இன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

வெங்கட் சாமிநாதன்


கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழங்கால நினைவுகளில ஆழ்ந்து போகிறேன். முதல் காரணம் அண்ணா கண்ணன் அயராது, சளைக்காது தூண்டிக்கொண்டிருந்தது. மனுஷன் காரியம் நடக்கும் வரை விடுவதில்லை. என் நினைவுகளை வாரா வாரம் கொஞ்சம் கொஞசமாக பதிய ஆரம்பித்துள்ளது. என் நினைவுகள் என்று சொல்லும்போதே என்னைச் சுற்றி நிகழ்ந்தவை, நான் அறிந்தவை என்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது. அது கடந்து விட்ட காலம். இன்றைய தலைமுறையோ, அல்லது அதற்கு முந்தைய தலைமுறையோ, ‘அப்படீங்களா, எங்க தாத்தா கூட சொல்லிக் கிட்டிருப்பாருங்க” என்று தான் அதிகம் அது பற்றித் தெரிந்திருக்கக்கூடும் சமாச்சாரங்கள். அது ஒன்று.

எழுதும்போது, மற்றவையெல்லாம் திரும்பக் கிடைக்காதவை. ஆனால் அன்று பார்த்த தமிழ் சினிமாப் படங்கள், பாட்டியின் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு தியேட்டருக்குள் சென்று பார்த்தவை, அவை சரித்திர உணர்வுள்ள ஒரு சமூகத்தில் திரும்பக் கிடைக்கக் கூடியவை தான். கிடைக்குமா, கிடைத்தால் எவ்வளவு நன்றாக் இருக்கும் என்று ஆசைக் கனவுகள் உடன் வந்து கொண்டே இருக்கும். இருபது வருடங்களுக்கு முன், தில்லியில் மாவ்லங்கர் தியேட்டரில் அம்பிகாபதி பார்க்கக் கிடைத்தது. தியாகராஜ பாகவதர் நடித்தது. தியாக ராஜ பாகவதர் என்றாலே இனிமையான குரலில் நல்ல பாட்டுக்கள் கேட்கலாம். வேறு என்ன கிடைக்கிறதோ இல்லையோ. அந்த காலத்து சூப்பர் ஸ்டார். அவர் எங்கிருந்தாலும், தமிழ்நாட்டுப் பெண்கள் கனவில் அவர் கட்டாயம் வந்து மறைவார். அந்தக் காலத்தில் ரயிலில் தானே பயணம் செய்யவேண்டும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெண்கள் அவரைப் பார்க்கக் கூடிவிடுவார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சென்னை ப்ராட்வே தியேட்டரில் மூன்று வருடங்கள் தொடர்ந்து அவர் கைதாவதற்கு முன் நடித்து வெளியான ஹரிதாஸ் படம் ஓடியதாகச் சொல்வார்கள். இப்போது 25 வாரங்கள் ஓடினால் மகத்தான் வெற்றி தான். இவ்வளவுக்கும் அவர் நடித்தது மொத்தமே 12 படங்களில் தான். இந்தக் காலத்தில் எந்த சினிமா நடிகரோ நடிகையோ தான் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கையை 300-க்குக் குறைவாக யாரும் சொல்வதில்லை. ஆக தியாக ராஜ பாகவதர் நடித்த படம், அம்பிகாபதி. என்றதும் என் உற்சாகத்தைச் சொல்லி முடியாது. எவ்வளவு வருஷங்களுக்குப் பிறகு பார்க்கப்போகிறேன், தியாகராஜ பாகவதர் படம் பார்க்கப் போகிறேன். கடைசியாக பார்த்தது எப்போது? யோசிக்க வேண்டியிருக்கும். 1943-க்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளி. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அவர் நடித்து வெளிவந்த ராஜ முக்தி என்ற படம். 1947 என்று நினைக்கிறேன். அவர் பானுமதியுடன் சேர்ந்து நடித்தது. அந்த படத்துக்கு புதுமைப் பித்தன் வசனம் எழுதினார், புனேயில் என்று பின்னர் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆக 1947க்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து தில்லியில். புனே ·பில்ம் இன்ஸ்டியூட்டிலிருந்து பெறப்பட்ட படம். பின் என்ன தமிழ் நாட்டிலா கிடைக்கும்?. இங்கு எல்லாம் சூடாகத்தான் சந்தைக்குக் கொண்டு வரப்படும். எல்லாம் வித்துப் போகும். பஜ்ஜி போண்டா மாதிரி. மீந்து போனால் மறுநாள் அது சூடான பக்கோடாவுக்கு மாவில் கலந்து விடும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’.

பத்து வருடங்களுக்கு முன் சாக்கோட்டையில் என் தம்பியோடு தங்கியிருந்தேன். அப்போது ஒரு நாள், ‘பழைய படம் பாக்கறயாண்ணா’ என்று கேட்டபோது, “பழைய படம்னா என்ன, பாசமலர், பணமா பாசமா?” மாதிரியா? என்று கேட்டேன். “ஐய, நான் ரொம்ப பழசைச் சொல்றேண்ணா, “ஜகதல ப்ரதாபன், ரத்னகுமாரி”, அந்த மாதிரி” என்றான். ரத்ன குமாரி ஒரு நாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு தெரிந்து நம்மவர் நினைப்பில் எழுபதுக்கு முன்னால் வந்தது எதுவும், எந்த குப்பையும் க்ளாஸிக்ஸ் தான். என் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய ஆபத்து வந்து விட்டது போலிருக்கிறதே என்று , ரத்தின குமாரியெல்லாம் பார்க்கிறவர்கள், கேட்கிறவர்கள் இருக்கிறார்களா என்ன? என்று தம்பியைக் கேட்டேன். என் தம்பி சிரித்துக் கொண்டே சொன்ன பதில், “இதை எனக்கு சிபாரிசு செய்ததே கடைக்காரன் தான், ” அவன் இதை வைத்திருக்கக் காரணம் இதில் ஒரு சைட் ரோலில் எம்.ஜி.ஆர். வருகிறார். அதைச் சொன்னால், அதற்கு டிமாண்ட் வந்து விடுகிறது. எம்.ஜி.ஆரின் சைட் ரோல் இதில் இல்லாவிட்டால் இதை வெளியே கடாசியிருப்பான். பி.யூ. சின்னப்பா எல்லாம் இப்போ விலை போகாத சமாச்சாரம்.”

இப்படித்தான் பழைய நினைவுகள் எங்கெங்கோ தாவி விடுகின்றன. இப்படி மனம் ஆழ்ந்துவிடுவதற்கு இன்னொரு காரணம், கடந்த இரண்டு மாதங்களாக, பொதிகை தொலைக்காட்சியில் இரண்டு முக்கியமான, எனக்கு சுவாரஸ்யமான தொடர்கள் வரத்தொடங்கியுள்ளன. ‘திரைப் பேழை’ என ஒன்று. ‘கதை கதையாம், காரணமாம்’ என ஒன்று. இவற்றோடு வாரம் ஒரு முறை, ‘ரசிகப்ரியா” என்ற தலைப்பில் வரும் இன்னொரு தொடரையும் சொல்ல வேண்டும். இந்த தொடரில் பழைய தமிழ் படங்களில் முதலில் பாடுவதற்கும் பின்னர் பின்பாட்டு பாடுவதற்கும் பெரிய கர்நாடக இசை கலைஞர்கள் பங்கு பெற்றிருந்ததைச் சொல்லும் தொடர். இவை பற்றியெல்லாம் எந்த முன்னறிவுப்புகளும் வருவதில்லை. எப்போதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒன்று பிடிக்கவில்லையெறால், மற்றவற்றிற்கு தாவித் தேடும்போது, ஒரு நல்லதில் தடுக்கி விழுந்தால் தான். பத்திரிகைகளில் வரும் நிகழ்ச்சி அட்டவணைகள் சரியாக இருப்பதில்லை. இப்படித்தான் ‘ரசிகப்ரியா’வைப் பற்றி அறிந்தேன். ‘திரைப் பேழை’ பற்றி எனக்குச் சொன்னது என் தம்பி, சாக்கோட்டையிலிருந்து. அதன் பின் நான் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கெல்லாம் சொன்னேன். பகல் வேளையில் யார் பார்க்கமுடியும்? அதே நிகழ்ச்சி திரும்ப இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பப் படுகிறது. ‘ரசிகப்ரியா’ எப்போது தொடங்கப்பட்டதோ தெரியாது. நான் பார்த்த இரண்டு தொடர்கள்,

ஒன்று எம்.எஸ்.சுப்புலஷ்மி பாடி நடித்த படங்கள் பற்றிச் சொல்லி அந்தந்த படங்களிலிருந்து சில காட்சிகளையும் பாட்டுக்களையும் தொகுத்து அளித்தது. நான் பார்த்த தொடரில் ‘மீரா’வும்’ ‘சத்தியவான் சாவித்ரி’ இரண்டு படங்கள். மீராவின் பாடல்கள் எல்லோரும் அறிந்தது தான். ‘காற்றினிலே வரும் கீதம்’ இயற்றியது கல்கி. அவரது நாவல்கள், சிறு கதைகள் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்ராயங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவர் பத்திரிகைகள் படிப்பதை பிரபலமாக்கினார். தமிழ் எழுத்துலகில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொணர்ந்தார். இதெல்லாம் சரி. ஆனால், அவர் ஏதோ எழுதுவோம் என்று எழுதிய ஒரு பாடல் இத்தகைய புகழ் பெறும் என்று யார் எதிர்பார்த்திருக்கமுடியும்? இப்படித்தான் பாடலாசிரியருக்கும் தன்க்கும் வெகு தூரம் என்று நினைக்கும் ராஜாஜி எம்.எஸ். ஐ.நா பொதுச்சபையில் பாடுவற்காக எழுதிய ‘குறை ஒன்றுமில்லை’ என்ற பாடல். அதே போல் தான் மறைந்த பரமாச்சாரியார் எழுதிக்கொடுத்த ‘மைத்ரீம் பஜத’ என்ற சமஸ்கிருத பாடலும். என்ன மாயம் இவர்கள் கைகளில் விளையாடுகிறது! அவரவர் வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவரின் ஆசையை நிறைவேற்ற தான் அறியாத ஒரு துறையில் தான் படைத்தது இவ்வளவு புகழ் பெறும் படைப்பாக ஆகிக் காட்டியுள்ளதே! சத்தியவான் சாவித்ரி படத்தில் ‘தேவியைப் பூஜை செய்வாய் குழந்தாய், சாவித்ரி தேவியைப் பூஜை செய்வாய், தீரும் உன் பயமெல்லாம்’ என்ற பாடலும் சதாசிவ பிரும்மேந்திரரின் ‘ப்ரூஹி முகுந்தேதி’, எவ்வளவு வருஷங்களுக்குப் பிறகு எம்.எஸ் பாடக் கேட்க முடிந்திருக்கிறது. ஆனந்தமாக இருந்தது,. 1946-ல் மதுரை சிந்தாமணி டாக்கீஸில் தான் சத்தியவான் சாவித்ரி படம் பார்த்தேன். எம்.எஸ் நாரதராக வேஷம் போட்டுக் கொண்டு பாடுகிறார். என் மாமியின் தம்பி அழைத்துச் சென்றார். பார்த்தேன். பாகவதர் நடித்த சிந்தாமணி படத்துடன்தான் அந்த தியேட்டரின் திறப்பு விழா நடந்ததாம். அதனால் தான் அந்த தியேட்டருக்கு அந்த பெயர் என்று சொன்னார்கள். அப்போது பாகவதர் ஜெயிலில் இருந்தார். அவர் இடத்துக்கு ஹொன்னப்பா பாகவதரை கர்நாடகத்திலிருந்து அழைத்து வந்தனர். ஒன்றும் பயனில்லை. சிறையிலிருந்து திரும்பிய பாகவதருக்கே, அந்த சூப்பர் ஸ்டாருக்கே கூட திரும்ப சினிமா உலகில் கால் பதிக்க முடியவில்லை. எல்லாம் வெகு சீக்கிரம் மாறி விட்டன. காலமும், மக்கள் ரசனையும். இனி ஒரு பாகவதருக்கு தமிழ் சினிமாவில் இடமில்லை. சங்கீதத்தின் இடத்தை 15-20 நிமிடம் மூச்சிறைக்க பேசும் அடுக்கு மொழியும், தீப் பொறியும் மூச்சிறைக்கக் கக்கும் வசனம் பறித்துக் கொண்டு விட்டது.

வசனம் என்று சொல்ல வந்தாலே அது எங்கோ இழுத்துக்கொண்டு போய்விடுகிறது. எதை எதையோ அடித்துத் தள்ளி விடுகிறது. ரசிகப்ரியா பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். எம்.எஸ் நடித்து பாடிய படங்களிலிருந்து காட்சிகள். ஜி.என்.பியோடு நடித்த சகுந்தலையிலிருந்து சில காட்சிகள். பாடும் காட்சிகள். அந்த காலத்தில் சினிமா இப்போது போல சமுக அந்தஸ்து பெற்ற ஒன்றல்ல. நாடகம் போலத்தான். கூத்தாடிகள் கூடாரமென இழிவாகக் கருதப்பட்டது. சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு தரமாட்டார்கள். அத்தகைய இழிவாகப் பார்க்கப்பட்ட ஒரு ஈடுபாட்டிற்கு இன்றும் மதிக்கத்தக்க ஒரு க்ளாஸிக்ஸ் என்ற அந்தஸ்தைக் கொடுத்தது அதன் சங்கீதம். அதைத்தர முன்வந்த அந்நாளைய சங்கீத கலைஞர்கள். பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவன் போன்றவர்கள். அவர் எழுதியவை ‘சினிமாப்பாட்டுக்கள் அல்ல’ மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், தண்டபாணி தேசிகர், எல்லாம் பாட மாத்திரமல்ல நடிக்கவும் செய்திருக்கிறார்கள். அதற்கு இடம் உண்டு என்று சினிமா முதலாளிகளுக்குச் சொன்னது அதற்கு முந்திய நாடக உலகம். அது வெகுஜனங்களுக்கிடையே பிரபலமாக்கிய சங்கீதம். எஸ்.ஜி.கிட்டப்பாவையும் கே.பி.சுந்தராம்பாளையும் உலகுக்கு அறிவித்த நாடக உலகம்.

அடுத்து வந்த ரசிகப்ரியா தொடர்களில் பட்டம்மாள், எம்.எல். வசந்த குமாரி பின்னணிப் பாடகர்களாக பாடிய படங்கள். ஒரு பழைய படத்தில் மாத்திரம் எம்.எல் வசந்த குமாரி காமிராமுன் வந்து உட்கார்ந்து கச்சேரியே செய்துவிடுகிறார். கிருஷ்ணபக்தி என்ற படத்தில். சிறு வயதில், அன்றைய தோற்றத்தில்.

கிருஷ்ண பக்தி பற்றி நிறைய சொல்ல வேண்டும். திரைப் பேழை தொடரில் எப்படியோ நான் எப்போதோ சிறு வயதில் பார்த்தவை, பார்க்கக் கிடைக்காத பழைய தமிழ் படங்களை தினம் அரை மணி நேரம் பகலிலும் இரவு 11 மணிக்கும் தொடர்ந்து ஒளி பரப்பி வருகிறார்கள். பொதிகை தொலைக் காட்சியில். அதற்கு வரும் விளம்பரங்கள் அரசாங்கத்தின் விளம்பரங்கள் தான். தமிழ் நாட்டின் வேறு எந்த தொலைக்காட்சியும் இவற்றை எட்டடி நீள மூங்கிலால் கூட தொட மாட்டார்கள். சர்க்கார் நிதி ஒதுக் கீட்டில் செயல்படும் தொலைக்காட்சிகளில் தான் இவை சாத்தியம். மக்கள் தொலைக்காட்சி ஆரம்பத்தில் சில நல்ல படங்களை ஒளி பரப்பியது. இப்போது அது கைவிடப்பட்டுள்ளது. ஆரம்ப சூரத்தனம் தான். விளம்பரம் வராத எதையும் தனியார் நிறுவனங்கள் தொடாது. எவ்வளவுக்கு விளம்பரங்களும் பார்ப்போர் எண்ணிக்கையும் கூடுகிறதோ அவ்வளவுக்கு அந்த தொலைக்காட்சி திராபையாக இருக்கும். இது தமிழ் நாட்டு விதி. சினிமாக் கலாச்சாரத்தின் விதி.

பொதிகையில் இது எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ தெரியாது. இரண்டு மாதங்களாக தொடரும் இந்த நிகழ்ச்சி அரசினாலும் சில நல்ல காரியுங்கள் அவர்கள் அறியாது நடந்து விடும் என்பதை ஒப்புக்கொள்ள என்னை நிர்ப்பந்திக்கிறது. என் தம்பி சொல்லித்தான் எனக்குத் தெரியவந்தது. அதை நான் முடிந்தவரை ஈடுபாடு இருக்கும் என்று நான் நினைத்தவர்களுக்கெல்லாம் சொன்னேன். தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ், சிந்தாமணி, சிவகவி, பின்னர் பி.யு. சின்னப்பா நடித்த ஆர்யமாலா, கிருஷ்ணபக்தி – இவ்வளவு தான் நான் இது வரை பார்த்தவை. புதிதாக பல விஷயங்கள் எனக்கு இப்படங்களில் பார்க்கக் கிடைத்தன. முதலில் நான் இப்படங்களில் ஈர்க்கப்பட்டது இவற்றின் பாடல்களுக்காகத்தான். சில படங்கள் துண்டு துண்டாகக் காட்டப்படும்போது, முதல் நாள் காட்டிய காட்சிகளையே திரும்பக் காட்டப்பட்டுவிடும்.

இருந்தாலும் எனக்கு அலுப்பதில்லை. தியாகராஜ பாகவதர் கர்நாடக சங்கீதத்தை வெகு ஜனங்களுக்கு எடுத்துச் சென்ற பெருமையை பெற்றவர். முறையாக சங்கீதம் கற்காதவர் என்று சொல்வார்கள். ஆனாலும் அவரது குரல் வளமும், பெண்களைக் கவரும் முகமும் அவரை பெரிய நக்ஷத்திரமாக்கின. பார்த்த காட்சிகளையே திரும்ப இரவும் மறுநாளும் பார்ப்பது சந்தோஷம் தருவதாகத் தான் இருந்தது. சிறு வயதில் பார்த்த நினைவுகளைப் புதுப்பித்ததால் அதுவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வளவுக்கும் அந்தக் கதைகளும், அவர்கள் நடிப்பும் மனதை ஈர்ப்பன அல்ல. அப்படிப் பார்த்தால், வெகுவாகப் பேசப்படும், கொண்டாடப்படும் இன்றைய தமிழ்ப் படங்களின் கதை, நடிப்பு மாத்திரம் அல்ல, முந்தைய படங்களின் seriousness இப்படங்களில் அறவே இல்லாது இவை ஒரு முறை பார்க்கக் கூட சகிப்புத் தன்மையைச் சோதிக்கும் திராபைகளாகவே எனக்குப் படுகின்றன. அவ்வகையில் நான் இப்படங்களை மிகவும் அனுபவித்தே பார்த்தேன் என்று சொல்ல வேண்டும். ஆனால் பி.யு சின்னப்பா படங்களைப் பார்க்கும் போது, அவற்றை தியாகராஜ பாகவதர் படங்களைப் பார்த்த சுருக்கில் அடுத்துப் பார்த்ததால், சில விஷயங்கள் தென்பட்டன. கதை வேறானாலும், படத்துக்கு படம் பாகவதர் வேறு வேறு பாத்திரங்களில் வருவதாகச் சொல்லப்பட்டாலும், ஏதோ அச்சில் வார்த்தது போல் ஒரே மனிதரை எல்லாவற்றிலும் பார்ப்பது போல் இருந்தது. ஆனால் சின்னப்பா, என்னதான் நாடக பாணி என்று அக்காலப் படங்களைப் பற்றிச் சொன்னாலும், (இன்று என்ன வாழ்ந்தது என்று கேட்கத் தோன்றுகிறது) சின்னப்பாவை, ஆர்ய மாலாவில் வளையல் வியாபாரியாகவும், காளி கோயில் சங்கூதும் பூசாரியாகவும், கிருஷ்ண பக்தியில் கதா காலட்சேப பிரசங்கியாகவும், போலி ராஜகுருவாகவும் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ஒரு அசாதாரண திறமையைக் காட்டுகிறார். அந்நாட்களில் இத்தகைய திறமையை வேறு யாரிடம் பார்த்தோம் என்று யோசித்தால் விடை ஏதும் கிடைக்கவில்லை எனக்கு. கிருஷ்ண பக்தியில் அவர் செய்யும் பிரசங்கத்தை எத்தனை தடவை பொதிகையில் நிலையத்தின் அலட்சிய செயல்பாடுகளால் பார்க்க நேரிட்டாலும் அது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. சின்ன வயசில் பார்த்த நினைவிலிருந்து ஏதோ ஒரு படத்தில் அவர் கொன்னக்கோல் போடுவதை நினைத்து அந்தப் படம் எப்போது பொதிகையில் வரும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். இம்மாதிரியான பன்முகத் திறமையை பாகவதரிடம் காண முடிவதில்லை. நல்ல சாரீரம், இனிமையான பாட்டுக்கள். அவ்வளவே.

பொதிகையில் என்ன காரணத்தாலோ, எவ்வளவு தடவை ஒரு படம் காட்டப்பட்டாலும், சிறு பிராயத்தில் பார்த்த ஞாபகத்தில் பதிந்துள்ள காட்சிகளை பார்க்க முடியவில்லை. அக்காட்சிகள் இப்போது வெட்டப்பட்டு விட்டனவோ என்று தோன்றுகிறது. என் ஞாபகத்தில்’ வேடனாக அவர் தன் தாயின் முன் நின்று பாடும், ‘ சிவ கிருபையால் மாதா உனைத் தெரிந்துணர்ந்தேன்” என்ற ஒரு அருமையான பாட்டு, அது போயே போய் விட்டது வருத்தமாக இருந்தது. வேடர்கள் கூடிப் பாடும் ஒரு பாட்டு, அதுவும் காணாமல் போய்விட்டது. நான்கு வயதில் கேட்ட பாட்டுக்கள், காட்சிகள் இன்று பார்க்கும் பிரதியில் காணோமே என்று கேட்கத் தோன்றினால், அது வருத்தம் தருவதாக இருந்தால், எத்தகைய classics அவை என்று வியக்கத் தோன்றுகிறது. ஆனால் பாகவதருக்கு இருந்த பெண்களைக் கவரும் தோற்றம் சின்னப்பாவுக்கு இல்லாத காரணத்தால் அவரளவு பிராபல்யம் இவருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் சின்னப்பா தான் பெரிய கலைஞராக எனக்குத் தோன்றுகிறார். அளவுக்கு மீறிய குடிப்பழக்கத்தின் காரணமாக வாலிய பிராயத்திலேயே அகால மரணம் அடைந்துவிட்ட சோகம் அவரது.

இன்னொரு மிக முக்கியமான விஷயத்தையும் பார்த்தேன். இதைச் சொல்லியே ஆகவேண்டும். பழைய படங்களில் வரும் வெளிப்புறக் காட்சிகள். இப்போது பார்த்த படங்களிலிருந்து சொல்வதென்றால், சிவகவியில், பாகவதரும் என்.எஸ் கிருஷ்ணனும் ஒரு தெருவில் சந்திக்கும் காட்சி. பாகவதரை ஊரை விட்டு ஓடிப் போகும்படி சொல்கிறார் கிருஷ்ணன். அந்தத் தெரு நிஜமான தெரு. ஸ்டுடியோ தெருவல்ல. சின்னப்பா வை அரண்மனைச் சிப்பாய்கள் துரத்தி வருகிறார்கள். அந்தத் தெருக்கள் எல்லாம் நிஜமான தெருக்கள். வீடுகள் ப்ளைவுட்டினால் முகப்புத் தோற்றம் மாத்திரம் தெரிய உருவாகி பெயிண்ட் அடிக்கப்பட்ட ஸ்டுடியோ தெருக்கள் அல்ல. வீட்டு ஓடுகள் பாதி உடைந்து கிடக்கின்றன. தாழ்வான திண்ணைகள். சில வீடுகள் இடிந்த குட்டிச் சுவர்களோடும் சரியும் மண் சுவர்களோடும் காணப்படும். இது ஆர்ட் டைரக்டர் வேலையல்ல. தெருவே கிடக்கும் போது ஸ்டுடியோவில் எதற்கு நிர்மாணம் செய்ய வேண்டும். சின்னப்பா பாடிக்கொண்டே வளையல் விற்றுக்கொண்டு தெருவில் நடக்கும் போது திண்ணை களில் நின்று வேடிக்கை பார்க்கும் சிறுவர் கூட்டம் சினிமா எக்ஸ்டிராக்கள் அல்ல. நிஜ கிராமக் குழந்தைகள். அவர்கள் வேடிக்கை பார்ப்பது, ஷ¥ட்டிங்கை வேடிக்கை பார்க்கும் சிறுவர் கூட்டமல்ல. தெருவில் விற்க வந்தவனை வேடிக்கை பார்க்க வந்த கூட்டமாகத் தான் நமக்குத் தோற்றம் தருகிறார்கள். தெருவில் விரைந்து நடக்கும் சிலரை அவர்கள் விருவிருவென்று நேராக விரைத்துக்கொண்டு நடப்பதைப் பார்க்கும் போது தான் அவர்கள் எக்ஸ்டிராக்கள் என்று தெரிகிறது. அவர்கள் தவிர தெருவில் வேறு சிலர் வளையல் காரனைக் கடக்கும் போதும் கடந்து சிறிது தூரத்துக்கும் அவனைப் பார்த்துக் கொண்டே பின் தம் வழிச் செல்பவர்களும் உண்டு. அவர்கள் தான் நிஜ கிராமத்து மனிதர்களாகத் தோன்றுகிறார்கள். அந்தத் தெருக்களும் அன்றைய தமிழ் நாட்டு கிராமங்களின் நிஜத் தெருக்கள். அத்தெருக்களில் குப்பைகள் குவிந்திருக்கவில்லை. சாக்கடை நீர் தெருவுக்கு ஓடி வரவில்லை. தெருக்கள் குண்டும் குழியுமாக இல்லை. அன்றைய ஏழை தமிழ் நாடு சுத்தமாக இருந்தது. வீடுகள் ஓடு இழந்து வெள்ளையடிக்காது காரை உதிர்ந்த சுவர்களாக இருந்தாலும் அவை சுத்தமானவை. அவை நாற்பதுக்களின் நிஜ தெருக்கள் என்பதற்கு வேறு என்ன சான்றுகள் வேண்டும்?

நம் சினிமாக்களில் நம் ஊர்களை, பட்டணங்களை அவற்றின் காலத் தோற்றத்தில் காணமுடிவதில்லையே என்று நான் வெகு காலமாக எண்ணியதுண்டு. ரயில் நிலயம் என்றால், ஷ¥ட்டிங்குக்கு ரயில் நிலையமே காலியாகக் கிடக்கும். நம் நடிகர்களைத் தவிர வேறு யாரையும் அங்கு பார்க்கமுடியாது. இந்த மாதிரி ஒரு அவலம். இன்று வெளிப்புறக் காட்சி யென்றால், ஸ்டுடியோ வெளிப்புறக் கதவை விட்டு வெளியேறினால் அவர்களை கனடாவில் அல்லது ஸ்விஸர்லாந்தில் தான் டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதைக் காணமுடியும். நம்மூர் ஸ்டுடியோ கதவுக்கு வெளியே தமிழ் நாடே காணமுடியாதோ, ஸ்விட்ஸர்லாந்தின் பனிச் சிகரங்கள் தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றும். அப்படி ஒரு அவலம் இப்போதைய தமிழ் சினிமாவில். இவர்கள் எல்லாம் கலைஞர்கள். அரசியல் வாதிகள் இவர்களைக் காக்கா பிடிக்கிறார்களா அல்லது இவர்களை அரசியல் வாதிகள் காக்கா பிடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. அன்று இருந்த தொழில் நுட்ப போதாமையிலும் எடுக்கப்பட்ட படங்கள் இன்றும் பார்க்க சுகமான அனுபவம் தருவனவாக இருக்கின்றன். இன்று ஏதோ ஹாலிவுட்டுக்கு நிகராக என்று பெருமை பேசப்படும் தொழில் நுட்பமும், மக்களும் அரசியல் தலைவர்களும் போற்றும் கலைஞர்களும் நிறைந்த சினிமாவை ஒரு நிமிட இரு நிமிட துண்டுக் காட்சிகளாகக் கூட பார்க்க சகிப்பதில்லை.

இவ்வளவு நீட்டி முழக்கி சொல்ல வந்த விஷயத்தை இப்போது தான் சொல்ல வேண்டும். இப்போது சில வார காலமாக பொதிகையில் எனக்குச் சற்றும் பிடிக்காத பழைய படங்கள் காட்டப்படுகின்றன. பெண், மாயமனிதன், வாழ்க்கை இப்படி என்னென்னவோ படங்கள். அவையும் 50 வருடப் பழைய படங்கள் இல்லையா, ஆகவே அவை classics என்ற நினைப்பு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இருப்பதாகத் தோன்றுகிறது. இன்னும் நிறைய படங்கள் சின்னப்பா, தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர், எம்.எஸ் நடித்த பாடிய படங்கள் இருக்கின்றன. அவை கிடைக்கவில்லையா அல்லது, பார்வையாளரின் வேண்டு கோளுக்கு அடி பணிகிறார்களா தெரியவில்லை. வயது ஒன்றே தகுதி பெறும் சோகம் இது.

வெங்கட் சாமிநாதன்/23.10.07


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்