ஹமீது ஜாஃபர்
திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை; ஒரு நிதர்சனமான உண்மையை ‘வரட்டு அறிவுக்கு அப்பால் ‘ என்ற தலைப்பில் திண்ணையில் எழுதிருந்தார்கள். படிப்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம் ஆழ்ந்த இறைச்சிந்தனை உள்ளவர்களுக்கு உண்மை புரியும்.
ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே நடக்கும் பனிப்போர் இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுக் காலமாக முடிவற்று நடைப்பெற்றுக்கொண்டு வருகிற ஒன்று என்பது ஏகோபித்த முடிவு என்றாலும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் முடிந்துப் போன ஒன்று தொடர்ந்துக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரியும்.
இறைவனை ஏற்றுக்கொள்ளும் ஒரு சாராரும் இறைவனை மறுக்கும் மற்றொரு சாராரும், தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக வைக்கும் சான்றுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே தோன்றுகிறது.
கடவுள் உண்டு என்று சொல்லும் ஆத்திக மக்களிடம் இறை நம்பிக்கை, இறை பக்தி இவைகள் நிறையவே இருந்தாலும் துன்பம் வரும்போது, அந்த துன்பத்திற்குக் காரணம் தனது செயல் அல்லது எண்ணம் என்று உணராமல் பழியை இறைவன்மீதுப் போட்டு, கடவுளுக்குக் கண்ணில்லை, காதில்லை என்று புலம்புவார்கள். அதுபோல் எதிர்பாராத விதமாக எதாவது நல்லது நடந்தால் அதற்கும் காரணம் தானென்று உணராமல் கடவுள் செயல் என்று சொல்வார்கள். ஆனால் இந்த விஷயத்தில் நாத்திகர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் இறைவனைக் காரணம் காட்டமாட்டார்கள். மாறாக தன்னையோ அல்லது அதற்கு கருவியாக இருந்தது எதுவோ அதை காரணம் காட்டுவார்கள்.
ஆறறிவுப் படைத்த மனிதன் – ஹை டெக்கில் வாழ்கிற மனிதன் ஒரே மாதிரியான வீடுகள் உள்ள ஹவுசிங் ப்ளாக்கில் ஒரு குறிப்பிட்ட வீட்டை, நம்பர் இல்லாவிட்டால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அங்கு வசிக்கும் புறாக்கள் தன் இருப்பிடத்தை மிகச் சரியாக கண்டுபிடிக்கிறதே எப்படி ? கனடாவில் பிறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் மூவாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள மெக்ஸிகோவில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இனவிருத்திக்காக வந்து திரும்புகிறதே, அது எப்படி ? தவிர ஒருமுறை வரும் பூச்சிகள் மறுமுறை வருவதில்லை அத்துடன் அவை மடிந்துவிடுகின்றன புதிய பூச்சிகளே வருகின்றன. இது ஆண்டாண்டுக் காலமாக நடந்துவருகிறதே, அது எப்படி ? இந்த பிரபஞ்சம், இந்த உலகம், இந்த கோளங்கள் தன்னிலை மாறாமல் இயங்கி வருகின்றனவே எப்படி ? என்று ஆத்திகர்களிடமும் நாத்திகர்களிடமும் கேள்வி எழுப்பினால் இரு சாராரும் ஒரே மாதிரியான பதிலைத் தருவார்கள். ஆத்திகர் அது கடவுள் செயல் என்பார்கள். நாத்திகர் அது இயற்கை என்பார்கள்.
இயற்கை என்றால் என்ன ? என்ற கேள்வியை எழுப்பினால் அது நேச்சர் என்று பதில் சொல்லிவிடமுடியாது. அப்படி சொன்னால் பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக வரும் மாணவனைப் பார்த்து ‘ஏண்டா லேட்டா வந்தே ? ‘ என்று கேட்கும் ஆசிரியருக்கு ‘நாழியாயிடுச்சு சார் ‘ என்று சொல்வதுபோலாகிவிடும். தனக்குத் தானாக உருவானது என்று சொன்னால் அது மழுப்பலான பதிலாக இருக்கும். எதுவுமே தனக்குத் தானாக உருவாகுவதில்லை. அங்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டப் பின்பே உருவாகுகிறது, அது நமக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால் இயற்கை என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று சொல்லலாம், எது தன்னில் தானாக உள்ளதோ அது இயற்கை.
ஆம், தன்னில் தானானதும் சிந்தனைக்கு அப்பாற்பட்டதும்தான் இறைவன். கடவுள் என்ற வார்த்தைக்கு காலம், எல்லை, பரிணாமம், அறிவு, சிந்தனை, கற்பனை இவைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உள்ளமை (Being). எனவே இறைவன் இயற்கையானவன் என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் ஒவ்வொரு மதத்திலும் அதன் பெயர் மாறுபடுகிறதே தவிர பொருள் ஒன்றுதான். பெயர் மாறினாலும் பெயரிடப்பட்டப் பொருள் ஒன்றுதான். ஆத்திகர்கள் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்களோ அதையே நாத்திகர்கள் இயற்கை என்று சொல்கிறார்கள்.
மனிதர்களில் சிலர் பணத்திற்கு அடிமையாக இருப்பார்கள்; சிலர் சாப்பாட்டுக்கு அடிமையாக இருப்பார்கள்; சிலர் அறிவுக்கு அடிமையாக இருப்பார்கள்; சிலர் எதற்குமே அடிமை இல்லை என்று சொல்வார்கள்.
பணத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் எதைக் கண்டாலும் அதிலிருந்து பணம் பண்ணுவதற்கு வழி இருக்கிறதா ? என்று பார்ப்பார்கள். இல்லை என்றால் அதில் ஈடுபடமாட்டார்கள். இவர்களின் எண்ணம் செயல் எல்லாம் பணம் பணம் என்றிருக்கும். இரண்டாமவர் சாப்பாட்டிற்காக செலவு செய்வதில் தயங்கமாட்டார்கள், இவர்கள் எந்த ஊரில் எந்த ஹோட்டலில் எந்த உணவு நன்றாக இருக்கும் என்பதில் மிகத்தெளிவான ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள்; மூன்றாமவர் நல்ல சிந்தனையாளர்களாக, இலக்கியவாதிகளாக இருப்பார்கள்; நான்கமவர் முற்றிலும் மாறுபட்டவர்கள், என்னிடம் போதிய செல்வம் இருக்கிறது, இன்ன உணவுதான் உண்பேன் என்ற எண்ணமெல்லாம் கிடையாது, எனக்குள்ள அறிவு என் வாழ்க்கைக்குப் போதுமானது, எனவே நான் எதற்கும் அடிமையாக இருக்கவில்லை என்று வாதிடும் இவர்கள் ‘எதற்கும் அடிமை இல்லை ‘ என்ற கருத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அறியமாட்டார்கள். அதுபோல் நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமலிருந்தாலும் ‘இயற்கை ‘ யின்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஹமீது ஜாஃபர்
maricar@emirates.net.ae
- டுமீல்….
- விம்பம் – லண்டன் குறுந்திரைப்பட விழாவும், விருதும்
- ஸ்ரீ அன்னையுடன் ஓர் ஆன்மிக மாலை – ஞாயிறு ஆகஸ்டு 21 மாலை 0530
- ஆத்திகமும் நாத்திகமும்
- லோராவின் பொருளாதாரக் கோட்பாடு
- உயிர்த்தெழுந்த குரல்
- ம.மதிவண்ணனின் கவிதைகள்
- கண்களைச் செப்பனிட லேஸர் குளிர் ஒளிக்கதிர் அறுவை முறைகள் -4 (Eye Surgery with Cool Laser Beams)
- என் சாளரத்தின் வெளியில் .. நீ
- மீண்டும் ஒருமுறை
- காத்திருப்பு: மனித லட்சணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-4)
- காங்கீரிட் காடுகளில்…
- நீ திணித்த மூளையின் சத்தம்
- பெரியபுராணம்-52
- மதில்மேல் உறவுகள்
- கீதாஞ்சலி (36) புனித பீடத்தில் களவு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஷேன் வானின் விவகாரம்
- இரண்டு தீர்ப்புகள்
- முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவ-சூழலியற் சிக்கல் – 02
- தேறுமா என் தேர்தல் அறிக்கை ?
- திண்ணை – நாடகம்