இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


1) ஹோமஸ் மங்க்ஸ் என்பவர் காஸ்டிரேஸன் காம்ப்ளக்ஸ் காரணமாக பெண்கள் தங்களை ஆண்மையிழந்தவர்களாக கருதுகின்றனர் என்று ஒருமுறை சொன்னார் இதை தான் லிங்க மையவாதம் என்கிறார் ஏனஸ்டு ஜான்ஸ்.ஜூலியட் மிட்செல் தன்னுடைய உள பகுப்பாய்வும் பெண்ணியமும் என்ற கட்டுரையில் பிராய்டின் இந்த கருத்தை ஆதரிக்கிறார்.கீழ்படிந்து போதல்(passive),சுய காதல் மேற்கொள்ளுதல்(narcissitic), தன்னை துன்புறுத்தும் கொடுமையில் இன்பம் காணுதல்(masochistic),ஆண் பிறப்புறுப்பு பொறாமை ஆகிய குணங்களை பெண்கள் இயல்பாக பெற்றவர்கள் என்ற கருதுகோள் பிராய்டுடையதாகும். லிங்கம் என்பதை அதிகாரத்தின் குறியீடு என்று ழாக்லக்கானும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் பெண் என்ற சொல் ஒரு குறிப்பானாக(signifier) விளங்குகிறதேயன்றி உயிரியல் அடிப்படையில் அவள் பெண்பாலாக திகழ்கிறாள் என்பதால் அல்ல(women does not exit) என்கிறார்.பெண் என்று யாருமில்லை என்பது லக்கானின் அவிப்பிராயம்.

பெண் என்ற பொருளை விட அவளுக்கென்று அமைந்த குறிப்பான் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகும் என்ற அரிச்சுவடியிலிருந்து பிராய்டு என்ற ஆணின் பார்வையை விளங்கி கொள்வதற்கு முன் அவர் சொன்ன மனச்சிக்கல் சல்மாவின் நாவலில் பதிவாகியுள்ளதா என்று பார்ப்போம்.இது ஒரு பெண்பிரதி.. ஜமிலாபீவி, சபியா, றைமா, சொஹ்ரா, ஆமினா, கதிஜா,மைமூன் என்று பெரும்பாலான பெண்கள் கீழ்படிந்து போகுபவர்களாகவே இருக்கின்றனர்.

பிர்தவ்ஸ், வகிதா, ஆமினா போன்ற கதாபாத்திரங்கள் சுயகாதல்

மேற்கொள்ளுபவராக தங்கள் அழகு மேல் அதிதமான நம்பிக்கை கொள்பவராக இருக்கின்றனர். மாரியாயி,சொஹ்ரா போன்றோர்கள் மசொஸ்டிகளாக உள்ளனர்.வேறு சில பெண்கள் ஆண் மீது பொறாமை படும் குணம் கொண்டோராக உள்ளனர் என்று பிராய்டிய வாசிப்பின் மூலம் மனசிக்கல் உள்ளவர்களாக காணலாம்.1874 ல் ஊதரிங் ஹைட்ஸ் எழுதிய நாவல் பெண்களை முதன்மை படுத்தியது.அப்போது இயங்கு நான் என்ற சப்ஜக்ட் இன் பிராசஸ் பரவலாக பேசப்பட்டது.மேலும் அந்த நாவல் முதாளித்துவத்தின் பெண்ணுருவாக்க நாவல் என்றும் சொல்லப்பட்டது.ஜூலியா கிறிஸ்தவா அந்த நாவலை ஹிஸ்டிரியாக்களின் சொல்லாடல் என்று வர்ணித்தார்.

அந்தவகையில் பெண் உளவியலை பெருங்கதையாடலாக மாற்றியிருக்கும் சல்மாவின் நாவலை முதலாளித்துவ ஆண்வழிச்சமூகத்தின் கீழ் ஒரே சமயத்தில் உடன்படல்,மறுத்தல் என்கிற பெண்களின் பாலியல் அமைப்பு சார்ந்த ஹிஸ்டிரியாக்கள் என்று சொல்லலாமா ?அப்படி சொல்வதற்கு முன் ஒருபெண்ணெழுத்தில் முழுமையான பெண்குரல் இருக்குமா என்று யோசிக்கவேண்டும்.ஏனெனில் பெண்ணின் அனுபவங்களை பற்றி பேசும் பெண்ணில் ஆண்குறிமையபடுத்தப்பட்ட ஆண் உடல் மொழியாலே பேசவேண்டியிருக்கிறது. இதையே திருவிழா மனநிலை என்பார் பக்தின்.ஆண்குறி மையபடுத்தப்பட்ட மொழியின் நிபந்தனைக்குட்பட்டு ஆண்தன்மையுடன் மொழிவழி நின்று ஆண் வழி சமூக அமைப்பு பற்றி வினா எழுப்பும் போது சந்தேகமே வருகிறது. .ஜூலியா கிறிஸ்தவா அந்த நாவலை ஹிஸ்டிரியாக்களின் சொல்லாடல் என்று வர்ணிக்க முக்கிய காரணமாக சொல்லும் விசயமே லிங்க மொழியில் நாவல் தொழிற்பட்டிருப்பதுதான்.

பெண்களின் உலகம் துன்பம்,துயரம்நிறைந்தது.மதம்,நிறுவனம்,திருமணம்,

திருமணவாழ்க்கை,வாழ்க்கை சிக்கல்கள் போன்றவை பெண் விருப்பின்றியே நிகழ்கிற விஷயங்கள் என்பன போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பேச்சுகளுக்கிடையே எதார்த்தமாக பாலியல் ஊடாடுகிறது.ஆணின் பாலியல், உடல், அதிகாரம், அமைப்பு சட்டகங்கள் போன்றவை கேள்விகேட்கபடுகிறது என்று பெண்ணின் சார்பாக நாவல் இயங்கினாலும் ஆண்மதிபீடுகள் சார்ந்த ஆண்மைய சிந்தனைகளே பிரதியில் விமர்சனமாக கேட்கிறது.

மைமூனின் மரணம்,பிர்தவ்சின் மரணம் போன்றவை ஆண்மைய சிந்தனைகளின் விளைவுகளாகும்.பல்வேறு விஷயங்கள் ஆணிய மொழியின் இன்னொரு வெளிப்பாடு என்று சொல்வதைவிட நாவலின் மொழி கூட்டு நனவிலி நிலையிலும்,நனவிலி நிலையிலும் தொழிற்பட்டிருக்கிறது என்றுசொல்லலாம். கூட்டு நனவிலி என்பது பாரம்பரிய சக்தியால் உருவாகும் உளவியல் பண்பாகும். இது நம்பிக்கைகள்,கருத்துகள்,தொன்மங்கள்,மூலப்படிவங்களில் படிந்துள்ளன என்பார் சி.ஜி.யுங். கூட்டுநனவிலியில் குறியீடுகள்,படிமங்கள் முதலானவை மொழிவழி உட்காட்சியனுபவமாக படிகிறது.இவ்விதமான உட்காட்சியனுபவங்களே ஆணியமொழியாக விளங்குவதால் இத்தொழிற்படலை நிகழ்த்திய சல்மாவின் நாவலும் கூட்டு நனவிலின் வெலிப்பாடாகிறது.

உளவியலின் அடிப்படையில் மனிதநேயம், அஃறிணை படுத்தல்(dehumanaization), பெண்சார்பு நிலை, தோல்வி,ஆக்கிரமிப்பு தன்மை,இரட்டை வாழ்க்கை (doublestandard),பரிவுணர்வும், ஒத்துணர்வும்(sympathy and empathy),பொறாமை,எதிர்குரல் போன்றவை பெண் உளவியலாகயிருக்கிறது .சல்மா சொல்வது இதுதானா என்று பார்ப்போம். பெண்களின் இருப்பு(existence for others) பிறரை சார்ந்தே சார்பு நிலையில் உள்ளது. கூட்டு அனுபவங்களும் கூட்டு வாழ்வுமிக்க பெண்களுக்கு தனிவிருப்பங்களும், தனித் தேவைகளும் தனித்துவமும் மறுக்கப்படுகிறது.பிறருக்ககவே அவர்களது இருப்பு நிலை உள்ளதாகவும் பிறராலேயே(exitance by others) அவர்களுக்கு இருப்புநிலை உள்ளதாகவும் இருக்கிறது. ழீன் பாக்க்ர் மில்லரின் பெண்களின் உளவியலை நோக்கி என்ற நூலில் சொல்லபடும் விஷயமும் இதுதான்.பாவ்லர் என்பவர் பெண் பெற்றோராலும்,மற்றோராலும் ஆக்கநிலையிருத்தபடுகையில் அவர்கள் ஸ்டாரியோடைப் படிமங்களாகி உயிர்துடிப்பில்லாதவர்களாக தட்டை மனுஷிகளாக உருவாகிவிடுகின்றனர் என்பார். ராபியாவின் தாய் சொஹ்ரா ஆக்கநிலையிருத்தப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாவதை காணலாம்.இதனால் அவளின் உள்ளார்ந்த சக்தி முடக்கப்பட்டு உயிரோட்டமின்றி காணப்படுகிறாள்.

யுங்கின் கூற்றுபடி ஆளுமைகளை பொருத்தவரையில் பெண்களின் தன்மை சற்று வித்தியாசமானது.நாவலில் வரும் பெண்பாத்திரங்களை பார்கிறபோது உதாரணமாக பிர்தவ்ஸ் அகநோக்கு(introverts) கொண்டவளாக இருக்கிறாள்.தனக்கு தானே புலம்புவதும்,நொந்து கொள்வதும் வாழ்வில் வெறுப்பும் ,விரக்தியும்,வேதனையும் கொண்டவர்களாகவே பெரும்பான்மையான பெண்கள் விளங்குவது தற்செயலான நிகழ்வல்ல என்றே படுகிறது. மேலும் புறவயப்பட்ட பெண்களும்(extroverts) காணப்படுகின்றனர்.பாத்திரங்களின் மனபாங்கினை(temperament),மனநிலையினை(attitude),திறனை(aptitude),பற்றார்வங்களை(sentiments) துல்லியமாக காணலாம். சல்மாவின் பெண்கள் உலகம் sentiments உடையவராக புறச்சூழல்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி புறனதிப்புகளை(external values) தம்முடைய ஈகோவில் கட்டமைப்புக்குள் அகவயப்படுத்தி கொண்டுள்ளதால் (introjections) இசுலாமிய வாழ்க்கைக்கு உட்பட்டவராகவே உள்ளனர்.

இனி நாவலி காணப்படும் பெண்களின் சூழல் பற்றி உளவியலடிப்படையில் நோக்கவேண்டியுள்ளது.மனிதர்களின் படிநிலைத்தேவைகள் (Hierarchy of needs) மாஸ்லோ கூறுவார்.அவை:

1) உடலியல் தேவைகள்(Biological Needs)

2) பாதுகாப்பு தேவைகள்(Safety and Security Needs)

3) அன்பு,உடைமை உணர்வு தேவைகள்( Love and belonging needs)

4) தன்மதிப்பு தேவைகள்(Self esteem needs)

5) தன்னையறிதலாகிய தேவைகள்(Self Actualization needs)

இதனடிப்படையில் பார்க்கும் போது சமூக,பொருளாதார,அரசியல் காரணிகளால் பெண்கள் முழுமையான ஆளுமை வளர்ச்சி பெறமுடியவில்லை.மேலும் பெண்களின் இயல்புகளை உளவியல் நோக்கில் பார்க்கும் போது கூட சில உண்மைகள் புலனாகிறது

1) தன் தேவைகளை குடும்பத்திலுள்ள பிறர் தேவைக்காக மாற்றிக்கொண்டு வாழுதல்(Need Transformation)

2) உறவு மோதல் (Inter-personal Conflict)

3) அகமன போராட்டம்(Intera Psychic conflict)

4) மனயிறுக்கம்

5) பயபதற்றம்(Anxiety)

6) மோதல் சூழல்(strategies of defence)

7) மனகட்டுப்பாடு(mental balance)

8) தனித்துவமான உணர்வையிழந்த பண்புடையவர்கள்

காரல் ஹார்னி எனும் பெண் உளவியலாளர் கூற்றுபடி தனித்துவ உணர்வையிழந்த இணக்கமான பண்புடையவர் மக்களை நோக்கி இயங்குவர் என்றும்,ஆக்கிரமிப்பு தன்மை வாய்ந்த தன்முனைப்புள்ள பழிவாங்கும் பண்புடையோர் மக்களுக்கு எதிராக இயங்குவார் என்றும் பற்றற்ற தன்மை வாய்ந்தோர் மக்களை விட்டு விலகி இயங்குவார் என்பது சல்மாவின் நாவலின் பொது செய்தியாகும்.எனவே உளவியல் வாசிப்பில் சல்மாவின் நாவல் தரும் சில உண்மைகளை பார்க்க வேண்டியிருக்கிறது.அதாவது கருத்தியல்கள்,நம்பிக்கைகள் அடிப்படையில் அகவய நிலையில் (Subjective) ஒரு நாவல் பிரதியை அணுக கூடாது என்பது தான்.

அதாவது

இது ஆண்களுக்கு எதிரான நாவல் அல்லது

இது மதத்திற்கு எதிரான நாவல் அல்லது

இது சமூகத்திற்கு எதிரான நாவல் என்பன போன்று.

2) அடுத்ததாக பெண்ணுடலை எழுதுதல் பற்றி பார்ப்போம்.ஹெலன் சிக்ஸி என்பவர் பெண்ணுடலையும், பெண் வித்தியாசங்களையும் மொழியில்,பிரதியில் ஏற்றிக்காட்டுதல் தான் பெண் உடலை எழுதுதல் என்றார்.ஜூலியா கிரிஸ்தவா,லூயிஸ் இரிகாரே, மோனிக் விட்டிங் இந்த ஆய்வை வளர்த்தனர்.

“ நான் தான் பிரபஞ்சத்தின் முழுமையான ,சுயகட்டுப்பாடுடைய மையம் என்ற ஆண் சொல்லுதலை மீறியிருக்கும் உலகத்தோடு மற்றவை என நான் கூறும் உலகம் என்னோடு தொடர்பு கொள்ளுவதால் தான் (ஆண்,தந்தை) அர்த்தம் பெறுகின்றன” என்பன போன்ற லிங்க சொல் மையத்தை(Phallogocentric) சிதைவாக்கம் செய்தனர்.ஆணாதிக்க இருமை எண்ணம் என்பதிற்க்கு பதிலாக பன்முக வேறுபாட்டை ஹெலன் முன் வைத்தார்.

தெரிதாவின் எழுத்து பற்றிய கோட்பாடான வேறுபாடு தள்ளி போடல் என்பதோடு தொடர்புடையது.பெண்மை பிரதிகள் (Feminne Texts) வித்தியாசத்தில் லிங்கசொல்மைய ஆளுமையை தவிற்ப்பதாகவும்,இரட்டை எதிர்மறையின் முடிவை சிதைத்து திறப்புடையதாக இருக்கவேண்டும் என்றார்.இந்த இடத்தில் ஆண் அல்லது பெண் உற்பத்தி செய்த எழுத்தில் ஆழ்ந்துள்ள பால்மைய பெண்மையை வாசிக்கலாம் என்பது முக்கியமானதாகும்.

இங்கு எழுத்தாளர்களின் பாலினம் முக்கியமல்ல.எவ்வித எழுத்து என்பதே முக்கியம்.படைப்பளியின் பாலினத்தையும் அவர் உருவாக்கும் எழுத்தின் பாலினத்தையும் குழப்பிக்கொள்ள கூடாது.பெண்களின் நினைவிலி மனம் ஆண்களது போலின்றி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.அவர்களின் உள பாலியல் தனித்தன்மைதான் அவர்களுக்கு ஆண்மைசார் கருத்துருவங்களை தூக்கியெறியவும் புதிய பெண் சொல்லாடல்களை உருவாக்கவும் ஆற்றல் தருகிறது.

ஆனால் அபெளதிகத்தின்(Metaphysics) பிடியில் தான் நாம் இன்னமும் வாழ்ந்து வருகிறோம்.நிகழ்கால அபெளதிகத்தின் சாயலின்றி புதியகருத்து வரைவுகளை தெரிதாவின் கூற்றை ஏற்கும் இரிகாரே சிதைவாக்கம் என்று சொல்லாமல் நடவடிக்கை என்கிறார்.பெண்மை பற்றிய ஒரு பொதுக்கோட்பாடு

ஒரு அபெளதிகமாகவே முடியும்.பெண் பற்றிய விளக்கம் சாராம்சவாதமாகிவிடும்

ஆபத்தையும் இரிகாரே உணர்ந்தே இருந்தார்.

ஆணாதிக்க தர்க்கத்தை சிதைக்கும் ஒரு வழிதான் போலச்செய்தல் என்பதாகும். பெண்களின் பேரின்பம் என்பதை ஆணின் தர்க்கம் யோசித்தது கிடையாது.ஆணின் இன்பம் என்பது ஒருமுகபட்டதாகவும் லிங்கத்தோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது.பெணின் இன்பம் பன்முகப்பட்டது தான்.மேலும் இரிகாரே பெண்பேச்சு பெண்மொழி பற்றி பேசியுள்ளார்.பெண்கள் தங்களுக்குள் கூடி பேசும் போது பெண்மொழி இயல்பாக உருவாகிறது.ஆணின் வருகையால் அது உடனே மறைந்து விடுகிறது.பெண்ணின் பாலியல் பன்முகப்பட்டதாக இருப்பதால் உருவாகும் பெண்ணின் மொழி கூட பழக்கமான ஆணாதிக்க தர்க்கத்தின் விதிகளுக்குள்ளேயே பன்முகமாக,சுஇன்பஎழுச்சியாக பரந்துபட்டதாக வரையறுக்கமுடியாததாக இருக்கும் என்று அவர் எச்சரித்திருப்பது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருந்தால் அபத்தமாக போய்விடும் என்பதுதான் சல்மாவின் நாவலிலும் நாம் காணகூடியதாக இருக்கிறது.

கிறிஸ்தவா இதுவரையிலான மொழியியல் பற்றிய வரையறைகளை தலைகீழாக்குகிறார்.மொழி என்பது ஒரு ஒழுங்கமைவுயில்லாத சிக்கலான குறிப்பீடாக்கத் தொடர் செயல் ஆகும்.எனவே மொழி ஒருமுகப்பட்டது அல்ல.அது பன்முகப்பட்டது.இப்படி பிரதிக்கோட்பாடை அவர் உருவாக்கிறார்.கிறிஸ்தவாவின் பிரதிக்கொட்பாட்டின் படி சல்மாவின் நாவலை அணுகுவது ஒரு முயற்சிதான்.

1) பாலின வேறுபாடு பார்வையை இனம் காணுதல்:

“இன்ஷா அல்லா இந்த ஆறு நோன்பு பிறையில் நம்ப வஹிதாவுக்கும் சிக்கந்த்ருக்கும் நிக்காஹ் வைக்கலாம்னு இருக்கேன் துஆ செய்யிங்க” என்று சொன்ன நொடியிலேயே றைமாவின் சிவந்தமுகம் கறுத்து சுண்டிப்போயிற்று.

“என்ன சொல்றீங்க நீங்க .. ?” கரீமின் முன்பாக தனது ஆத்திரத்தை முழுவதுமாக காட்ட முடியாத நிலையில் தன் குரலை சற்று உயர்த்தி அழுத்தமாக கேட்டாள் றைமா” (பக்கம் 90) என்று தொடரும் உரையாடலை பாலின வேறுபாட்டின்

தன்மையை காணமுடியும்.

2) பிரதியில் ஆணாதிக்க சொல்லாடலின் களம்:

மேற்சொன்ன உரையாடலே ஆண்மைய சொல்லாடலாக இருந்து ஆணாதிக்கமாக மாறியிருப்பதை காணலாம்.

3) தன்னிலையின் உருவாக்கத்தை இனம் காணுதல்:

மொழியினால் தன்னிலை கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதும் அது ஆணைமையமாக வைத்து உருவாவதையும் காணலாம்.” நீ சும்மா இருலே,வக்காலத்து வாங்க வந்துட்டா என்னா ? ஒரு பொட்டச்சி,இஸ்லாத்துல பொறந்திட்டு இப்படி ஒரு காரியம் பண்ணுறான்னா அதுக்கு எம்புட்டு தைரியம் இருக்கணும் ? நெனைக்கையிலே ஒடம்பு நடுங்குதே.அவ செஞ்ச காரியத்த அப்பிடியா ஆம்பிள சொகம் கேக்கும் ? கர்மம்! துத்தேறி” என்று பெண்ணின் மொழி ஆணிய தன்னிலையின் உருவாக்கத்தை காணமுடிகிறது.

4) மெளனங்களை காணுதல்:

ஆணிய நோக்கு பார்வையால் விளைவது எனில் பெண்ணிய நோக்கு தொடுதலால் விளைவது என்பது லூசி இரிகாரேயின் கருத்தாகும்.பிரதிநிதித்துவத்துக்கு வெளியே நிற்கும் பெண்ணுக்கு விளிம்பு நிலையில் நிற்கும் பெண்ணுக்கு தன்னுடைய உணர்ச்சிகளை வெளியிட அனுமதியில்லை. மெளனமே அவளது மொழியாகும்.இதை இடைவெளி என்று சொல்லலாம்.கல்லுப்பட்டி சம்பவத்தை சொல்லி ஆமினா மகள் பிதவ்சை கொலைச்செய்ய விஷத்தை கொடுத்த போது குற்றவுணர்வு முதன்மை படுத்த படுகிறதேயன்றி ஜமாத்துக்கு எதிரான குரல் காணப்படவில்லை.இந்த மெளனம் தான நாவலில் எங்குமே விரவி இருக்கிறது என்பதை காணமுடியும்.இந்த மெளனமே ஆணாதிக்க ,விதிமீறாத ,ஒழுங்கமைவுக்குட்பட்ட நடவடிக்கையாக இருக்கிறது.மெளனங்களை போல இடைவெளிகளும் அர்த்தங்களை உருவாக்க வல்லதாகவே இருகிறது.

1) புளூபிலிம் கேசட் பார்கிற பெண்கள் சமூகம் சிவாவுடன் பாலியல் உறவு கொள்ளும் பிர்தவ்சை கொல்லதூண்டியது எது ?

2) கிழடுகட்டையெல்லாம் இளசுகளை கேக்கிற போது நாம மட்டும் வாலிப பசங்களை அடையக்கூடாதா ?

3) எல்லா பயலுகளும் எல்லாவளோடும் உறவு வைச்சு இருக்கறப்போ நாம மட்டும் பிறத்தியாருட்டே தொடர்பு வைக்க கூடாதா ?

4) வஹிதாவின் மாமனார் செக்ஸ் கதை சொல்லி ஜொள்ளு வடித்தாலும் வஹிதா ஏன் ” நல்ல” பெண்மணியாக திகழ்ந்தாள் ?

5) சிவாவையும், பிர்தவ்சையும் பார்த்து கோபப்படும் வஹிதாவிடம் உங்கம்மவின் விஷயத்தை சாச்சாவிடம் என்று சொல்ல வைப்பதன் மூலம் யாருமே ஒழுக்கமில்லை சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாரும் அப்பிடிதான் என்று சொல்வதன் அர்த்தம் என்ன ?

மேற்குறிப்பிட்ட கேள்விகள் ஒரு சராசரி வாசகனுக்கு எழுவது இயல்பு.இதை ஒருவேளை பிரதியின் மெளனம் என்று சொல்லலாமா ? நிச்சயமாக முடியாது.ஏனெனில் பிரதியின் இடைவெளி நாவல் கட்டுமானத்தை அசைக்கும் வகையி தான் இருக்கும்.ஆசிரியரின் கையை மீறி அது செயல்படும்.அதை காண தெரிதாவின் உபதர்க்கம் என்கிற ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.நாவல் கட்டமைக்கப் படும் போது புனைவு தர்க்கம் முக்கிய இடம் வகிக்கிறது.ஆனால் இந்த புனைவு தர்க்கம் மொழி வழியாக உருவாகிற போது ஒரு உப தர்க்கம் மெளனமாக அல்லது இடைவெளியில் மறைந்திருக்கும்.அந்த உபத்ர்க்கத்தையே ரோலண்ட் பார்த் இரண்டாவது அர்த்த வரிசை என்றழைத்தார்.மொழி இரண்டு வரிசை அர்த்தம் கொண்டது என்பது அவரது நிலைபாடாகும்.அப்படி பார்கிற போது சல்மாவின் நாவலின் இரண்டாவது வரிசை அர்த்தம் எதை சொல்கிறது. ? என்று பார்கிறபோது இருமைஎதிர்வில் கட்டமைக்க பட்டிருக்கிற முஸ்லிம்,தலித் நிலைபாடாகும்.வீட்டில் வேலைசெய்கிற தலித் பெண்களிலிருந்து,பாத்திமா என்பவள் முருகன் கூட ஓடிப்போகிற எல்லா விஷயங்களும் முஸ்லிம்,தலித் விரோதபோக்கே பிராதனமானதாக இருக்கிறது.முஸ்லிகள் தலித்தை மோசமாக நடத்தினார்கள் என்பதே இரண்டாம் அர்த்தவரிசை கூறும் கதையாகும்.இந்த இடைவெளி மிகவும் ஆபத்தான விஷயமாகும்.நாவலில் இருந்து அதற்கொரு உதாரண்ம்.

“பள்ள முண்ட கல்யாணத்தை முடிச்சுகிட்டு போனாளா ?றைமா அவளருகில் வ்ந்து நின்று உதட்டை கடித்தாள்.”உஸ்..!! கூலியாளுக வீட்டுக்குள்ளே இத்தினி பேர் நடமாடுறப்போ ஜாதியசொல்லி இழிவா பேசாதே” (பக்கம்284)

5) புனைவு மொழியை தகர்த்தல்:

புனைவு மொழியை தகர்த்து அதை புனைவு நீக்கம் அதன் உட்பொருள்

காணல் முக்கியமானதாகும்.இரண்டாம் ஜாமங்களின் கதை என்ற எதார்த்த வகை நாவலை புனைவு நீக்கம் செய்யாமலே அது மதுரை மாவட்ட சில இஸ்லாமிய குடியிருப்புகளை சார்ந்த குடும்பங்களின் கதை என்பது தெளிவாக தெரிகிறது.

6) தொன்மங்களை தகர்த்தல்:

கற்பு,பண்பாடு,ஒழுக்கம் போன்ற விஷயங்கள் பற்றிய தொன்ம கதைகளின் மறு உருவாக்கங்களே இது போன்ற கதைகளின் மூலபிரதி என்பது தெளிவாக தெரிகிறது.பெண் பற்றிய ஆணிய மதிபீடுகளே பொது புத்தியாக இருக்கும் போது பெண்படைப்பளிகளும் அதிலிருந்து தப்பவில்லை என்பது புலனாகிறது.

7) சிதைவாக்கம் செய்தல்:

மொழி என்பது முரண்களாலே அர்த்தத்தை உற்பத்தி செய்கிறது என்பது சசூர் போன்ற மொழியிலாளரின் கருத்தாகும்.கிறிஸ்தவா போன்றோர் ஆண்மைய சொல்லாடல்கள் உற்பத்தி செய்த இருமை எதிர்வுகள் யாவும் தகர்க்கப்படவேண்டும் என்று கூறுவர்.

“ஒனக்கு தெரியாது வஹிதா,போன எடத்துல மொதத்தீட்டு வந்துட்டா,காடு கரையில காத்து கருப்பு அண்டுச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது.”(பக் 473)

இந்த வசனம் சொஹ்ரா எனும் பெண்ணின் மொழியாக வெளிப்பட்டாலும் ஆண் கட்டமைத்திருக்கிற சமூகமொழியின் நீட்சி என்பது புலனாகிறது.நாவலை முழுமையாக சிதைவாக்கம் செய்கிற போது சமூக எதார்த்தம் தான் நாவலின் மையமாக இருக்கிறது.சமூக எதார்த்தம் என்பது இங்கே ஆணின் கருத்துருவாக்கத்துக்கு துணை நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.நாவலின் புனைவு தளமும்,புனைவு தர்க்கமும் போலச்செய்தலின் கட்டமைப்பில் இறுகிப்போன பெண்ணின் இயங்குதளமாக இருக்கிறது.நாவலை சிதைவாக்கம் செய்தபோது கிடைத்த உண்மைகளை தொகுத்து பார்ப்போம்.

1) சிறுபான்மையினரின் சமூக எதார்த்தம் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை

2) பிரதிக்கும் சூழல் அர்த்தத்துக்குமான உறவு சரிவர பேணப்படவில்லை

3) பெண்ணிய உளபகுப்பாய்வு ஒற்றை எதார்த்தத்தையே முன்மொழிகிறது

4) சமூக எதார்த்தத்தை புரிந்து கொள்ள பண்பாட்டுச்சூழல், சமூகசூழல்,

சந்தர்ப்பச்சூழல் முக்கியமானவைகளாகும்.இவைபற்றிய சரியான பிரக்ஞையின்மை

புனைவுகளத்தை சிதைத்துவிட்டது.

5) கதையின் ஆற்றல்மிக்க கூறுகள் ஆணியதர்க்கங்களுக்கு துணைபுரிவதாக இருக்கிறது.

6) கூட்டுநனவிலியின் வெளிப்பாடுகள் பாத்திர செயல்பாடுகளின் வழி நிர்வகிக்கப்படுவதால் அடிக்கருத்துக்கு விரோதமாக அதாவது சமூக எதார்த்தை ஆணியபார்வையில் சொல்லமுயன்றிருப்பது கதையை திரிபுடையதாக மாற்றிவிட்டது.

7) இசுலாமிய ஒழுக்க மறுவுருவாக்கம் நாவல் முன்னிறுத்தும் பிரதான விஷயமாகும்

8) நாவலின் நீளம் வாசகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது.

9) பலவிஷயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் நாவலின் புனைவுதளம் பற்றிய கேள்விகுறி உருவாகிறது.

10) நாவலின் பல பாத்திரங்களும் ரொமாண்டிக் தன்மையுடையதாக இருப்பதால் எதார்த்த வகைக்கு முரண்பட்டுவிடுகிறது.

8) குறியீட்டு மொழியை தகர்த்து குரிமொழியாக்குதல்:

குறியீட்டு முறை ஆணிய மொழி எனும் குறியீட்டு முறையில் அமைவதால்

அம்மொழி தகர்க்கப்பட்டு அவ்விடத்தில் குறிமுறையில் அமைந்த பெண்ணிய மொழி அமைய வேண்டும் என்பது பெண் எழுத்தாளர்களின் நோக்கமாக இருக்குமிடத்து மொழி வலிமைமிக்கதாகிறது.ஆனால் நாவலை பொறுத்தவரையில் குறிமொழி வலுவாகவே இருக்கிறது.

“மரப்பச்சி பொம்மையை ராபியா வைத்திருக்கிறாள்”

9) பன்முக அர்த்தத்தை காணுதல்:

“என்ன தான் அதிசய காய்ச்சலோ,அவசரமுன்னா அதுக்காக ஒரு குடியான வீட்டு ஆம்பிளைக்கிட்டயெல்லாமா உதவி கேக்கிறது ?”

பிரதியின் உரையாடல்களை குறியியல் அச்சுகளாக பாவித்து பிரதியியல் ஆய்வுக்கு உட்படுத்தும் போது உரையாடல் தொடர்பியல் முடிச்சுகள் அவிழ்ந்து நுண் அரசியல் வெளிப்படும்.

10) மறு உற்பத்தி செய்தல்:

பெண்ணை மரபார்ந்த கருத்தாக்கங்களுக்கு தக்கன கட்டமைப்பது தான் மறு உற்பத்தி எனப்படும்.பெண் என்பவள் மனைவியாக,தாயாக, சுயகட்டுப்பாடுமிக்கவளாக மறு உற்பத்தி செய்வது ஆணிய பிரதியின் இலக்கணமாகும்.

“சரிம்மா,நீ அங்கே வேணுமின்னா போக வேணாம்.இங்கேயே இருந்துக்க.மாப்பிள்ளை வந்து,போக இருக்கட்டும்.அவன் இவன் என்றெல்லாம் மரியாதை குறைவா பேசக்கூடாது.உனக்கு தான் பாவம்”(பக் 506)

மேற்சொன்ன பெண்ணிய திறனாய்வு மூலம் சல்மாவின் நாவலை வாசிக்கும் போது இரட்டை பிரக்ஞை இயங்குவதை காணமுடிகிறது.அதாவது பெண்பிரதியாக மாறவேண்டும் என்ர முனைப்பும்,அதேநேரம் மதத்தை மீறமுடியாத சூழலும் காணப்படுகிரது.

சந்தால் சவாப்,சவியேர் காதியே,லூசி இரிகாரே போன்ற பிரஞ்சு பெண்ணியவாதிகள் பெண்ணின் பாலியல் ஆழமான நிலவறைப்போன்றது

அறிந்து கொள்ள முடியாத ஒரு கூறு என்று வாதிடுகின்றனர்.அதை முடிந்தவரை வெளிக்கொண்டு வரவேண்டுமென்று மெடுசாவின் புன்னகை என்ற கட்டுரையில் ஹெலன் சிக்ஸீ கேட்டுக்கொள்கிறார்.

“ உன்னையே நீ எழுது.உன் உடம்பின் குரல்களுக்கு நீ செவிசாய்.அப்பொழுது தான் வகுத்துரைக்கமுடியாத உனது நனவிலி மனத்திலுள்ள மூலவளங்கள் எல்லாம் பொங்கி புறப்பட்டு வரும்….

….உலகத்திற்கெல்லாம் பொதுவான பெண்மனம் என்று ஒன்று கிடையாது.மாறாக பெண்ணின் கற்பனையாற்றல் எல்லையற்றது.வகை

தொகைக்குள் அடங்காதது.அதனாலேயே அழகானது. ….

….நான் பொங்கி வழிந்தோடுகிறேன் என்னுடய ஆசைகள் புதிய ஆசைகளை கண்டுபிடித்திருக்கிறது..எனது உடம்பு இதுவரை கேட்காத பாடல்களை அறிந்து வைத்திருக்கிறது…என்னால் உடைத்து திறந்துவிடப்பட்ட ஒளிவெள்ளத்தின் ஓட்டத்தை நான் முழுமையாக உணர்கிறேன்..இந்த ஒலிவெள்ளம் வெட்கங்கெட்ட அதிர்ஷ்டம் என்ற பேரில் சட்டம் போட்டு சந்தையில் விலைப்போய் கொண்டிருக்கும் எந்த ஒரு வடிவத்தை விடவும் அழகான வடிவங்களில் நிறைந்து வெளிப்படுகிறது….” -The laugh of Medusa

496 பக்கங்கள்,66 அத்தியாயங்கள் என்ற ஒரு பெரிய நாவலுடன் களதில் வந்திருக்கும் சல்மாவுக்கு முன் மாபெரும் அலையடித்துக்கொண்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.மலையாளத்தில் சுகறா முடித்த இடமும்,கன்னட மொழியில் சாராஅபுபக்கரும்,தெலுங்குமொழியில்,உருதுவில்,கஷ்மீரியில்,பங்களா மொழியில்,அஸ்ஸாமியில்,சிந்தியில்,என்று இந்திய மொழிகளிலும்,அரபு மொழியில் தாஹா ஹுசைன்,ஹனன் அல் சஹ்கியா, பத்வா துஹ்கான்,நவால் சாதவி,ஜைனப்,ஹையாதி,பாத்திமாமெர்னீசி(மொராக்கோ),சாதியாசைக்

(தென்ஆப்ரிக்கா), ஹிதாயத் ச்துக்சால் (துருக்கி), பாத்ஹசன் (சவுதிஅரேபியா), ஹிமானத்(மலேசியா)ஆமினா வ்ஹ்தூத் (இந்தொனேஷியா)ஹாலிக் அப்சர், ஸிபாமிர்கோசினி,ஹைதா மொஹிசி,ஹாமத் சாஹிதன்(ஈரான்),போன்றோர்களும் 55 நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களும் தொடர்ந்த பாதையில்லல்லாமல் வேறு அல்ல என்பது சல்மா தெரிந்து கொள்ளவேண்டும்.

“It is impossible to define feminine practice of writing,and this is an impossibility that will remain,for this practice will never be theorized enclosed,enooded which doesn ‘t mean that it doesn ‘t exist.”

Helene cixous

(The laugh of the medusa)

எச்.முஜீப் ரஹ்மான்

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்