ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை, மணப்பெண் சொத்துரிமை, மணப்பெண் வயது, வரதட்சணைக்கு அஞ்சி பெண்சிசுக்கள் கருஅழிப்பு!

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை

சுதந்திரம் அடைந்த ஆன்மீக இந்தியாவில் தற்போது பெண் பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து வாலிபத்தில் திருமணம் முடித்து, இல்வாழ்வில் தள்ளுவது பெற்றோருக்கு ஒரு பெரும் சுமையாகத் தோன்றுகிறது! அப்படித் தாங்க முடியாத தலைப் பாரமாக இருப்பதற்குப் போதிய வருவாய் இல்லாமையும், அநாகரீக இந்திய வழக்கமான வரதட்சணையும் பிரதம காரணங்கள் என்று உறுதியாகக் கூறலாம்! திருமணமாகி வேறு வீட்டுக்கு உரிமைக்காரியாகப் போவதால், பெரும்பான்மையான பெண்களைக் கல்லூரி மேற்படிப்புக்கு அனுப்பக் கூட பெற்றோர் சற்றும் விரும்புவதில்லை! ஆண்களைப் பிரியமாய்ப் படிக்க வைக்கும் அளவுக்குப் பெண்களைப் பயில வைக்கப் பெற்றோர் பலர் உடன்படுவதில்லை! பணமும் செலவழிக்க விரும்புவதில்லை!

இந்தியாவிலும், இந்தியர் வாழும் மேலை நாடுகளிலும் இப்போது, இந்திய மாதர் புரியும் பெண்சிசுக் கருஅழிப்புகள் பரவி வருகின்றன! ஆன்மீக நாட்டில் உதயமான இக்கோரக் கொலைகளைப் போல, செல்வீக நாடுகளில் வாழும் நாகரீக மக்கள் துணிந்து பெண்சிசுக்களை அழிக்க மாட்டார்கள்! வரதட்சணைப் புலிக்குப் பயந்து, தம்பதிகள் செய்யும் பாபங்கள் இவை! கருத்தரித்த சிசு, பெண்சிசு என்பதை மருத்துவ மனையில் தெரிந்தவுடன், வாலிபத் தம்பதிகள் இருவரும் உடன்பட்டோ, கணவன் வற்புறுத்தியோ அழித்துக் கொல்வதை ஆன்மீக இந்தியா, நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது! செல்வீக அமெரிக்கா, கனடா ஆகிய முற்போக்கு நாடுகளில் வாழும் சில இந்தியத் தம்பதிகளும் பெண்சிசுக்களை அழித்து வருகிறார்கள்! நாகரீக நாட்டில் இவர்கள் வாழ்ந்து வந்தாலும், வரதட்சணை போன்ற அநாகரீகப் பழக்கங்களைக் கைவிட முடியாது, இன்னும் வாழையடி வாழையாய்ப் பின்பற்றி வருகிறார்கள்!

ஆனால் ஆன்மீக இந்தியாவுக்கும், செல்வீக நாடுகளுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது! அங்கே ஒரு தாய் பெண்சிசுவை அழிப்பதைப் பொது மக்கள் கூடாதென்று அழுத்தமாகக் கண்டிக்கிறார்கள்! தடுக்க முயற்சி செய்கிறார்கள்! பிறப்பது யாருடைய குழந்தையாகினும் தத்தெடுத்துக் கொள்ள பல தம்பதிகள் செல்வீக நாட்டில் தயாராக இருக்கிறார்கள்! செய்தியைப் பரப்பும் தினத்தாள்கள், டெலிவிஷன், ரேடியோ நிறுவகங்கள் அனைத்தும் பெண்சிசு அழிப்பை உடனே கண்டிக்கின்றன! ஆன்மீக இந்தியாவில் வேண்டாத சிசுக்களைத் தத்தெடுக்க முன்வரும் மாதரோ, தம்பதிகளோ மிக மிக அபூர்வம்! வரதட்சணைக்குப் பயந்து பலியிடப்படும் ஆயிரக் கணக்கான பெண்சிசுக்களைக் காப்பாற்ற, ஆன்மீக இந்தியாவில் எந்த எந்த நிறுவகங்கள் தோன்றி பணி புரிந்து வருகின்றன ?

இந்தியாவின் இனப்பெருக்கம் 1000 மில்லையன் எண்ணிக்கையைத் தாண்டி, அதனால் உண்டாகப் போகும் பல இடர்களைக் கையாளப் பாரதம் தயாராக உள்ளதா என்பது தெரியவில்லை! பிறப்பைக் கட்டுப்படுத்துவது போல் வெளி உலகுக்குக் காட்டி, ஆண்சிசுக்களை ஆரத் தழுவிக் கொண்டு, பெண்சிசுக்களை மட்டும் அழித்து வருவது எந்த ஆன்மீக அறநெறியைச் சேர்ந்தது ? இந்தப் பிற்போக்கு முறையைப் பின்பற்றினால், இன்னும் இருபது ஆண்டுகளில் பெண்டிர் எண்ணிக்கை குறைந்து, பஞ்ச பாண்டவர் திரெளபதி கதையாகி விடும்!

வரதட்சணை வரவேற்பாளிகள் இனிமேல் அதைச் சட்ட பூர்வமாக ஆக்கிப், பண ஒப்பந்தப் பதிவு முறையும் பின்பற்றினால் அநேக பெண்டிருக்குத் திருமண மாகாது தடைப்பட்டுப் போவதுடன், திருமணங்கள் நிகழ்ந்தாலும் அடுத்துப் பெண்சிசுக்களை அழிக்கும் அநாகரீகப் பழக்கம் இன்னும் அதிகமாக வழிகளும் பிறக்கலாம்!

வரதட்சணையும் உரிமைச் சொத்தும் ஒன்றா ?

வரதட்சணைக்கும், உரிமைச் சொத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று மறுபடியும் வினா எழும்பி உள்ளது! நிறைய வேறுபாடுகள் உள்ளன! தற்போது எழுத்துருவில் வடிவம் பெறாது, வரதட்சணை வெறும் வாய் ஒப்பந்தத்தில் உலவி வருவது! வரதட்சணை என்பது மணப் பெண்ணைத் திருமணம் செய்து மருமகளாய் ஏற்றுக் கொள்ள, மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தும் பண ஒப்பந்தம்! நகை ஒப்பந்தம்! பண்ட ஒப்பந்தம்! வரதட்சணைச் சொத்து மாப்பிள்ளை வீட்டார் கட்டுப்பாடில் இருப்பது!

உரிமைச் சொத்து என்பது, பெண்ணுக்குப் பெற்றோர் சட்ட பூர்வமாகப் பிரித்துக் கொடுப்பதாய் எழுத்து மூலம் வடிப்பது! அல்லது தருவதாய் வாய் ஒப்பந்தம் செய்வது. பெண்ணுக்குத் திருமணம் நடந்தாலும், நடக்காது போனாலும் அந்தச் சொத்து அவளது வாலிப வயதில் வந்து சேரும். திருமணம் நடந்தாலும், பெண் அந்தச் சொத்தைத் தன் கட்டுப்பாடில் வைத்திருப்பாள். திருமணமாகாத எனது மைத்துனி ஒருவர் பள்ளி ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றி, இப்போது என் மாமனார் முன்னெழுதி வைத்த உரிமைச் சொத்தைக் கையில் வைத்துக் கொண்டு, ஓய்வில் காலம் தள்ளி வருகிறார்.

வரதட்சணையும், உரிமைச் சொத்தும் ஒன்று என்று வாதிப்போர் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, நாம் ‘வரதட்சணைத் தவிர்ப்பு ‘ [Anti-dowry] என்னும் அரசியல் தடுப்புச் சட்டத்திற்குப் பெண்டிர் ‘உரிமைச் சொத்து தவிர்ப்பு ‘ என்று அர்த்தம் செய்து கொள்ளலாமா ?

மணப்பெண்ணின் வயதும், வரதட்சணை வற்புறுத்தலும்!

இந்திய நாகரீகத்தில் ஆண்கள் முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ள முடிகிறது! ஆடவருக்குத் திருமண வயது வரையரை இல்லை! எத்தனை முறை தேவைப்பட்டாலும் வாலிபன், வயோதிகன் எவனும் இரண்டாம் தாரமாக, அல்லது மூன்றாம் தாரமாக ஓர் இளம்பெண்ணை மணந்து கொள்ளலாம்! பெண்ணுக்கு வயது முப்பதுக்கு மேல் போனால், வனப்புக் குறையலாம்! தாய்மை உறுப்புகள் தளர்ச்சி அடையலாம்! நாற்பது வயதைத் தாண்டிச் செல்லும் போது, தாய்மை அடைவதில் பெண்ணுறுப்புகளில் சிக்கல்கள் உண்டாகலாம்! பெண்ணுக்கு காலா காலத்தில் திருமணம் நடந்து இல்வாழ்வில் புகவேண்டும் என்ற உடலியல் நிர்ப்பந்தமே, அநாகரீக வரதட்சணை வழிமுறை ஏற்பாட்டை வளர்க்கிறது! பெண்ணைச் சீக்கிரம் வெளியே தள்ள வேண்டும் என்று பெற்றோர் ஆர்வமோடு இருப்பதைச் சாதக ஆயுதமாகப் பயன்படுத்தி, மாப்பிள்ளை வீட்டார் விருப்பம்போல் வரதட்சணையை வற்புறுத்திக் கேட்கிறார்கள்! தரத் தகுதி யற்ற பெண்வீட்டார் அந்தத் தொகையை வீட்டின் மேல் கடன் வாங்கியோ, நிலத்தை விற்றோ எப்படியாவது தந்து விடுகிறார்கள்!

பெரும்பான்மையான பெண்களுக்கு திருமணம் ஒருமுறைதான் நிகழ்கிறது. கணவனை இழந்த இளவயது மாதருக்கு, நமது ஆன்மீக இந்தியக் கலாசாரம் மறுமண வாய்ப்பு அளிப்பதில்லை! செல்வீக மேலை நாடுகளில் பெண்கள், ஆண்களைப் போல் மறுமணம் செய்து கொள்வதைச் சமூகம் வரவேற்கிறது. விதவையான மாதருக்கோ, மணவிலக்கான மாதருக்கோ வயது வந்த பிள்ளைகள் இருப்பினும், அவர்களுக்கு மறுமணம் நடக்கிறது. பட்டதாரிகளான, திருமணமாகாத எனது இரண்டு கனேடிய வெள்ளை நண்பர்கள் காதலித்து மணந்த மாதருக்குப் பிள்ளைகள் இருந்தனர்! ஒருத்தியின் முதல் காதலன் அவள் கருத்தரித்ததும், அவளைப் புறக்கணித்து விட்டுப் போய் விட்டான். என் நண்பர் அவளை விரும்பி ஏற்றுக் கொண்டதோடு, பிறந்த பெண் பிள்ளையும் தத்தெடுத்துக் கொண்டார்.

அடுத்த மாது இந்தியாவில் குஜராத்தில் பிறந்த வெள்ளை மாது! கனடாவில் திருமணமாகி, இரண்டு பையன்கள் பிறந்தபின், கணவன் வேறொரு மாதிடம் மோகம் கொண்டு, மணவிலக்கு செய்துவிட்டான். இந்தியரிடம் மதிப்புக் கொண்ட எனது நண்பர், அந்த இந்திய வெள்ளை மாதை விரும்பி மணந்து, அவளது 12, 14 வயதுள்ள இரு பையன்களையும் தத்தெடுத்துக் கொண்டார். இவ்விரு கனடாத் திருமணங்களிலும் வரதட்சணை திருவிளையாடல் புரியவில்லை! நமது ஆன்மீகக் கலாசாரத்தில் இம்மாதிரித் திருமணங்கள் எத்தனை நடந்துள்ளன ? மேலை நாட்டுச் செல்வீகக் கலாச்சாரத்தில் பெண்ணினத்துக்கு மதிப்பும், சமநிலையும் உள்ளன! நமது தெய்வங்களும், வேதங்களும் அனுமதி அளித்தாலும், இந்தியச் சமூகமும், நாகரீகமும் பெண்டிரின் மறுமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டா!

ஆன்மீக இந்தியாவில் விதவைகள் புறக்கணிப்பு

ஆன்மீக இந்தியாவில் மனைவி இழந்த ஆடவனுக்கு ஒரு விதியையும், கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு விதியையும் சமூகம் கடைப்பிடித்து வந்துள்ளது! கணவனை இழந்த பெண்ணுக்கு விதவை என்னும் ஒரு சொல் உள்ள போது, தமிழில் மனைவி இழந்த ஆடவனைக் குறிப்பிட ஒரு சொல்கூடக் கிடையாது! [விதவன் என்று அவனுக்கு நான் பெயர் வைக்கிறேன்]. விதவன் மறுமுறை மணந்து கொள்ள மணமாகாத ஓர் இளம் பெண்ணையே நாடுகிறான்! அவன் கூட ஒரு விதவைப் பெண்ணை மறுமணம் புரிய இசைவதில்லை! அதுபோல் மணவிலக்கு செய்து தனித்திருப்பவனும், மறுமணம் செய்ய விரும்பும் போது, விதவைப் பெண்ணையோ, மணவிலக்கான பெண்ணையோ தேர்ந்தெடுப்பதில்லை! அவனும் மணமாகாத ஓர் இளம் பெண்ணையே தேடுகிறான்! ஆன்மீக இந்தியாவில், கணவனை இழந்த பெண்ணுக்கோ, மணவிலக்கில் பிரிந்த பெண்ணுக்கோ அடுத்து இல்வாழ்க்கை என்பது கனவாகப் போய், வாழ்நாள் முழுவதும் தனிமையில் ஒதுக்கப்பட்டு வாடி வதங்கி, அடிமை போல் பணி செய்து மடிந்து போக நேர்கிறது!

*************************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா