‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

அரவக்கோன்


எனது ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரையை ‘வார்த்தை’ மே 2008 இதழில் படித்தேன். முதலில் அதற்கு ஒரு நன்றி.

“இந்திய ஓவியங்களுக்கு சிற்பக்கலை கட்டடக்கலையைப்போல் ஒரு பெரும் கவனிப்பு இல்லையே என்ற ஆசிரியரின் கரிசனம் புரிகிறது. என்றாலும், ஓவியங்களைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடந்துவிட்ட இந்த சூழ்நிலையில் இந்த நூல் இன்னும் கூட ஆழமானதாக இருந்திருக்கலாம். விரிவான ஆய்வும் விவாதங்களும் ஆசிரியர் தருவித் திருந்தால் அது ஒரு செய்திக்கோர்வை என்ற அடையாளத்திலிருந்து விடு பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. இந்த வழிமுறை வாசகனுக்குத் தூண்டுதலாக இருக்கலாம் ஆனால், வழிகாட்டியாகவோ முன்னோடியாகவோ இருந்துவிடக் கூடாது” என்று தமது விமர்சனத்தை முடித்திருக்கிறார்.

மோனிகா இந்நூல் எந்தவகை வாசகருக்கானது என்பதை கவனத்தில் கொண்டிருந்தால் அவரது பல மனக் குறைகளுக்கு இடமில்லாமற் போயிருக்கும். முதலில் நான் இந்நூலை எழுதும்போதே அது யாருக்கானது என்று முடிவு செய்து கொண்டேன். அது ஓவியம் பற்றியோ அல்லது கலை பற்றியோ அறிமுகமில்லாத, ஆனால் அவை பற்றி அறிந்துகொள்ள விழையும் ஆர்வம் காட்டும் சராசரி வாசகனுக்கானது. அங்கு வாத விவாதங்களுக்கு இடம் கிடையாது. என் கருத்துக்களைக் கூறுவது வாசகனைக் குழப்புவதில் முடிந்துவிடும். ஓவியம் சார்ந்த நுணுக்கங்களைப் பற்றித் அறிந்துகொள்ள அவனை ஆயத்தம் செய்யும் விதமாகத்தான் இந்நூல் அமைந்துள்ளது. தொடக்கத்தில் நூலுக்கு ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் – ஓர் எளிய அறிமுகம்’ என்று தலைப்பிடக்கூட விரும்பினேன்.

இந்நூல் வெறும் செய்திக்கோவையாக அமைந்துவிட்டதாக அவருக்கு தோன்றுவது பற்றி எனக்குச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் எனது வாசிப்பு அனுபவம் பற்றியும் அவர் ஐயப்படுகிறாரோ என்று தோன்றுகிறது. இந்நூல், ஓவியம் பயின்ற, அக்கலை பற்றி பல நூல்களை கற்றறிந்த அறிவு ஜீவிகளுக்கு பயனற்றதாக இருக்கலாம்; இருக்கட்டும். பல இடங்களில் நான் வெறும் மொழிபெயர்ப்பாளனாகவே தங்கிவிட்டதாகவும் அவருக்கு வருத்தம். ‘பல கருத்துக்களை விமர்சிக்கும்போது ஆசிரியர் அங்கு இல்லை’ என்றும் குறிப்பிடுகிறார். இம்மாதிரியான வரலாற்று நூல்களில் ஆசிரியன் இல்லாமல் இருப்பதுதான் அவனது படைப்பின் வெற்றியாக நான் உணர்கிறேன். இது விமர்சன நூல் அல்ல. என் கருத்துக்களை நூலின் தொடக்கத்தில் ‘என்னுரை’யில் சொல்லியிருக்கிறேன்.

ஜகதீஷ் மிட்டலின் கண்காட்சிப் பிரசுரத்தை மொழிபெயர்ப்புச் செய்யும் போது முடிவில் உள்ள பகுதியில் தமிழ்நாட்டில் தெலுக்கு அரசரால் ஆளப்பட்ட கால கட்டத்தில் பல கிராமியக் கலைகளின் அறிமுகம் கிட்டியது ஆனால், ‘கதை சொல்லி’களோ ‘சுருள் ஓவியங்கள்’ சுமப்பவரோ அங்கில்லை என்னும் செய்தியை வலியுறுத்தும் நோக்கத்தோடுதான் அப்பகுதி கட்டுரையில் இணைக்கப்பட்டது. அதை ‘ஆசிரியரின் அக்கரையின்மை’ என்று குறிப்பிடுவது அவரது மேதமையைக் காட்டுகிறது.

“மயிலை சீனி வேங்கடசாமி, எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், நாகசுவாமி, இந்திரன் போன்ற எழுத்தாளர்களின் வரிசையில் அரவக்கோன் இணைவது எனது விருப்பம். ஆனால், அவர் தனது சொந்த சிந்தனைகளை, பிரதிபலிப்புகளை கட்டுரைகளுடன் இணைத்து வெளியிட்டிருப்பாராயின் அவ்விருப்பம் வலுவடைந்திருக்கும்” என்பதற்கும் என் கடிதத்தின் தொடக்கத்தில் பதில் சொல்லிவிட்டேன்.

நூலை வெளியிட்டுப் பேசிய இரா.முருகன் “அரவக்கோன் எழுத்தாளராக நம்மிடையே நெருங்கி வந்து ஓவியம் பற்றித் தமிழில் கடுமையாகப் பேசாமல் சாதாரணமாகப் பேசுகிறார். கலைச்சொற்களை எளிதாக்கி நல்ல வாசிப்பனுபவத்தை நமக்குத் தருகிறார். ஆழ்ந்து யோசிக்கவும் வைக்கிறார்.” என்று கூறியதை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

மோனிகா குறிப்பிட எழுத்தாளர் வரிசையில் அவர் போன்ற ஓவியம் கற்ற, கவிபுனையும் நேர்த்தி தெரிந்த, ஏராளமாகப் படித்தவர் சிறந்த வாத விவாதங்களையும் சர்ச்சைகளையும் முன் நிறுத்தும் ஓவிய நூல்களைத் தமிழில் எழுதினால் தமிழ் மக்களுக்கு உபகாரமாக இருக்கும். சங்கை யாராவது ஊதட்டும் விடிந்தால் சரி.

அரவக்கோன்
சென்னை-47

(‘வார்த்தை’ ஜூன் 2008 இதழில் வெளியான அரவக்கோனின் கடிதம்.)

Series Navigation

அரவக்கோன்

அரவக்கோன்