அறிவியல் துளிகள்-9

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை ?

விசைப்பலகையில் எழுத்துகள் தட்டெழுத்தரின் வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன; அதாவது மிகுதியாகப் பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் தட்டெழுத்தரின் விரல்களுக்கு எட்டும் வண்ணம் அமைந்திருப்பதைக் காணலாம். அதிக அளவில் புழங்கும் பெரும்பாலான எழுத்துகள் விசைப் பலகையின் மத்திய வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன; இவ்வரிசை எழுத்துகள் மீதுதான் தட்டெழுத்தரின் விரல் நுனிகள் சாதாரண நிலையில் படிந்திருக்கும்.

ஆனால் தற்போது புழக்கத்தில் இருந்துவரும் குவெர்ட்டி (qwerty) ஆங்கில விசைப்பலகை முழுத் திறன் பெற்றதென்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக அதிக அளவு பயன்படும் e என்ற ஆங்கில எழுத்து மத்திய வரிசையில் இல்லை; மேலும் இரு கைகளின் சுண்டுவிரல்களும் கடுமையாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. இவையெல்லாம் தற்போதுள்ள விசைப் பலகையின் சில குறை பாடுகள். இக்குறைகளையெல்லாம் நீக்கி, புதுவகை விசைப்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தட்டெழுத்தர்களின் ஆர்வமின்மையாலும், பழைய முறையே பழக்கப்பட்டு விட்டதாலும், திருத்தம்பெற்ற புது விசைப்பலகைகள் நடைமுறைக்கு வரமுடியாமற் போய்விட்டன.

இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. இந்நிலையில் இரத்த வங்கிகளில் நீண்ட காலத்திற்கு எவ்வாறு இரத்தத்தைச் சேமித்து வைக்க இயலுகிறது ?

மனித உடலில் ஓடும் இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்; பின்னர் அவை அழிந்து விடுகின்றன. ஆனால் உடனடியாக, எலும்பிற்குள்ளிருக்கும் மெல்லிய கொழுப்பிலிருந்து புதிய சிகப்பணுக்கள் உற்பத்தியாகி இழப்பை ஈடு செய்கின்றன. சாதாரண காயம் பட்ட ஒருவரின் உடலிலிருந்து வெளியேறும் ரத்தம் உடனடியாக உறைந்து போவதைக் காணலாம். இதனை நொதிவினை (enzymatic reaction) என்பர். குருதிக் கொடையாளி ஒருவர் தரும் இரத்தம் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட (sterilized) பையில் சேமிக்கப்படுகிறது. இப்பையினுள் சைட்ரேட் உப்புகள் இருப்பதால் இரத்தம் உறைவது தவிர்க்கப்படுகிரது. மேலும் சிறந்த பாதுகாப்பையும் ஊட்டத்தையும், சேமிக்கப்படும் இரத்தத்திலுள்ள அணுக்களுக்கு அளிக்கும் பொருட்டு, அடெனின் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் (dextrose) ஆகியனவும் பையினுள் சேர்க்கப்படுகின்றன. அடுத்து இரத்தம், கொடையாளியிடமிருந்து பெறப்பட்டவுடனே குளிபதனப்பெட்டியில் (4 – 6 செ.கி. அளவில்) வைக்கப்படுவதாலும், உறைவது தவிர்க்கப்படுகிறது. மேலும் இரத்தம் வங்கியில் சேமிக்கப்பட்டவுடனே, உடலில் அது நிகழ்த்தும் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுவதால் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உரியதாக விளங்குகிறது.

சிலந்தி, தான் பின்னும் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி ?

சிலந்திப் பூச்சியின் பின்புறம், மெல்லிழைகளை உருவாக்கும் மூன்று உறுப்புகளைக் கொண்ட தொகுதி ஒன்று உள்ளது; இதன் மூலம் இழைகளை உற்பத்தி செய்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்கும் வலையை சிலந்தி உருவாக்குகிறது. பூச்சிகள் பறக்கும்போது இவ்வலையில் தட்டுப்பட்டால், அவற்றின் பறக்கும் செயல் தடைபடுகிறது; அவ்வாறு தடைபட்டவுடனே வலையில் இருக்கும் சிலந்தி முட்டிமோதி தன் நச்சுக் கொடுக்குகளைப் பயன்படுத்தி அப்பூச்சிகளைத் தனக்கு இரையாக்கிக் கொள்ளுகிறது. பூச்சிகளுக்கோ, வலையில் மோதி தமது பறக்கும் செயல் தடைபட்டவுடனே, ஏதும் தோன்றாமல் திகைப்படைந்து, சிலந்தி விரித்த வலையில் எளிதாகச் சிக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் சிலந்தி தான் பின்னிய வலையின் பரப்பு முழுவதையும் நன்கு அறிந்திருப்பதால், அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளுகிறது. சில சிலந்திகள் கோந்து போன்ற திரவத்தை வெளியிடுவதால், பறக்கும் பூச்சிகள் அதில் எளிதாக ஒட்டிக் கொள்ளுகின்றன.

ஒரு குறிப்பிட்ட திசையில் வானொலிப் பெட்டியைத் திருப்பி வைக்கும்போது, குறிப்பிட்ட வானொலி நிலைய நிகழ்ச்சிகள் நன்றாகக் கேட்பது ஏன் ?

பெரும்பாலான கையடக்க வானொலிப் பெட்டிகளில் ஆன்டெனாக்கள் (antennas) பெட்டிக்குள்ளேயே அமைந்துள்ளன; அவற்றின் பணித்திறன் திசைக்கேற்றவாறு மாறக் கூடியது. வானொலிப் பெட்டிகளில் பொதுவாக இருவகை ஆன்டெனாக்கள் உண்டு; மத்திய அலை (medium wave) ஒலிபரப்பை உள்வாங்கும் சுருள் கம்பி ஆன்டெனா (coil antenna), சிற்றலை ஒலிபரப்பை எற்கும் வளைகம்பி ஆன்டெனா (loop antenna) என்பனவே அவை. குறைவான இடத்தையே அடைத்துக் கொள்ளும் என்பதால் இவ்வகை ஆன்டெனாக்களே கையோடு எடுத்துச் செல்லக்கூடிய வானொலிப் பெட்டிகளில் பயன்படுத்தப் பெறுகின்றன. ஆனால் இந்த ஆன்டெனாக்கள் ஒலிபரப்பு அலைபரப்பியின் (broadcasting transmitter) திசைக்கேற்றவாறு இருக்குமானால் சிறப்பான முறையில் வானொலி நிகழ்ச்சிகளை நாம் கேட்க இயலும். சுருள்கம்பி ஆன்டெனா என்பது ஒரு கம்பியினால் இரும்புத் தண்டைச் சுற்றி செய்யப்படுவதாகும். இவ்வகை ஆன்டெனாவின் அச்சு, ஒலியலை சமிக்கைகளுக்குச் செங்குத்தாக இருக்குமானால் வானொலியின் ஒலிபரப்பு நன்றாகக் கேட்கும்; மாறாக ஆன்டெனாவின் அச்சும் ஒலியலைகளும் ஒரே தளத்தில் இணையாக இருக்குமானால் ஒலிபரப்பு வலிமையின்றி மிகவும் மென்மையாகக் கேட்கும். வளைகம்பி ஆன்டெனா என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முழு கம்பி வளையங்களாலானது. இவ்வகை ஆன்டெனாக்களில் ஒலிபரப்பின் வன்மை மென்மைகள் மேற்கூறிய சுருள்கம்பி ஆன்டெனாக்களுக்கு நேர் எதிரான முறையில் அமையும்; அதாவது சமிக்கைகளுக்கு இணையான தளத்தில் இருந்தால் வலிமையாகவும், செங்குத்தாக இருப்பின் மென்மையாகவும் இருக்கும். இக்காரணங்களாலேயே நிலையங்களின் ஒலிபரப்புக்கு ஏற்ற வகையில் வானொலிப் பெட்டியின் திசையை மாற்றி எத்திசையில் சிறப்பாக ஒலிபரப்பைக் கேட்க இயலுகிறதோ, அத்திசையில் வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைக் கேட்கிறோம்.

***

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

Email ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர