ஆறு சேவியர் கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue


1.

அது, அங்கே…

நீண்ட நாட்களாக
என் புத்தகங்களுக்கிடையே
நசுங்கிக் கிடக்கிறது அது.

எறிந்துவிடவேண்டுமென்று எடுத்து
மீண்டும் அதே இடத்தில்
போட்டு விடுவேன்.
வருடம் முழுதும் ஒரே இடத்தில்
தூக்கிலிடப்படும் நாள்காட்டிபோல,
அங்கேயே கிடக்கிறது.

அதைப் பார்க்கும் போதெல்லாம்
நெஞ்சுக்குள் கலப்பை ஒன்று
உழத்துவங்குகிறது…
விழி நுனியில்
முட்களின் முனைகள் நீளமாகின்றன.

இருந்தாலும் அதை எறிந்து விடவில்லை…
வருடங்கள் தீக்குளித்து முடித்தபின்னும்
சாம்பல் வாசனையோடு
சுவடுகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன.

இன்று அதை வெளியே எறிந்துவிட வேண்டும்…
வழக்கம் போல முடிவெடுத்து நுழைகிறேன்….
துலக்கிவைத்த கண்ணாடிக் கிண்ணமாய்
என் புத்தக அலமாாி…
அதைக் காணவில்லை…

பட்டென்று மொத்தசெல்களுக்குள்ளும்
ஓர் படபடப்புப் புயல் பாய்ந்து நுழைந்தது,
நுழைந்த புயல்
இதயக்கடலுக்குள் இறங்கிக் குதித்தது.
எங்கே… எங்கே அது ?

அதோ,
அந்த வாசலோரத்துக் குப்பைக்கூடையில்
புதிதாய்க் குவிந்திருக்கின்றன குப்பைகள்…
பரபரப்பு விரல்கள் தேடித் தேடி…
பாதிவழியில் அதைக் கண்டு பிடித்தன…

மீண்டு வந்த அதை மீண்டும்
புத்தகங்களுக்கிடையே வைத்தேன்..

உன் நினைவுகள் காயவில்லை
நீ கொடுத்த
முதல் ரோஜாவில் இன்னும் வாசம் வருகிறது…
சருகாய்க் கிடந்தாலும் அது
என் புத்தகங்களோடு படுத்துக் கிடக்கட்டும்….
மனசு மட்டும் மெளனமாய் பேசிக் கொள்கிறது…

2.
கனவு

ஆழ்ந்த உறக்கத்தைத் தட்டி எழுப்பியது
ஓர் கனவு.

பிரபஞ்சத்தின் நிலப்பகுதிகள் எல்லாம்
நீர்க்குழிக்குள் இறங்கப் போகிறது…
துருவத்து பனி உருகி
பருவத்துப் பையனாய்ப் பாய்ந்து வருகிறது.

இரவு…
ஒரு பொிய மணல் மேடு…
அதன் ஒருபக்கம் மொத்த மக்களின்
ஒற்றைப் புகலிடம்..
மறு பக்கம் நெருங்கிக் கொண்டிருக்கும்
அகலக் கடல்…

கடல் வந்து மலையை நொறுக்கி
மனித மிச்சங்களை
அலை நாக்கால் அழிக்கப் போகிறது….
கணங்களை கனமான கண்களோடு
பார்த்துக் கிடக்கிறது மனிதக் கூட்டம்…

யாரோ, குடிநீர் தேடுகிறார்கள்…
சாகும் வரை வாழ
செத்துப் பிழைக்கிறார்கள்.

தண்ணீர் வந்து மேட்டைத் தீண்டும் முன்
சூாியன் எழுந்து
இரவைத் தாண்ட வேண்டும்…
சூாியன் முந்தினால் வாழ்வு…
தண்ணீர் முந்தினால் சாவு…

துடிக்கும் இதயத்தோடு காத்திருக்கிறேன்…
சூாியன் எழப்போகிறதா ?
இல்லை மனுக்குலம் விழப்போகிறதா ?
கேள்விகளின் தீனக் குரலுக்கு பதில் தொியும் முன்,
தட்டி எழுப்பிவிட்டு
சத்தமில்லாமல் இருக்கிறது என் கடிகாரம்.

3.
புதைகுழிகள்

ஏதேதோ வெளிச்சப் புள்ளிகள்
ஒன்று சேர்ந்து …
விலகி…
விழிதிருப்பும் திசையெங்கும் ஓடி,
இருட்டுச் சுரங்கத்தில்
வெளிச்சப் பந்துகளாய்ச் உருண்டு,
கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும்
குட்டையாகிப்போகும் கரங்கள்,
பிடுங்கி நடும் வேகத்தில் எழுந்தால்
கால்கள் மரத்துப் போய்க்கிடக்கும்,
ஓட எத்தனித்து
பிரயாசைப்பட்டு கால்களைப் பிழுதெடுத்து
தெறித்து வீழும் போது
வெளியே விடிந்திருக்கும்.

4.
தேடல்கள்…

எப்போதுமே
ஊட்டப்பட்டு ஊட்டப்பட்டு
தேடல்கள் இல்லாமல் தேய்ந்துவிட்டது
என் மனம்.

என்னுடைய பலங்கள்
அப்பாவின் அடையாள அட்டையால்,
என்னுடைய கல்வி
எதிர்கால வேலை வெளிச்சத்தால்,
என்று,
என் வேர்வைக் துளிக்குள்
நான்
செத்ததறியாமல் சிாித்துக் கிடந்திருக்கிறேன்.

என்னுடைய காதல் கூட
மாடியின் நீள அகலங்களுக்காய்
நிராகாிக்கப்பட்டது.
பின்,அம்மாவின் அந்தஸ்தில் எனக்கொரு
பெண் பாிசளிக்கப்பட்டாள்.

என்னுடைய மதம்
பிறந்தபோதே என் பெயரோடு
ஆறாவது விரலாய்
இணைந்தே பிறந்தது.

என் தேடல்களின் வாசல்கள்
திருடப்பட்டுவிட்டதால்,
இன்னும் என் நெஞ்சின் நிலவறைகள்
இருட்டு தின்றபடியே இருக்கின்றன.

என் பிறப்பைப் போலவே
என் தேடலில்லாமலேயே
தொடர்கின்றது என் வாழ்க்கை.

இன்னும் எனக்கு,
என் தேடலில்லாமலேயே தரப்படும்
ஏதோ ஓர் பலிபீடத்தில்,
ஓரு மரணம்

5.
நிஜம்

***

மேற்கு வானம் மஞ்சள் பூசியதால்
குளிராடை போர்த்தி
வெப்பம் குறைந்த காற்றுடன்
குசலம் விசாாிக்கும் தெப்பம் …

அல்லி பிணைத்த தாமரை விலக்கி
வெள்ளிப் பாதத் துடுப்புடன்
வெள்ளை வாத்துக் கூட்டம்
சலனத் தாமரையாய்
தங்க நீாில் மிதந்து களிக்கும்.

அக்கரையின் காற்றில் விரவி
தாழக் கரையில் தவழ்ந்து வரும்
தாழம்பூ வாசம்
வண்ணத்துப் பூச்சிகளைக் கொஞ்சம்
வம்புக்கிழுக்கும்…

பச்சை கொட்டிய
வளைகொண்ட வயலின் வரப்புகளில்
நதியோர நண்டுகள் வந்து
சுதியோடு நடை பயிலும்…

மஞ்சள் பூசிய மினுமினுப்பில்
பத்து மணிப் பூக்கள்
பாத்திகளின் ஓரம் முழுதும்
பளபளவென பரவிக் கிடக்கும்.

கன்னிப் பெண்ணின்
குலுங்கும் வளையலாய்
தேகத்தில் மோதும் நதியின் ஒரங்கள்
மோகத்தின் முதலிரவென
உடைந்து சிதறும்..

வாழை மரங்களின்
விாிந்த இலைகளில்
பொன்வண்டுக் கூட்டம் வந்து
பொம்மலாட்டம் நடத்தும்…

என் ஒவ்வொரு சுவடுகளிலும்
பொட்டுவைத்துக் கொள்ளும்
பூமித்தாயின்
பூாிக்கும் புன்னகைச் சோலையில் நான்…

ஆயிரம் அழகுகள்
அணிவகுத்த போதும்
நினைவுகள் மட்டும்
கோடிக் கண் கடன்வாங்கி
உன்னை மட்டும் பார்த்துக் கிடக்கும்….

***

6.
ரேகை தொலைத்த கைகள்

****

என் விரலிடை விழுந்து விட்ட
வெண்ணிலவே…
நீண்ட நாட்களாகிறது
உனக்குக் கவிதையெழுதி…

உன்
விரல் தீண்டும் ஆசையில்
மோதிரத்தைத் தொட்டுப் பார்த்ததும்,
கரம் தொடும் ஆசையில்
கைரேகை கற்றதும்
இன்று நடந்ததாய் இனிக்கிறது.

உன் ரேகைகள் மீது என் விரல்களால்
இரயிலோட்டும் போதெல்லாம்
எனக்குள் ஏதோ ஒரு
சின்னக்குயில் சிறகடிக்கும்…

உன் விரல்கள் கோர்த்து
சாலை கடக்கும் போதெல்லாம்
சாம்ராஜ்யச் சாதனையாளனாய்
மனசுக்குள் சந்தோஷப் பட்சி சாமரம் வீசும்.

நீ உன் இருவிரல்களால்
முதன் முதலில் முத்தமிட்டுக் கொடுத்த
அந்த சிவப்பு ரோஜா
இன்னும் உன் கைரேகை கலையாமல்
காய்ந்து கிடக்கிறது.
மனம் தான் பூப்பதை நிறுத்தவில்லை.

நீ கொடுத்த முதல் கடிதத்தை
என்னையும் மீறி
சட்டென்று ஒரு மழைத்துளி முத்தமிட்டு விட்டது,
ஆனாலும்
உன் பேனா மையென்பதால்
பத்திரப்படுத்தியிருக்கிறேன்.

கைப்பிடி அளவுதான் இதயமாம்
அறிவியல் சொல்கிறது.
உன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது
என் இதயமும் அதன் துடிப்பும்.

நீ பின்புறம் கையொப்பமிட்டுத் தந்த
உன் புகைப்படம்
இன்னும் என் முகம் பார்த்துச் சிாிக்கிறது.

கவிதையில் வரைந்தாலும்
நீள் கவிதை நிழல்களுக்குள்
ஓவியமாய் சிாிப்பது நீ மட்டும் தானே.

இன்று,
தூரங்கள் நம் கரங்களை
துருவங்களுக்குத் துரத்தி விட்டன
மனசின் விரல்கள் மட்டும்
இன்னும் உன் கூந்தல் வனத்தில்.

இப்போது
கணிப்பொறி ஜன்னல்களில்
கடிதம் காணும் போதெல்லாம்
உன் கரம்பட்டுக் கசங்கவில்லையே என்னும்
கவலை மட்டும் தான்
எனக்கும்,
உன் கடித்திற்கும்….

****

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்