முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,
E.Mail. sethumalar68 yahoo.com
பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து ஆற்றுப்படை நூல்களாகும். ஆற்றுப்படை என்றால் பரிசிலரை அல்லது இரவலரை வள்ளல்கள்பால் ஆற்றுப்படுத்துவது என்பது பொருள். பரிசில் பெற்றவன் பரிசில் பெற விரும்பிய மற்றவனுக்கு தமக்குப் பரிசில்களை வழங்கிய வள்ளலைப் பற்றி எடுத்துக் கூறி அவனிடம் பரிசில் பெறக் கருதிய இரவலனை வழிப்படுத்துவதனை ஆற்றுப்படை என அறிஞர் மொழிகின்றனர். யார் ஆற்றுப்படுத்துகின்றாரோ அவரது பெயரைக் கொண்டு அவ்வாற்றுப்படையின் பெயர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொருநனை ஆற்றுப்படுத்தினால் அதற்குப் பொருநராற்றுப்படை என்றும், புலவரை ஆற்றுப்படுத்தினால் அதற்குப் புலவராற்றுப்படை என்றும், சிறுபாணனை வழிப்படுத்துவது சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணனை ஆற்றுப்படுத்துவது பெரும்பாணாற்றுப்படை, கூத்தரை ஆற்றுப்படுத்துவது கூத்தர் ஆற்றுப்படை என்றும் வழங்கப்படுவது நோக்கத்தக்கது.
“கொடிது கொடிது வறுமை கொடிது“ என்பர் சான்றோர். பொற்காலம் என்று அழைக்கப்பட்ட பண்டைக் காலத்தில் பொருநர்கள், பாணர்கள், கூத்தர்கள், புலவர்கள் உள்ளிட்ட பலரும் வறுமையில் உழன்றார்கள். தங்களது வறுமையைப் போக்கிக் கொள்வதற்காக பழுமரம் நாடிய பறவைகள் போன்று தம்மை ஆதரிக்கும் வள்ளல்களை நாடிச் சென்றனர். பெரும்பாலன புலவர்கள் அறிஞராய் இருந்தும் வறியராய் இருந்தனர். அவ்வறுமையின் காரணமாக ஏற்பட்ட துன்பம் அவர்களது உள்ளக் கிடக்கையை வெளிப்பட வைத்த்து. இவை அழியா இலக்கியங்காளக இன்றும் நீடித்து மக்களிடையே வழக்கில் இருந்துவருவது போற்றுதற்குரியதாகும்.
ஆற்றுப்படையும் வறுமையும்
வறுமை வாய்ப்பட்டவர்கள் வள்ளல்களை நாடிச் சென்றனர். அவ்வாறு நாடிச் சென்றவர்களை உள்ளது உள்ளவாறு ஆற்றுப்படை இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. பண்டைக்காலத்தில் பொருநர்கள் பரிசு பெறுவதற்காக வள்ளல்களைத் தேடிச் செல்லும்போது தங்களின் மனவி மக்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றனர். பொருநர்களின் மனைவிமார் யாழ்வாசித்துக் கொண்டு இனிமையாகப் பாடுவதில் வல்லவர்களாயிருந்தனர். அதனால்தான் அவர்களைப் “பாடினி“ என்று அழைத்தனர்.
இத்தகைய கலைஞர்கள் வறுமையினால் வாடி வதங்கினர். இவர்கள் நிலமும், செல்வமும் படைத்த வள்ளல்களின் ஆதரவு பெற்றுத்தான் வாழ வேண்டிய நிலையிலிருந்தனர். உயர்ந்த ஆடைகள் நெய்த அக்காலத்தில் உடையின்றி பலர் வருந்தினர். தங்குவதற்கு ஏற்ற இடமின்றி ஒவ்வொரு ஊராகச் சென்று பலர் இடம் தேடி அலைந்தனர். உணவுக்காகச் செல்வம் படைத்தவர்களிடம் சென்று கையேந்தி நின்றவர்கள் பலர். இத்தகைய வறுமையில் வாடிய அறிஞர்களால் இயற்றப்பட்டதே ஆற்றுப்படை நூல்களாக இன்று மிளிர்கின்றன.
வறியோரின் ஆடை
ஏழையரின் (பொருநரின்) கிழிந்த உடையைப் பற்றி பொருநராற்றுப்படையில் இடம்பெற்றுள்ள,
‘‘ஈரும் பேனும் இருந்து இறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னல் சிதாஅர்“ (பொருநர்.,80-82 வரிகள்)
என்ற வரிகள் நன்றாக விளக்கிக் காட்டுகின்றன. ஈரும் பேனும் கூடியிருந்து அவ்வாடையில் அரசாட்சி செய்தன. மாற்றுடை இன்றி ஒரே ஆடையை அவர்கள் அணிந்திருந்ததால் அவ்வாடை வேர்வையால் நனைந்து நாற்றமடித்தது. அந்த ஆடை ஆங்காங்கே கிழிந்து தைக்கப்பட்டிருந்தன. அதிகமாக தைத்திருந்த்தால் அது கந்தையாகக் காணப்பட்டது. இப்பாடல் வரிகளின் வாயிலாக முடத்தாமக்கண்ணியார் வறியோரின் கந்தையுடையின் படத்தை அப்படியே காட்டுகின்றார்.
வறியோராகிய பாணர்கள் சிதைந்துபோன கந்தல் ஆடையை அணிந்திருந்தனர். இதனைப் பெரும்பாணாற்றுப்படை,
“நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை“ (பெரும்பாண்., 467-468-வது வரிகள்)
என்று குறிப்பிடுகின்றது. தம்மை நாடி வந்த வறியோரின் கந்தலாடையை நீக்கி புத்தாடையை வள்ளல்கள் அவர்களுக்கு வழங்கினர். ஏனெனில் பாணனின் வறுமைநிலையை அனைவருக்கும் எடுத்துக் காட்டுவது ஆடையே ஆதலால் முதலில் தன் சுற்றத்தாருக்கும் பாணர்களுக்கும் உள்ள வேற்றுமையைப் போக்க புதிய ஆடைகளை உடுத்துவதற்குப் பாணர்களுக்கு வள்ளல்கள் கொடுத்தனர்.
இவ்வாறு வள்ளல்கள் வறியோரின் உடையை மாற்றி உடுக்கச் செய்ததனை,
‘‘வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுன்மைய பூக்கனிந்து
அரவுரி அன்ன அறுவை நல்கி“
(பொருநராற்று. 73-76-வது வரிகள்)
‘‘நீசில மொழியா அளவை மாசில்
காம்பு சொலித்தன் அறுவை உடீஇ“
(சிறுபாண்., 235 – 236-வது வரிகள்)
“சென்றது நொடியவும் விடாஅன் …………
இழைமருங்கு அறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ“
(மலைபடுகடாம், 548 – 562-வது வரிகள்)
எனப் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவை குறிப்பிடுகின்றன. (சிதர்வை – சிதர்ந்து (நைந்து) அழிந்த கந்தை.) இவற்றிலிருந்து வறியோர்கள் பெரும்பாலும் கந்தலாடையையே உடுத்தியிருந்தனர் என்பது புலனாகிறது.
கிணைவாசிப்போனின் (பாணன்) குடும்பநிலை
வள்ளல்கள் பலர் வாழ்நத காலத்தில் தமிழ் மக்கள் பலர் வறுமையால் வாடினர். உண்ணுவதற்கு உணவின்றிப் பட்டினியால் பரிதவித்தனர். தழைகளையும், கீரைகளையும் வேகவைத்து உண்டு பசியைத் தணித்துக் கொண்டனர். சிறுபாணாற்றுப்படையில் வரும் கிணை வாசிப்போனின் குடும்பத்தின் வறுமைநிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது நல்லூர் நத்தத்தனார்,
“ஒல்கு பசியுழந்த ஒடுங்கு நுண் மருங்கு
வளைக் கைக்கிணைமகள், வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்த்தை,
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து,
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்“
(சிறுபாண்., 135-139-வது வரிகள்)
என்று குறிப்பிடுகின்றார்.
கிணை வாசிப்போனின் மனைவி பசியினால் வாடித் துன்புறுவதால் மெலிந்த இடையை உடையவாயிருக்கிறாள். அவளது கைகளில் வளையல்களை அணிந்துள்ளாள். அவள் வீட்டில் உணவு சமைப்பதற்கு ஒன்றும் இல்லாத காரணத்தால் வருந்துகிறாள். தனது பசியையும் தமது சுற்றத்தார் பசியையும் போக்குவதற்காகக் குப்பை மேட்டுக்குச் சென்று அங்கு முளைத்திருக்கின்ற வேளைக்கீரையான குப்பைக் கீரையைத் தனது கூரிய நகத்தினால் கிள்ளி எடுத்தாள். அதனைப் பாத்திரத்தில் போட்டு வேகவைத்தாள். அதில் போடுவதற்கு உப்பில்லை. உப்பில்லாமலேயே கீரையை உண்பதற்குச் சமைக்கின்றாள்.
சமைத்த பின்னர் சுற்றத்தாருடன் அதனை உண்பதற்குத் தயாரானாள். ஆனால் அதற்கு முன்னர் வீட்டின் வாயிற்கதவைச் சாத்தித் தாளிடுகின்றாள். ஏனென்றால் தங்களைப் பற்றி அறியாதவர்கள் தாங்கள் உண்ணும் உப்பில்லாத கீரை உணவைப் பார்த்தால் தம்மைக் கேலி செய்வார்களே என்பதற்காகவும், தமது குடும்ப வறுமை பிறருக்குத் தெரியக் கூடாது என்பதற்காகவுமே தனது வீட்டின் வாயிற் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொள்கிறாள். பின்னர் பசியுடன் இருக்கும் தமது சுற்றத்துடன் உட்கார்ந்து அக்கீரை உணவை உண்டாள். இப்பாடல் வரிகளில் நத்தத்தனார் ஏழைக் குடும்பத்தின் வறுமைநிலையை எடுத்துக் காட்டியிருப்பது கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. இப்பாடல் வரிகள் ஒரு பொருப்பான குடும்பத் தலைவியின் பண்பையும் படம்பிடித்துக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
வறியோர் வாழ்ந்த குடிசைகள்
வறுமை வாய்ப்பட்ட சிலரே குடிசைகளில் வாழ்ந்தனர். அவர்கள் உழைக்கும் வர்க்கத்தினராக விளங்கினர். வறியோர் குடிசைகளில் வாழ்ந்தனர். அக்குடிசைகள் சிறியனவாக இருந்தன. இவ்வறியோரின் குடிசைகள் குறித்து பெரும்பாணாற்றுப்படை பின்வருமாறு காட்சிப்படுத்துகிறது.
சிறிய ஊர். அதில் பல சின்னஞ்சிறு குடிசைகள். அந்தக் குடிசைகளின் கூரைகள் வைக்கோலால் வேயப்பட்டவை. அந்த வைக்கோல் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து கருமை நிறமாகிவிட்டது. இதனால் எந்தக் குடிசையைப் பார்த்தாலும் கருமை நிறமாகவே காட்சிதருகின்றது. இக்காட்சி மழைக்காலத்தில் வானத்தில் உலாவும் கருமேகங்களைப் போன்று காணப்படுகின்றது.
“பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கரு வை வேய்ந்த கவின்குடிச் சீறூர்“
(பெரும்பா., 190-191-வதுவரிகள்)
என உழைக்கும் வறியோரான உழவர்களின் சிறிய குடிசைகளை ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார்.
சிலர் மூங்கிலைப் பரப்பி அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து, தாழை நாரினைக் கொண்டு கட்டி, அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்து வேய்ந்த குடிசைகளில் வலைஞர்கள் வாழ்ந்தனர். அக்குடிசைகளின் முற்றங்களில் மீன் பிடிக்கும் பறிகள் இருந்தன. இதனைப் பெரும்பாணாற்றுப்படை,
‘‘வேழம் நிரைத்து, வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பை பறியுடை முன்றில்“
(பெரும்பாண்., 263-265-வது வரிகள்)
என்று குறிப்பிடுகிறது.
வறியோர்க்கு உணவளிக்கும் அன்னசாலைகள்
இக்காலத்தில் உணவின்றி வாடுவோருக்காக அரசாலும், கருணை உள்ளம் படைத்தோராலும் கோவில்களில் அன்னம் வழங்குவது, தருமசாலைகள் அமைத்து உணவு வழங்குவது போன்று பண்டைக் காலத்தில் அன்னசாலைகள் வைத்து பசியால் வாடியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இவ்வாறு அன்னசாலைகள் இருந்தமையை மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் தெளிவுறுத்துகின்றன.
மதுரையில் வறியோருக்கு எணவளிக்கும்அன்னசாலைகள் இருந்தன. அந்த அன்னசாலைகளுக்குப் பலாச்சுளைகள், பலவகையான மாம்பழங்கள், காய்கறிகள், வழைப்பழம், இளங்கீரை, பல்வகையான பட்டைச் சாதம், புலவுச்சோறு, கிழங்கு வகைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து அங்கு காத்திருக்கும் வறுமையால் வாடுவோருக்குக் கொடுப்பார்கள். இதனை,
‘‘சேறும் நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய மோங்கனியும்
பல்வேறு உருவிற் காயும், பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மென்பிணி அவிழ்ந்த குறுமுறி அடகும்
அமிர்துஇயன்றன்ன தீஞ்சோற்றுக் கடிகையும்,
புகழ்படப் பண்ணிய பேர்ஊன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயின் நுகர“
(மதுரைக்., 527-535-வது வரிகள்)
என மாங்குடி மருதனார் எடுத்துரைக்கின்றார். இம்மதுரைக்காஞ்சியில் பாண்டிய நாட்டில் உள்ள வறியோருக்காக ஏற்படுத்தப்பட்ட அன்னச்சாலைகள் குறித்த செய்திகள் மட்டும் இடம்பெற்றுள்ளன.
பட்டினப்பாலையில் சோழநாட்டில் உணவின்றி தவித்த ஏழைகளுக்கு உணவிடுவதற்காக அன்னச்சாலைகள் இருந்தமை பற்றிய செய்திகள் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் மொழியப்பட்டுள்ளன. இவ்வன்னச் சாலைகள் செல்வர்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். இவ்வுலகில் புகழ் நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், இறந்தபின் நற்கதியை அடைய வேண்டும் என்றும் விரும்பிய செல்வர்கள் இந்த அன்னச்சாலைகளை நடத்தி வந்தனர். இதனை,
“புகழ் நிலைஇய மொழிவளர
அறன் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறுபோலப் பரந்து ஒழுகி“ (பட்டினப்பாலை)
என்று பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.
இவ்வாறு வறியோர்களுக்குச் சோறிடும் இடங்களுக்கு, “அறக்கூழ்ச்சாலை“ என்பது பழந்தமிழ்ப் பெயராகும். இக்காலத்தில் இவைகளை அன்னசத்திரம், தருமசத்திரம், தருமசாலை, என்ற பெயர்களால் வழங்கினர். கூழ் என்பது உணவினைக் குறிக்கும் பொதுப்பெயராகும். தருமம் செய்வதற்காக உணவிடும் இடம் என்ற பொருளில் வழங்கப்பட்டது.
பெரும்பாலான வறியோர்கள் உண்ண உணவின்றியும், உடுத்த உடையின்றியும் வாழ்ந்தனர். உணவிற்காகவும் உடைக்காகவும் வள்ளல்களையும், செல்வர்களையும் காண்பதற்கு அலைந்து திரிந்தனர். அவர்கள் அலைந்து திரிந்தபோது பாடிய பாடல்கள் புகழ் வாய்ந்த இலக்கியங்களாக மிளிர்ந்தன. புலவர்கள் மன்னர்களைப் பற்றிப் பாடியபோதும் வறிய மக்களைப் பற்றிய வாழ்க்கையினை ஆங்காங்கே பதிவு செய்தனர். பத்துப்பாட்டு பழந்தமிழகத்தின் மன்னர்கள், செல்வர்கள் மட்டும் பற்றி கூறாது, வறுமைநிலையில் உள்ளோரின் வாழ்க்கையையும் பற்றி எடுத்துரைக்கும் உன்னதக் காலப் பெட்டகமாகவும் திகழ்கிறது எனலாம்.
- எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)
- தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
- வேத வனம்- விருட்சம் 83
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1
- ஆதலினால்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று
- மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்
- அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
- ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை
- சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12
- வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு
- எப்போதும் நம் வசமே
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)
- மின்னல் விழுதுகள்!
- முள்பாதை 27
- தூக்கம் …
- இரவுகளின் சாவித்துவாரம்
- குறத்தியின் முத்தம்
- எழுத்தின் வன்மம் .
- 108எண் வண்டி
- 27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு
- எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!
- நினைவுகளின் தடத்தில் – (46)
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15
- பேசாதவன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது
- சுஜாதா 2010 விருது வழங்கும் விழா
- அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு