சூர்யா
[ஜெயமோகனின் சண்டே எக்ஸ்பிரஸ் கட்டுரைகளைப்பற்றி ஒரு விண்ணப்பம்]
இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் தமிழ் எழுத்தாளர்கள் அசோக மித்திரன் , ஜெயமோகன் சுந்தர ராமசாமி எழுதும் எழுத்தாளர் குறிப்புகள்[writers notes] பிரசுரமாவது கவனத்துக்குரிய விஷயம். இதில் அசோகமித்திரன் பல காலமாகவே ஆங்கிலத்தில் எழுதிவருகிறார் .ஆனால் அவர் ஆங்கிலத்தில் அதிகமும் தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை சற்று வேடிக்கையாக சொல்லும் கட்டுரைகளையே எழுதியுள்ளார். சுந்தர ராமசாமியின் இந்த ஒரே ஆங்கிலக் கட்டுரைதான் நான் படிக்க நேர்ந்துள்ளது. சுந்தர ராமசாமி சமீபகாலமாக அவர் இதுகாறும் கைக்கொண்ட அடக்கத்துக்கு நேர் மாறாக இலக்கிய வம்புகளில் அதிக உணர்ச்சிகரமாக ஈடுபடுவதை செய்துவருகிறார். இக்கட்டுரையிலும் அவரது பிரச்சினை அதுதான். தமிழ்நாட்டில் சாகித்ய அகாதமி விருதுகள் எப்படி முறைகேடாக வழங்கப்படுகின்றன என்பதைப்பற்றிய கோபமான பதிவு அது. அவரது வழக்கமான நக்கல் தி க சிவசங்கரனைப்பற்றி சொல்லுமிடத்தில் வெளித்தெரிகிறது [ தி க சி ஆரம்பகட்ட இலக்கியவிமரிசனத் துறையில் போட்டி இல்லாதவ்ர். வேறு யார் எழுதியிருந்தாலும் சிறிதளவேனும் ஆழம் அதில் தவறிப்போயாவது குடியேறியிருக்க வாய்ப்புள்ளது] ஆனால் இதை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் எழுதியிருக்கவேண்டுமா என்ற கேள்விக்கு சற்று அர்த்தம் உண்டு. காரணம் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிடும் சண்டே எக்ஸ்பிரஸ் தென்மாநிலங்கள் நான்கில் வெளிவருவது .தமிழில் உள்ள பூசல்களை நாம் மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டுமா ? நமது பரிசு பெறும் படைப்பாளிகள் உண்மையில் நமது வளமான இலக்கிய மரபை பிரதிநிதித்துவம் செயவர்கள் அல்ல என்று நாம் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது .ஆனால் அதை சமநிலையுள்ள விமரிசனம் மூலம் சொல்லலாம். இம்மாதிரி கோபங்களை பிரபலப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்பதே எனக்குபட்டது .
ஆங்கிலத்தில் தமிழை பற்றி எழுதவேண்டிய அவசியம் ஏராளமாக உள்ளது. இந்திய இலக்கிய சூழலில் ஆங்கிலம் வழியாகவே இலக்கிய பரிமாற்றம் நடக்கிறது. கன்னடம் மலையாளம் வங்கம் இந்தி மொழிகளை சேர்ந்த இலக்கியவாதிகளைப்பற்றி அங்குள்ள ஆங்க்ல இதழாளர்கள் தொடர்ந்து ஆங்கில இதழ்களில் எழுதி எழுதி பிரபலப்படுத்தியமையாலேயே அவர்களுடைய எழுத்துகளுக்கு இப்போதுள்ள முக்கியத்துவம் உருவாயிற்று. குறிப்பாக மலையாள எழுத்தாளர்களான எம் டி வாசுதேவன் முதலியவர்களைப்பற்றி அளவுக்கு அதிகமாகவே எழுதப்பட்டுள்ளது. அம்மாத்ரி நாம் நமது சிறந்த எழுத்தாளர்களைப்பற்றி பேசுவது இல்லை. ந முத்துசாமி. அசோகமித்திரன், இமையம் சுந்தர ராமசாமி பாமா போனற பல படைப்பாளிகளின் நல்ல படைப்புகள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. அவற்றைப்பற்றி ஆங்கிலத்தில் பேசப்படாமையினாலேயே அவை கவனிக்கப்படவில்லை . ஆங்கிலத்தில் தமிழிலக்கியம் பற்றி எழுதுபவர்கள் பெரும்பாலோர் மிகமேலோட்டமான இலக்கிய அறிமுகம் கொண்டவர்கள். தமி சிற்றிதழ் சார்ந்த இலக்கிய மரபு பற்றி அவர்கள் கேள்வியேபட்டிருக்கமாட்டார்கள். இந்துவில் தமிழ் இலக்கிய நூல்களுக்கான விமரிசனம் வெளிவருவதை படித்துப் பார்த்தால் தெரியும். கண்ராவியான எழுத்து என்றால் அதுதான். பாலகுமாரன் ராஜேஷ்குமார் எல்லாம் தமிழின் இலக்கிய சாதனையாளார்கள் என்று நாக்கூசாமல் எழுதுகிறார்கள். லா சு ரங்க ராஜன் படத்தைப்போட்டு லா ச ராமாமிருதம் என அச்சிடுகிறார்கள் . இந்தமாதிரி சூழலில் நம் நமது மூத்த படைப்பாளிகளைப்பற்றியும் இளம் படைப்பாளிகளைப்பற்றியும் ஆங்கிலத்தில் அறிமுகமாகவும் விமரிசனமாகவும் எழுதவேண்டிய அவசியமுள்ளது.
ஜெயமோகன் ஆங்கிலத்திலும் எழுதுவது இவ்வகையில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட விஷயமாகும்.ஒரு மொத்தப்பார்வையில் பார்த்தால் இதுநாள்வரை தமிழில் எழுதிய படைப்பிலக்கியவாதிகளிலேயே பிற எழுத்தாளர்களைப்பற்றி அதிகமாக எழதியவர் அவர்தான். விமரிச்கர்களில் கூட எழுத்தாளர்களைப்பற்றி விரிவான ஆய்வு களை முன்வைத்தவர் அவரே. மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைகூர்ந்து படித்து விரிவான ஆய்வுகளை எழுதுவது தமிழில் இதுவரை இல்லாத பழக்கம் .ஆகவே அவரது கட்டுரைகள் முக்கியமான முன்னுதாரணங்கள்.மலையாளத்திலும் அப்படி எழுதியிருப்பதாக சொல்கிறார்கள். ஆங்கிலத்திலும் அதே பணியை ஜெயமோகன் செய்யலாம். தமிழில் புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்களைப்பற்றி ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வது இங்கே அவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் உருவாக்கியளிக்கும் என்பது உண்மை. அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் அளிக்கும். மேலும் நமது கல்வித்துறை வட்டாரத்தில் அவர்களை அறிமுகம் செய்யும். அனைத்துக்கும்மேலாக நமது அண்டைமாநிலங்களில் நமது நல்ல படைப்பாளிகளை அறிமுகம் செய்யலாம். ஜெயமோகன் இப்பணியை செய்ய திறன் படைத்தவர்.
ஆனால் ஜெயமோகன் சண்டே எக்ஸ்பிரஸில் எழுதிய முதல் கட்டுரை இப்பணியை ஆற்றவில்லை. அக்கட்டுரை தமிழில் எழுதும் முக்கிய தலித் படைப்பாளிகளை அறிமுகம் செய்கிறது என்பது உண்மையே. கோணங்கி எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரைப்பற்றிபேசி எப்படி நவீன தமிழிலக்கிய அலை தொடர்ந்து செயல்படுகிறது என்பதையும் சொல்கிறது .ஆனால் அது தலித் இலக்கியம் பற்றிய சில ஐயங்களையும் முன்வைக்கிறது. அதன் மீது ஜெயமோகன் போன்ற ஒரு கிளாசிஸ்ட் சொல்லக்கூடிய விமரிசனத்தையும் முன்வைக்கிறது. அத்தகைய விமரிசனங்களை முன்வைக்கவேண்டிய இடம் அதுவல்ல.காரணம் அக்கட்டுரையில் அவர் சொல்லும் முக்கியபடைப்பாளிகள் தங்கள் தரப்பை சொல்ல வாய்ப்பு தரக்கூடிய ஒரு சிற்றிதழில் அதை விவாதித்திருக்கவேண்டும் .தலித் இலக்கியம் எப்போதுமே தலித் நடுத்தர வற்கத்தால்தான் எழுதப்படுகிறது, இலக்கியமே நடுத்தர வற்கத்தை பிரதிபலிப்பதுதான் என்கிறார் ஜெயமோகன். தலத் இலக்கியம் வெறுமே தலித்துகளின் துக்கங்களைபதிவு செய்தால்மட்டும் போதாது ஒட்டுமொத்தவரலாற்றை கணக்கில் கொண்டு ஒரு ஒட்டுமொத்த பார்வையை உருவாக்கி முன்வைத்து அதன் மூலம் நமது நீதியுணர்வை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும் என்று கோருகிறார் .அதாவது ஒரு தலித் கிளாசிக் எழுதப்படவேண்டும் என்கிறார். அக்கட்டுரையினை நான் இப்போது விரிவாக விவாதிக்கவில்லை. இக்கருத்துக்கள் முழுமையானவையல்ல என்பதே என் எண்ணம். இலக்கியம் எப்போதுமே கிளாசிக்குகளை மட்டும் உருவாக்க வேண்டும் என்பதில்லை . மனசாட்சியை உறுத்தவைக்கும் கூர்மையான படைப்புகளுக்கும் பெரும்பங்கு உண்டு. இலக்கியம் அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் உருவாவது . ஒரு மத்தியவற்க மனிதர் தன்னை அடித்தள மக்களோடு ஏன் அடையாளப்படுத்திக் கொள முடியாது ? இதையெல்லாம் இங்கே விரிவான இடத்தை எடுத்துக் கொண்டு உள்ளூர் உதாரணங்களுடன் தான் விவாதிக்கவேண்டும்
ஆனால் ஜெயமோகன் எழுதிய அடுத்த கட்டுரை முக்கியமானது.கேரள இலக்கிய சூழலில் கவிதை என பொதுவாக அடையாளப்படுத்தப்படுவதை நிராகரித்து அங்கு அதிகமாக அங்கீகரிக்கப்படாத ஆனால் முக்கியமான கவிஞரான கல்பட்டா நாராயணனை அறிமுகம் செய்து வைக்கிற கச்சிதமான கட்டுரை அது. ஆங்கில நாளிதழில் எழுதவேண்டிய விஷயம் அதுதான். தமிழைப்பற்றியும் அம்மாதிரி கட்டுரைகளையே அவர் எழுதவேண்டும். பரவலாக புறக்கணிக்கப்படுகிற தமிழ் சிற்றிதழ் சூழலைப்பற்றியும் படைப்பாளிகளைப்பற்றியும் அறிமுகம் செய்யவேண்டும். ஜெயமோகனின் நடை கச்சிதமாகவும் மெல்லிய நகைச்சுவையுடனும் வாசிக்கும்படி உள்ளது. மொழியை தன்னம்பிக்கையுடன் கையாள்கிறார் .ஆகவே அவரது எழுத்து கவனிக்கப்படும். அப்போது தமிழும் கவனிக்கப்படவேண்டும்.ஆகவே அவர் எழுதவேண்டியது தமிழ் சிற்றிதழ்களின் பிரதிநிதியாக நின்றுதான் என்பதே என் எண்ணம்.
***
suurayaa@rediffmail.com
- ரஷீத் மாலிக் எழுதிய குவாதீம் ஹிந்துஸ்தான் கி டாரீக் கே சந்த் கோஷே – புத்தக அறிமுகம்
- ராமன் தவறிவிட்டான்
- உன் பார்வைகள்.
- ஆண் என்ற காட்டுமிராண்டி – இறுதிப்பகுதி
- அறிவியல் துளிகள்-14
- பசிபிக் கடல் தீவுகளில் செய்த பயங்கர அணு ஆயுதச் சோதனைகள்!
- புரியாத முரண் ( குலாப்தாஸ் ப்ரோக்கரின் வண்டிக்காரன் – எனக்குப்பிடித்த கதைகள் -48)
- முடிவின்மையின் விளிம்பில்
- ஆங்கிலத்தில் நாம் எதை எழுதவேண்டும் ?
- வறுமையே! வறுமையே!
- ஐரோப்பிய குறும்பட விழா .2003
- வாயில் விளக்குகள்
- மீட்டாத வீணை
- மெளனமே பாடலாய் ….
- என்றாவது வருவாள்
- ‘கொண்டாடு – இல்லாவிட்டால் … ‘ – உரைவெண்பா
- எங்குரைப்பேன் நன்றி
- இவர்களுக்காக…..
- முடிவின்மையின் விளிம்பில்
- வாயு (குறுநாவல் ) 1
- இந்தவாரம் இப்படி பெப்ரவரி 16 (காதலர் தினம், உலகமயமாகும் அரசியல் )
- கடிதங்கள்
- இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.
- நினைத்தேன். சொல்கிறேன்… விபச்சார கைதுகள் பற்றி
- உலக வங்கி சிபாரிசு : சீனாவிற்கு மாட்டுக் கறி
- ஆண் என்ற காட்டுமிராண்டி – இறுதிப்பகுதி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 11 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- சின்னச்சாமியைத் தேடி
- இசைக்கலைஞர்களை ஒழிக்க பாகிஸ்தான் முயற்சி
- உழவன்
- அழிநாடு
- ‘அதற்குப் பிறகு! ‘
- என்னவளே
- பிள்ளைப்பேறு
- இனிய காதலர்தின வாழ்த்துக்கள்!