சின்னக் கருப்பன்
அவசர நிலை பிரகடனம் செய்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. பாரதிய ஜனதா கட்சி இந்த அவல நாளை நினவு கொள்ளும் விதமாய் சில நிகழ்ச்சிகளை நிகழ்த்த விருக்கிறது என அறிகிறோம். 1975 சூன் மாதம் ,13ம் தேதி இந்திரா காந்தி தேர்தல் செல்லாதென அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னபின்பு, பதவியிறங்க மறுத்து இந்திரா காந்தி பிரகடனம் செய்த அவசர நிலை எல்லா விதங்களிலும் ஒரு இருண்ட காலம் என்று சொல்ல வேண்டும். இந்தியா பாகிஸ்தான் போலவும் மற்ற எதேச்சாதிகார நாடுகள் போலவும் ஆகிவிடக் கூடிய வாய்ப்பு மிக அதிகமாகத் தோன்றியது. அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டன. பல அரசியல் தலைவர்கள் சிறைக்கு அனுப்பப் பட்டனர். வினோபா கூட அதை ‘அனுஷாஸன் பர்வம் ‘ (கட்டுப்பாடுக் காலம் ) என்று வர்ணித்தார். சஞ்சய் காந்தியின் அரசாங்கமாய் இந்திய அரசாங்கம் மாறியது. செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. தணிக்கை செயல் படத் துவங்கியது. விமர்சனக் குரல்கள் நெறிக்கப் பட்டன.
இந்த அவலத்தை எதிர்த்து முதலில் ஒலித்த குரல்களில் முக்கியமானது தி.முக-வின் குரல் என்பதைப் பதிவு செய்தாக வேண்டும். இதனால் ஆட்சிக் கலைப்பையும் இவர்கள் சந்திக்க நேரிட்டது.
மார்க்ஸிஸ்ட் கட்சியும் அவசர நிலையை எதிர்த்தது. ஆனால் இது எதேச்சாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்கிற அடிப்படைக் கொள்கையிலிருந்து வெளிப் பட்டது என்று சொல்ல முடியாது. கேரளம், வங்காளம் இவற்றில் பிரதான எதிர்க் கட்சியாய் மார்க்ஸிஸ்ட் கட்சி இருந்ததும் , காங்கிரஸின் செயல் பாடு என்ற அளவில் எதிர்த்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது கருதப் பட வேண்டிய விஷயம். ஆனாலும் அடக்குமுறையைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. ஜோதிர்மாய் பாசு போன்ற ஒப்பற்ற தலைவர்கள் சிறைக்குச் செல்ல நேர்ந்தது.
ஆர் எஸ் எஸ் -ம் கூடத் தன் அவசர நிலை எதிர்ப்புப் போர் பற்றிப் பறை சாற்றிக் கொள்வதுண்டு. இவர்கள் சஞ்சய் காந்தி முஸ்லிம் மக்கள் மீது குடும்பக் கட்டுப்பாட்டைத் திணித்த போது சஞ்சயுடன் ஒத்துழைத்தவர்கள் என்பதை மறப்பதற்கில்லை. அதில்லாமல் இவர்களின் கோட்பாடே மத மேலாண்மையும், மற்ற மதங்களின் மீது வெறுப்பு உமிழ்வது, ‘இந்து ராஷ்ட்ரம் ‘ ஸ்தாபித்தல் என்ற பெயரில் மற்ற மதத்தவரை இரண்டாம் தரக் குடிமகன்களாய் ஆக்குவதும் தான் என்பதைக் கருதும் போது, காங்கிரஸ் எதிர்ப்பின் ஓரங்கமாகத் தான் இந்த எதிர்ப்பைக் காண முடிகிறது. மதமாற்றம் போன்ற அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு அமைப்பு ஜனநாயகத்திற்குக் குரல் கொடுக்கும் என்று எதிர் பார்க்க முடியாது.
காங்கிரஸ் , அவசர நிலைப் பிரகடனம் எடுத்த பின்பு நடந்த தேர்தலில் படு தோல்வி அடைந்ததும் , தன்னைச் சுய விமர்சனம் செய்து கொண்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக தன்னை மேலும் மேலும் ஓர் தேசிய அவமானமாக உறுதிப் படுத்திக் கொள்வதிலேயே தான் இந்தக் கட்சி நேரத்தை செலவழித்தது. அன்றிலிருந்து இன்று வரையில் ‘மேலிடம் ‘ என்ற ஒன்றின் துதி பாடிகளை காங்கிரஸ் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் கொண்ட இந்தக் கட்சி இன்னமும் உயிரோடிருப்பதன் காரணம் என்னவென்று விளங்கவில்லை.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே ஓரளவு எதேச்சாதிகாரத்தை ஆதரிக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். ராமதாஸ் தலைமைப் பொறுப்பில் இல்லாத பா.ம.க , கருணாநிதி முதல்வர் ஆகாத திமுக அமைச்சரவை, ஜெயலலிதா முதல்வர் ஆகாத அதிமுக அமைச்சரவை – இவையெல்லாம் கனவிலும் நிகழாத ஒன்று. இந்திராவை விட மோசமான எதேச்சாதிகாரத்தின் சின்னமான ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர பா.ம.க , ம.தி.மு.க -வினருக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்னும் போது, நாங்கள் ஜன நாயகக் காவலராக்கும் என்று பீற்றிக் கொள்வதில் எந்தப் பயனுமில்லை.
இன்று ஜெயப் பிரகாஷ் நாராயண் காமராஜ் போன்ற தலைவர்கள் இல்லை. எனினும் அவசர நிலையின் அவலத்தை நேரடியாய் உணர்ந்த சிலர் இன்னமும் அரசியலில் இருக்கின்றனர். கருணாநிதி, ஹெக்டே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் இவர்கள். ஆனால் இவர்களை ஜன நாயகப் பாதுகாவலர்கள் என்று சொல்ல முடியாது. உண்மையான ஜன நாயகப் பாதுகாவலர்கள் பொது மக்களே இன்னமும் இந்தியாவில், கருத்துச் சுதந்திரம் அவசியம் என்று நினைக்கிற மக்கள் தான் பெரும்பான்மை என்பது ஓர் ஆறுதல் தரத் தக்க விஷயம். அவர்கள் மீதான கருத்துத் தாக்குதல்களை மதவாத சக்திகளும், சாதீயச் சக்திகளும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. இந்த சக்திகளை எதிர்க்கிற போக்கில் போராடும் ஒரு கடமை அனைவருக்கும் உள்ளது.
திண்ணை
|