இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

தீபச்செல்வன்


தூரம் நீண்டிருக்கிறது


இரவுமீது ஒருசிவப்புப் பறவை
வந்து அமர்ந்திருக்கிறது.


எனது உணவுத்தட்டில்
தண்ணீர் காய்ந்திருக்கிறது.


அம்மாவின்
சிரட்டையிலான அகப்பை
பாவனையற்று
பரணியில் வறண்டு கிடக்கிறது.


நூலகத்தோடு
முடிவடையும் வீதியில்
வெறும் சன்லைட்டுப் பைகள்
கிடக்கின்றன.


தொலைத்தொடர்பு கம்பிகளிற்குள்
அடையாள அட்டை
சொருகிய முகங்கள்
அழைப்பிற்க்காய் காத்திருக்கின்றன.


அம்மாவின் அழைப்பு
வந்து திரும்பிப் போகிறது.


மேலதிக விலையில்
வாங்கப்பட்ட
போனா அடிக்கடி
விழுந்து உறங்குகிறது
எழுத்துக்கள் சிறுத்து
பெருகிக்கொண்டிருக்கின்றன.


நடுங்கிக்கொண்டிருக்கும்
கை விரல்களின்
நகங்களின் நிறம்
வெளுக்கிறது.


மேசையில் குவிந்திருக்கும்
புத்தகங்களிற்கிடையில்
மிகத்தாமதமாக
கிடைக்கப்பெற்ற
தங்கையின் கடிதம்
மீண்டும் வாசிக்க கிடக்கிறது.


இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்