அழுக்கும் நானும்

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

அனந்த்


உள்ளத்தைத் திண்ணையில் கொண்டுவந்து – சற்றே
உலரவைத்துப் பின்னர் எடுத்துவைத்தேன்
வெள்ளை வெளேரென்ற வெய்யிலிலே- அது
வெந்திருக் கும்உள் புகுந்திருந்த
கள்ளமெல் லாம்காய்ந்து தீய்ந்திருக்கும்- என்ற
களிப்புடன் கையிலெ டுக்கையிலே
எள்ளள வும்முன்பு இருந்தகறை – ஒன்றும்
ஏகவில் லைஐயோ என்னசெய்வேன்!

பன்னெடும் நாளாய்ப் படிந்திருந்த – தூசு
பாவியென் நெஞ்சம் அகன்றிடுமோ ?
கன்னெஞ்சன் போல்என்றும் காலமெல்லாம் -நானும்
கடத்திய தும்என்றன் குற்றமன்றோ ?
வன்முறை வஞ்சம் வளர்த்தபின்னர் -அவை
வாடிடு மோஒரு வார்த்தையிலே ?
என்னென்ன மோசெய்து பார்த்துவிட்டேன் – மாசும்
ஏகவில்லை எங்கும் போகவில்லை

‘வந்துநின் றேனுன்றன் வாசலிலே – இந்த
வாழ்க்கையி னைஎனக் கீந்தவனே!
முந்தை வினையென்னை உந்தியதால் – வந்த
மோசமன் றோஎன்றன் மாசுமனம்
சொந்தமென் றாராரோ சொல்லியொரு – துளி
சுகத்தை எனக்கிங் களித்திலரே
எந்தைநீ அன்னைநீ என்னுயிர்நீ -என்றன்
ஏதெலாம் போக்கிடல் நின்கடனே ‘

என்றுநான் வேண்டிடக் கேட்டஇறை – நகை
ஏறும் முகத்துடன் சொல்லிடுவான்:
‘ஒன்றும் குறையில்லை உன்னிடத்தில் – அதன்
உண்மைவி ளங்கிட வேண்டுமெனில்
சென்றுநின் உள்ளக் கிடங்கினிலே – நித்தம்
செப்பிடும் ‘நான் ‘என்ப(து) ஆரென்றறி
என்றும் அழுக்கிலா ஆத்துமம்நீ – என்னும்
எண்ணம் நிறைந்தபின் ஏகும் இருள்! ‘

~~(0~~(0)~~
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்