வெங்கட் சாமிநாதன்
சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகிய சிங்கர் தொலை பேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச் சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா – கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின் போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை இரவர் கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), “யார் அவர்?” என்று விசாரித்தேன். “யோவ், சி.மணிய்யா அது!” என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்பு போன்ற உருவகக் காட்சியோ என்று தோன்றுகிறது. உருவகத்தின் ஒரே ஒரு விவரம் தான் மாறுகிறது. நான் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரைந்தேன். இன்று தமிழ் நாடு அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியம் கொண்டதல்ல. சி. மணிதான் தன்னை இன்றைய தமிழ்க் கவிதையின் ஒரு புது அத்தியாயத் தொடக்கத்தில் பங்கு கொண்ட கவிஞர் என்று தன்னை தமிழுக்கு நினைவுபடுத்தவேண்டும். தமிழ் இலக்கிய உலகம் கேட்குமோ கேட்காதோ எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.
நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம், அவர் யார் என்று எனக்குச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் என் நினைவில் சுமார் முப்பது முப்பதைந்து வருடங்களுக்கு இடையில் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத காரணம் தான். எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில் ஒரு நாள் நான் சென்னையில் விடுமுறையில் வந்திருந்த போது ந.முத்து சாமி தான் கடற்கரைக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு சி.மணி, வி.து.ஸ்ரீனிவாசன், இன்னும் ஒரு சேலத்துக் காரர், பெயர் மறந்து விட்டது, எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் எல்லோரும் சென்னையில் கல்லூரித் தோழர்கள் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் ஒரு சின்ன நண்பர்கள் கூட்டம் எழுத்துக்கு ஒருமுகமாக அறிமுகமானது. அவர்கள் எல்லோரிலும் சி.மணி தான் ஒரு ராஜ தோரணையும், நெடிய உருவமும் கொண்டு தனித்துத் தெரிந்தார். அன்று astral bodies பற்றி முதன் முறையாக அவர் பேசக் கேட்டேன். இலக்கியம் பற்றியோ, கவிதை பற்றியோ பேசவில்லை. வி.,து. ஸ்ரீனிவாசனும் நிறையப் படித்தவராகத் தோன்றியது. ஸ்ரீனிவாசன் தத்துவ உலகில் சஞ்சாரம் செய்தார்.
சி.மணியைப் பார்த்த போது அவரை நான் எழுத்து பத்திfரிகையில் அவர் எழுதியிருந்த நீண்ட நரகம் கவிதையில்
கால் பட்ட மணலிலும்
கண்பட்ட மனதிலும்
பல சுவடு பதித்து,
பதித்த நிலை தெரியாது
குதித்தோடும் ஒரு கும்பல்;
அதைத்தொடரும் மற்றொன்று
இன்னல் தனித்தே வராதா?
என்று எழுதக்கூடும் ஒருவரைப் பார்த்தேனே ஒழிய
கலைந்த மழையுள, மறைந்த பூவுள
தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள
ஒலித்த வளையுள, ஓய்ந்த விரலுள
சரிந்த தலைப்பால் தெரிந்த மலருள,
என்று எழுதியிருந்த, அதை சாத்தியமாக்கும் ஆழ்ந்த, பரந்த தமிழ்ப் பாண்டித்யமும் அதை நினைத்த கணத்தில் எடுத்தாளும் திறனும் கொண்ட ஒரு தமிழ் பண்டிதத் தோற்றத்தை நான் காணவில்லை.
மிகுந்த தோழமையோடும் பழகினார். ஒரு சில மணிநேரங்கள் தான். பின் அவரை நேரில் பார்க்கவில்லை. நடை பத்திரிகையில் எங்கள் நெருக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த கலிங்கத்துப் பரணியில் ஒரு பகுதிப் பாடல்களை (கடைதிறப்பு – மிக சுவாஸ்ய்மான பகுதி) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்ததைப் பார்த்தேன். கைப் பிரதியில் தான். எனக்குத் தெரிந்து அவை எங்கும் பிரசுரமாகவில்லை.
சி.மணி ஆங்கில இலக்கியத்தில் தான் பட்டம் பெற்றவர் என்று நினைக்கிறேன். ஒரு வேளை தமிழிலும் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் எழுத்து பத்திரிகையில் அதன் தொடக்க வருடத்திலிருந்தே எழுதிய கவிதைகள், மரபும், மரபு மீறலும், அம்மீறலில் தனக்கென ஒரு தனித் தடமும், கொண்டவராக, அதிலும் இவை கவிதை, தமிழ், யாப்பு என்ற வட்டத்துக்குள் சிறைப்பட்டு விடாது, ஒரு பரந்த உலகையும், பல துறைகளையும் ஒன்றிணைத்த பார்வையை, எள்ளலும், சமூக விமர்சனமும், ஒரு இளைஞனின் தான் அன்னியப்பட்டுவிட்ட நிலையில் தந்திருப்பது ஒரு புதிய வருகையை, தமிழுக்கு வந்துள்ள வளத்தைக் கொண்டாடுவது தான். பல விஷயங்களில் பழமைப் பிடிப்பும் பிடிவாதமும் கொண்ட செல்லப்ப அந்த நாடகளில் சி.மணியின் புதிய பார்வையையும் குரலையும் இனங்கண்டு கொண்டாடி ஆர்ப்பரித்தது அப்போது மட்டுமல்ல, இப்போதும் நினத்துப் பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சி.மணியின் பார்வையும் எழுத்தும் கஷ்டப்பட்டு யோசித்து வலிந்து பெற்ற ஒன்றல்ல. அது தாமாக சட்டென வெளிப்படுவது. சென்னை பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்ததும், கூடியிருக்கும் கூட்டம் பஸ்ஸில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் காட்சியைக் கண்டு இதை எதற்கு ஒப்பிடலாம், பழம் இலக்கியத்தில் தான் பண்டிதன் என்று காட்டிக்கொள்ள எந்த வரியை எடுத்தாளலாம் என்று யோசிக்கும் காரியமில்லை. “யோவ் பொம்பிளைங்கள ஏறவிடுய்யா முதல்லே” என்று ஆரம்பித்துத் தொடரும் கூச்சலையும் முண்டியடித்து ஏறும் காட்சியையும் பார்த்த உடனேயே சி.மணி உதட்டில் நகையேற,
சேவலே முன்னென்போரும், இல்லை
பெடையே முன்னென்போரும், இல்லை,
வரிசையே நன்றென்போரும், ஏறுவோரும்
தேர்ந்ததே தேரினல்லால், யாவரே
தெரியக்கண்டார்.
என்று மனதுக்குள் வரிகள் ஓடிக்கொண்டிருக்கும்.
நரகம், வரும் போகும் போன்ற நீண்ட கவிதைகளில் வரும் இன்றைய நடப்புலக நகரக் காட்சிகள், பழந்தமிழ் இலக்கியத்தில் பரிச்சமுள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது மதுரைக் காஞ்சியில் வரும் நகரக் காட்சிகள். அதிலும் ஆடவர்கள் கவனத்தைக் கவர கணிகையர் தம்மை வண்ணக் கோலங்களில் அலங்கரித்து வரும் இரவு நகரக் காட்சியும் அடக்கம். ரோமானினர்களும், கிரேக்கர்களும் தம் நாட்டு உடைகளில் உலாவருகிறார்கள். நகரம் என்றால் எல்லாம் தான் அதில் அடக்கம்.
பழந்தமிழ் பா வரிகளை அப்படியே கையாண்டுள்ளதை நான் பாரதி தாசனில் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தமிழாசிரியர் தானே. ஆனால் அவர் அந்த வரிகள் வசதியாகச் சேர்ந்தவை. அதற்கு மேல் அதற்கு மாறிய, வேறுபட்ட பயனோ, அர்த்தமோ இருந்ததில்லை. ஆனால் சி.மணி அந்த வரிகளை அப்படியே கையாள்வதில்லை. பழம் இலக்கிய வரிகள என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு அதை மாற்றி, இன்றைய சமூகத்தின் நடப்புகளைக் கிண்டலோடு விமரிசிக்கும் பொருளில் கையாள்கிறார். அது வெறும் கிண்டல் இல்லை. சமூக விமர்சன்மும் பொதிந்தது. ஒரு ஜென் ஞானியின் பார்வையும், திருமூலரின் எளிமைத் தோற்றம் கொண்ட ஆழமும், முரணே போன்ற உண்மையும், கொண்ட தத்துவ விசாரமும் அடங்கியிருக்கும். முதல் கவிதையே
முற்றிய வித்து
பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்(1959).
தோற்ற முரண் கொண்ட உண்மை.
இந்த விசாரம் கடைசி வரை தொடர்கிறது.
சிந்திப்பதற்கு மிகச் சிறந்த முறை எது என்றால்
சிந்திகாமல் இருந்து விடுவது தான். (1994)
இரண்டு மே ஏதோ ஒரு epigram மாதிரித் தோன்றினாலும் முன்னது இரண்டு வரிகளிலேயே கவிதையாகியுள்ளது. பின்னது ஒரு கவிதையின் தொடக்க வரியாகக் கொள்ளாமல், இரண்டு வரிகளினுடனேயே நின்று விட்டால் epigram- ஆக நின்று விடுகிறது.
எழுத்துக்கு இப்படி ஒரு கவிதைக் குரல் கிடைத்ததில் செல்லப்பாவுக்கு சந்தோஷமே. அதைக் கொண்டாடவும் செய்தார். சி.மணிக்கு தன் கவித்வ வெளிப்பாட்டிற்கு ஒரு மேடை கிடைத்தது பற்றி சந்தோஷமே. ஆனால் எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையின் பிரயாணம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மரபை வரித்துக்கொண்டோரிடமிருந்து எதிர்ப்பு. தாம் புரட்சிக்காரர்களாக்கும் என்று கோஷமிடுவோரிடமிருந்தும் எதிர்ப்பு. அத்தோடு இவ்விரு சாராரையும் சேராத, செல்லப்பா போல புதுமை இலக்கியக்காரர்களிடமிருந்தும் எதிர்ப்பு. எல்லா எதிர்ப்பும் கிண்டலோடுதான். அதெல்லாம் பழைய கதை. இப்போது ஜஸ்டீஸ் பார்ட்டிக்காரர்களும், செஞ்சட்டை வீரர்களும், திராவிட கழகங்களும் அவர்களுக்கு அன்று வெறும் காந்தியாக இருந்தவரை, அண்ணல் காந்தியாக்கி அவர் சிலைக்கு மாலை அணிவிப்பது போல, இப்போது எல்லோரும் புதுக்கவிதைக் காரர்கள் தாம். ஆனால், சி.மணி எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த எதிர் வினை தான் தமிழ் இலக்கிய உலகத்தின் குணங்களில் குறிப்பிடத்தக்க விசேஷமான ஒன்று.
க.நா.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் வந்த எதையும் அங்கீகரிக்கத் தயாராயில்லை. “ட்.எஸ். இலியட் செய்ததைத் திரும்பச் செயவதில் என்ன இருக்கு?” என்றார். காரணம் எழுத்து பத்திரிகையின் மீதும் செல்லப்பா மீதும் இருந்த பகைமை உணர்ச்சி. எழுத்து கடை மூடிய பிறகு வெகு காலம் கழிந்த பின்னர் அவர் எழுத்து வையும் செல்லப்பாவையும் பாராட்டி எழுதியவர் தான். க.நா.சுவுக்கு என ஒரு தனி சிஷ்ய கோடிகள் இருந்தார்கள். அவர்களும் அவர் வழியொட்டி சி.மணியைக் கண்டு கொள்ளவில்லை. ஷண்முக சுப்பையாவைக் கொண்டாடியவர்கள் சி.மணியைக் கண்டு கொள்ளாத வேடிக்கை எங்கு நடக்கும்? தமிழ் நாட்டில். மெத்தப் படித்தவர்களுக்கு டி.எஸ் இலியட்டின் Waste land-ஐ பிரதி செய்ததாகச் சொல்வது தம்மை உயர்த்திக்கொண்டதாகவும் இருக்கும், தாம் காணச் சகிக்காத சி.மணியை மட்டம் தட்டியதாகவும் இருக்கும் என்ற எண்ணம். அவர்கள் மெத்தப் படித்தவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வெறும் உத்தியையும் ஒரு உத்தி தந்த சிருஷ்டியையும் குழ்ப்பிக்கொள்பவர்கள். தம்மில் குழ்ப்பம் இல்லாவிட்டாலும் குழ்ப்பம் இருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தவர்கள். இந்திய மொழிகள் பலவற்றில் waste land-ன் பாதிப்பைக் காணலாம் என்று பார்தீய சாஹிக்தயவின் ஆசிரியர் என்னிடம் சொன்னார். எனக்குத் தெரிந்து மலையாளத்தில் அய்யப் பணிக்கர் இருக்கவே இருக்கிறார். இதில்லாம் தெரியாதென்று இல்லை. வேண்டுமென்றே புரளி செய்பவர்களை என்ன செய்யமுடியும்?. சி.மணியின் நரகம் சொல்வதை டி.எஸ் இலியட்டும் சொல்லவில்லை. அய்யப்ப பணிக்கரும் சொல்லவில்லை.
எழுத்து பத்திரிகை தன் கவிதையை நிராகரித்தது என்ற காரணத்தால், சி.மணி மட்டுமல்ல, தர்மூ சிவராமூ, சுந்தர ராமசாமி என்று சகட்டு மேனிக்கு எல்லோரையுமே நிராகரித்தவர்களும் உண்டு. சி.மணி நடை பத்திரிகையில் வே.மாலி என்று இன்னொரு புனை பெயரில் எழுதிய கவிதைகளைக் கண்டு ஆர்ப்பரிப்பதில் க.நா.சு.வுக்கு தயக்கமிருக்கவில்லை. வே.மாலி என்று எழுதுவது சுந்தர ராமசாமி என்று அவர் நினைத்தார். நான் அவரிடம் இது அவர் நிராகரிக்கும் சி.மணி என்று சொல்லவில்லை. அவருக்கு விஷயம் தெரியாது என்றில்லை. செல்லப்பாவை வெளிப்படையாக அங்கீகரிகக் கூடாது என்ற ஒரு தீர்மானம். அதில் இரையானது சி.மணி. 1964-65-ல் தில்லியில் என்னுடனான நேர்பேச்சில் அவர் சொன்னது, “எழுத்து மூலம் செல்லப்பா வெளிக்கொணர்ந்த இரண்டு முக்கிய பெயர்கள்: ஒன்று தருமூ சிவராமூ, இரண்டு வெ. சாமிநாதன்:” மற்றொரு சமயம், “செல்லப்பா எதைப் பற்றி எழுதினாலும், அதை நான் கட்டாயம் பார்த்தாகணும். நான் அவரிடமிருந்து அதில் புதிதாகத் தெரிந்து கொள்ள ஏதும் இருக்கும்” ஆனால் இதையெல்லாம் அவர் எழுதியதில்லை. க.நா.சு போலத்தான் அன்று சி.மணியெல்லாம் ஒரு கவிஞரா என்று எழுதியவர்களும். எழுபதுகளில் பிரக்ஞை, தாமரை போன்ற இதழ்களில் ஒரு campaign- என்றே அதைச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு காட்டமான தொடர்ந்த எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.
·ப்ராய்டிய மனப் பிறழ்ச்சி, அந்நியமாதல், எக்ஸிஸ்டன்ஸியலிஸம்,, இதெல்லாம் முதலாளித்வ சமூகத்தின் சீ£ர் கேடுகள்” என்று சோவியத் துண்டுப் பிரசுர பொது உடமைத் தத்துவ நோக்கில் நா.வானமாமலை எழுதலானார். இது முன் தீர்மானிக்கப்பட்ட கட்சிப் பார்வை. நா.வானமாமலை ரொமப விஸ்வாசமான கட்சிக் காரர். மற்றக் கட்சிக்காரர்கள் போல இலக்கியம் இன்னும் மற்ற சமாச்சாரங்கள் பற்றி ஏதும் தானே அறிந்து கொள்ளாதவர். மேலும் சி.மணியின் கவிதைகளில் பாலியல் ரொமபவும் பச்சையாகப் பேசப்படுகிறது என்று வேறு குற்றம் சாட்டியிருந்தார். வேறு எதற்கும் யாருக்கும் பதில் சொல்லாத சி.மணி பழம் இலக்கியங்களில் பேசப்பட்டிருக்கிறதே ஐயா, நான் அவ்வளவு தூரம் போகவில்லையே என்று பதில் சொல்லியிருந்தார். நா. வானமாமலை, இலக்கியத்தில் கொள்ளப்பட வேண்டுவதும், கொள்ள வேண்டாததும் எல்லாம் தான் இருக்கும். கூளப்ப நாயக்கன் காதலும் இருக்கிறது. விறலி விடு தூதும் இருக்கிறது. அதையெல்லாம் ஒதுக்க வேண்டும்”. என்றார்., ஆண்டாளும் கம்பனும், குறுந்தொகை இன்னும் மற்ற அகப் பாடல்களும் இருக்கின்றனவே, அவற்றையும் ஒதுக்கிவிடலாமா? என்று சி.மணி கேட்டிருக்கலாம். அவர் கேட்கவில்லை என்று தான் நினைக்கிறேன். அவருக்கு இந்த வாதங்கள் புரிவதில் நம்பிக்கை இல்லை. நீ எழுதுவதெல்லாம் கவிதையா என்று கேட்டவர்களுக்கே பதில் எழுதவில்லை. க.நாசு.வுக்கு அவர் பதில் சொன்னதில்லை.
அவரது இயல்பு அது. ஆனால், எழுத்திலும் நடையிலும் மற்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும் தன் காலத்தில் எழுதிய மற்ற புதுக்கவிஞர்கள் ஆரவார வரவேற்பு பெற்ற இடங்களில் கூட சி.மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. Personal rivalry என்ற தளத்தில் மற்ற கவிஞர்களிடமிருந்தும், கண்டு கொள்ளாமல் ஒதுக்குவது என்ற வகையில் இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து வரும் எதிர்ப்பு இலக்கிய தளத்தில் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. இது அந்த ஆரம்ப கால நோய்க்கூறுகளில் ஒன்று என்று தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட, அவர்கள் தமக்குள் தாம் தான் பெரியவன் என்ற மிதப்பில் மிதந்தவர்கள் ஒருவரை ஒருவர் நிராகரித்துக் கொண்டார்கள். அது போல் தானே சி.மணிக்கும் நேர்ந்தது என்று கேட்டால், இவர்கள் அனைவரும் ஒன்று போல சி.மணியை நிராகரித்தார்கள் என்பதுதான் வேடிக்கை. பின்னர் அந்த ஆரம்பக் கால காட்டம் எல்லாம் மறைந்த பிறகு அன்று எதிர்த்தவர்களே சி.மணியைப் பாராட்டவும் செய்தார்கள். தம் மனதுக்குள் தம் அந்நாளைய எதிர்ப்பை எண்ணி வருந்திய்மிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், எனக்குத் தெரிந்து வேறு சில எதிர்ப்புக்களுக்கு அவர்கள் வருந்தியது எனக்குத் தெரியும்.
தமிழ் இலக்கியம் அறிந்த எந்த யாப்பின் வகைப்பட்டதும் அல்ல இது என்ற பண்டித கண்டனத்திற்கு மாத்திரம் அவர் விரிவாக ‘செல்வம்’ என்ற பெயரில் பதில் தந்தார். அது அவசியமா என்ன? அதை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதன் காரண்மாக இதென்ன யாப்பு வகை? என்ற கேள்வியையும அவர்கள் அன்று நிறுத்தவும் இல்லை. காலவோட்டத்தில் அந்த்க் கேள்வி தானாகவே மறைந்தும் விட்டது. ·ப்ராய்டிஸ் மனப் பிறழ்ச்சி, முதலாளித்வத்தின் சீரழிவு போன்ற கண்டனக் குரல்களும் மறைந்து விட்டன.
ஆனால் நம் இருப்பின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால் தான் தமிழ் உலகம் நாமும் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்ளும். நாம் அமைதியாக இருந்துவிட்டால், நாம் ஒரு காலத்தில் இருந்த தடையமும் மறைந்து விடும். சத்தமிட்டுக் கேட்கும் குரல்களின் குணம் என்ன தரம் என்ன என்ற கேள்விகளை தமிழ் உலகம் கேட்பதில்லை. சத்தமே தரம், ச்த்தமே குணம் அதற்கு. இப்படித் தான் சார்வாகன் என்ற கவிஞரும் மறக்கப்பட்டு விட்டார். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். நான் இருக்கிறேன் என்ற சத்தம் அவர்களுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
தமிழ் இலக்கிய உலகம் சி.மணியை அங்கீகரிக்கவில்லை. அவரைக் கண்டுகொண்டது அமெரிக்கா வாழ் தமிழ்ர்கள் அளித்த விளக்கு விருது. தமிழ் நாடு எல்லை தாண்டி கேரளம் தந்த குமரன் ஆசான் பரிசு. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று நாம் சற்று யோசித்தால் நல்லது.
எழுத்து நின்றபிறகு, சி.மணி அதிகம் எழுதியவரில்லை. கணையாழி பத்திரிகையில் அவ்வப்போது சிறு கவிதைகள் எழுதி வந்திருக்கிறார். ஆனால் அறுபதுகளின் மணி அல்ல அவர். எழுபதுக்களுக்குப் பின் அதுவும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கிவிட்டது.
ஆனால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு இருந்த கார்லோஸ் காஸ்டனாடா, குர்ஜீ·ப், ஜென், ஈடுபாடுகளில் அவர் மன்ம் முழுதுமாகத் தோய்ந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். சில வருஷங்களுக்கு முன் வெளிவந்த தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு புத்தகம் அவரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான கொடை. மொழிபெயர்ப்புத் தான். சீன மொழியிலிருந்து ஒரு சீனரே ஆங்கிலத்தில் தந்துள்ள பிரதியிலிருந்து பெற்ற தமிழ் மொழி பெயர்ப்பு இது. சி.மணிக்கு இமாதிரியான விசாரணகளில் உள்ள ஈடுபாடு, கவித்வ மனம், மொழி வல்லமை எல்லாம் இம்மொழிபெயர்ப்பில் சாட்சியம் பெறுகின்றன.
வாசலைத் தாண்டிப் போகாமலே
உலகம் அனைத்தையும்
ஒரு மனிதன் தெரிந்து கொள்ள முடியும்
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காமலே
வானத்துத் தாவோவை
ஒரு மனிதன் பார்க்க முடியும்
அதிகம் பயணிக்கும் ஒருவன்
மிகவும் குறைவாகவே தெரிந்து கொள்கிறான்.
ஆரம்பத்தில், 1959 வெளிவந்த அவர் முதல் எழுத்திலிருந்தே இத்தகைய விசாரணைகளோடு தான் அவர் பயணம் தொடங்கியதை திரும்ப நினைவுக்குக் கொள்ளலாம். பயணத்தின் முடிவிலும் அதே முரண்பட்ட உண்மைகளை அடந்திருப்பது பயணத்தின் தொடக்கமா, முடிவா, பயணம் தானா என்று சிலருக்குக் கேள்விகள் எழும். இன்னொரு கவிதை சி.மணியினது
ஒரு உண்மை தேடி நச்சரித்தான்:
ஓ குருவே
இறப்புக்குப் பிறகு என்ன?
குரு சொன்னார், பார்வையில் குறும்புடன்,
ஓ அதுவா,
பிறப்புக்குப் பிறகு என்ன?
70-க்களிலிருந்து அவர் அறுபதுக்களில் தெரியவந்த சி.மணியாக இல்லையே என்று எனக்கு வருத்தம் ஒரு பக்கம். அவரது கவித்திறனின் முழு வியாபகத்தை அவரது நீண்ட கவிதைகளில் தான் காண்கிறோம். புதுக்கவிதை தோற்றத்திற்குப் பிறகு நீண்ட கவிதைகளை யாரும் எழுதுவதில்லை. வெற்றிகரமாக அதைச் சாதித்தவர் சி.மணி தான். அவரது கவித்வ வாழ்வு கடைசி வரை ஏதோ வகையில் தொடர்ந்தது தான். தாவோ தேஜிங் சாட்சியப்படுத்துவது போல். ஆனால் அறுபதுகளில் அவரது கவித்வம் கண்ட வீச்சு காணப்படவில்லை. இதற்கு காரணம் சி.மணியின் ஆளுமை இயல்பா அல்லது தமிழ் இலக்கிய உலகின் குணவிசேஷங்களா? எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு கவிஞனை மூச்சடைக்கச் செய்துவிட்டோமோ என்று. இயல்பான பயணம் அல்ல இது. தடைக்கற்களை பாதை எங்கும் கொட்டி விட்ட பயணம்.
இலக்கிய பயணத்தில் மாத்திரம் இல்லை. தொடக்கத்தில் நெருங்கியிருந்த நண்பர்கள் கூட கால கதியில் ஒவ்வொருவராக விலகி தூரச் சென்று விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். இனி சி.மணியால் என்ன பயன் என்றோ என்னவோ? சி.மணியின் முதல் கவிதைத் தொகுப்பை (அவரது மூன்று நீண்ட கவிதைகளையும் கொண்ட – வரும் போகும்) எழுபதுகளில் வெளியிட்ட க்ரியா ராமகிருஷ்ணன் தான் சி.மணியின் முமுக் கவிதைத் தொகுப்பையும் (இது வரை) பின் தாவோ ஜிங் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு இன்னும் பல தளங்களில் அவரது ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டவர். அவருக்கு ஆரம்பத்திலிருந்து நட்பும் ஆதரவும் தந்தவர் எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணன் மாத்திரம் தான். தனித்து விடப்பட்டிருந்த சி.மணிக்கு இந்த நட்பு இதம் தந்திருக்கும்.
17.4.09
- இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)
- கொழுக்கட்டைக் கள்வர்கள்
- சங்கச் சுரங்கம் – 11: எழு கலத்து ஏந்தி . .
- பெண்ணலம் பேசுதல் காண்மின்
- கணித மேதை ராமானுஜன்(1887-1920)
- நினைவுகளின் தடத்தில் – (30)
- வாழுமிடத்தில் வாழ்ந்தால்
- வேத வனம் விருட்சம் 32
- இத்தனையும்…
- தமிழில் பேசுவோம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << கவிஞன் யார் ? >> கவிதை -6 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -33 << எல்லைக்குள் காதல் >>
- நினைவடுக்கில்…
- இனி ஒரு ஓவியம்
- மாணவர்கள் ஆளுமை பயிற்சி முகாம்
- அருவருப்பின் முகம்
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !(ஏப்ரல் 26, 1986)
- கவிதை இதழ்
- கிளாமிடான்
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
- பெண்ணின் பெருந்தக்க
- புத்தகங்களை நேசிப்போம்
- இருட்டு எதிர்காலம்
- Mutterpass முட்டர்பாஸ்
- ஒரு காலை,ஒரு நிகழ்வு
- நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திரெண்டு
- என்றும் பதினாறு! – குறுங்கதை
- தோப்பு