இன்று நாமும் குழந்தையும்

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

அனந்த்


அன்று பயின்றவோர் வழக்கமுண்டு – பணம்
…அப்பன் கையில்தான் புழக்கமுண்டு – தினம்

நன்றாய் உழைத்துடல் தளர்வதனால் – பிள்ளை
…குன்றாய் அழகுற வளர்வதனை – அவன்

என்றோ ஒருநாள் பார்க்கையிலே – அது
… இன்பத் தேனை வார்க்கையிலே – ‘நான்

வென்றேன்! ‘ எனவே மகிழ்ந்திடுவான் – மிக
… விரும்பி மனைவியைப் புகழ்ந்திடுவான் (1)

அந்த நாளெலாம் போயாச்சு – இனி
… அன்னையும் தந்தையென் றாயாச்சு – தன்

சொந்த அலுவலில் மிகமுயன்று – தனிச்
… சுதந்திர வாழ்க்கையைத் தான்பயின்று – வீடு

வந்தால் ஆயாள் வளர்த்துவரும் – பிள்ளை
… வடிவில் நெஞ்சினில் கிளர்ந்துவரும்

பந்தப் பிணைப்பினைத் தானுணர்வாள் – தாயின்
… பரிவினைக் கொள்ளையாய்த் தான்கொணர்வாள் (2)

பிள்ளைகள் கேட்பது அன்பலவோ – அது
… பெற்றவர் தரவரும் தெம்பலவோ ? – ஒரு

எள்ளள வாகிலும் அதுகுறைந்தால்- பணி
… ஏற்றதில் மெள்ளவே அதுமறைந்தால் -நாம்

கள்ளத் தந்தையர் தாயாவோம் – இல்லம்
… காத்திடும் வெறும்பணப் பேயாவோம் – எனவே

வள்ளுவன் முதலாய்ப் புவியிதனில் – பலர்
… வடித்தநல் வாக்கினைச் செவிமடுப்போம்! (3)

ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்