இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

செந்தில்


இந்தியா உலகின் மிகபெரிய ஜனனாயகம் மட்டுமன்றி பல தேசிய மொழி இனங்களின் கூட்டமைப்பும், சமத்துவ குடியரசாகும். அமெரிக்கா உலகின் முதல் ஜனனாயகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு இன மக்களும் குடியேறும் ஒரு மாற்றத்தையே மூலதனமாகக் கொண்ட, வளம் மிக்க ஒரு நாடு ஆகும். இந்த இரு ஜனனாயக நாடுகளும் உலகிற்கு வழிகாட்டிகளாக அமைவதோடு, போரற்ற, வறுமை ஒழிக்கபட்ட, இயற்கை நலம் காக்கும் ஒரு புதிய மனித சமுதாயத்தை படைக்கவும் சக்தி படைத்த நாடுகள் எனலாம். ஆனால் அரசியல்வாதிகளின் தொலை நோக்கின்மையும், சந்தை பொருளாதாரத்தை மட்டுமே முதன்மைபடுத்தும் திட்டங்களும், மக்களுடைய மொழி, கலாச்சார, மத நம்பிக்கைகளை உதாசீனபடுத்தும் போக்கும், பாதுகாப்பு என்ற பெயரில் மற்ற நாட்டு ராணுவ, தளவாடம், மற்றும் கப்பல் தளங்கள் உள் நாட்டில் ஏற்படுத்தும் தாக்கமும், குறிப்பாக இந்தியா போன்ற கீழை நாட்டு சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கமும், இந்த இரு நாட்டுகளுக்கும் இடையில் உறவை வலுப்படுத்துவதற்கு பதிலாக இரு நாடுகளுக்கும் இடையில் உறவை மேலும் சீரழித்துவிட கூடும். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தரகு நாடுகளும், போட்டியிடும் மற்ற வல்லரசுகளின் நடவடிக்கைகளும் இந்த பிளவை அதிகபடுத்தும் திட்டங்களை செயல்படுத்த கூடும்.

அமெரிக்க இந்திய உறவை வலுப்படுத்துகிறோம் என்ற நோக்கில்(Nuclear cooperation), பாராளுமன்றத்தில் பணத்தைக் கொட்டி, உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க முயன்றது (100 கோடி மக்களின் ஜனநாயக உரிமையை துச்சமென மதித்து காரி உமிழப்பட்ட செயல் அது), பன்னாட்டு வியாபார நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, இந்தியாவில் உள்ள ஊழல்வாதிகளுடன் தொடர்பை வளர்த்துக்கொள்வது, இந்தியாவில் உள்ள ஊழல்வாதிகளின் சாம்ராஜ்யத்திற்க்கு அமெரிக்க காவல் நிறுவனங்கள் காவல்/ ஏவல் ஆட்களாக செயல்படுவது, இந்தியாவில் உள்ள மக்கள் நல போராட்டங்கள் நடத்தும் தலைவர்கள்/ தொழில்சங்க பிரதிநிதிகள்/பத்திரிக்கையாளர்கள் மீது அடியாட்களை ஏவிவிடுவது, இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் அமெரிக்க-பாக்கிஸ்தான் தொடர்பு, (இது 2G scam வரையில் கூட தொடரலாம்) என பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் இரண்டு நாடுகளுக்கும் எந்த விதத்திலும் நன்மை பயக்காது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் முதலில் 1)அரசியல், சர்வதேச உரிமைகளில் சமத்துவம் என்ற அடித்தளத்தில் கட்டமைக்கபட்டு, 2) கலாச்சார, பண்பாட்டு, கல்வி தளங்களில் பரிமாற்றங்கள் மூலம் வலுப்படுத்தபட்டு, 3) பொருளாதார நிறுவனங்களில் கூட்டு நடவடிக்கைகளை ஏற்படுத்தி, 4) அதன் பிறகு இரு நாடுகளில் உள்ள வியாபார, சந்தை, பொருளாதார வளர்ச்சிக்கு திட்டங்களை ஏற்படுத்தல் என்ற செயல்பாடுகளை மேற்கொண்ட பிறகே, 5) பாதுகாப்பு, உளவு தொடர்பான நிறுவனங்களில் கூட்டு முயற்சிகள் மேற்கொள்வது முறையான செயல்களாகும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த உறவுக்கான இயக்கம் தலைகீழாக செயல்படுத்தபடுகிறது… இரு நாட்டில் உள்ள வெளி நாட்டு தூதுவர்களாலும், வியாபார இடைத்தரகர்களாலும், பாதுகாப்பு(Military) அதிகாரிகளாலும், ஊழல் அரசியல்வாதிகளாலும்… வியாபாரமும், பாதுகாப்பு வர்த்தகமும் முதன்மை படுத்தபட்டு (எந்த ஒரு விலை, ஊழல் வழியினாலும் சரி….இது எப்படி முறையாகும்?)

சுருங்க சொல்லின், அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மிக மிக கவனமாக செயல்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, பெண்கள், மதம், கலாச்சாரம் சம்பந்தபட்ட விஷயங்களில் தள்ளி நிற்பது நல்லது. உதாரணமாக, ஜப்பானில் ஓக்கினாவாவில் ஒரு பெண்ணுக்கு நடந்த மாதிரி நிகழ்வுகள், இந்தியாவில் ஒரு அரசியல் பூகம்பத்தை நிகழ்த்திவிடும். மகாபாரத போரும், பாஞ்சாலி கதையும் இந்தியாவுக்கு என்றும் பொருந்தும். இந்தியாவின் ஆளும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும், அரசியல் வர்க்கமும், இதுவரை ஏழ்மையிலும், வறுமையிலும், பிந்தங்கியுள்ள பெண்களை பற்றியும், மக்களை பற்றியும் எந்த ஒரு கரிசனமும் காட்டியதில்லை. ஆனால் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளுடைய உறவினாலும், சந்தை பொருளாதாரத்தினாலும், உலகமயமாவதாலும் இந்தியாவின் உள்ள பெண்களும் மக்களும் பண்பாட்டு சீரழிப்பை நிகழ்த்தும் தொழில்களில் விழும்போது அரசியலை அதிகாரத்தை நிலைகுலை செய்யும் நிகழ்வுகள் கட்டாயம் நடக்கும்.

தற்போது மும்பாயில் நடந்த தீவிரவாத நடவடிக்கைகள் போல் தீவிர இடது சாரி இயக்கங்களும் நிகழ்த்த கூடும். இதற்கான ஆதரவு மற்ற நாடுகளிடம் இருந்து கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், பாதிக்கபடுவது, இந்திய பொருளாதாரம் மட்டும் இன்றி, உலக பொருளாதாரத்தையும், அரசியலையும் பின்னோக்கி தள்ளிவிடும். உடனே தீவிரவாதிகளை ஒழிக்கலாம் என அரசுகள் கிளம்பினால், பிரச்சனை இன்னும் அதிகமாகத்தான் செய்யும். இந்த இயக்கங்களை எப்படி அரசியலுக்கு கொண்டு வருவது, இதுதான் தற்போதைய பெரிய சவால். முதலில் இன, மத கலவரங்களை தூண்டும் ஊழல் அரசியல்வாதிகள் களைய பட வேண்டும். மக்களுடைய தேசிய, மொழி, இன, கலாச்சார உரிமைகள் எல்லா தளங்களிலும் பாதுகாக்கபட வேண்டும். ஊழல் கட்டாயம் ஒழிக்கபடவேண்டும். அமெரிக்க, ஜெர்மனி, சுவிட்சர்லாண்ட், மற்றும் பல வெளி நாடுகளில் உள்ள இந்திய ஊழல் அதிகார, அரசியல்வாதிகளின் பணம் இந்திய மக்களுக்கு சென்றடைய அமெரிக்க எல்லா வழிகளிலும் உதவிடுமாயின் அது உறவை வளர்க்கும் முயற்சியாகும். இடது சாரி இளஞர்கள் மற்றும் இயக்கங்கள் ஊழல் ஒழிப்பில் முக்கிய பங்காற்றும் வழியில் அரசாங்கம், பொது துறை, தனியார் துறை, மாநில அரசாங்களின் செயல்பாடுகளும் மேலாண்மையும் அமைக்கபட வேண்டும். தற்பொழுது ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் போர்க்கொடி தூக்கியிருக்கும் அன்னா ஹஜாரே போன்றொரின் கோரிக்கையும் அதுவேயாகும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இடது சாரி இயக்கங்களை குறை கூறுவது தவிர்த்து அவர்களையும் மக்களாட்சியை மதிக்கும் விதத்தில் ஆக்கபூர்வமான வழிகளுக்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.

Series Navigation

செந்தில்

செந்தில்