இணையதமிழின் ஒருங்கிணைப்பு

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

முனைவர் மு. பழனியப்பன்


முனைவர் மு. பழனியப்பன்

இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,

புதுக்கோட்டை

தமிழ் இணையப் பரப்பு விரிந்து கொண்டே போகின்றது. கட்டுக்குள் அடங்காத நிலையில் வலைப்பதிவுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வலைப்பூ, வலைதளங்கள், மின்குழுமங்கள், இணைய நூலகங்கள், இணைய இதழ்கள் என்ற பல் கோண வளர்ச்சி பெற்றுள்ள இற்றை நிலையில் இவை அத்தனையையும் இணைத்து ஓர் ஒருங்கிணைப்பை நிகழ்த்த வேண்டுவது அவசியத் தேவையாகும். ஓரே தளத்தில் ஒரே நிரலில் அத்தனையையும் கோர்த்து வைத்துக் கொண்டால் தினம் தினம் பல தளங்களில் தேடி அலைய வேண்டிய தொல்லை இருக்காது. தமிழ் உலகை ஒரே தளத்தில் கண்டு உலக அளவில் ஒற்றுமை உணர்வையும் வளர்க்க இயலும். ஒன்று கலக்கவும் இயலும்

இணைய நூலகங்களின் இணைப்புப்பாலம்

குறிப்பாக முதலில் செய்ய வேண்டியது இணைய நூலகங்களுக்கான இணைப்பு ஆகும். மென்நூல்களை இலவசமாகப் பார்வையிட ஏற்ற வகையில் பலப்பல இணையக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் ஒன்று கூடி ஒருங்கிணைந்த உலகத் தமிழ் இணைய நூலகத்தை உருவாக்க வேண்டும். ஒரு சில மின்மடல்களில் இதனைச் சாத்தியமாக்கிவிட இயலும்.

இவ்வாறு செய்கையில் எடுத்துக்காட்டிற்குச் சிலப்பதிகாரம் குறித்த அனைத்து மென் நூல்களையும் பார்வையிட வசதியாகிவிடும். “நூலகம்” என்ற இணைய நூலகத்தளம் தன் தளத்தில் ஏறக்குறைய அனைத்து நூலகத் தொடர்புகளைத் தந்து இதற்கு முன்மாதிரியாகி உள்ளது. இவ்வாறு ஒரு ஒருங்கிணைந்த நூலகத்தை உருவாக்குகையில் அதற்கான முறைமைகள் சரிவர வகுக்கப் பட வேண்டும். இம்முறைமைகளில் கீழ்க்காணம் செயல்பாடுகள் முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை ஆகும்.

1. நூலகங்கள் தன் தனித்தன்மையோடு இயங்க உரிமை தரப்பட வேண்டும். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பிற்கு வழி வைக்கப் பட்டு அது ஒரு பொதுத்தள மரபுக்கு உட்பட்டதாகவும் இயங்கவேண்டும்.

2. எதிர்காலத்தில் இடம் பெறும் நூல்களும் அந்தந்த வகைமைக்குள் சென்றுசேரும் படியான வசதி ஒருங்கிணைந்த நூலகத் தளத்திற்கு வேண்டும்.

3. ஒரே நூல் அனைத்துத் தளங்களிலும் வெவ்வேறு முறையில் அமைந்திருந்தாலும் ஏற்கப் பட வேண்டும். அவற்றை ஒதுக்க வேண்டாம். அதாவது பிடிஎப் கோப்பு, சாதாரண கோப்பு என்று கோப்பு எவ்வடிவில் இருந்தாலும், அல்லது உரை இல்லாது, உரையோடு, எளிய உரை, அல்லது மரபுரை போன்ற எதனோடு இருந்தாலும் நூல்கள் ஒரே தலைப்பில் அமையும்படியான மென் பொருள் உருவாக்கப்பட்டு செயல் படுத்தப்பட வேண்டும்.

4. தேடுதல் வசதி மேம்படுத்தப்பட வேண்டும்.

5. பல்வகைப் பகுப்புடையதாக இந்நூலக அட்டவணை அமையவேண்டும். பொருளடிப்படை, ஆசிரியர் அடிப்படை, கால அடிப்படை போன்ற அடிப்படைகளில் அட்டவணை பெறத்தக்கதாக இருக்க வேண்டும்.

இப்படிச் செய்ய முனைந்தால் மதுரைத்திட்டம், சென்னை லைப்ரரி என்று ஒவ்வொரு நூலுக்கும் தேடு பொறி தேடி எழுத்துரு தேடி அலைந்து நேரம் போக்கத் தேவையில்லை. வசதியான நூலக இணைப்பைப் பெற்று அமைதி கொள்ள முடியும்.

இந்தப் பகுதி மின்தமிழ் மடல் குழுமத்தில் மிகப் பெரிய அளவில் விவாதிக்ப்பட்டது. ஏறக்குறைய ஐம்பது பக்கங்களுக்கு மேலே காட்டப் பெற்ற செய்தி குறித்து விவாதிக்கப்பட்டது. திருவாளர்கள் கோபி, கண்ணன், சந்திரசேகரன், வினோத், இன்னம்பூரன் போன்ற இணைய நூலகப் பதிவாளர்கள் கலந்து கொண்டு தத்தம் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர்.

தற்போதைய கணக்கின்படி பின்வரும் அளவில் நூல்கள் இணையப் பதிப்பாக வந்துள்ளன என்பது தெரியவருகிறது.

நூலகத்திட்டம் – 5000

தமிழம் – 1200

தமிழ் மரபு அறக்கட்டளை – 200

இன்ரர்நெற் ஆர்க்கைவ் – 200

யூலிப் – 300

ஏனையவை – 200

என 7000 இணையத்தில் உள்ளன. இவற்றில் சுமார் 4800 மின்னூல்களின் விபரங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவர்களின் விவாதக் கருத்துக்களின் அடிப்படையில் நூலகச் செயல்பாட்டில் சில வரைமுறைகளை வகுத்து கொள்ள முடிகின்றது.

இணையப் பதிப்பில் பதிக்கப் பெற்றுள்ள நூலைத் தேடித்தந்தவர், அதனை வலையேற்றியவர், அதனை கணினி அச்சு ஆக்கியவர் போன்றவற்றையும் தருவது நூலாசிரியர், உரையாசிரியர் போன்றவர்களை நூல் பகுயில் குறிப்பிடுவது போன்று முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் நூல்களைத் தரவிரக்கம் செய்கின்ற வாய்ப்பை முலத்தளத்தில் இருந்தே பெறவேண்டும். இதன் முலம் குறிப்பிட்ட அத்தளத்தின் பயன்பாட்டை பெருக்க இயலும். தரவிரக்கம் என்பதை மற்ற நூலகத்தளங்கள் எக்காரணம் கொண்டும் முல தளத்தின் துணையின்றிப் பெறும் முறையில் அமைக்கக் கூடாது.

மற்றவர்களின் உழைப்பில் விளைந்த நூல் பதிவுகளை, இணைப்பைப் பெறுகையில் அவர்களின் அனுமதி பெற்றே பயன்படுத்தப்படவேண்டும் என்பது இணைய நடைமுறையாக்கப்பட வேண்டும்.

தன்னலமின்றி உழைத்துத் தமிழை, தமிழ் நூல்களை ஏற்றம் செய்யும் இணையவியலார்களை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சில நூல்களையாவது தமிழர் ஒவ்வொருவரும் பதிவிட்டு இணைப்படுத்தவேண்டும். குடிசைத் தொழில் போல இப்பணி நடைபெற வேண்டும்.

மேற்கருத்துக்கள் மின்மடல்கள் வழியாக பெறப்பட்ட செய்திகளாக நான் உணருகிறேன்.

வலைப்பூக்களின் சங்கமம்

அடுத்து வலைப் பூக்களின் செய்திகளை அன்றாடம் காண தமிழ்மணத்திற்கும், தமிழிஷூக்கும், திரட்டிக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. அங்குச் சென்றாலும் நம் பதிவர்கள் வளமானவர்கள். ஒரே பதிவை அத்தனை வலைப்பூ மையங்களுக்கும் அனுப்பித் திரும்பத்திரும்பப் பார்த்தையே பார்க்க வேண்டிய சூழலை உண்டாக்கி விடுவார்கள்.

வலைப்பூ மையங்கள் அனைத்தும் ஒரு குடைக்குள் வந்துவிட்டால் வலைப்பதிவர்களுக்கும் பதிவை காணவைக்கும் செயல் எளிமையாகிவிடும். பார்ப்போருக்கும் ஒரே நேரத்தில் அனைத்து இடுகைகளையும் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். திரும்பத் திரும்ப பார்த்த வலைப்பூச் செய்தியையே பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது.

வலைப்பூக்களின் செய்திகளைச் சேமித்து ஆசிரியர் அடிப்படையில் தொகுக்கும் தொகுப்புப்பணி தமிழ்மணத்தில் சிறப்பாக உள்ளது. இவ்வாறு தொகுக்கப்படும் போது அது தரமான எதிர்காலத்திற்குவேண்டிய செய்தியா என்று வலைப் பதிவரிடமே கேட்டு அதன்படி அத்தொகுப்பை நிரந்தரப் பதிவாக உருவாக்கினால் தமிழ் மேம்படும். வலைப்பதிவில் எழுதுவோர் தரம் என்பது தற்போது மேம்படுத்தத்த தக்கதாகவே உள்ளது.

இணைய இதழ்களின் மையம்

இணைய இதழ்கள் ஒவ்வொரு நாட்டில் வாழும் அந்நாட்டுத் தமிழர் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. இதன் முலமாக பல நாடுகளில் வாழும் தமிழர்தம் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முதலானவற்றைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. தமிழ் மக்களின் உயிர்நாடியாக விளங்கும் இவ்விதழ்கள் இணைந்த ஒரே இதழ்த் தொடுப்புத் தளம் கட்டாயத் தேவையாகும். இணைய இதழ்கள் வெளிவருகின்ற நாட்களும் வெவ்வேறாக இருப்பதால் அந்நாளைக் கருத்தில் கொண்டு புதிய செய்திகளைக் காண வேண்டிய சிக்கல் தீரவும் இது வழி செய்யும்.

இணைய இதழ்களின் மையத்தை உருவாக்குகையில் அச்சில் வரும் இதழ்கள் தரும் செய்திகளை இணைக்க வேண்டிய அவசியம் கூடத் தேவையில்லை. ஏனெனில் அதில் பல சட்டச் சிக்கல்கள் உருவாகலாம். இணைய இதழ்களுக்கான ஓருங்கிணைப்பாகவே இதனை உருவாக்கிக்கொள்ளலாம். இதிலும் இணைய இதழ்களின் தனித்தன்மை பாதிக்காமல் காப்பாற்றப் படவேண்டும். காப்புரிமையும் காப்பாற்றப்படவேண்டும்.

இணையதளங்களின் தொகுப்பு

அடுத்துத் தமிழ் இணைய தளங்களின் தொகுப்பாகச் செயல்படும் மையம் ஒன்று ஏற்பட வேண்டும். இதனோடு விக்கிபிடியா, கலைக்களஞ்சியம் போன்றவற்றின் தொடுப்புகளும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த தமிழ்த்தள மையம் ஏற்பட்டால் தமிழர்கள் ஒன்றுபட இயலும். இணைய தளங்களின் வரிசையின் அவற்றின் பாடுபொருளுக்கு ஏற்பவும், நாடு அளவிலும் வகைமை செய்யப் பெறல் வேண்டும்.

இதுபோன்று தமிழர் இசை, தமிழர் வரலாறு, தமிழர் கலை போன்றனவற்றைக் காட்டக் கூடிய காணொலிகள், வலைதளங்கள், ஒலித்தொகுப்புகள் போன்றனவும் ஒருங்கிணைக்கப் பெறவேண்டும். இது போன்று மின்மடல் குழுக்கள் ஒருங்கிணைப்பும் நிகழ வேண்டும்.

இவற்றுக்கு முன்மாதிரியாகத் தற்போது தமிழ் வானொலிகள் விளங்குகின்றன. பல தளங்களில் தமிழ் வானொலித் தொடர்புகள் பதிவுகளாகவும், நேரடியாகக்கேட்கவும் கூடிய அளவில் தொகுக்கப் பெற்று வருவது பாராட்டுக்கு உரியது.

விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தரப்பெற்றுள்ள வெளி இணைப்புகள் போன்றவையும் இவ்வகையில் நோக்கத்தக்கனவே.

தமிழர்க்கான அல்லது தமிழ்ச்செய்திகளுக்கான மின்னஞ்சல், தேடுபொறி, மேற்சொன்ன அனைத்தும் இணைந்த ஒரே தளம் உருவாக வேண்டியது அவசியத் தேவை என்பது மட்டும் உறுதி. இருப்பினும் நாட்டுஅடையாளம், பிரதேச அடையாளம் போன்றவற்றிற்கான தனித்தன்மை இதனுள் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வகையில் செயல்பட தமிழர்க்கு மனம் வேண்டும். பணம் வேண்டும். இவற்றைக் கடந்து எளிதில் வெற்றி பெற தமிழ் இணைய உலகம் பல இணைய மாநாடுகளை நடத்திடவும் வேண்டும்


M.Palaniappan

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்