இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

மஞ்சுளா நவநீதன்


எரியும் குஜராத்

அலுத்துப் போகும் அளவுக்கு அறிவுரைகளும், மசூதியைக் காப்பாற்றிய இந்துக்களின் கதைகளும் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவிட்டன. விஷ்வ இந்து பரிசத்தை தடை செய்யவேண்டுமென்றும், இன்னும் அதிகமாகச் சென்று, பாஜகவையும் ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்யவேண்டுமென்றும் கோரிக்கைகள் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, எக்ஸ்பிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றிடமிருந்து ஆச்சரியத்துக்கு இடமின்றி வர ஆரம்பித்து விட்டன.

ஒரு ரயில் ராமர் பிறக்காத அயோத்தியிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. ராமர் அங்கே பிறந்ததாக முட்டாள்தனமாகக் கருதிக்கொண்டிருக்கும் இந்துக்கள் (இந்துக்கள் என்றே யாரும் கிடையாது என்று இந்து மதமே ஒரு கற்பிதம் என்பதை இந்த மனிதர்கள் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள். அதனால் இந்துக்கள் என்றே அழைக்கிறேன். புத்திசாலிகள் மன்னிக்கவும்.) வரும் ரயில் ஒரு ஊரில் நிற்கிறது. அந்த ரயிலில் இருந்தவர்களுக்கும் ஸ்டேஷனில் டா விற்றுக்கொண்டிருந்தவர்களுக்கும் தகராறு நடக்கிறது. ஐந்து நிமிடத்துக்குப் பிறகு ரயில் கிளம்பி ஒரு கிமீட்டருக்குள் வண்டி நிறுத்தப்பட்டு அமில குண்டுகளும், நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் கொண்ட ஒரு 2000 பேர் ரயிலுக்குள் புகுந்து அதனை கொளுத்தி 57 பேர்கள் இறக்கிறார்கள். எல்லாம் 6 நிமிடத்துக்குள். காரணம் யார் ? அந்த ஸ்டேஷனில் அமைதியாக டா விற்றுக்கொண்டிருந்தவர்களை உசுப்பேற்றி அவர்களை தங்களைக் கொல்லும்படி தூண்டிய இந்த இந்துக்களும், அவர்களை அயோத்திக்கு வரச்சொன்ன விஷ்வ இந்து பரிஷத்தும், அந்த வன்முறைக்கும்பலுக்கு தாயான பாஜக, ஆர் எஸ் எசும் தான் என்று என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, எக்ஸ்பிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள், இந்த பத்திரிக்கையாளர்கள் செய்தி தரும் வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் ஆகியவைச் சொல்கின்றன. இது ஒரு முட்டாள் வாசகனின் மூளையைக் கூட அவமதிப்பதாக இல்லையா ? இந்தப் பத்திரிக்கை வரிசையில் நான் சேர்க்காத ஒரு பத்திரிக்கை இந்துஸ்தான் டைம்ஸ். வீர் சங்வி என்ற அதன் ஆசிரியர் எழுதிய தலையங்கத்தைப் பாருங்கள். இதையேதான் நானும் வழி மொழிகிறேன்.

வேறென்னத்தை எதிர்ப்பார்ப்பது இவர்களிடமிருந்து ? 5000 அப்பாவிகள் உலக வர்த்தக மையத்தில் கொலையுண்டதற்குக் காரணம் அமெரிக்காதான் என்று எழுதிய எஸ் வி ராஜதுரைக்குப் படிப்புச் சொல்லிக்கொடுத்தவர்கள் அல்லவா இவர்கள் ? இந்தக்கொலைகள் தலைப்புச் செய்தியாக வந்த அன்று இந்துவின் தலையங்கத்தில் இது பற்றி எதுவுமே வரவில்லை என்பது ஆச்சரியமல்ல. அடுத்த நாள் எப்படியும் இந்துக்கள் திருப்பித் தாக்குவார்கள்; அப்போது இந்துக்களைத் திட்டி தலையங்கம் எழுதும்போது, இதுவும் தவறுதான் என்று எழுதிவிடலாம் என்று இருந்ததோ தெரியவில்லை. அதே போல தலையங்கம் இருந்தது. ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது ? சரி, விஷ்வ இந்து பரிசத்தை தடை செய்தாகிவிட்டது. என்ன ஆகும் ? ஆர் எஸ் எஸை தடை செய்தாகி விட்டது. என்ன ஆகும். பாஜகவை பதவியிலிருந்து இறக்கியாகி விட்டது ? என்ன ஆகும் ? ராணுவ ஆட்சியா ? ராணுவத்தில் யார் இருக்கிறார்கள் ? இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லீம்களும் ராணுவத்தில் இல்லையா ? பழிக்குப்பழி வாங்கும் குணம் போய், குஜராத்தின் மக்கள் அனைவரும் காந்தியாகி விடுவார்களா ?

இதில் எல்லாவற்றிலும் ஒரே ஒருவர்தான் சரியான விஷயத்தைச் சொன்னது. அது ஜார்ஜ் பெர்னாண்டஸ் சொன்னவிஷயம்.

நடந்திருப்பது வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சதி. செய்தது ஐஎஸ்ஐ என்ற பாகிஸ்தானிய உளவு நிறுவனம். அவர் சொன்னது யார் காதிலும் விழவில்லை. காரணம், பத்திரிக்கைகள் தங்களுக்கு பாரதிய ஜனதாக் கட்சியை திட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை விட மனதில்லை. விஷ்வ இந்துப் பரிஷத் தாங்கள் கொலையுண்டதற்கு தங்களையே குற்றம் சாட்டுவதை பார்த்து வரும் கோபம் தலைக்கேறி பேயாட்டம் ஆடுவதை நிறுத்தவில்லை.

பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் இந்திய ராணுவம் நின்று கொண்டிருக்கிறது. நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தையும் அங்கே நிறுத்த வேண்டிய கட்டாயம். ஆனால், இந்தியா கேட்கும் விஷயங்களை செய்துவிட்டால், பாகிஸ்தான் ராணுவத்துக்கு தலை குனிவு. அதனால் செய்யவும் முடியாது. ராணுவத்தை வாபஸ் வாங்கவும் முடியாது. பாகிஸ்தான் ராணுவம் ஒவ்வொரு நாளும் எல்லைப்புரத்தில் நிற்பதற்கு ஆகும் செலவு கோடிக்கணக்கான ரூபாய்கள். இன்னும் ஒரு மாதம் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்புறத்தில் தயார் நிலையில் நின்றால், பாகிஸ்தான் முழுக்க திவால். என்னதான் அமெரிக்காவும் ஐரோப்பாவும் காசு கொடுத்தாலும், பாகிஸ்தானை காப்பாற்றமுடியாது. இந்திய ராணுவம் எல்லைப்புறத்திலிருந்து நகர வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் கலவரம் நடக்க வேண்டும்.

முன்பு ஐ எஸ் ஐ செய்தது போல, கிரிஸ்தவ சர்ச்களில் குண்டு வைத்தால், பிரயோசனமில்லை. அதனால் கலவரம் நடக்காது. இந்துக்கள் முஸ்லீம்களைக் கொலை செய்தது போல செய்தாலும் கலவரம் நடக்காது. முஸ்லீம்கள் இந்துக்களை கொலை செய்தது போல கலவரம் ஆரம்பிக்கப்பட்டால், இந்தியா முழுவதும் கலவரம் நடக்கலாம். இந்திய முஸ்லீம்களின் நன்மை எப்போதுமே பாகிஸ்தானின் கண்ணோட்டத்தில் கிடையாது. அப்படியே முஸ்லீம்கள் செய்திருந்தாலும், முஸ்லீம்கள் செய்யவில்லை, இந்துக்களே தூண்டினார்கள் என்று பேசவும் எழுதவும் பெரிய படையே இந்தியாவில் இருக்கிறது. இது இன்னும் கோபத்தைக் கொழுந்துவிட்டு எரியவிடும். அட்டகாசமான திட்டம்.

நடந்திருப்பது இதுதான் என்பது என் உறுதியான எண்ணம். இதைப்புரிந்து கொண்டு முதலில் கலவரத்தை நிறுத்தப்போவது விஷ்வ இந்து பரிசத்துதான். பழிக்குப்பழி வெறிகொண்டு அலையும் குஜராத்தின் இந்துக்களும் முஸ்லீம்களும் அடுத்தது நிறுத்துவார்கள். ஆனால் இந்தியப்பத்திரிக்கையாளர்களும், காங்கிரஸ் இடதுசாரிகளும் நிறுத்தப்போவதில்லை.

பாகிஸ்தான் என்ற நாடு உருவான போது அது முஸ்லீம்களின் சொர்க்க பூமியாக்கும் என்று விளம்பரப் படுத்தப்பட்டது. முஸ்லீம் படையினர் சக முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்ததற்குப் பின்பு , பாகிஸ்தான் அகில உலக அமைப்புகளிலிருந்து பயங்கரவாத நாடாய் விலக்கிவைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா தந்த ஆதரவால் மீண்டும் உயிர் பெற்று உலவ ஆரம்பித்து தன் கோர உருவத்தை வெளிப்படுத்தலாயிற்று. பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியின் கீழே வருவதற்கு காஷ்மீர் மக்கள் துடிக்கிறார்கள் என்ற ஒரு பிரமையை உருவாக்கி உலவ விட்டிருக்கிறது.

குற்றத்திற்கு ஆளானவர்கள் தம்முடைய ஆட்களாய் இருந்தால் குய்யோ முய்யோ என்று கத்துவது. குற்றத்திற்கு ஆளானவர்கள் எதிரி முகாம் என்றால், குற்றம் இழைத்தவனின் தோளில் கையைப் போட்டு நீ என்னப்பா பண்ணுவாய். உன்னை அவன் தான் தூண்டிவிட்டு விட்டான். நீ பண்ணிய கொலை வெறும் எதிர் வினை தான் என்று சப்பைக்கட்டுக் கட்டி இன்னமும் அவனை கொலைகளுக்குத் தூண்டி விடுவது : இதுதான் யெச்சுரி, ராஜ துரை மற்றும் இடது சாரி என்று சொல்லிக்கொள்பவர்களின் போக்காய் இருக்கிறது.

****

இணையம் சுற்றி : தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம்

தன்னார்வக்குழு சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் செய்யும் கொடூரம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்கிறேன் என்று பிரிட்டிஷ் மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘சேவ் த சில்ரன் ‘ போன்ற அமைப்புக்களை உருவாக்கி இருக்கின்றன. இவைகளில் பல ஐக்கிய நாடுகள் அங்கீகாரத்துடன் இந்த லைபீரியா, சியர்ரா லியோன், கினியா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் உணவுப்பொருட்கள், தங்குமிடங்கள் தருகின்றன.

சமீபத்திய அறிக்கை ஒன்று அதிர்ச்சியான தகவலை சொல்கிறது.

இவ்வாறு உதவி செய்கிறேன் என்று வந்த சுமார் 40 நிறுவனங்களைச் சார்ந்த சமூக சேவகர்கள் அந்த உணவுக்கும் உறவிடத்துக்கும் பதிலாக சிறு பெண் குழந்தைகளிடமிருந்து பாலுறவு சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்த அறிக்கை வந்ததும், அதில் வேலை செய்யும் சமூக ஊழியர் ஒருவர், இது மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டும் நடக்கும் விஷயமல்ல, உலகமெங்கும் இது போன்ற சமூக சேவைகளில் குழந்தைகள் இது போல பிரதியுபகாரத்துக்காக பலவந்தப்படுத்தப்படுகிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.

இதில் முதல் குற்றவாளிகளாக எனக்குத் தெரிவது இந்த சமூக சேவை நிறுவனங்கள் அல்ல. உள்நாட்டுக்கலவரத்தையும், இனவெறியையும் தூண்டி, வன்முறைக்கு மக்களை இட்டுச்சென்று, அதன் மூலம் தன் இன மக்களை இது போன்ற பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கும் அந்தந்த நாட்டு தலைவர்களும், அது போன்ற தலைவர்களுக்கு துணைபோகும் படித்த மக்களுமே முதல் குற்றவாளிகள்.

http://news.bbc.co.uk/hi/english/world/africa/newsid_1842000/1842512.stm

****

குருமூர்த்தியும் சிவகாசியும் குழந்தைப் பணியாளர்களும்

சிவகாசியில் குழந்தைகளைக் கொண்டு தயாரிக்கப் பட்ட பட்டாசுகளை வெடிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று ஓர் இயக்கம் ஆரம்பிக்கப் பட்டு நடந்து வருகிறது. அதனால் சிவகாசியில் ஏதும் பட்டாசு உற்பத்தி தடைப்பட்டுப் போனதாய்த் தெரியவில்லை. இதற்கிடையில் குருமூர்த்தி ஒரு பெரிய குண்டாகப் போட்டிருக்கிறார். பட்டாசுகளைப் புறக்கணிக்கச் சொல்வது கிருஸ்தவ பாதிரியார்களின் சதி. கிருஸ்தவ தன்னார்வக் குழுக்களின் இந்து மத எதிர்ப்பின் ஓர் அங்கம் என்று கூறியிருக்கிறார். இது உண்மையானால் இது மிக தீவிரமான ஓர் குற்றச்சாட்டு. உண்மையில்லை என்றால் குருமூர்த்தியின் கூற்று கண்டிக்கப்படவேண்டியது மட்டுமல்ல. தண்டிக்கப் பட வேண்டியது.

70-80 களில் சிவகாசி மீது தாக்குதல் தொடுப்பதில் முன்னணியில் தீப்பெட்டி தயாரிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் இருந்ததுண்டு. ‘குட்டி ஜப்பானில் குழந்தைகள் ‘ என்று சலம் பென்னரகெரெ என்பவர் ஒரு ஆவணப் படம் எடுத்தார். அதுவும் ஒரு குறுகிய வட்டத்தையே சென்றடைந்தது.

குருமூர்த்தி பா ஜ க ஆதரவாளர். இந்து சக்திகளின் ஆதரவாளர். இதில் தவறில்லை. ஆனால் கிருஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக ஆதாரமில்லாமல் இப்படி அவதூறு செய்வது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால் அவருடைய கட்டுரைக்கு எந்த மறுப்பும் வந்ததாய்த் தெரியவில்லை.

இது போன்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்கு ம் ஒரே வழி தன்னார்வக் குழுக்கள் தம்முடைய பணம் எங்கிருந்து வருகிறது, எந்த மத அல்லது குழு சார்ந்த இயக்கம் இதன் பின்னணியில் என்பதை வெளிப்படையாய் தெரிவிப்பது தான்.

*****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்