இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


அன்புள்ள புஹாரி! சேது! விக்கி!

வணக்கம்!

2006 செப்டம்பரில் நான் கனடா வந்திருந்தபோது திரு ஆர்.எஸ். மணி அவர்கள் என்னைக் கவிஞர் புஹாரிக்கு அறிமுகம் செய்துவைத்தார். புஹாரியின் வீட்டில் நடந்த அந்த இனிய சந்திப்பு, இன்றும் எனது இனிய நினைவுகளில் ஒன்று. அதுவரை, தமிழ் இணையத்திற்குச் சற்றும் பழக்கமில்லாதவனாக இருந்தேன். பட்டிக்காட்டானுக்குப் பட்டினப்பிரவேசம் செய்துவைத்தது புஹாரிதான்! பெரிதாய்ப் படைப்பாற்றலோ, இலக்கிய ஆர்வமோ இல்லாத ஒரு சராசரி மனிதனாகிய எனக்குப் பல இனிய தங்கைகளை, தம்பிகளை, நண்பர்களைத் தந்தது ‘அன்புடன்’ குழுமம். அவர்களில் சிலரையேனும் சந்திக்கும் இனிய வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.

‘அன்புடன்’ பலவிதமான போட்டிகளை அறிவித்தது. எனக்கு உடல்நலம் குன்றிப்போனதாலும், அதனால் என் பணிகளை மறுபரிசீலனை செய்யவேண்டி வந்ததாலும் என்னால் இவற்றில் பங்குகொள்ள முடியாமற் போனது. சிறு வயதிலிருந்து, பலவிதமான போட்டிகளில் கலந்துகொண்ட நான் தெரிந்துகொண்டது என்ன தெரியுமா? போட்டி என்பது நண்பர்கள் மத்தியில்தான் நடக்க முடியும்! போர் என்பது பகைவர்கள் நடுவேதான் மூளும்! ஆற்றங்கரையின் அரசக்கிளையில் ஏறிக் குதிப்பது, கில்லி, ஓட்டம், கபடி, சைக்கிள் என்று எத்தனை எத்தனைப் போட்டிகள்! ஒன்றிலாவது பரிசு கிடையாது, வீட்டுக்குத் திரும்பினால் கிடைக்கும் உதை, திட்டு இவை தவிர! நாம்தான் நடுவர்கள்! போட்டி முடிந்தபின், பங்கேற்பாளர்கள் தோளோடு தோள் சேர்ந்து செல்வோமே! அங்கே, வெற்றிக்கே பொருளில்லாத போது தோல்விதான் ஒரு பொருட்டாகுமா?

இந்தக் கண்ணோட்டத்தில்தான் நான் இந்தப் போட்டிகளைப் பார்க்கிறேன்; இப்படித்தான் நீங்களும் காண்பீர்கள் என்றும் நம்புகிறேன். என்னதான் வீட்டில் அம்மா விதம்விதமாய்ச் சமைத்துப் போட்டாலும், கோவிலில் முண்டியடித்துச் சற்று வேகாத சுண்டலைக் கையில் வாங்கிக்கொண்டு வெளிவரும்போது தோன்றுகின்ற வெற்றிப் பெருமிதம் இருக்கிறதே, அதற்கு ஈடு இணையுண்டா? இந்தப் போட்டிகள் நமக்குத் தெம்புதரவே, நம் மனங்கள் மீண்டும் உற்சாகம் பெறவே!

மறுபடியும் இந்த வருடம் கனடா வந்திருக்கிறேன். அதே ஆர்.எஸ்.மணி அவர்கள் மீண்டும், புஹாரியின் புது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நல்ல விருந்து. நீதான் இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் என்று இனிமையாக, பதில் எதிர்பாராத உறுதியோடு சொல்லிப் பணித்தார் புஹாரி.

இந்த இனிய பொறுப்பை, எனக்குச் செய்யப்பட்ட கெளரவமாகக் கருதி வணங்கி மகிழ்கிறேன். உடல், நலமாக இருந்திருந்தால், பெரிய அளவில் இந்தத் திருவிழாவில் பங்குகொண்டிருந்திருப்பேன். தொலைபேசி மூலமே வலைவீசி இழுக்கும் புஹாரியின் நிர்வாக லாகவம், ஒரு பள்ளித் தலைமை ஆசிரியையின் திறமையை இயல்பாகவே பெற்றிருக்கும் சேதுவின் தெளிவான குறிப்புகள், சாரணர் போல் அமைதியாய்ச் செயற்படும் விக்கியின் உழைப்பு, இவற்றை ரசிக்கிறேன், பெரிதும் மதிக்கிறேன். புஹாரியின் ஊருக்கே வந்து, அவர் வீட்டுக்குள் புகுந்து பாடாய்ப் படுத்தி விருந்துண்டுவிட்ட பிறகு, மாட்டேன் என்று எப்படிச் சொல்வதாம்? எந்த நிமிடம் தலைமை ஆசிரியை ‘பெஞ்ச் மேல ஏறு’ என்பார்களோ என்ற பயம் வேறு!

ஏதோ, எப்போதும் தட்டிக் கொடுத்தே பழக்கப்பட்டவன், ஏனோ சற்று தட்டிப் பார்க்க ஒப்புக்கொண்டேன்.

சரி, இதோ எனது கருத்துக்கள்:

* எனக்கு அனுப்பப்பட்ட பாடல்கள் 10; ஆக்கியோர் 7; எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. ‘அன்புடனி’ன் முயற்சி வெற்றி என்றே தோன்றுகிறது. இந்தப் பாடலகளின் மூலம் எனக்குப் பலரின் இதயங்களில் எளிதாக நுழைந்துகொண்டு தாழ்வாரத்தில் கால் நீட்டிக்கொள்ள முடிந்தது. பங்கு கொண்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள்! கரவொலி!

* இயற்கை, மானுடம், சிருங்காரம், போற்றுதல் போன்ற பல தளங்களிலிருந்து வந்திருக்கின்றன இந்தப் பாடல்கள். இயற்றியவர்களே மெட்டும் அமைத்துப் பாடப்பட்டவை மூன்று பாடல்கள்; மற்றவற்றை இயற்றியவர் வேறு, மெட்டமைத்துப் பாடியவர்கள் வேறு. இரண்டாம் வகையைச் சேர்ந்தவற்றில் நான்கு பாடல்கள் பெண் குரல்களில் ஒலிக்கின்றன; இயற்றியவர்கள் ஆண்களோ பெண்களோ தெரியாது.

* கருத்து, வடிவம், மெட்டு, பாடிய விதம் என்ற நான்கு அளவுகோல்களை நிர்ணயித்துக்கொண்டு, ஒவ்வொன்றுக்கும் 1-10 அளவு வைத்து மதிப்பெண்கள் போட்டுக் கொண்டேன். எழுதியவரே இசையமைத்துப் பாடியது, எழுதியவரே இசையமைத்துப் பின்னணி இசையுடன் பாடியது, தானெழுத வேறொருவர் இசையமைத்துப் பாடியது போன்ற பிரிவுகளைக் குறித்துக்கொண்டு அதற்கு ஏற்பவும், ஒருவருக்கு ஒரு பரிசுதான் என்ற விதிமுறையை மனதில் வைத்துக்கொண்டும் தொடர்ந்தேன்.

* ஒரே ஆள் எடுக்கும் முடிவுகள் சரியாக இல்லாமற்போக வாய்ப்புக்கள் அதிகம்தான். மேலும், வந்தவற்றை வைத்துக் கொண்டு, விதிமுறைகளுக்கேற்ப முடிவெடுப்பதிலும் வரம்பின் நெருக்கடி வலிக்கிறது. இவை குறித்து நான் செய்வதற்கொன்றுமில்லை!

முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னால், அளவைகளைத் தெரிவித்ததுபோல் அபிப்பிராயங்களையும் தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன். இசைக்கவிதை அல்லது இசைப்பாடலுக்கு வேண்டியவை எவை?

1. சொல்லும், இசையும் குலவவேண்டும்; மல்யுத்தம் செய்வது வேறு; மார்புறத் தழுவுவது வேறு! தானே மெட்டுப் போடும்போதும் தவறலாம்; மற்றவர் இசையமைக்கும் போதும் அழகாய் அமையலாம்.

2. ஒரு கவிதையில் எடுப்பாய்க் கவர்கிற வார்த்தை, பாடலில் கடுக்கும் முள்ளாய் நெருடக்கூடும். தூய பண், அல்லது ராகம் இவை, எந்தக் கவிதையையும் இசைப்பாடலாக்கிவிட முடியும். ஆனாலும், எல்லாக் கவிதைகளும் பாடல்கள் என்கின்ற வரிசையில் சேர்ந்துவிட முடியாது. ஆனால், இசைப்பாடலில், கவிதை, கண்ணேனும் சிமிட்ட வேண்டும்! ஆக, ராகமாக்கப்பட்ட கவிதையும், கவிதைப்படாத கானமும் உள்ளத்தைத் தொடமாட்டா.

3. எனவே, கவிதை, பாடல் இவற்றின் வடிவங்கள் வேறுபடத்தான் செய்கின்றன. இதை எப்படித் தெரிந்து கொள்வது? இதயம், இசையில் தோய்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட இதயம், ஒவ்வொரு சொல்லிலும் ஒளிந்துகொண்டிருக்கும் இசையை இயல்பாகவே கண்டுகொள்ளும். உணர்ச்சியுற்றவன் வாக்கில் கவிதையின் சொற்கள் வந்து விழுவதைப்போலவே, இசையோடிசைந்த கவிஞனின் மனதில் கவிதையும் கானமும் கைகோத்துக் கொண்டே துள்ளி வருகின்றன!

4. பாவனையின் பங்கு இன்றியமையாதது. அதுதான் கானத்தின் ஜீவன். சங்கீதம், ஸ்வர நுட்பங்களை நம்பியில்லை; மனதின் அந்தரங்க உணர்விலிருந்து எழுகின்ற பாவனையை ஆதாரம் கொண்டே அமைந்திருக்கிறது. ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ என்று பாடும் போதே என் மனமெனும் பாறை நெகிழ்ந்து நெய்யாகிவிடவேண்டும்.

இவ்வளவு போதும் என்றே நினைக்கிறேன். விட்டால், நெடுங்கட்டுரையாகிவிடக் கூடிய ஆபத்து புரிகிறது!

இனி, முடிவுகள்:

பா.எண், பாடல், கருத்து, வடிவம், மெட்டு, பாவனை, மொத்தம்

1 பூவானது 7 7 6 6 26

கணப்பொழுதும் இடைவெளியின்றி இயற்கை சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருக்கும் பாடங்களைக் கேட்குமாறு இந்தப் பாடல் பணிக்கிறது. சன்னமான சொற்கள்; பொருத்தமான மெட்டு; ‘கடவுளின் சாயலா? இயற்கை கவிதைக் கூடலா?’ என்பது இந்தப் பாடலின் ஜீவ வரி. இனிய கவிதை இது.

இயற்றியவரே மெட்டமைத்துப் பாடியிருக்கிறார். அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும், உணர்ச்சி, அவர் குரலைக் கேட்கும்படிச் செய்கிறது.

2அ நிசப்தம் 7 7 6 6 26

விண்மீன்கள், கோள்கள், இனம்கண்டு கொள்ளப்படாத எரிகற்கள் போன்ற கணக்கற்ற கோடிகோடிக்கோடிப் பொருட்களை ஒன்றாகத் திரட்டினாலும், வெட்ட வெளியில் அவை ஒரு பட்டாணி அளவுக்குக் கூட வராது! அண்டவெளி அத்தனைப் பெரிது! வெட்ட வெளியின் இயல்பு நிசப்தம். இந்தக் கூற்று இங்கே ஓர் அழகான கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது. எல்லாம் இந்த நிசப்தத்தின் பின்னணியில்தான் நடக்கிறது. அந்த மகாசக்தியை அன்னையாகக் கருதும்போதும், அவள் முன்னிலையில்தான் எதுவும் நடக்கிறது என்பது, இந்தப் பாட்டில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

எழுதியவர் ஒருவர்; பாடியவர் இன்னொருவர்; பின்னணி இசையும் இருக்கிறது. பாடகரின் குரல் அங்கங்கே ஒத்துழைக்காமல் போனாலும் கருத்தின் கனமும், பின்னணி இசையின் மென்மையும், மெட்டின் கம்பீரமும் அதைச் சரிசெய்து விடுகின்றன.

2ஆ மலர்களிலே 5 6 6 5 22

வாணியைத் துதிப்பதாகத் துவங்கும் இந்த இனிய பாடல், பாண்டிச்சேரி அன்னையின் மீது எழுதப்பட்டிருக்கிறது. மலர்களுக்கும், அன்னைக்கும் நிலவிய உறவிலிருந்து துவங்கி, அன்னையைப் பராசக்தியாக வழிபடும் பக்திவரை விரிகிறது பாடல். நெடிய பல்லவி; பின்னிப் பின்னி வருகிறது.

எழுதியவர் ஒருவர்; பாடியவர் வேறொருவர். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. மெட்டும் பொருத்தமாகவே இருக்கிறது. இனிய பெண்குரல். இன்னும் இரண்டு முறை பழகிப் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

2இ புள்ளும் சிலம்பின காண் 6 6 6 4 22

இதுவும் அன்னையின் மீது இயற்றப்பட்ட பாடல். கதிரவனை அன்னைக்கு உருவகப்படுத்துகிறது. ஒளி என்பது தெளிவாகிய அறிவு; அதுவே அன்னை; இரவே உறக்கம்; அறியாமையே இருள். ஆயினும் ஒளியை அங்கீகரித்து வரவேற்காமல் அதனால் பயனில்லை; காலைக் கதிரொளியின் தங்கக் கிரணங்கள் எங்கும் விரிந்தாலும் வீட்டுக் கதவையெல்லாம் மூடிக்கொண்டால் அந்த ஒளியால்தான் என்னபயன் என்பதை இந்தப் பாடல் அழகாகச் சித்தரிக்கிறது.

எழுதியவர் ஒருவர்; பாடியவர் வேறொருவர்; பின்னணி இசையும், மெட்டும் நன்றாக இருக்கின்றன. நெடிய பல்லவிக்கு மெட்டுப் போடுவதும், நெடிய மெட்டுக்குப் பல்லவி எழுதுவதும் எளிதல்ல. ஆனால், பாடிய பெண்மணி, உச்சரிப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ‘விழிமின்!’ என்பது ‘விழுமின்’ என்று காதில் விழும்போது வருத்தம் மேலிடுகிறது. இன்னும் சிலவிடங்களிலும் அப்படியே.

2ஈ சிறு மழலையில் 6 5 5 5 21

இதுவும் அன்னையின் மீது புனையப்பட்ட பாடல். தன்னைக் குழந்தையாக்கி, தனது சொப்பு விளையாட்டில் தாயும் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்பதாக விரிகிறது பாடல்.
‘தாயிற் சிறந்த கோவிலில்லை வாயிலில் நிற்கின்றேன்
அன்னை எப்போதும் நீ வேண்டும் வரமாய்த் தரவேண்டும்
வேறொன்றும் கேட்கத் தெரியவில்லை அன்னை வருவாயா
வேறொன்றும் கேட்கத் தெரியவில்லை அன்னை வருவாயா?’
என்ற வரிகள் இந்தக் கவிஞரின் இயல்பான பக்தியை இதமாக வெளிப்படுத்துகின்றன.

பள்ளிகளில் இந்தப் பாடல் ஒலிக்கவேண்டும்.

எழுதியவர் ஒருவர்; பாடியவர் இன்னொருவர். மெட்டும், பின்னணி இசையும் இசைவாக இருக்கின்றன.

3 கையில் வந்த பெண்ணிலவு 6 6 5 5 22

சிருங்கார ரசம்சொட்டும் பாட்டு. பொதுவாக, இந்த மாதிரிப் பாடல்களைக் கண்ணன் அல்லது முருகன் மீது புனைவார்கள். இங்கே, காதலன் மீது காதலி பாடுவதைப்போல் நேரடியாக அமைந்திருக்கிறது. ‘உன் மேனியில் முத்தக்கவிதைகள் நான் வரைந்து வைப்பேன்’, ‘செவ்விதழ் உன் செவிமடல் வருடவே சிலிர்த்துச் சிரிப்பாய் நீ’ போன்ற வரிகளில், முள்மீது தென்றல்போல் நடக்கும் கவிஞரின் திறமையைக் காண்கிறோம்.

எழுதியவர் ஒருவர்; இசையமைத்துப் பாடியவர் வேறொருவர். பின்னணி இசை, விரகத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. மெட்டும் பொருத்தம்தான்; ஆனால், பாடியவர், கீழ்க்குரலில் பாடியிருப்பதால், சிருங்காரத்தில் சோகம் தூக்கலாகிவிடுகிறது. ‘முத்தக் கவிதைகள்’ என்பது இசையில் இன்னும் சரியாய் வந்திருக்கலாம். ஆனால், இடக்கான முதல் சரணத்தை இயல்பாக இசையின் வழிக்குக் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது.

4 வான் பூவே 5 6 6 6 23

மலினப்பட்ட மானுடத்தால் வன்முறை மிகுந்து பூமி சிவந்துவிட்டது. ஒரு ‘வெண்பூமி’ வேண்டுமென்று கேட்டு வருகிறார் இந்தக் கவிஞர். ‘யார்முதல்வன் எனும் தேடலில், மனிதனையே மறந்துவிட்டோம்,’ என்பது இந்தப் பாட்டின் களம்; ‘அன்பால் போடு ஒரு பூக்கோலம்தான்’ என்பது ஜீவ வரி.

எழுதியவர் ஒருவர்; இசையமத்துப் பாடியவர் வேறொருவர். மெட்டு சரியாக அமைந்திருக்கிறது. ‘ஒற்றுமை’, ‘நட்புடன்’ என்ற இடங்களில் இடக்கு நேராமல் இசை வந்திருப்பது அழகு. பின்னணி இசையில் திறமையும் நேர்த்தியும் தெரிகின்றன. சற்று நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்.

5 கவிதை கேட்க வாரும் 6 6 5 5 22

ஒரு கவிஞன், தன்னையும் தன் கவித்துவத்தையும் வேறுவேறாகக் காணமுடியாத ஒரு மனநிலையில்தான் தன் கவிதையைப் பற்றித் தானே பாடுகிறேன். இந்தச் சிறிய பாடலில் இந்த அபூர்வமான மனநிலையைக் காண்கிறோம். தன் கவிதையைக் கேட்க வருகவென நம்மை அழைக்கின்ற கவிஞர் தனது கவித்திறமை என்னென்னெல்லாம் செய்யும் என்பதைச் சொல்லி நம்மை இழுக்கிறார்.

இயற்றியவர் ஒருவர்; ஒரு பெண்மணி இதைப் பாடியிருக்கிறார். அழகிய ராகமாலிகையாய், தாளம் தேவைப்படாத தொகையறாக்களாகப் பாடல் அமைந்திருக்கிறது.

6 புத்தம்புது மனிதம் 6 6 4 5 21

இன்றைய உலகில், நம் வாழ்வைப் பீடிக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மனிதத் தன்மையின் மறுமலர்ச்சியே என்பதைச் சொல்லும் அழகான மரபுக் கவிதையாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். கவிஞர், தமிழ் வணக்கத்தைக் கட்டளைக் கலித்துறையிலும், அன்புடனுக்கு வணக்கத்தை நேரிசை வெண்பாவிலும் வடித்துவிட்டு, சொல்ல வந்த கருத்தை ஆனந்தக் கும்மியில் அமைத்திருக்கிறார். ஜாவர் சீதாராமன் குரலில் கம்பீரமாக அறிவிப்புத் தந்துவிட்டு, இனிய குரலில் பாடியிருக்கிறார்.

7 பாமாலை தந்த பாரதி 5 5 6 4 20

மகாகவி பாரதியின் மீது இயற்றப்பட்ட பாடல். சிறிய, எளிய கவிதை. பழைய முறையில் மெட்டமைத்திருப்பது பாடலுக்குப் பொருத்தமாகவும், இனிமை சேர்ப்பதாகவும் உள்ளது.

இயற்றியவரே பாடியிருக்கிறார். பின்னணி இசையும் இருக்கிறது. ஏதோ ஒலிப்பதிவுக் கோளாறினால் சரியாகக் கேட்க முடியவில்லை.

முடிவுகள்:

முதலில், இதில் பங்குகொண்ட அனைவருக்கும் என் பணிவான பாராட்டுக்கள். உண்மையில் சொல்கிறேன், பரிசுகளுக்காகத் தேர்வுசெய்ய, மிகவும் சிரமப்பட்டேன். ஒவ்வொன்றும் அதனதன் அளவில் நன்றாக இருக்கின்றன. ஒவ்வொரு பாடலும், வெவ்வேறு களம், வகை, விதம். எனவே, ஒன்றோடொன்றை ஒப்பிட்டுத் தெரிவுசெய்ய வழியே இல்லை. ஒவ்வொரு பாடலையும் அதன் களம், தளம், விதம், வகை இவற்றைப் பொறுத்தே தேர்ந்தெடுத்தேன்.

இவ்வளவு நல்ல படைப்புகளை வெளிக்கொணர்ந்த ‘அன்புடன்’ குழுமம் பாராட்டுக்குரியது. முறையாக, இந்தப் பாடல்களைத் தொகுத்துக் குறுந்தகடுகளாக வெளியிடும் காலம் தொலவில் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவுக்குக் கவிதையின் வீச்சும், இசையின் குழைவும் கலந்து வந்திருக்கின்றன இந்தப் பாடல்கள். நான் ஏதோ ஒரு மாஜி கவிஞனாக உணர்ந்தேன்! இந்தக் கவிஞர்களையும், அவர்களுக்குத் துணைநின்ற இசைக்கலைஞர்களையும் உடனே சந்தித்து அவர்களோடு சேர்ந்து பாடவேண்டும்போல் தோன்றுகிறது!

இதோ முடிவுகள்!

ஆறுதல் பரிசு 1
பாடல் எண் 4: வான் பூவே (வெண் பூமி)

ஆறுதல் பரிசு 2
பாடல் எண் 5: கவிதை கேட்க வாரும்

இரண்டாம் பரிசு:
பாடல் எண் 1: பூவானது

முதல் பரிசு:
பாடல் எண் 2அ: நிசப்தம்

(இந்தக் கவிஞர் நான்கு பாடல்களை அனுப்பியுள்ளார். நான்கும் தரமாக ஒலிக்கின்றன)

ஏழு பேர்களே பங்குகொண்டிருப்பினும், நான்கு பரிசுகள் போதவில்லை என்பதே என் கருத்து. அத்தனை வகையான அழகு! நீங்கள் தாமரையைத் தேர்ந்தெடுப்பீர்களா, இல்லை ரோஜாதான் சிறந்தது என்பீர்களா? எனக்கு, இந்தப் பரிசுகளின் எண்ணிக்கை திருப்தியளிக்காததால், ‘அன்புடன்’ நிர்வாகத்தாரின் அனுமதியுடன் நான் இன்னும் சில பாடல்களுக்குப் பரிசுகள் அளிக்க விரும்புகின்றேன். அவற்றுக்கு ஏதேனும் பெயர்வைத்துக் கொள்ளுங்கள்! இதோ, அந்தப் பரிசுக்குரிய பாடல்களின் விவரங்கள்:

1. பாடல் எண் 3: கையில் வந்த பெண்ணிலவு
2. பாடல் எண் 6: புத்தம்புது மனிதம்
3. பாடல் எண் 7: பாமாலை தந்த பாரதி

உடல், மிகவும் நலிவுற்றிருந்த வேளையில், இந்தப் பத்துப் பாடல்களைக் கேட்டது, என மனதிற்குத் தெம்பு சேர்த்தது. ‘அன்புடன்’ குழும நிர்வாகிகளுக்கும், இந்தக் கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் மீண்டும் என் நன்றி.

ரமணன்

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு