எங்காவது தங்களின் கார்களை மோதி நொறுக்கும் குடிகார டிரைவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் புதிய கார் வாங்கிக் கொடுப்பது போன்றதுதான். வரி கட்டும் அமெரிக்கர் எவரையும் எனது வீட்டிற்கு அழைத்ததே இல்லையே ? பின் எதற்காக அவர்கள் எனக்குப் பணம் தரவேண்டும் ?
கடைசியில் அது நடந்தே விட்டது. 1995 ஆம் வருட புத்தாண்டு தினத்தன்று, எனது பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ‘புத்தாண்டு வாழ்த்துக்கள்! ‘ என்றது குரல். தொடர்ந்து ‘உனது வீடு, போயே போச்சு. லோக்கல் நியூசில் பார் ‘ என்றது அதே குரல். உண்மைதான். கடல் என் வீட்டை சாப்பிட்டு விட்டது. எனது வீடு இருந்த இடத்தில் இப்போது ஒரு பெரிய மணல் மேடு. கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டாலும் உடனே அது மறைந்து விட்டது. அரசாங்கம்தான் எனக்கு எல்லாப் பணத்தையும் தந்துவிடுமே ? பின் எதற்கு கவலை ? அந்த இடத்திலேயே இன்னொரு வீடு கட்டிக் கொண்டால் போயிற்று.
****
இன்றைய அமெரிக்காவின் மிகப் பெரிய ‘சேம நல ராணிகள் ‘ யார் என்றால், அது அமெரிக்க விவசாயிகளாகத்தான் இருப்பார்கள்.
திறந்த பொருளாதாரம் (free market) குறித்து விவசாய விழாக்களில் நான் பேசும்போது, பெரும்பாலான விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்பார்கள். அவர்களின் வெளிப்படையான ஆதரவளிப்பிற்குக் கீழ் மிக அதிகமான செலவினத்துடன், விவசாயப் பொருள்களுக்கு அமெரிக்க நுகர்வோர் தேவையற்ற முறையில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் ஒரு திட்டம் இயங்குவது அனேகருக்குத் தெரியாது. கடந்த பத்து ஆண்டுகளில் அரசாங்கம் $200 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக நேரடி farm-subsidyகளை அமெரிக்க விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறது. இன்னும் $200 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக விவசாயப் பொருள்களின் செயற்கை விலையேற்றத்திற்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது (இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நம் போன்ற நுகர்வோர்கள்தான்).
ஏழைகளுக்கு உதவும் சேம நலத் திட்டங்களைப் போன்றதுதான், விவசாயி ஆதரவுத் திட்டங்களும். போதையானதும் கூட. விவசாய ஆதரவுத் திட்டங்களின் முக்கிய நோக்கம், அதிகப்படியான விளைச்சலினால் குறைந்த விலைக்கு விற்கப்படும் விவசாயப் உற்பத்திப் பொருள்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் காப்பாற்றி, சரிவிலிருந்து அவர்களை மீட்டெடுத்து உதவுவதுதான்.
ஆனால், அதற்கு நேர் மாறாகத்தான் இதுவரை நடந்து வந்திருக்கிறது. அரசாங்கக் கையூட்டுகளைப் பெரும் விவசாயிகள் மேலும் மேலும் அதிக இடங்களில் பயிரிடுகிறார்கள். இதானால் மீண்டும் அதிகப் பொருள் உற்பத்தி. மீண்டும் விலை குறைப்பு. முடிவே இல்லாத சுழல் போல விவசாயிகள் அரசாங்க கையூட்டுகளை நம்பி இருக்க வேண்டியிருக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் இம்மாதிரியான திட்டங்கள் பல ஏழை நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. Farm-subsidyகளின் மூலம் தங்ககளின் விளை பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அமெரிக்க (அல்லது ஐரோப்பிய) விவசாயியுடன் அவர்களால் போட்டியிட முடிவதில்லை. இது ஏழை நாட்டு விவசாயிகளை என்றும் ஏழைகளாகவே வைத்திருக்கிறது.
எதற்காக அமெரிக்க விவசாயிகளுக்கு இவ்வளவு பணத்தை அள்ளி வீச வேண்டும் ?
ஏனென்றால், பண்ணைகள் மீது நமக்குக் கொள்ளைப் பிரியம். குடும்பப் பண்ணைகளை இழக்க யாரும் விரும்புவதில்லை. ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். மேற்கண்ட farm-subsidyகள் சிறிய அமெரிக்க விவசாயிகளைச் சென்றடைவதில்லை. மிகப் பெரும் விவசாயப் பண்ணைகள் வைத்து நடத்தும் கம்பெனிகளுக்கே அது போய்ச் சேருகிறது. விவசாயப் பண்ணைகள் நடத்தும் அமெரிக்காவின் Fortune 500 கம்பெனிகளான Westvaco, Chevron, John Hancock Life Insurance, Du Pont, Caterpiller போன்றவையே அமெரிக்க அரசாங்கத்தின் farm-subsidyக்களின் மூலம் பயன் பெறுகின்றன.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு வலிமையான விவசாய லாபியை வைத்துக் கொண்டிருக்கிறது. ஓட்டிற்காக ஒவ்வொரு அமெரிக்க அரசியல்வாதியும் அவர்களுடன் இணைந்தே இருக்க வேண்டியிருக்கிறது. சிறிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட ரிபப்ளிகன் கட்சியே கூட, விவசாயிகள் விஷயத்தில் ஒரு பெரிய அரசாங்கத்தைப் போல நடந்து கொள்கிறது.
ஒவ்வொரு வருடமும் மக்காச் சோளம் விளைவிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் $200,000 டாலருக்கும் மேலாக subsidy வழங்கப்படுகிறது. என்னுடைய நண்பரும், ‘விவசாயியுமான ‘ abc நெட் வொர்க்கின் Sam Donaldsonக்கு ஆயிரக்கணக்கான டாலர் இந்த subsidy மூலம் கிடைத்திருக்கிறது (சாமின் மனைவி தனது நியூ மெக்ஸிகோ ரான்ச்சின் ஆடுகள் வளர்க்கிறார்). அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்கள் கூட இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.
‘அரசாங்கம் அளிக்கும் உதவி எங்களுக்குத் தேவையான ஒன்று. நாங்கள் விளைவிக்காவிட்டால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் ‘ என விவசாயிகள் வாதிடலாம். அதே சமயம், காய்கறிகளையும், பழ வகைகளையும் விளைவிக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் எந்த உதவியும் செய்வதில்லை. அவர்கள் கொழிக்கிறார்கள். அது ஏன் ?
அமெரிக்க விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையே. சிலர் விவசாயம் செய்வதையே விட்டு விடக்கூடும். கவலையான செய்தி என்பதை மறுப்பதிற்கில்லை. அவர்களைப் போலவே, பிற துறைகளில் வேலைகளை இழக்கும் மற்ற அமெரிக்கர்களின் நிலமையும் கவலையான ஒன்றுதான். ஆனால் அவர்கள் கவலை கொண்டு வேறு வேலை தேடிச் செல்லாமல் இருப்பதில்லை. ஒரு துறையின் அழிவு மற்றொரு துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது. நீண்டகால வளர்ச்சிக்கு அது இன்றியமையாத செயலாகும் அது.
****
19 முறை Emmy Award வாங்கியிருக்கும் John Stossel-ஐ, abc சானலின் 20/20 நிகழ்ச்சியில் பணிபுரிகிறார். மேற்கண்ட கட்டுரை அவரின் Give Me a Break: How I Exposed Hucksters, Cheats, and Scam Artists and Became the Srourage of Liberal Media என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதப்பட்டிருக்கிறது.
***
narenthiranps@yahoo.com
- சொல்லால் செத்த புறாக்கள்
- மெளனம்
- நழுவும் …
- ஆதிமுதல்….
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- ஓவியம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- வருகல் ஆறு
- கி. சீராளன் கவிதைகள்
- இப்போது உனக்காக…
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- பால் கடன்
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- ப்ரான் கறி
- மீன் கட்லெட்டுகள்
- கடிதங்கள் ஏப்ரல் 1, 2004
- எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?
- A Bharata Natyam Dance Drama on Bharathi ‘s Works
- நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)
- Three exhillarting dance programs
- சாமியேய். ..
- ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்
- லென்னி புரூஸ் பொன்மொழிகள்
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- தீக்குள் விரலை வைத்தால்.
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- பனியில் விழுந்த மனிதர்கள்
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- புழுத் துளைகள் – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- களிமேடு காளியம்மாள்
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- திரை விலகியது
- விலக்கப்பட்ட கனி
- எதிரேறும் மீன்கள்
- காலப்பிழை
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- சோற்றுப் புத்தகம்
- நல்லாமல் நன்றியெது ?
- காவிரி மண் வாக்காளர்களே….!