டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது; எனவே அதற்கு வயது நூறாண்டு முடிவடைகிறது. இப்பரிசைத் தோற்றுவித்தவர் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட் நோபல் என்ற சுவீடன் நாட்டு அறிவியல் அறிஞர். சமாதானத்தின் மீது நாட்டம் கொண்ட அவர் கண்டு பிடித்ததோ டைனமைட் என்ற வெடி மருந்தாகும். நோபல் பரிசின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், உலக சமாதானம் ஆகிய பல்வேறு துறைகளில் மிகச்சிறப்பாகப் பணியாற்றிய பேரறிஞர்களுக்கு, இப்பரிசு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. தான் ஈட்டிய சுமார் 9 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்பரிசுக்காக ஒதுக்கி, அதிலிருந்து வரும் வட்டியைப் பகிர்ந்து இப்பரிசினை வழங்க நோபல் ஏற்பாடு செய்தார். நோபல் அவர்களின் விருப்ப ஆவணத்தில் (will) கூறியுள்ளவாறு, இப்பரிசு வழங்கும் பணியை சுவீடன் தேசிய வங்கி ஏற்று செயல்படுத்தி வருகிறது. வேதியியல் மற்றும் உலக சமாதானம் ஆகிய இரு துறைகளிலும் பெரும்பணி ஆற்றியுள்ள நோபல், தான் அளித்த மிகப்பெரிய நன்கொடையின் வாயிலாகத் தனது ஈடிணையற்ற வள்ளல் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 1913 இல் இரவீந்திரநாத் தாகூர் தனது கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்று, இவ்விருதை வென்ற முதல் இந்தியராகத் திகழ்கிறார். அவரைத் தொடர்ந்து சி வி இராமன், கொரானா, அன்னை தெரசா, சந்திரசேகர் போன்ற பிற இந்தியர்களும் இப்பரிசை வென்றனர். இங்கிலாந்தில் வாழும் இந்திய வமிசாவளியைச் சேர்ந்த ‘நய்பால்’, அண்மையில் நடைபெற்ற, நோபல் பரிசு தோற்றுவிக்கப்பட்ட நூற்றாண்டு விழாவில், இலக்கியத்திற்காக இப்பரிசைப் பெற்றார்.
வெடிப்பொருளான டைனமைட்டைக் கண்டுபிடித்த நோபல், அதன் மூலம் பெரும் பொருள் ஈட்டினார்; அச்செல்வத்தை உலக நன்மைக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் நன்கொடையாக வழங்கி, ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற வரிக்கு எடுத்துக்காட்டாக விளங்கிப் பெருமையுற்றார்.
1833 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21 ஆம் நாள், சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இம்மானுவேல் என்ற பொறியாளரின் மகனாகத் தோன்றியவர் நோபல். அவருக்கு வீடே பள்ளிக்கூடமாக விளங்கியது; தந்தையே ஆசிரியராக விளங்கினார். தனது தந்தையின் ஆய்வுக்கூடத்தில், அவரது வழிகாட்டுதலிலிலும், மேற்பார்வையிலும் கல்வி கற்றார், தொழில் பயிற்சி பெற்றார். தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலம், ஃபிரெஞ்சு, சுவீடிஷ், ரஷ்யன், ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சியடைந்தார்; பின்னர் வேதியியலிலிலும் சிறந்த புலமை பெற்றார். 1850 இல் மேற்படிப்புக்காகப் பாரீஸ் சென்றார்; அமெரிக்காவில் ஜான் எரிக்சன் அவர்களின் வழிகாட்டுதலில் நான்கு ஆண்டுகள் கல்வி பயின்ற பின்னர் தன் தந்தையின் ஆய்வுக்கூடத்திலேயே ஆய்வுப்பணியை மேற்கொண்டார். நோபல் இளமை முதலே அறிவுக் கூர்மை மிக்கவராக விளங்கிய போதிலும், வாழ்க்கைத் துன்பங்கள் அவரைப் பெரும் இன்னலுக்கு ஆளாக்கின.
1859 ஆம் ஆண்டு ஹோலென்பர்க் நகரில் தன் தந்தையாருடன் சேர்ந்து நைட்ரோகிளிசரின் என்னும் வெடிமருந்து வேதிபொருளைத் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றை நோபல் துவக்கினார்; எதிர்பாராதவிதமாக ஒருமுறை அவ்வேதிப்பொருள் வெடித்து, அவரது தொழிலகம் முற்றுமாக அழிந்தததுடன், நோபலின் தம்பி ஒருவரும் அவ்விபத்தில் உயிரிழந்தார்; அரசாங்கமும் எவ்வித இழப்பீடும் தரவில்லை. இந்நிகழ்ச்சிகள் நோபலுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தன; பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கிணங்க, நோபலின் தந்தை முடக்குவாத நோய்க்கு ஆட்பட்டு, மகனுக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாமல் பாரமாக விளங்கினார்.
மீண்டும் மேற்கூறிய அதே நைட்ரோகிளிசரின் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழிலகங்கள் சிலவற்றை நார்வே மற்றும் ஜெர்மனி நாடுகளில் நோபல் துவக்கினார். மீண்டும் அதே பழைய விபத்தினால் அவரது தொழிற்சாலைகள் நாசமாயின; அரசாங்கம் நைடோகிளிசரினைப் பயன்படுத்துவதையே தடை செய்து விட்டது; நோபல் ஒரு பைத்தியக்கார விஞ்ஞானி என்று பட்டம் சூட்டப்பட்டார்; இவ்வாறு பொருளிழப்பும், அவப்பெயரும் அவரைத் துரத்தின.
தொடர்ந்து வந்த இன்னல்கள், துன்பங்கள், தோல்விகள், அவமானங்களைக்கண்டு நோபல் மனம் தளர்ந்து விடவில்லை; நைட்ரோகிளிசரின் என்னும் அவ்வேதிப்பொருளைப் பாதுகாப்புடன் கையாளும் வழிமுறைகளைக் காண்பதிலேயே அயராமல் உழைத்து வந்தார். ஒரு நாள் அவ்வேதிப்பொருள், அடைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலனிலிருந்து, கசிவதை கண்டார்; அக்கசிவைத் தடுக்கும்பொருட்டு கெய்சல்கர் (kieselguhr) என்ற உறிஞ்சு பொருளை (absorbant) அக்கொள்கலனைச் சுற்றிப் பயன்படுத்தினார்; கெய்சல்கரினால் உறிஞ்சப்பட்ட நைட்ரோகிளிசரின் வெடிக்காமலிருப்பதையும், இந்நிலையில் அவ்வேதிப்பொருளை மிகவும் பாதுகாப்போடு பயன்படுத்த முடிவதையும் கண்டறிந்தார். நீர்ம நிலையில் இருந்த வேதிப்பொருளை, திண்ம நிலைக்கு மாற்றி அதற்கு ‘டைனமைட்’ எனப் பெயர் சூட்டினார். இப்பாதுகாப்பு முறையோடு, தனது தொழிற்சாலைகளை மீண்டும் புது வேகத்தோடு துவக்கி நடத்தினார். திண்ம நிலைக்கு மாற்றப்பட்ட நைட்ரோகிளிசரினை, அதாவது டைனமைட்டை விற்று ஏற்கனவே இழந்த பொருளை மீட்டதோடு மட்டுமன்றி, மேலும் மேலும் பெரும் செல்வத்தைக் குவித்தார். 1887 இல் அதே வேதிப் பொருளைக் கொண்டு புகை வராத டைனமைட் வெடிப்பொருளை நோபல் கண்டுபிடித்தார்; உலகின் பல்வேறு நாடுகளும், கையாளுவதற்கு எளிதான இப்பொருளைப் பயன்படுத்தத் துவங்கின. தற்போது நோபல் ஏறக்குறைய 100 பொருள்களுக்கு காப்புரிமை (patent) பெற்றிருந்தார்; இவற்றின் மூலம் ஏராளமான உரிமைத்தொகை (royalty) நோபலுக்குக் கிடைத்து வந்தது. 1898 ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு சுமார் 9 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இவ்வளவு செல்வத்தையும் நோபல் பரிசு வழங்குவதற்கான மூலதனத் தொகையாக வழங்கி, ஈடிணையற்ற வள்ளலாக மாறினார். இம்மூலதனத்திலிருந்து வரும் வட்டித்தொகையே நோபல் பரிசு வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அழிவுப்பொருளை உற்பத்தி செய்ததன் மூலம் ஈட்டிய தொகையை, ஆக்கப் பணிகளுக்கும், உலக சமாதானத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்துவது மகிழ்ச்சியையே அளிக்கிறது.
****
டாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD
மொழிக் கல்வித்துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)
வட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education (NCERT)
மைசூர் 570006 Mysore 570006
ragha2193van@yahoo.com
- கூலியில்லா வேலைக்காரி
- யாரிந்த தீவிரவாதி ?
- அறிவியல் மேதைகள் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட் நோபல் (Alfred Bernard Nobel)
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன் [Carl Sagan] (1934-1996)
- பாட்டிகளின் மகத்துவம்
- புதிய வகை உயிரை உருவாக்க அறிவியலாளர்கள் முனைகிறார்கள்.
- ராங்கேய ராகவின் படைப்புலகம்
- சந்தேகத்துக்கு மருந்தில்லை (எனக்குப் பிடித்த கதைகள்- 37 -லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘)
- பிரியங்களுடன்
- காணிக்கை!
- பொதுவுடமை.
- ரசிக்க பிடித்தன..
- நீச்சல் பயிற்சி
- நட்பு
- நினைவு
- குறை தீர்ந்த குழந்தைகள்
- அப்பாவின் ஓவியம்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 5 (தொடர்கவிதை)
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002
- கவிதா:
- ஞானோபதேசம்
- சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்
- மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே
- பாட்டிகளின் மகத்துவம்
- தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?
- தண்ணீர் இனவெறி
- தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்
- நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்
- புகை
- பூவும் நாரும்
- கவர்ச்சி காட்டும் கண்ணகி
- மனமெங்கும் வாசமோ ?
- கனவு நாடு
- சா(சோ)தனை
- மத்யமர்(சுஜாதா மன்னிப்பாராக….)