ஆவிகள் புசிக்குமா ?!

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ஜெயந்தி சங்கர்


சிங்கப்பூரில் பெரும்பான்மையினரான சீனர்கள் தங்கள் வேர்களைவிட்டுவிடாது இன்னமும் சில விழாக்களையும் பண்டிகைகளையும் புலம்பெயர்ந்து வந்துவாழும் இந்நாட்டிலும் தலைமுறைகள் பலகடந்தும் தொடர்ந்துகொண்டாடி வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாய் சீனாவில் கொண்டாடும் கோலாகலம் இங்கில்லாது போகலாம். இருந்தாலும் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் அந்தந்த வட்டாரத்தில் விழாக்கள் நடக்கின்றன. அவற்றில் முதன்மையானது ‘பசித்த ஆவிகள் விழா ‘ (Hungry Ghost Festival).

சீனாவில் தெற்கு சோங்க் அரசாதிக்ககாலத்தில் (Southern Song Dynasty) லியாங்க் வூ தி (Liang Wu Di) என்ற அரசனின் ஆட்சிகாலத்தில் இவ்விழா தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தாவோ (Tao) மதத்தினர் பூதத்தலைவன் ‘யென்லோ வாங்க் ‘ (Yenlo Wang)கின் பிறந்தநாள் இந்த மாதத்தில் வருவதால் இந்தக்கொண்டாட்டம் என்று நம்புகின்றனர். இம்மாதத்தில் யூலன் ஜேய் (Yulan Jie) என்னும் நாள் தான் தங்களுக்கு மிகவும் முக்கியம் என்கிறார்கள் பெளத்தர்கள். யூலன் என்றால் ‘கடைத்தேற்றுதல் ‘ என்று பொருள்.

இதற்கு புத்தமதத்தினரோ வேறு ஒரு கதை சொல்கின்றனர். சீனப்புராணப்பாத்திரமான மூ லான் (Mu Lan) தன் அம்மாவை மேலுலகத்திற்குக் காணச் சென்றான். அந்த மூதாட்டி உயிரோடிருக்கும்போது மிகவும் சுயநலவாதியாகவும் தீயவளாகவும் இருந்தாள். ஆகவே மேலுலகில் முட்படுக்கையின் மீது இருந்ததைப்பார்த்தான். மூ லான் அம்மாவைப்பார்த்ததும் அதிர்ந்தான். ஆவி ரூபத்திலிருந்த அவள் பசியோடு மிகவும் சிரமத்திலிருந்தாள். மகன் அவளுக்கு உணவூட்ட எண்ணினான். ஒவ்வொரு முறை உணவை வாயில் வைக்கும்போதும் அது சாம்பலானது. மிகவும் வேதனையடைந்த மகன் பூமிக்குத்திரும்பித் தன் புத்த ஆசானிடம் அம்மாவைக் காப்பாற்றும் வழியைக்கேட்டான். அவர் அவனை உணவு மற்றும் பானங்கள் தயாரித்து முன்னோர்களின் ஆவிகளுக்குப் படைக்கச்சொன்னார். பிறகு பெளத்த்பிக்குகளும் பிக்குனிகளும் சேர்ந்து மந்திரங்கள் ஓதிய பிறகே அந்தத் தாயின் ஆவிக்குப் பசிபோனது. இதன்பிறகு புத்தபிக்குக்களுக்கு முன்னோர் நினைவாக உணவிடும் வழக்கம் வந்தது. பெளத்ததில் இவ்விழாவை உல்லம்பனா விழா என்கின்றனர். உல்லம்பனா என்றால் சமஸ்கிருதத்தில் ‘தலைகீழ் ‘ என்று பொருள். இது நரகத்தில் தலைகீழாகத்தொங்கும் ஆவிகளின் நிலையைக்குறிக்கிறது. பசியோடிருக்கும் இந்த ஆவிகள் மறுபடியும் சொர்க்கத்தில் பிறந்து சுகிக்க உல்லம்பனா கொண்டாடப்படுகிறது. யூ லான் பென் சூத்திரத்தை புத்தபிக்குக்களும் பிக்குனிகளும் ஓதி இந்த ஆவிகளை கடைத்தேற்றுகின்றனர். ஜப்பானிலும் இந்தவிழா ‘சேககி ‘ என்ற பெயரில் முக்கிய விழாவாகக்கொண்டாடப்படுகிறது.

பூமிக்குண்டான தெய்வமாகக் கருதப்படும் தி குஆன்(Di Guan) னின் பிறந்தநாள். அவன் தன் பயிர்களைக் காத்துக்கொடுத்ததற்கு அவனுக்கு நன்றி செலுத்துவதற்கே இவ்விழா என்று வேறு ஒரு கதையும் கூட உண்டு.

ஆண் வாரிசே குடும்பத்தின் பெயரை அடுத்தெடுத்துகொண்டுசெல்பவன் என்பது அன்றிலிருந்து இன்று வரை சீனர்களின் நம்பிக்கை. இறந்த ஆண்களுக்குத் தான் இந்த விழாவின் போது விருந்தும் கேளிக்கைகளும். பெண் ஆவிகளுக்குக்கிடையாது. அதிலும் இறந்த பெண் மணமாகாதவளென்றால், அவளைப்பற்றிய ஒருவித நினைவும் இருக்காது. முன்னோர்களைப் புறக்கணித்தலும் மறத்தலும் அவர்களிடையே பெரும் குற்றம். அவ்வாறு செய்தவருக்குப் பெரியதண்டனை மேலுலகத்தில் காத்திருக்கிறது.

கிட்டத்தட்ட நமது ஆடிமாதத்தின் போது கொண்டாடப்படும் விழா ‘பசித்த ஆவிகள் விழா ‘ (hungry ghosts festival). சீனர்கள் பின்பற்றும் சந்திரவருடத்தின் ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாள் ஆரம்பிக்கும். இதை ‘தா ச்யூ ‘ (Da Jui) என்றழைக்கின்றனர் சீனர் தங்கள் மொழியில். இன்னொரு விழா சிங்க்மிங்க் (Ching Ming) என்னும் கல்லறைவிழா. இறந்த முன்னோர்களுக்கு கல்லறைக்கே சென்று மரியாதை செலுத்துவது. இது ஒரே நாள் தான். ஆனால், தா ச்யூ முன்னோர்களுக்கென்றே ஒரு மாதகாலத்துக் கொண்டாடப்படுகிறது. முதலில் முன்னோரை வணங்கும் சடங்காக இருந்தது. பிறகு, இந்தமாதத்தில் மேலுலகத் தலைவர் நரகவாசலைத்திறக்க ஆரம்பித்தார். ஒருமாதம் முழுவதும் சீனப் புராணங்களின்படி ஆவிகளும் பூதங்களும் பூமியைச்சுற்றிவரவும் பலவித உணவு மற்றும் கேளிக்கைகள் அனுபவிக்கவும் அனுமதிக்கப்படுகின்றன. சுற்றிய ஆவிகள் மீண்டும் மேலுலகை அடையவேண்டும் என்பதே நியதி என்று சீனர்களால் நம்பப்படுகிறது.

இறைச்சி, மீன், காய்கறி, கள் போன்ற ஏராளமான உணவுவகைகள் வீட்டில், வீட்டின் முன்புறத்தில் மற்றும் கோவில்களில் படைக்கப்படும். வீட்டின் வெளியே படைக்கப்பட்ட உணவை பிச்சைக்காரர்கள் உண்டுவிடுவது சீனாவில் வழக்கம். பிச்சையெடுப்பவர்கள் இல்லாத சிங்கப்பூரில் பெரும்பாலும் தூக்கியெறியப்படுகிறது. இவற்றை உண்ணவரும் ஆவிகளுக்கென்று கேளிக்கைகள் பல நடக்கும். கூடாரங்கள் அமைத்து மாலையில் ஆவிகளை குஷிப்படுத்தவென்று ‘வாயாங்க் ‘ (Wayang)எனப்படும் பாரம்பரியப் பாடல்களாலான வீதி நாடகங்கள் ஆங்காங்கே மேடையேற்றப்படுகின்றன. ‘விருந்தினர்கள் ‘ அமரவென்று முன்னிரண்டு இருக்கைகள் அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆவிகளுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடகங்கள் இப்போதெல்லாம் மனிதர்களாலும் ரசிக்கப்படுகின்றன. விருந்து முடிந்ததும் பெரிய பாத்திரங்களில் அரிசி நிரப்பி, அதில் அசுபப்பொருள்களாகக்கருதப்படும் கத்தி, குடை அல்லது கண்ணாடிகளை மேலே வைப்பர். இந்த விழாவின் போது ஜோங்க் குய் (Zhong Kui) எனப்படும் ஆவிகளைப்பிடிக்கும் பயங்கரபூதத்தின் படம் மாட்டப்பட்டிருக்கும். இந்தபூதம் பிடித்த ஆவிகளை முழுங்கிவிடும். ஆகவே இந்தப்படத்தைப்பார்க்கும் ‘பசித்த ஆவிகள் ‘ அவ்விடத்தைவிட்டு ஓடிவிடும்.

இந்த மாதம் சீனர்களுக்கு மிகவும் திகில் நிறைந்த மாதம். இறந்தவர்களின் ஆவிகள் உயிரோடிருப்பவர்களின் கவனத்தைப்பெற பூவுலகிற்கு வரும். இம்மாதத்தில்தான் ஆவிகள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கருகில் இருக்கின்றன என்று அவர்கள் நம்புகின்றார்கள். ஆவிகள் பாம்பு, வண்டு, பறவை, புலி, ஓநாய், நரி என்று எந்த வடிவிலும் வரும். அழகிய ஆண் அல்லது பெண் வடிவில் வந்தும் மனிதர்களைக் கிறங்கடிக்கவும் முயலும். ஆவிகள் மனிதர்களின் உடலில் இறங்கி உடல் உபாதை அல்லது மனநோய் உண்டாக்கும். மறக்கப்படாமல் அடிக்கடி உணவளிக்கப்பட்டு மரியாதைசெய்யப்பட்ட மூன்னோர்களின் ஆவிகள் குடும்பத்துக்கு செல்வம் அளிக்கின்றன. சீனர்கள் ஆவிகள் எந்த வடிவில் அலைகின்றன என்று கண்காணித்தபடியிருக்கிறார்கள் இம்மாதத்தில். வழக்கம்போல கால்களிருக்கின்றனவாவென்று தான் பார்க்கிறார்கள். இம்மாதத்தில் திருமணங்கள் நடக்காது.

தற்கொலை அல்லது விபத்தில் இறந்த ஆவிகளுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படாததால் அவை மற்ற ஆவிகளைத் துணையாக்கிக்கொள்ள அலையும். வாரிசில்லாத இத்தகைய ஆவிகளுக்கு இந்த மாதத்தில் சிறப்புக்கவனிப்பு நடக்கும். இறந்தவர்களின் ஆவிக்கோ இல்லை உயிரோடு இருக்கும் நபர்களுக்கோ இந்த ஆவிகள் தீங்கு செய்யாதிருக்க விளக்கு (லேண்டர்ன்-lanterns) ஏற்றி வைக்கின்றனர். விளக்கு கொளுத்துவது ஆறுகளிலும் நடக்கும். இந்தவிளக்குகள் ஆவிகளுக்கு மேலுலகம் திரும்ப வழிகாட்டும். ஆறுகளில் தாமரை வடிவில் விளக்குகள் கொளுத்தி மிதக்கவிடுவர். நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்தினர் அந்த விளக்குபோகும் வழியில் நடந்து கண்ணிலிருந்து மறைந்ததும் ‘கடைத்தேற்றி ‘ விட்டுத் திரும்பிவிடுவர்.

படையல்களிட்டு hell notes எனப்படும் மேலுலகப்பணத்தையும் வீட்டின் முன்புறம் பாதுகாப்பான ஓரிடத்தில் எரிக்கின்றன. இந்தப் பணம் அந்த ஆவிகள் தீங்கு செய்யாதிருக்கக் கொடுக்கப்படும் லஞ்சமாம். கத்தைகத்தையாக வாங்கக்கிடைக்கும் இந்தப்பணத்தை எரிப்பார்கள். இந்த மாதம் மட்டுமில்லாமல், மாதமாதம் வரும் அமாவாசை, பெளர்ணமி தினங்கங்களிலும், திவச நாட்களிலும்கூட எரிக்கிறார்கள். விழாக்காலங்களில் ‘ஏலம் ‘ ஆங்காங்கே நடக்கும். திரட்டப்படும் நிதி இத்தகைய சடங்குகள்/விழாக்களுக்குப் பயன்படுத்தப்படும்.

இத்தோடு முடிவதில்லை. ஆவிகளைத் திருப்திப்படுத்த இறந்த அந்த நபர்களுக்குப் பிடித்த சாமான்களைப் போலியாகக் காகிதத்தில் வடிவமைத்து அதையும் எரிப்பார்கள். விலையுயர்ந்த உடை, கார், சோபா, விமானம் என்று எல்லாமே வாங்கக்கிடைக்கும். விமானத்தில் ஏறிப்பயணம் போக ஆசைப்பட்ட ஒருவர் ஆசை நிறைவேறாமலே இறந்திருக்கலாம். இல்லை, ஆசை நிறைவேறியிருந்தாலும் அவருக்கு விமானம் மிகவும் பிடிக்கலாம். அத்தகைய நபர் இறந்திருந்தால், அவருக்காக ஒரு விமானம் எரிக்கப்படும். அதேபோல நிஜமான கார் அளவில் இருக்கும் காகிதக்கார்கள் கார்பைத்தியங்களுக்காக எரிக்கப்படும்.

இந்த மாதத்தில் ஆவிகளுக்கு மட்டுமில்லை கொண்டாட்டம். நாடகங்கள் நடத்துபவர்கள் மற்றும் மேற்படி காகிதப்பொருள்கள் விற்பவர்களுக்கும் நல்ல வரும்படிதான். சீனாவில் இந்தமாதத்தில் பல நடவடிக்கைகள் இன்றும் ரத்துசெய்யப்பட்டுவிடும். எங்கும் ஒரு விதப்பீதி நிலவும். இந்த ஒரு மாதமும் இருட்டுமுன்பே வீட்டிற்கு வந்துவிடவே சீனர்கள் முயல்கின்றனர். தரையில் வெள்ளைவட்டங்கள் இருந்தாலோ, இல்லை ஆவிகளுக்கு எரிக்கப்பட்ட வத்திகள், காகிதப்பணங்கள் போன்றவை இருந்தாலோ மிதித்துவிடாமல் நடக்க வலியுறுத்தப்படுகிறது. நீண்ட பயணங்கள் தவிர்க்கப்படுகின்றன. கடலில் ஈடுபடும் நடவடிக்கைகள் தவிர்க்கப்படும். சீனர்களின் இறப்பு, பிறப்பு, மறுபிறப்பு போன்றவற்றின் மீதுள்ள பிடிப்பு நீத்தார் கடனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது.

சிங்கப்பூரின் குடிமைத்தற்காப்புப் படை குடிமக்களை ‘பசித்த ஆவிகள் விழா ‘ வைப் பாதுகாப்பாகக் கொண்டாடும்படி ஒவ்வொரு வருடமும் வலியுறுத்துகிறது. நகராட்சியிடமிருந்து பெறப்பெற்ற தகட்டுப்பானையை உபயோகித்தே தங்கள் ‘மேலுலகப் பணத்தை ‘ யும் இராட்சத அளவு வத்திகளையும் எரிக்கவேண்டும் என்று கூறுகின்றது. இந்தப்பானையை வீட்டிலிருந்து சற்றுதொலைவில் வைத்து எரிக்கவேண்டும். பூஜைமுடிந்ததும் எரிக்கப்பட்டவற்றில் அனல் அணைக்கப்பட்டுள்ளதாவென்று மறக்காமல் சோதித்தறியவேண்டும்.

ஒருபுறம் இவ்விழா தீவிரமாகக் கொண்டாடப்பட்டுவந்துபோதிலும் ‘பின்னோக்கிப்பார்த்தல் முன்னேற வழிவகுக்கும் ‘ என்பதே இவ்விழாவின் பொருளாகக் கொள்கின்றனர் இக்கால நவீன சந்ததியினர். ஆகவே மற்ற சடங்குகளை மூடநம்பிக்கையாகவே இவர்கள் கருதுகின்றனர். சீனக்கலாசாரத்தைப் பாதுகாக்கவேண்டுமானால் இவ்விழாக்கள் பயன் படலாம் ஆனால், வேறு ஒரு பயனுமில்லை, சுற்றுச்சூழல் சத்ததாலும், சாம்பல் தூசியாலும் பாதிப்படைகிறது. அனாவசிய பொருள் செலவு என்கிறார்கள் இவர்கள். இவ்விழாநாட்களில் நடக்கும் நாடகம் மற்றும் ஏலம் போன்ற கூச்சல்கள் இவர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கின்றன. ஏலம் போடுவது எதற்கு என்று கேட்கிறார்கள். மூ லான் கதாப்பாத்திரம் இவர்களுக்கெல்லாம் ‘பெற்றோரைப் பேணும் ‘ நல்ல மகனாகமட்டுமே தெரிகிறது. மற்றபடி மேலுலகம், கீழுலகம் போன்றவற்றையோ, இறந்தவருக்குப் பசிக்கும் என்பதையோ நம்ப இவர்கள் தயாராயில்லை. இவ்விழாவில் எரிக்கப்படும் மேலுலகப்பணத்தை வாங்க சீனர்கள் செலவழிக்கும் பணத்தை அர்த்தமுள்ள பல நற்செயல்களுக்குச் செலவிடலாம் என்பதே இவர்களின் கூற்று. நிறைய நற்பணிகள் நடைபெற்றுவருதை மறுப்பதற்கில்லை. இவ்விழாவினால் தொண்டூழிய நிறுவனங்கள் பயன்பெறுவதையே இவர்கள் விரும்புகின்றனர்.

இந்த நவநாகரீக மாந்தரைப்பொருத்தவரை மறைந்தவர்களையும் அவர்களின் கஷடநஷ்டங்களையும் நினைத்துப்பார்க்கவும், நாம் எவ்வளவு அதிருஷ்டசாலிகள் என்று திருப்தியடையவும் தான் இந்த விழா. வளர்ச்சியடைந்த இந்தநாட்டில் பசியில்லை, பட்டினியில்லை. ஆகவே ஆவிகளுக்கும் பசிக்காது என்பதே இவர்கள் வாதம். மேலை நாட்டு விழாவான ‘ஹாலோவீன் ‘ போலவே இதுவும் பலரால் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் மற்றவரால் அலட்சியப்படுத்தப்பட்டும் வருகிறது.

சீனத்தத்துவஞானி கன்பியூஷியஸிடம் சீடர் ஒருவர் ஆவிகளுக்கும் எப்படிச் சேவை செய்யவேண்டும் என்று கேட்டாராம். அதற்கு ஞானி, ‘மனிதனுக்கு சேவை செய்யாதவரை, ஆவிகளுக்கு எப்படிச்சேவை செய்வாய் ? வாழ்வையறியாமல் சாவை எப்படியறிவாய் ? ‘ என்று கேட்டாராம். ஞானி வாழ்ந்தது 2500 வருடங்களுக்கு முன்னர்.

—- ஜெயந்தி சங்கர்

உயிர்மை – அக்டோபர் 2004

****

sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்