ஆய்வுக் கட்டுரை: இளவேலங்காலில் சமண சமயத் தடங்கள்

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

எஸ். இராமச்சந்திரன்


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் முரம்பன்,, இளவேலங்கால் முதலிய ஊர்களில் சமணத் தீர்த்தங்கரர் கற்சிலைகள் இருப்பது அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இளவேலங்காலில் முனீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் சிறிய செங்கற் கோயிலொன்று உள்ளது. இது மிகவும் அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட கிராமியக் கோயிலாகும். இக்கோயிலின் வெளியே துவாரபாலகர் போன்று, இரண்டு தீர்த்தங்கரர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே முனீஸ்வரர் என்ற பெயரில் வேளார் (குயவர்) இனத்தவரால் பூசிக்கப்பட்டுவரும் தெய்வமும் தீர்த்தங்கரரேயாவார். இச்சிற்பங்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். புகழ்பெற்ற சமணத் திருத்தலமான கழுகுமலை, இளவேலங்காலிலிருந்து (குறுக்கு வழியில்) 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எனவே, கழுகுமலையை மையமாக வைத்து இப்பகுதியில் சமண சமயக் குரவர்களும் குரத்தியரும் சமயப் பணியும் சமுதாயப் பணியும் புரிந்திருக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.

இளவேலங்காலுக்கு அருகிலுள்ள கடம்பூரில் பெருங்கருணீஸ்வரர் ஆலயம் எனப்படும் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் ‘வேலங்குடி ‘ என்ற ஊரிலிருந்த ‘பள்ளிச்சந்தம் ‘ நிலம் குறிப்பிடப்படுகிறது. மேலும் ‘இளவழங்கல் ‘ என்ற ஊரும் ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது1. இளவழங்கல், வேலங்குடி இரண்டும் தனித்தனி ஊர்களாக இருந்து பின்னர் இணைந்து இளவேலங்கால் என வழங்கப்பட்டிருக்கலாம். எனில், இவ்வூரில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டுவரை சமணப் பள்ளியும், அப்பள்ளிக்கு உரிய பள்ளிச்சந்த நிலங்களும் நன்முறையில் நிர்வகிக்கப்பட்டுவந்தன எனக் கொள்ளலாம்.

இளவேலங்காலில் முனீஸ்வரர் கோயிலிலிருந்து அரை கி.மீ. தொலைவில் அண்மைக் காலத்தைச் சேர்ந்த, கருங்கல்லால் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் கிராமியக் கோயில் போலன்றி, வைதிக மற்றும் ஆகம முறைப்படி கட்டப்படு வழிபாடு நடைபெற்று வரும் கோயிலாகும். இக்கோயிலின் அருகில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இக்குளம், சென்ற நூற்றாண்டில் சீரமைத்துக் கட்டப்பட்டிருக்கக்கூடும். இக்குளத்தின் படித்துறையில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு இருப்பது இக்கட்டுரையாசிரியரால் அண்மையில் கண்டறியப்பட்டது2. அக்கல்வெட்டில், ‘சாந்திசேனக் குரவடிகள் செயல் – வியாள வீரர் ரக்ஷை ‘ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்தமைதியையும் வாசகத்தையும் பார்க்கும்போதே, இக்கல்வெட்டு சிவன் கோயிலுக்கோ, இக்குளத்தின் படித்துறைக்கோ உரியதன்று எனப் புலனாகிறது.

முனீஸ்வரர் கோயிலில் தற்போது வைத்து வழிபடப்பெறும் தீர்த்தங்கரர் சிற்பங்களை எழுந்தருள்வித்தவர் சாந்திசேனக் குரவடிகள் என்ற சமணப் பெரியார் போலும். இதனையே ‘சாந்தி சேனக் குரவடிகள் செயல் ‘ எனக் கல்வெட்டு கூறுகிறது எனலாம். இவரால் எழுந்தருள்விக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை வியாள வீரர் என்ற குழுவினர் ஏற்றிருந்தனர் எனலாம். வியாள வீரர் என்பது யாளியைப் போன்ற வீரர் எனப் பொருள்படும் பட்டப்பெயராகும். கழுகுமலைக் கல்வெட்டுகளில் சாந்திசேனப் பெரியார் என்ற சமண அடியார் குறிப்பிடப்படுகிறார். மேலும் கழுகுமலைப் பள்ளியைப் பாதுகாக்கும் பொறுப்பினைத் ‘திருமலை வீரர் ‘, ‘பராந்தக வீரர் ‘ என்ற குழுவினர் கவனித்து வந்தனர்3. எனவே, இளவேலங்காலிலும் சாந்திசேனப் பெரியாரின் படைப்பும், வியாள வீரர்களின் பாதுகாப்பும் சமண சமயத்துக்குப் புகழ் சேர்த்தன எனத் தெரிகிறது.

இளவேலங்காலில் சமண சமயம் அழிந்தபின்னர், இக்கல்வெட்டின் பொருள் புரியாமல் இதனைச் சிவன் கோயில் குளத்தின் படித்துறையில் வைத்து உள்ளூர் மக்கள் கட்டியிருக்கலாம். சமணப் பள்ளி அழிந்ததைப் போலவே பழமையான சிவன் கோயில் ஒன்றும் இவ்வூரில் இருந்து அழிந்துள்ளது எனத் தோன்றுகிறது. முனீஸ்வரர் கோயிலின் வளாகத்திலேயே, கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிற் கட்டடப் பகுதியொன்று தூண்போல நடப்பட்டுள்ளது. அக்கல்லில், ‘ராச கண்டாப நல்லூர் முதுகுடிநாட்டு ஈசுவர. . .சென்மமுடைய சிவப்பிராமணன். . . ‘ என்ற துண்டுக் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது. ‘சென்மம் ‘ என்பது, குடும்பச் சொத்தான நிலத்தைக் குறிக்கும். கி.பி. 14-ஆம் நூற்றாண்டிலோ அதற்குப் பின்னரோ, இளவேலங்களிலிருந்த சமணப் பள்ளியும் சிவன் கோயிலும் அழிந்திருக்கலாம். பாண்டியர்களுக்குள் நிகழ்ந்த அரசுரிமைப் போர், மதுரை சுல்தான்கள் ஆட்சி போன்ற காரணங்களில் ஒன்றே இவ்வழிவுக்குக் காரணம் போலும். இது மேலும் ஆய்வுக்குரியது.

அடிக்குறிப்புகள்:

1. இக்கட்டுரையாசிரியரால் அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள். இவை பதிப்பிக்கப்படவில்லை.[1]

2. இக்கல்வெட்டினைப் பற்றி இக்கட்டுரையாசிரியரிடம் தகவல் தெரிவித்தவர், இளவேலங்காலில் ஆசிரியராகப் பணிபுரியும் திரு. நல்லையா ஆவார். அவருக்கு நமது நன்றி உரியது.[2]

3. South Indian Inscriptions – Vol. V nos. 307 to 406[3]

maanilavan@gmail.com

Series Navigation

எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன்