அவரே சொல்லி விட்டார்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

சிவஸ்ரீ


புதுசா எதை வாங்க
புது வருடத்துகென ?

நாள் காட்டி
நாலு வெள்ளி
நாளை பார்க்கலாம்
நாலடி நடந்தாச்சு.

வாழ்த்து அட்டை ?
வாங்கி விடலாமா ?
விரித்து விரித்துப் பார்க்க…

என்ன புதிதாய்…
எப்போதும் போல்

இனிய புத்தாண்டும்
என்றும் அன்புடனும்…

கொத்து ரோஜாக்களும்
குத்து விளக்குகளும்…

இதற்கா
இரண்டு வெள்ளி ?

அறுபது காசில்
ஏர்மெயிலில்
எழுதி விடலாமே!
எட்டி நடந்தாயிற்று.

அழைப்புத் தொலைபேசி அட்டை ?
ஐம்பது வெள்ளியாகி விடுமே
ஐந்தைந்து நிமிடம் பேசினாலும்
அத்தனை உறவுக்கும்

அந்த வெள்ளைச் சட்டை ?
அழுக்காகும் வெளிர் நிறம்
அலுவல் அழுத்தத்தில்
அடுத்த முறை பார்க்கலாம்.

கடைசியாய்க் கண்ணில் பட்டு
கால் நகர மறுத்துக்
காசை யோசிக்காது
கையில் வந்தது…

தாரண வருடப் பலன்கள்
நவக்கிரக ஜோதிடரின்
நட்சத்திரப் புத்தகம்

ராகுவும் கேதுவும்
ராசியாகி விட்டனராம்
ராஜயோகம் தானாம்

குருவும் சனியும் கூட
கூட்டாளியாகி விட்டனராம்
கொண்டாட்டம் தானாம்.

வரவு அதிகரிக்குமாம்.
ஊதிய உயர்வோ
ஓவர் டைமோ…

செலவு ?

வாகன மாற்றம்.
பிக்கப்பிலிருந்து லோரிக்கோ ?

பதவி உயர்வும்
பறந்து வருமாம்
உயர்வு இருக்கட்டும்
பதவி எப்போது வரும் ?

அரசாங்கச் சலுகை உண்டாம்.
இந்த முறை
நிரந்தரவாசம் நிச்சயமோ ?

நல்லவர் உதவுவராம்.
நல்லவர் ராசியிலும்
நமக்குதவச் சொல்லியிருக்குமா ?

ஆ! அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
உடனே எடுக்க வேண்டும்
அந்தச் சட்டையை.

இனியெல்லாம் சுகமே
இறைவனே சொன்னது போல்
இவரே சொல்லி விட்டார்.

அப்பாடா
அத்தனையும் நடக்குமா ?

சென்ற வருடம்
சிரமப் பட்டதாகச்
சரியாய்த் தானே போட்டிருக்கார்.

அப்ப இந்த வருடம்
அருமை என்பதும்
உண்மையாய்த் தானிருக்கும்!

– (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ