அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

அக்னிப்புத்திரன்


நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அருமையான திரைக்காவியத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள். மெல்லிய காதல் கதையை மிகவும் இயல்பாகவும் வித்தியாசமாகவும் சிந்தித்து மிகவும் சிறப்பாக ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்கள். சிறிதும் ஆபாசக்காட்சிகள் இல்லாமல் படம் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் காட்சியமைப்பில் எங்கும் துளியும் ஆபாசம் தலைகாட்டாமல் படத்தைக்கொண்டு சென்ற இயக்குநர் திரு.விஜய்க்கு ஒரு சபாஷ்.
1930களில் வருவது போல கதைக்களம் அமைந்திருப்பதால், நாம் கற்பனையிலும் காண முடியாத அந்தக் காலத்து மதராஸ் பட்டினத்தைத் தத்துரூபமாக நம் கண் முன்னே காட்டிய ஆர்ட் டைரக்டருக்கு விருது நிச்சயம். மிகச்சிறப்பான ஒளிப்பதிவுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் மதராச பட்டினம்.
இன்றைய கூவம் சாக்கடையா அன்று அவ்வாறு தெளிந்த நீரோடை போல ஆறாக சென்னையின் இடையே இலண்டன் தேம்ஸ் நதி போல ஓடுகிறது? நகரின் நடுவே அழகிய கூவம் நதியில் படகு ஓடுகிறது. இன்று அந்த இடம் குப்பைக்கூளமாக, மலம் கழிக்கும் இடமாக மாறிவிட்டதைத் திரைப்படத்தில் காணும் போது வருத்தமாக இருக்கிறது.
முப்பதுகளில் இருந்த மதாரஸ் பட்டினத்தைப் பார்க்க பார்க்க நம் மனம் ஏங்குகிறது. துணை முதல்வர் திரு.ஸ்டாலின் இத்திரைப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். தமது வாழ்நாள் சாதனையாக என்றும் அவர் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க, பழைய கூவம் நதியை மீண்டும் உருவாக்கிட வேண்டும். கூவத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அழகிய சென்னையை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் துணைமுதல்வருக்கு இப்படக்காட்சிகள் ஊக்கம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆரியா அருமையான கலைஞர். படத்தில் அவர் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டியிருக்கிறார். கவர்னரின் மகளாக வரும் அழகிய ஆங்கிலேய எமி என்ற நடிகை மிகவும் இயல்பாக நடித்து நம் மனதைத் தொடுகிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நடிக நடிகர்கள் தேர்வு அருமை. படம் பார்ப்பது போல ஒரு உணர்வே ஏற்படவில்லை. நாமும் அவர்களோடு சேர்ந்து வாழ்வது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இதுவே இத்திரைப்படத்தின் வெற்றியாகும். படத்திற்குப் பின்னணி இசை மிக நிறைவாக அமைந்திருக்கிறது. படம் மூன்று மணி நேரம் நீண்டாலும் அலுப்பு ஏற்படவில்லை. இருப்பினும் சற்று நீளத்தைக் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய அற்புதமான திரை ஓவியம். பாடுபட்டு உழைத்து ஒரு சிறந்த படத்தைத் தமிழ்த் திரைக்கு வழங்கிய இப்படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.
– அக்னிப்புத்திரன்

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்