மலர்மன்னன்
கால் நூற்றாண்டுக்குமுன் ‘கால் ‘ என்கிற பெயரில் நான் தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டு இதழைத் தொடங்கிய போது, பாரதப் பத்திரிகைப் பதிவாளர் ‘பின்ன எண்ணையெல்லாம் பத்திரிகையின் பெயராகப் பதிவு செய்ய முடியாது ‘ என்று சொல்லிப் பெயரைப் பதிவுசெய்ய மறுத்துவிட்டார். தர்க்கம் செய்வதில் பொழுதை விரையம் செய்வதைவிடச் சமரசம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம் என்பதால் பெயரை ‘மலர் மன்னன் வெளியீடு ‘ என்று பதிவு செய்துவிட்டு அதனை மிகச் சிறிய எழுத்திலும், ‘1/4 ‘ என்பதைப் பிரதானமாகவும் அட்டையில் குறிப்பிடலானேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் இதைப் புரிந்துகொண்டு இதழைக் ‘கால் ‘
என்றே அழைத்தனர்.
முதல் இதழின் பிரதிகளை எனக்கு அறிமுகமில்லாத , ஆனால் இலக்கியம், கலைகள், பண்பாடு ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் என நான் அறிந்து வைத்திருந்த சிலருக்கும் அனுப்பிவைத்திருந்தேன்.
முதல் இதழில், ‘ஆய்வுக்கு உதவக் கூடிய இதழாக இதன் உள்ளடக்கத்தை வைத்திருக்கக் கருதுவதால் இதில் விளம்பரங்களை வெளியிடுவது இதழின் ஆளுமையைக் குறைத்துவிடக் கூடும். ஆகவே சந்தாக்களின் வாயிலாகத்தான் செலவைச் சரிக்கட்ட வேண்டும் ‘ என்று குறிப்பிட்டிருந்தேன்.
இதழ் அனுப்பப் பட்டுப் பத்து நாட்களுக்குள் என்னை அறிந்திராத, ஆனால் எனக்கு நன்கு தெரிந்த மரியாதைக்குரிய பிரமுகர் ஒருவரிடமிருந்து கடிதம் வந்தது. ஆவலுடன் உறையைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே சிறு கடிதத்துடன் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இருந்தது!
‘நியாயப்படி ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனி நபராகச் செய்ய முற்பட்டிருக்கிறீர்கள். இது தொடர்ந்து நடைபெற வேண்டிய பணி. எனவே இதழில் விளம்பங்களை வெளியிடலாகாது என்று பிடிவாதம் காட்டுவது அறிவுடைமையாகாது. உள்ளடக்கங்களை வெளியிடும் சில பக்கங்களில் அடிக் குறிப்பினைப் போல் விளம்பரதரரின் பெயரைக் குறிப்பிட்டு அவற்றையே விளம்பரம்போல் தோற்றமளிக்கச் செய்வதால் விளம்பரம் அளிப்பவருக்கும் கணக்குக் காட்ட வசதியாக இருக்கும், நீங்களும் விளம்பரத்திற்கென இதழின் பக்கங்களை ஒதுக்கியதாக எண்ண வேண்டியிருக்காது. இத்துடன் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு காசோலை இணைத்திருக்கிறேன். அதனைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். எதற்கும் வள்ளலாரின் திருவருட் பாவிலிருந்து சில பாடல்
களையும் என் பொறுப்பில் உள்ள நான்கு நிறுவனங்களின் பெயர், முகவரிகளையும் குறிப்பிட்டுள்ளேன். தொகைக்குக் கணக்கு எழுதப் பட வேண்டும். எனவே உசிதம்போல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு, பட்டியல்களையும் அனுப்பிவையுங் கள். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் ‘ என்று கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. வள்ளலார் பெருமானின் பாடல்கள் இடம் பெறுவது இதழுக்குப் புனிதம் சேர்ப்பதாயிற்றே! ஆகையால் அவற்றை இட்டு முழுப்பக்க விளம்பரங்களாகவே வெளியிட்டேன்.
யார் இவர், ஒரு தகப்பனுக்கு உரிய வாஞ்சையுடனும் அக்கரையுடனும் நான் கேளாமலே ஆசியுடன்அன்பளிப்புத் தந்தவர் ?
வேறு எவருமல்ல, பாரம்பரியமான பெருமைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்த, பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் அவர்களின் புதல்வர் நா. மகாலிங்கம் அவர்கள்தான். கருவிலே திரு! பெரும் தொழிலதிபர் என்பதோடு நின்றுவிடாது, ஆன்மிகம், அறிவியல், இசை, கலைகள் மொழி, பண்பாடு, தத்துவம், பொருளாதாரம் எனப் பல்வேறு துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருபவர் அவர் என அறிந்திருந்ததால்தான் அவருக்கு ஒரு பிரதி அனுப்பினேன். அதிக பட்சம் சந்தா அனுப்புவார் என்றுதான் நினைத்திருந்தேன். என்னை அறியாத போதிலும் கால் இதழின் உள்ளடக்கத்தை மட்டுமே மதிப்பீடு செய்து ஒரு பெரும் தொகையை அனுப்பிவைத்த தோடு, எனது தலையங்கத்தைப் படித்துப் பார்த்துவிட்டு அக்கரையுடன் புத்திமதியும் சொன்னதன் மூலம் மற்றவர்களிடமிருந்து தாம் எவ்வளவு வித்தியாசமானவர் என்பதை எனக்குப் புரிய வைத்தார், மகாலிங்கம் அவர்கள்.
விளம்பர உதவி கேட்டு, அது தரப்பட்டாலே அருள் மிக்கவர் என அளித்தவரைப் போற்றுவோம். இவரோ கேட்காமலே ஒரு கணிசமான தொகை தந்து, இதற்கு நான் கணக்குக் காட்டியாக வேண்டும் என்பதால் எப்படியாவது பெற்றுக் கொண்டதொகையை நியாயப்படுத்திப் பட்டியல் அனுப்பு என்று கேட்கிறார்!
பொதுவாகத் தமிழர்கள் பட்டங்களை வாரி வழங்குவதில் மிகவும் தாராள மனதினர். இது பெரும்பாலும் வெறும் நர ஸ்துதியாகவே இருக்கும். வெகு அபூர்வமாகவே சிலர் தமக்கு இடப்பட்ட அடைமொழிக்குப் பொருத்தமானவர்களாக அமைகிறார்கள்.
நா. மகாலிங்கம் அவர்கள் ‘அருட் செல்வர் ‘ என அன்பர்களால் அழைக்கப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் எவ்வளவு பொருத்தமானவர்கள் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்தமையால் நானும் அவர்களை அவ்வாறே அழைப்பதில் பெருமை கொள்வேன் என்றாலும், எப்படியாவது சந்தர்ப்பத்தை வரவழைத்துக் கொண்டு அவரைக் காணச் சென்று அவரது நேரத்தை வீணடித்ததில்லை!
சரி, என்ன இருந்தாலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள அருட் செல்வர் கவனத்திற்கு கால் இதழ் போய்ச் சேர்ந்தது எங்ஙனம் ? அஞ்சல் மூலம் பலரும் பலதும் அவருக்கு அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அத்தனையையும் பார்த்திருக்க நேரம் எப்படிக் கிட்டும்
அவருக்கு ? அதிலும் தலையங்கத்தைக் கூடப் படித்துப் பார்த்து உடனே வினை ஆற்றியிருக்கிறாரே என ஆச்சரியப் பட்டேன். பிறகுதான் விவரம் தெரியலாயிற்று.
பகீரதன் அவர்களை நினைவிருக்கிறதா ?
கல்கி காலத்தில் கல்கி ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் கங்கை, சத்திய கங்கை என்ற பெயர்களில் இதழ்கள் நடத்தியவர். மகாலிங் கம் அவர்களுக்கு இலக்கியம், இதழ்கள் தொடர்பான பணிகளில் உதவி செய்துவந்தவர். கால் இதழை அவர்தான் மகாலிங்கம் அவர்களிடம் கொடுத்து ‘இது நீங்கள் படிப்பதோடு ஊக்குவிக்கவும் தகுதி வாய்ந்த இதழ் ‘ என்று கூறியிருக்கிறார் (பகீரதன் எனது எழுத்தைப் படித்து அதன் மூலம் என்னை ஏற்கனவே அறிந்துவைத்திருந்தவர்).
கால் அருட்செல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட விவரம் பிறகுதான் பகீரதன் மூலம் தெரிய வந்தது. ஆனால் அதன் பிறகும் கடித வாயிலாக நன்றி கூறியதோடு இருந்துகொண்டேனேயன்றி நேரில் சென்று பார்க்கவில்லை. பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கையில் நானும் செல்ல நேர்ந்தால் வணங்குவதோடு ஒதுங்கிக்கொள்வேன். நெருங்கியதில்லை! அருட் செல்வரின் தனிச் செயலர் ரவி நல்ல நண்பரே எனினும்!
அதே சமயம் டி. டி வாசுவிடம் எனக்கு நல்ல பழக்கம் உண்டு (முன்னாள் மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் புதல்வர், தொழிலதிபர், வர்த்தகப் பிரமுகர்). அவரும் கலைகள், இசை, பண்பாடு ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்தான். அவருக்கும் கால் ஒரு பிரதி அனுப்பியிருந்தேன். பார்த்துவிட்டுப் பாரட்டுவார், என்ன செலவாகிறது, நான் ஏதாவது பங்கு ஏற்கவா என்று அவராகவே கேட்டாலும் கேட்பார் என்றுகூட எதிர்பார்த்தேன். அப்படிக் கேட்டால் ஏதும் நன்கொடை யாசிக்கலாம் என்றும் நினைத்திருந்தேன். ஏனெனில் கடந்த காலத்து ஏ.ஜி. நடேசன் நடத்திய புகழ் மிக்க ‘இன்டியன் ரெவ்யூ ‘ இதழுக்குப் புத்துயிரூட்டி, என்னை நன்கு அறிந்தவரான மூத்த பத்திரிகையாளர் காலஞ்சென்ற எம். சி. சுப்ரமணியம் அவர்களை ஆசிரியராக நியமித்து, நஷ்டத்தில் அதனை நடத்தி வந்தவர். எம். சி. மூலமாகத்தான் வா சு எனக்குப் பழக்கமானார். நான் பத்திரிகையாளன் என்பதால் நெருங்கிப் பழகலானார்.
வாசு கால் இதழைப் பார்த்துப் பாராட்டுவார், அவரைப் பயன் படுத்திக்கொள்ளலாம் என நம்பி, பத்திரிகையை அனுப்பி ஒரு வாரம் சென்றபின் அவரைச் சந்தித்தேன். அவர் பத்திரிகையைப் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. நானாகவே இதழைப் பார்த்தீர்களா என்று பேச்செடுத்தேன்.
‘ஆமாம், எந்த தைரியத்தில் இப்படி ஒரு பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறாய் ? கையில் எப்படிச் செலவழிப்பது என்று தெரியாத அளவுக்குப் பணம் வைத்திருக்கிறாயா ? அல்லது, முதலில் பத்திரிகையைத் தயாரித்து அளித்தால் யாரும் ஆதரிக்க முன்வருவார்கள் என்கிற நம்பிக்கையில் வெளியிட்டிருக்கிறாயா ? இதோபார், நான் ஏதும் உதவுவேன் என்று எதிர்பார்க்காதே. சாயங்காலம் வா வீட்டுக்கு. லாணில் உட்கார்ந்து இஷ்டத்துக்கு ஸ்காட்ச் பருகலாம். தினம் தினமுமே வா. ஒன்றன்பின் ஒன்றாக பாட்டில்களைத் திறந்துகொண்டும், தமிழ் நாட்டு அரசியல் பற்றி அரட்டை அடித்துக் கொண்டும் விடிய விடியப் பொழுது போக்கலாம். பத்திரிகைக்குப் பணம் மட்டும் கேட்காதே ‘ என்றார்!
இதை வைத்து நான் வாசுவைக் குறை கூறுவதாக எண்ணிவிடக் கூடாது. அவரும் எனது நலனை முன்னிட்டுத்தான், நான் என்னிடம் சிறிதளவே இருக்கக்கூடிய பணத்தை வீண் விரையம் செய்துவிட்டுப் பிறகு கஷ்டப்படலாகாது என்பதற்காக அவ்விதம் எதிர்மறையாக வினையாற்றினார். பிறர் கையை எதிர்பார்க்கும் அவலம் எனக்கு வந்துவிடலாகாது என்பதிலும் கண்டிப்புக் காட்டினார். எல்லோரும் நல்லவரே!
மகாலிங்கம் அவர்களும் எனது நலம் விரும்பினார். வாசு விரும்பியதும் அதுதான். ஆனால் இரண்டு நிலைகளிலும் எவ்வளவு வித்தியாசம் ? ஆகையினால் மகாலிங்கம் அவர்களை அருட் செல்வர் என அறியலானேன். வாசுவை என் நலம் விரும்பிய நல்ல நண்பர் என்ற நிலையில் நிறுத்தி வைத்தேன்.
கால் இதழைத் தொடர்ந்து நடத்த மேலும் மேலும் அருட் செல்வரை நான் நாடியிருக்கலாம். அவரும் பரிவுடன் உதவியிருக்கக் கூடும். எனக்குத்தான் மனம் கூசிப் போய் கேட்கும் துணிவு இருக்கவில்லை.
இவ்வாறாக நெடுங் காலமாக மகாலிங்கம் அவர்களை அருட் செல்வர் என உள்ளத்துள் போற்றி வருவது எனக்கு அவர்களாகவே நன்கொடை அளித்தார்கள் என்பதற்காக மட்டுமல்ல. தமிழ்ச் சங்க நூல்கள், அற நூல்கள், ஆன்மிக நூல்கள் எனப் பலவும் குறைந்தவிலைக்குக் கிடைக்கும்படியாகப் பல பதிப்பகங்களுக்கு மானியம் வழங்கி, வசதி குறைந்தவர்களும் அவற்றை வாங்கிப் பயன் பெறுமாறு செய்துவிட்டிருக்கிறார்களே! பொருட் செல்வத்தை இப்படி வாரி வழங்க அவர்களால் முடிவது அருட் செல்வமும் அவர்களிடம் கொட்டிக் கிடப்பதால்தானே அல்லவா ?
அருட் செல்வர் அண்மையில் என்னை அழைத்து நீண்ட நேரம், அதிலும் மதிய உணவு வேளை தாண்டியும் பேசிக்கொண்டிருந்தார்கள். வயது எண்பது கடந்தவர்கள். உடல் நலமும் அவ்வளவு திருப்திகரமாக இருக்கவில்லை என்பதும் அறிந்திருந்தேன். அவர்களுக்குச்
சங்கடமாயிருக்குமோ, என்று சங்கடப்பட்டுக் கொண்டுதான் அருகில் அமர்ந்திருந்தேன். அவரானால் உற்சாகத்துடன் பழைய விஷயங்கள் பலவும் பேசிக்கொண்டிருந்தார்கள். முக்கியமாக, நந்தனார் திருவுருவச் சிலையினை மீண்டும் சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் நிறுவுதல் பற்றி நான் மிகவும் பணிவோடு விண்ணப்பம் செய்து சுமுகமாக அதனை நிறைவேற்றிக் கொள்ள முனைய வேண்டுமே யன்றி, சூழலைப் பிளவுக்குப் பயன் படுத்திக் கொள்ளப் பிறருக்கு இடம் அளித்துவிடலாகாது என்று அறிவுறுத்தினார்கள்.
பேச்சின்போது கடந்த கால அரசியல் பற்றியும், பலருக்கும் தெரியாத விவரங்களைத் தெரிவித்தார்கள். இவற்றை நான் வெளியிடலாமா என்று அவர்களிடம் கேட்டு அனுமதி பெற்றுக் கொண்டேன். திண்ணை வாசகர்களுக்கு அந்த விவரங்கள் பயன் படக் கூடும்.
முதலில் எனது ஜீவாதாரமான வேட்கை எது என்பதை அருட்செல்வர் அறிவார்கள் ஆதலால் அது பற்றியே பேசினார்கள்.
1857 முதல் விடுதலைப் போரின்போதே அயோத்தியில் பாபர் நினைவிடத்தை ?ிந்துமுகமதியர் ஒற்றுமையை முன்னிட்டு விட்டுக் கொடுக்க வாஜித் அலி ஷா முன் வந்தார் என்று நான் ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா ? அதனை அருட் செல்வர் உறுதி செய்தார்கள். மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று தலங்களிலுமே முகமதியர் அண்மைக் காலத்தில் தமது இடங்களை விட்டுக் கொடுக்க முன் வந்தனர் என்றும் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பூட்டா சிங்கின் அக்கரையின்மை காரணமாக அந்த நல்வாய்ப்பு கை நழுவிப் போயிற்று என்றும் அருட் செல்வர் ஒரு புதிய தகவலைத் தந்தார்கள்.
காசியில் முகமதியர் பெருமளவில் வசிக்கும் பகுதியில் ?ிந்து ஆலயங்கள் அமைந்துவிட்டிருக்கின்றன. அந்தப் பகுதியை விட்டுக் கொடுத்தால் ஞானவாபியினை ஒட்டியுள்ள மசூதியினை விட்டுக் கொடுக்க முகமதியர் தயாராக இருந்தனர் என்று அருட் செல்வர் தெரிவித்தார்கள்.
இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்திக்குச் சிறிய கார் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க வழியமைத்துத் தரப்படவில்லை. சென்னையில் உள்ள ஸ்டான்டர்டு மோட்டார் தொழிற்சாலையை அவரிடம் ஒப்படைத்து, ஸ்டான்டர்டு மோட்டார் நிறுவனத்தாருக்கு சிறிய கார் விற்பனை உரிமை அளித்திருந்தால் சஞ்சய் அரசியலுக்கே வராமல் தன் தொழிலைக் கவனித்துக் கொண்டு இருந்திருப்பார். ஸ்டான்டர்டு மோட்டார் தொழிற்சாலையும் பிற்காலத்தில் மூடப்பட்டுப் பெரும் சிக்கல் உருவாகாமல் தடுத்திருக்கலாம். இது அருட் செல்வர் தந்த இன்னொரு தகவல். மத்திய அமைச்சர் சி.எஸ். ஸிடம் கூடத் தாம் இதனை வலியுறுத்தியதாகவும் ஆனால் அது பலன் தராமற் போயிற்று என்றும் கூறினார்கள்.
‘இன்று அரசியல்வாதிகள் தம் சந்ததியருக்காக நெறி தவறி என்னவெல்லாமோ செய்கிறார்கள். சிறிய கார் தயாரிக்க சஞ்சய்க்கு வழி செய்துகொடுப்பது அப்படியொன்றும் பெரிய தவறாக இருந்திருக்காது. அப்படிச் செய்திருந்தால் பலவகைகளிலும் அது நன்மையாகவே நடந்திருக்கும் ‘ என்று அருட் செல்வர் சொன்னார்கள்.
அரசியலுக்கு வந்த சஞ்சயை உ த்தரப் பிரதேச அரசியலைக் கவனித்துக் கொள்ள அனுப்பியிருந்தால் அங்கு அயோத்தி முதலான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிட்டிருக்கும்; உத்தரப் பிரதேச அரசியலும் இன்றுள்ள அளவுக்கு மோசமாகியிருக்காது என்று அருட் செல்வர் அபிப்பிராயப் பட்டார்கள்.
சஞ்சய் காந்தி அகால மரணம் எய்தியபோது இந்திரா காந்திக்குத் தாம் எழுதிய இரங்கல் கடிதத்தில் சஞ்சயை உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பியிருந்தால் இந்தச் சோக சம்பவத்திற்கும் இடம் இருந்திருக்காதே என்று குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்கள்.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தேச நலனையே கருதுபவர்களின் எண்ண ஓட்டம் இப்படியெல்லாந்தான் இருக்கும். பிரத்தியட்ச நிலையினைப் பார்த்து, உள்ளதைக் கொண்டு எந்த அளவுக்கு நன்மைக்கு வழி செய்யலாம் என்றுதான் அவர்களின் மனம் தவிக்கும்.
வேண்டியவர் வேண்டாதவர் எனப் பாகுபாடு செய்து, இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்றெல்லாம் யோசிக்கும் மனப்போக்கு குறுகிய சுய நல அரசியல்வாதிகளிடம்தான் காணக் கிடைக்கும். அருட் செல்வர் கட்சி அரசியலுக்குக்கு அப்பாற்பட்டவரே அல்லவா ?
பேச்சி னூடே அருட்செல்வர் தெரிவித்த ஒரு யோசனை காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளும் தமது கொடிகளைச் சுருட்டி வைத்துவிட்டு, தங்களுடைய தேர்தல் சின்னங்களை மட்டுமே தங்களுக்குரிய அடையாளமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘தேசியக் கொடிதான் நமது நாட்டில் மக்கள் அவதானிக்கிற கொடியாக இருக்கவேண்டும். அரசியல் கட்சிகளுக்குத் தனித்தனியாகக் கொடிகள் தேவையில்லை. கட்சிக் கொடிகளைக் கைவிடுவதால் தேசிய உணர்வு வலுப்பெறும். எங்கு நோக்கினும் விதம் விதமான கொடிகள் பறந்து கண்ளை உறுத்துவதும், சண்டை பூசல்ள் விளைவதும் முற்றுப் பெறும். எல்லாக் கட்சிகளின் நோக்கமும் அதனதன் வழியில் தேசத் தொண்டு செய்வதுதான் என்ற என்ணம் மக்களிடையே வேரூன்றும் ‘ என்று அருட்செல்வர் கருத்துத் தெரிவித்தார்கள்.
தேசத்திற்குத் தம்மால் ஆன பணியினைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்களில் ஒருவர் அருட்செல்வர். 1940ல் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராகி, காலனி ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டவரேயன்றி, சுதந்திரம் நிச்சயமான பிறகு காங்கிரஸுக்கு வந்தவர் அல்ல. 1952ல் சென்னை ராஜதானியின் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சியிலிருந்து வெற்றிபெற்று, காங்கிரஸின் மானம் காத்தவர். தமது வெற்றியினால் தொடர்ந்து காங்கிரக்கு ஓர் இடத்தை உத்தரவாதமாகத் தந்துகொண்டிருந்தவர். தீவிர அரசியலிலிருந்து வெகு காலம் முன்பே விலகிவிட்ட போதிலும், நாட்டின் நலன் கருதி, பொருளாதார வளத்திற்கான யோசனைகளைத்
தொட ர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பவர். அவரது யோசனைகளையெல்லம் கேட்டு அவற்றை ஒழுங்காகச் செயல் படுத்தி வந்தாலே போதும், உருப்பட்டு விடுவோம்.
—-
malarmannan97@yahoo.co.uk
- பனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு
- உன்னதம் இலக்கிய இதழ்.
- ‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி
- உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்
- கடிதம்
- தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- வாஷிங் மெஷினும், மனுஷனும்!!
- அகமும் புறமும் (In and Out)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்
- தவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்
- ‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து
- ‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்
- நிலாக்கீற்று -3
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2
- அப்பாவி ஆடுகள்
- நிவாரணம் வந்தது மனிதம் போனது!
- கீதாஞ்சலி (55)
- பெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்
- ரிஷபன் கவிதைகள்
- ஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்
- ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1
- ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு!
- எல்லாம் ஒலி மயம்
- பயம்
- கன்னிமணியோசை
- மஹான்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)