இந்தக் கடிதம் கிடைத்த…..

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

குரல்செல்வன்


எல். ஆர். சுவாமிநாதன்.
சாமிக்கு அந்த கடிதத்தின் முகவரியைப் பார்த்துத் திகைப்பாக இருந்தது. மகனிடமிருந்து வாங்கிய கடிதத்தைப் பார்த்தான். தெருவின் பெயரும் சரி, ஊரின் பெயரும் சரிதான். ஆனால் முதல் வரிதான் சரி இல்லை. லால்குடி. ஆர். சுவாமிநாதன் அமெரிக்கா வந்த புதிதில் எல்லோரும் அவனை லால்குடி என்று அழைக்க ‘அது என் ஊரின் பெயர், என் நிஜப் பெயர் சுவாமிநாதன், என்னை சுவாமி என்றே அழைக்கலாம்’ என்று விளக்கம் தந்தான். சுவாமி சாமி ஆகிப் பிறகு சாமி ஆர். நேதன் என்று மாறி எவ்வளவோ ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தப் பெயருக்கு எப்போதாவது கடிதம் வந்ததுண்டு. ஆனால் சமீபத்தில் இல்லை. அவனுக்கு வந்த திகைப்பில் மதியம் மூன்று மணிக்கே ஏன் வீட்டிற்கு வந்தோம் என்பது கூட ஒரு கணம் மறந்துவிட்டது.
இரண்டு மணிக்குச் சற்று முன்னதாக, சாரா கூப்பிட்டாள்.
“சாம்! இன்னிக்கு செவ்வாய்க் கிழமை. நம்ம டர்ன் கேரனையும், சூரனையும் கவனிச்சுக்க. லஞ்ச் சாப்பிட வெளியே போயிருந்தோம். கிளம்பும் போதே மணி பன்னண்டுக்கு மேல ஆயிட்டுது. இப்பதான் திரும்பி வந்தோம். அதனால என் வேலை முடிய நாலு மணியாவது ஆகும். எனக்கு பதிலா நீ சீக்கிரமா வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பாத்துக்கறியா ?;”
“நோ ப்ராப்ளம். இப்ப இரண்டு மணிக்கு ஒரு ஸ்டூடண்டோட பேசணும். அது முடிஞ்சவுடனே கிளம்பறேன். சரியாக இருக்கும்.”
“தாங்க்ஸ். இன்னிக்கு வெதர் நல்லா இருக்கு. முடிஞ்சா அவங்களை வெளியிலே அழைச்சிட்டுப்போ. நான் அப்புறமா கூப்பிடறேன்.”
மீட்டிங் முடிந்து அவன் கிளம்புவதற்கு இரண்டரை மணி ஆகிவிட்டது. சாரா சொன்னது சரிதான். பிப்ரவரியின் பிரகாசமான வெயிலின் இளம் வெப்பம் முகத்தைத் தொட்டது. நெடுஞ்சாலையிலிருந்து அவன் வீடு இருக்கும் நெய்பர்வுட்டில் திரும்பிய போது முன்னால் மஞ்சள் நிற ஸ்கூல் பஸ் கண்ணில் பட்டது. நல்ல வேளை நேரமாகிவிடவில்லை. பஸ் நின்று நின்று ஆரம்பப் பள்ளி மாணவர்களை உதிர்த்து விட்டுச் செல்ல அவனும் பின் தொடர்ந்தான். அவனுக்குப் பின்னால் தபால்காரர் ஒருவரும் ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டார். ஒரு கல்-டி-சாக்கில் நுழைந்து காரைத் தன் வீட்டின் டிரைவ் வேயில் நிறுத்தினான். சற்று தள்ளி நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய சிறுவர் கும்பலில் இருந்து கேரனும், சூரனும் மிக நிதானமாகப் பிரிந்து வந்தார்கள். கேரன் சாமியைப் பார்த்துக் கை ஆட்டினாள். சூரன் புன்னகையோடு நிறுத்திக் கொண்டான். சூரிய ஒளி அவளுடைய கூந்தலின் பொன் நிறத்தையும், சூரனின் உயரத்தையும் மிகைப்படுத்திக் காட்டியது.
இருவருமே கிண்டர் கார்டன் வகுப்பில் படித்தாலும் அங்கு என்ன நடந்தது என்று பெரும்பாலும் கேரன் சொல்லித்தான் தெரிய வரும். சென்ற மாதத்தில் ஒரு நாளும் சாமி அவர்களைப் பார்த்துக் கொண்டான்.
“சூரன் சேப்டர் புக் படிக்கிறான் என்று டீச்சருக்குத் தெரிந்து விட்டது.”
சாம் சூரனைப் பார்த்தான். அவன் பள்ளியில் சேருவதற்கு முன்பே சாமி அவனுக்குப் படிக்கவும், கணக்குப் போடவும் கற்றுக் கொடுத்திருந்தான். ஆனால் சூரன் அதைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ள மற்ற மாணவர்கள் அவனைக் கேலி செய்வார்களோ என்கிற பயத்தில் அவன் அதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று சாமி கண்டிப்பாகச் சொல்லியிருந்தான்.
‘நான் சொல்லவில்லை. கேரன்தான் நான் சேப்டர் புக் படிப்பேன் என்று டீச்சரிடம் சொன்னாள்.’
சாமி திரும்பி அவளைப் பார்த்தான்.
‘மிஸஸ் டபிள்யு அவளுடைய நெஃப்யூ பற்றி மிகவும் பெருமைபட்டுக் கொண்டாள். அவனும் கிண்டர் கார்டன்தான். ஆனால் பெரன்ஸ்டைன் பேர் புத்தகம் படிக்கிறானாம். திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தாள். என்னால் பொறுக்க முடியவில்லை. அதனால்தான்; சூரன் சாப்டர் புத்தகமே படிக்கிறான் என்று சொன்னேன்.” பழி டீச்சரின் மேல் போய் விழுந்தது.
இன்று என்ன செய்தி சொல்லப் போகிறாள் என்று சாமி காத்திருந்தான். அதற்குள், பின்னால் வந்த தபால்காரரின் ஜீப் வீட்டின் முன் நின்றது. கடிதக் கற்றையை எடுத்து மெயில் பெட்டியில் அவர் வைப்பதற்கு முன் இரண்டு பேரும் கை நீட்டினார்கள்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். “இந்த வீட்டில் இருப்பது யார்?”
சூரன் நான் என்று சொல்லிக் கடிதங்களை வாங்கிக் கொண்டான். கேரனின் கை மடங்காது இருக்கவே, “உன் வீடு எது ?” என்று கேட்டார். எதிர் வரிசையில் ஒரு நீல நிற சைடிங் போட்ட வீட்டைக் காட்டினாள். தன் பக்கத்தில் இருந்த பெட்டியை அலசி இரண்டு பெரிய புத்தகப் பார்சல்ளை எடுத்தார்.
“எலிஸபெத் பார்க்கர் ?”
“~P’ஸ் மை மாம்.”
கேரன் பார்சல்களை வாங்க அக்கறை காட்டதிருக்கவே தபால்காரர் வண்டியை நகர்த்தினார்.
எல்லோரும் டிரைவ் வேயில் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
“ஏன் சாரா வரவில்லை ?”
“அவளால் எக்ஸ்பெரிமென்ட்டை முடிக்க முடியவில்லை.”

சூரனின் கையில் மேலாக இருந்த கடிதத்தை எட்டிப் பார்த்த கேரன் எழுத்துக் கூட்டி “ட்யுக்” என்று படித்தாள். அதை எடுத்து அவள் முன் காட்டி, “அடுத்தது என்ன? என்று கேட்டான். அவளால் அதைப் படிக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். அதனால் அவனே படித்து முடித்தான், “ஜெனரல் ஹாஸ்பிடல்.”
“அது யாருக்கு என்று சொல்லட்டுமா ?”
“என் அம்மா ட்யுக்கில் வேலை செய்கிறாள் என்று உனக்கு ஏற்கனவே தெரியும்.”
“எஸ் ஏ ஆர் ஏ. சாரா” என்று கேரன் படித்தாள். “எனக்கும் ஸ்பெல் பண்ணத் தெரியும்.”
“சாரா அவள் முழுப் பெயர் இல்லை. டாட்! நீ அம்மாவை எப்படி அழைப்பாய் ?”
“சரவணப்பிரியா.”
“ச…ர…வ…வ… சாராவே எனக்குப் போதும்.”
ஒவ்வொரு கவராகப் பார்த்து வந்த சூரன், “டாட்! இந்த லெட்டரைப் பார். அட்ரஸ் நம் வீட்டு அட்ரஸ்தான். ஆனால் பெயர் வேறு யாரோ.” என்று அவன் கையில் கொடுத்தான்.
“சுவாமிநாதன் என் பழைய நீண்ட பெயர். அம்மாவின் பெயரைப் போல.”
கடிதத்தின் இடது பக்க மூலையில் அனுப்பியவரின் முகவரி எதுவும் இல்லை. பண உதவி கேட்கும் அமைப்புகளும், முதலீடு செய்ய அழைக்கும் கம்பெனிகளும் சிறிய எழுத்துகளில் அவர்கள் பெயரைப் போட்டிருப்பார்கள். அப்படி இருக்குமோ என்று திருப்பிப் பார்த்தான். அதுவுமில்லை. தபால் முத்திரையில் நியூ ஜெர்ஸி தெரிந்தது, ஆனால் ஊரின் பெயர் தெளிவாக இல்லை. போஸ்டல் கோடை வைத்து ஊரைக் கண்டுபிடிக்கலாம். அதற்கு முன் கவரைப் பிரித்துப் பார்த்தால் யாரிடமிருந்து வந்தது என்று தெரிந்து விடுகிறது.
“சாம்! உள்ளே போகலாமா ?”
கேரனின் குரல் கடிதத்தைப் பற்றிய சிந்தனையை வெட்டியது. சூரனிடமிருந்து மற்ற கடிதங்களையும் வாங்கிக் கொண்டு சாவியை எடுத்து முன் கதவைத் திறந்தான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் சாமி, சூரன் இருவரையும் போல் கேரனும் மாடிப் படியில் உட்கார்ந்து ~{க்களைக் கழற்றத் தொடங்கினாள்.
“இப்ப என்ன சாப்பிடலாம் ? எனக்கு ரொம்பப் பசி.”
“ஏனென்றால், கேரன் லஞ்ச் சரியாகவே சாப்பிடவில்லை. அமாண்டாவோடு பேசுவதிலேயே நேரம் போய் விட்டது.”
“அமாண்டாதான் பேசிக்கொண்டிருந்தாள். நான் பாட்டுக்குக் கேட்டுக் கொண்டிருந்தேன்.”
“அப்ப சாப்பிடுவதற்கென்ன ?”
கேரன் குற்ற உணர்;வோடு மௌனம் சாதித்தாள். “போனால் போகிறது”, என்று சாமி அவளுக்குச் சமாதானம் சொன்னான். “மில்க் அன் குக்கிஸ் இன்று வேண்டாம். வேறு ஏதாவது சாப்பிடலாம்.”
“சாமி, எனக்கு சப்பாதி செய்து தருகிறாயா ?”
“அதற்கு நேரமாகும். இன்று மாலை ஸ்விம்மிங் போவதற்கு முன் கட்டாயமாக உனக்குச் சப்பாத்தி செய்து தருகிறோம்.”
“மாகரோனி அன் சீஸ்.”
“~_ர்.”
சமையலறைக்கும் அதை ஒட்டியிருந்த Nஃபமிலி ரூமுக்கும் நடுவிலிருந்த கௌண்டரின் பக்கத்தில் இருந்த நாற்காலிகளில் இருவரும் உட்கார்ந்தார்கள். செக் எழுதவும், டெலிபோனில் பேசுவதற்கு மட்டும் பயன் படும் சிறிய டெஸ்கின் மேல் எல்லாக் கடிதங்களையும் சாமி வைத்தான்.
“இன்று ஹோம்வொர்க் இருக்கிறதா ?”
“அதிகம் இல்லை. பத்து நிமிடம் கூட ஆகாது.”
“மாகரோனி செய்ய அந்த நேரம்தான் ஆகும். அதற்குள் முடித்துவிடுங்கள்.”
பதில் ஏதும் சொல்லாமல் புத்தகப்பைகளை எடுத்து வந்து புத்தகங்களைக் கௌண்டரில் பரப்பினார்கள்.
சாமி பாத்திரத்தில் தண்ணீரை அளந்து விட்டு அடுப்பின் மேல் வைத்து உயர் வெப்;பத்திற்கு மாற்றினான். பான்ட்ரியைத் திறந்து மாகரோனி-சீஸ் பொட்டலத்தைப் பிரித்துக் கொதிக்கும் நீரில் மெதுவாகப் போட்டுக் கிளறினான். இன்னும் எட்டு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். செய்முறையில் போட்டிருந்த மற்ற பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டான்.
“சூர்! ஸ்விம்மர் எப்படி ஸ்பெல் பண்ண வேண்டும் ?”
நம் ஊரில் ஐந்து வயதுக் குழந்தைகள் எத்தனை மணி நேரம் ஹோம் வொர்க் செய்வார்கள் என்று யோசித்துப் பார்த்தான். பிறகு கடிதத்தின் நினைவு வந்தது. அவன் தந்தையால் எழுத முடிந்த போது அவரிடமிருந்து வந்த கடிதங்களில் அவனுடைய பழைய பெயர்தான் இருக்கும். ‘மற்றவர்களுக்கு வேண்டுமானால் நீ சாமி ஆகியிருக்கலாம், ஆனால் எனக்கு எப்பவுமே நீ சுவாமிநாதன்தான்’ என்பது அவர் எண்ணம். அவனுடன் இந்தியாவில் படித்த பழைய நண்பர்களின் தொடர்பு குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அவனுடைய நண்பனின் அண்ணா ஒரு முறை சிகாகோவிலிருந்து கூப்பிட்டார். ;விசிட்டுக்கு வந்திருக்கேன். எப்படி இருக்கே ? உன் நம்பரை டெலிஃபோன் டிரெக்டரியில் சுவாமிநாதன்னு தேடினேன். அப்புறம் மணிதான் சொன்னான் நேதன்கிற பேருல பாருப்பான்னு.’
கேரன் புத்தகத்தை மூடும் சத்தம் கேட்டது.
அடுப்பின் சூட்டைத் தணித்து மீதி சாமான்களைப் போட்டு நன்றாகக் கிளறினான்.
சாமி பாத்திரத்தை எடுத்து வந்தான். கௌண்டரில் இருந்த புத்தகங்கள் பைக்குள் திரும்பி இருந்தன. சூரன் இரண்டு தட்டுகளையும், கேரன் படம் போட்ட இரண்டு பிளாஸ்டிக் டம்ளர்களையும் எடுத்து வந்து கௌண்டரில் வைத்தார்கள். இரண்டு தட்டுக்களில் போட்ட பிறகு பாத்திரத்தில் கொஞ்சம் மிச்சம் இருந்தது. “இது உனக்கு” என்று கேரனிடம் சொன்னான். “சூடாக இருக்கும். ஜாக்கிரதை.”
“என்ன ஜூஸ் கொடுக்கட்டும் ?”
“ஆப்பிள்”
“ஆரஞ்சு”
அவர்கள் பேசிக்கொண்டே சாப்பிடத் தொடங்கினார்கள்.
“இன்று பாஸ்கெட் பால் கேமில் ட்யூக் நிச்சயமாக ஜெயிக்கும்.”
“இல்லவே இல்லை, காரோலைனாதான் ஜெயிக்கும்.”
டெஸ்கின் முன் உட்கார்ந்து கடிதத்தின் ஓரத்தை வெட்டிக் குலுக்கினான். மூன்றாக மடிக்கப் பட்ட ஒரு சிறு காகிதம். முன்னொரு தடவை அவனுடன் படித்த, பிறகு தொடர்பு விட்டுப் போன நண்பனின் சிறிய கடிதம் நினைவுக்கு வந்தது. ‘டெட்ரஹெட்ரனில் சாமி ஆர். நேதன் என்கிற பெயரில் ஒரு பேப்பர் பார்த்தேன். அவரும், எழுபதில் ஐ. ஐ. டியில் படித்த சுவாமிநாதனும் ஒருவரே என்றால் நாம் மறுபடியும் தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் மன்னிக்கவும்.’ இதுவும் அப்படிப்பட்ட கடிதமோ என்று எண்ணிக்கொண்டே காகிதத்தைப் பிரித்த போது ஏமாற்றம். அந்தக் கடிதத்தின் கீழே எந்தப் பெயரும் இல்லை. தமிழில் இருந்தாலும் கையெழுத்து எழுதிப் பழக்கப் பட்டவரின் எழுத்தாக இல்லை. எழுத வெகு நேரம் ஆகியிருக்கும்.
இந்தக் கடிதம் கிடைத்த ஐந்து நாட்களுக்குள் இதை இன்னும் ஐந்து பேருக்குக் கைப்பட எழுதி அனுப்பினால் பலன் உடனே கிடைக்கும்.
சங்கிலிக் கடிதம் என்று சாமிக்கு உடனே தெரிந்துவிட்டது. அதனால்தான் அனுப்புவரின் பெயர் இல்லையோ ?
மைகண்டேசுவரர் துணை
டெக்ஸஸில் ராக் சிடியில் கோயில் கொண்டுள்ள மைகண்டேசுவரர் அபார சக்தி வாய்ந்தவர். ஐந்து தலை கொண்ட மைகண்டேசுவரர் கோயில் கொண்டு ஐந்து ஆண்டுகளே ஆனாலும் அவர் தொண்டர்களுக்குச் செய்துள்ள உதவிகள் ஏராளம். அவற்றில் ஐந்தை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறோம்.
ராக் சிடி என்கிற பெயரை சாமி கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை டல்லஸ் அல்லது ஹியூஸ்டனை ஒட்டிய சிறிய ஊராக இருக்கலாம். இப்போதுதான் எல்லா ஊர்களிலும் கோவில் இருக்கிறதே. அவன் ஊரிலும் இருந்தது. ஆனால் சாமி எப்போதாவதுதான் கோவிலுக்குப் போவது வழக்கம். அதுவும் கலை நிகழ்ச்சிக்காகவோ அல்லது மற்ற யாரையேனும் அழைத்துப் போகவோதான்.

1. ராஜன் தம்பதிகளுக்கு பன்னிரண்டு ஆண்டுகளாகக் குழந்தைப் பாக்கியம் இல்லை. திரு ராஜனின் எண்ணிக்கை குறைந்த, வேகமற்ற உயிரணுக்களால் அவர்களுக்குக் குழந்தை பிறப்பதின் சாத்தியம் மிக மிகக் குறைவு என்று மருத்துவர்கள் அவநம்பிக்கை தெரிவித்தார்கள். ஆனாலும் மைகண்டேசுவரரின் அருளினால் முதல் செயற்கை முயற்சியிலேயே வெற்றி கண்ட அவர்களுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
சாமி நிமிர்ந்து உட்கார்ந்தான். சுவாமிநாதன் என்கிற பழைய பெயர் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகிறது என்கிற எண்ணம் மறைந்து நான் இதையெல்லாம் நம்புவேன் என்கிற எதிர் பார்ப்பு யாருக்கு இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அவனுக்கும் சரி, சரவணப்பிரியாவுக்கும் சரி உடன்பிறப்பு யாரும் இங்கே இல்லை. ஆனால் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களில் யாருக்குப் பக்தி அதிகம் என்று யோசித்தான். சரவணப்பிரியாவுக்குத் தெரிந்த சாந்தாவின் கணவர்தான் முதலில் நினைவுக்கு வந்தார். அவர் நா~;வில்லிருந்து கூப்பிடும் போதெல்லாம் ‘எங்களைப் பார்க்க வராவிட்டாலும் எங்கள் ஊரின் பிள்ளையாரைப் பார்க்கவாவது…’
“டிவியை ஆன் செய்யலாமா ?” கேரன் வேகமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டாள் போலிருக்கிறது. சூரன் இன்னும் தட்டைப் பார்த்துக் கொண்டு எதையோ யோசித்தபடி நிதானமாக மென்று கொண்டிருந்தான்.
“யெஸ். ரிமோட் தரையில் கிடக்கிறது பார்.”
திரை உயிர் பெற்ற போது படம் இல்லை, ஒரு அறிவிப்புதான் வந்தது – ஹாஸ்டேஜ் டேகன். அதை எழுத்துக் கூட்டிப் படித்தாள் கேரன். மீதி அறிக்கையில் அவள் கவனம் செல்ல வில்லை.
‘சூரன்! ஹோஸ்ட் ஏஜ் என்றால் என்ன ?”
“ஹோஸ்ட் என்றால்…. என் பிறந்த நாள் பார்ட்டிக்கு நான் உன்னை அழைத்து நீ வந்தால்..”
‘நீ அழைக்கா விட்டாலும் நான் வருவேன்.”
‘அப்படி நீ வரும்போது நான் உனக்கு ஹோஸ்ட். ஏஜ் என்றால்.. ஏஜ் என்றால்.. ஏன் கேட்கிறாய் ?”
கேரன் டிவியைக் காட்டினாள்.
சூரன் நிமிர்ந்து பார்த்தான். ஹாஸ்டேஜ் டேகன் என்கிற தலைப்பை மட்டுமல்ல, அதன் கீழிருந்த செய்தியையும் சூரன் படிக்க முயன்றான். அதில் டியுக் ஜெனரல் ஹாஸ்பிடல் என்கிற வார்த்தைகள் அவனைக் கலவரம் அடையச் செய்தன.
நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்தான். “டாட் ! டாட் ! நீ இப்பவே அம்மாவைக் கூப்பிட வேண்டும்;”
சாமி டெஸ்க்கிலிருந்து விரைவாக எழுந்து வந்து டிவியைப் பார்த்தான்.

மாநிலச் சிறையிலிருந்து தப்பிய ஒரு கைதி ட்யூரம் வரையில் வந்து ட்யுக் ஜெனரல் ஹாஸ்பிடலில் சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்தி;ருக்கிறான். துப்பாக்கி வைத்திருக்கும் அவனுடன் போலிஸ் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. விவரங்கள் தெரிந்தவுடன் அறிவிக்கப் படும்.
குரலில் அதிகம் பதற்றம் காட்டாமல், “கூப்பிட்டால் போகிறது” என்று சொல்லிக் கொண்டே சமையலறைப் பக்கமாக வந்து டெலிஃபோனில் சாராவின் எண்களை அழுத்தினான். இரண்டு முறை மணி அடிப்பதற்குள் பதிவு செய்யப் பட்ட ஒரு பெண்ணின் இயந்திரக் குரல்தான் மிக வேகமாகக் காதில் கேட்டது, “ஏராளமான அழைப்புகளினால் நெட்வொர்க் தற்போது இயங்கவில்லை. பிறகு அழைக்கவும்.” அவன் கையில் இருந்த ரிசீவர் உயிரிழந்தது. ஆனால் சாமி அதைக் கீழே வைத்து விடவில்லை. கல்லு}ரியில் அவன் கெமிஸ்ட்ரியும், சரவணப்பிரியா பாடனியும் படித்தாலும் தமிழ் வகுப்பில் அவள் அவனைப் பார்த்த ஆர்வம் நிறைந்த அந்த முதல் பார்வை அவன் கண் முன் ஒரு கணம் தோன்றியது. “ஹலோ! சாரா! யூஆர் ஓகே ? இப்பதான் டிவியிலே பார்த்தோம்….வெளியிலே யாரும் போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களா ?…..கேரனும் சூரனும் இப்பதான் சாப்பிட்டு முடிச்சாங்க….”
சாமி பேசுவதைக் கேட்டு சூரனும் அவனுக்குச் சற்றுப் பின்னால் கேரனும் மிக மெதுவாக அவனை நோக்கி வந்தார்கள்.
“சூரனுடன் பேச வேண்டுமா ? உன்னால் முடியாதா ? டெலிபோனை அதிகம் உபயோகிக்க வேண்டாம் என்று சொல்கிறார்களா ? சரி பிறகு கூப்பிடு”, என்று ஆங்கிலத்தில் நிதானமாகவும், தெளிவாகவும், சற்று சத்தமாகவும் பேசியபடி டெலிபோனை அதனிடத்தில் வைத்தான்.
தன் குரலில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கவலையும் பயமும் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அதைக் கேட்டுக் கேரனும் சூரனும் திருப்தி அடைந்தார்களா என்று தெரியவில்லை. சூரனின் கண்களில் இலேசான ஈரம். அது கண்ணீராகச் சேர்வதற்கு முன், “கமான் சூர்! சாரா வில் பி ஆல்ரைட்” என்று அவனை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கிருக்கும் சோபாவின் திண்டுகளையும், தலையணைகளையும் வைத்துக் கொண்டு வீடு கட்டி விளையாடுவது வழக்கம். அன்று அவர்கள் குரல் சற்று அடங்கியே இருந்தாலும் அவர்கள் விளையாடச் சென்றதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது. கேரனுக்கு மிக்க நன்றி. அவள் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த செய்தி தெரியாது போல் இருக்கிறது. தெரிந்திருந்தால் உடனே உதவி வேண்டுமா என்று கூப்பிட்டிருப்பார்கள்.
தன்னால் சரவணப்ரியாவுடன் தொடர்பு கொள்ள இயலாதது போலவே நிலமை சீராகும் வரையில் அவளாலும் தன்னனை அழைக்க முடியாது என்று சாமி உணர்ந்தான். சரவணப்பிரியா இரண்டு மணிக்கு அவனைக் கூப்பிட்டது நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகுதான் இது நடந்திருக்க வேண்டும். அவளுக்குக் கால தாமதம் ஏற்படாமல் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். டிவியில் சாதாரண நிகழ்ச்சிகள் வரத் தொடங்கி, திரையின் அடியில் எழுத்துகள் ஊர்ந்தன. ஆனால் அதே செய்திதான், புதிதாக எதுவுமில்லை. இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.
அன்று காலையில் அவள் வேலைக்குக் கிளம்பும் தோற்றம் அவன் மனதில் எழுந்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள். ‘இன்னிக்கு செமினார் ஸ்பீக்கரோடு லஞ்ச் சாப்பிடப் போகணும்’ என்று அவள் சொன்னது நினைவிக்கிறது. ஆனால் என்ன முயன்றாலும் அவள் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு தீர்மானத்துடன் சாமி புதிர்க் கடிதத்தை எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் தன் ஆபீஸ் அறைக்குச் சென்றான். மேஜையின் மேல் இருந்த கம்ப்யூட்டரின் கீ போர்டை நகர்த்தி விட்டு நாற்காலியில் உட்கார்ந்தான். ஐந்து வெற்றுத்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு மிக வேகமாக எழுதத் தொடங்கினான் எல். ஆர். சுவாமிநாதன்:
இந்தக் கடிதம் கிடைத்த ஐந்து நாட்களுக்குள்……


(venkataraman.amarnath@vanderbilt.edu)

Series Navigation

குரல்செல்வன்

குரல்செல்வன்