அறிவியல் துளிகள்-24

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


குளிர் காலங்களில் நமது கை, கால், உதடுகளில் வெடிப்பு உண்டவது ஏன் ?

கை, உதடு ஆகிய பகுதிகளில் வெடிப்பு ஏற்படுவதற்குக் காற்றில் ஈரப்பதம் மிகவும் குறைந்து உலர்தன்மை ஏற்படுவதே முக்கிய காரணம். தோலின் அடிப்பகுதியில் உள்ள வியர்வைச் சுரப்பிகள், வியர்வையைச் சுரந்து வெளியேற்றுவதால் தோல் ஈரத்தன்மை பெறுகிறது. ஈரப்பதம் இருக்கும்போது உடலின் தோல்பகுதி மென்மையாக இருக்கும். வெளிக் காற்று மிகவும் உலர்தன்மை வாய்ந்ததாக இருப்பின், தோலின் ஈரத்தன்மை உலர் காற்றின் தாக்கத்தால் மிகவும் குறைந்து போகிறது. மேலும் தோலின் மீள்திறனும் (Elasticity) குறைந்து, அதன் காரணமாக தோலில் பிளவும், வெடிப்பும் உண்டாகின்றன. உடல் முழுதும் வெடிப்பு உண்டாகிறதென்றாலும், தோல் எங்கு மிகவும் மென்மையாக உள்ளதோ, அங்கு வெடிப்பு மிகுதியாக வெளிப்படுகிறது. இதனால்தான் உதடு, கை ஆகிய இடங்களில் தோல்வெடிப்பு மிகுந்து காட்சியளிக்கிறது. கிரீஸ் (Grease), வெண்ணெய், குளிர்ந்த கிரீம் (Cream) போன்ற வற்றைத் தடவி ஓரளவு வெடிப்பைத் தவிர்க்கலாம்.

அழுக்கான துணியை வெளுக்கும்போது கல் அல்லது தரை மீது அடித்துத் துவைப்பது ஏன் ?

அழுக்குத் துகள்கள், எண்ணெய் அல்லது பிசுபிசுப்பான பொருள்களுடன் சேர்ந்து நமது ஆடைகளில் ஒட்டிக்கொள்வதால் துணிகள் அழுக்கடைகின்றன. தண்ணீரில் துணியை நனைப்பதனால் மட்டுமே இந்த அழுக்குகள் நீக்கப்பெறுவதில்லை. சோப்பு, சலவைத்தூள், சலவை சோடா போன்றவற்றைப் பயன்படுத்தியே அழுக்குகளை நீக்க இயலும். சோப்புக்கட்டி அல்லது சலவைத்தூளைப் பயன்படுத்துவதன் வாயிலாக தண்ணீருக்கும் பிசுபிசுப்புப் பொருட்களுக்கும் இடையேயுள்ள பரப்பு இழுவிசை (Surface tension) குறைக்கப்படுகிறது; இதன் விளைவாக பிசுபிசுப்புப் பொருளும் அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குத் துகள்களும் துணியிழைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இருப்பினும் துணியிழை களுக்கு இடையே தங்கியிருக்கும் அழுக்குத் துகள்களை அவ்வளவு எளிதாக நீக்க முடிவதில்லை. கல் அல்லது தரை மீது அடித்துத் துவைக்கும்போதுதான் துணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குத் துகள்கள் எளிதாக வெளியேற்றப்படுகின்றன.

காரம், நெடி மிகுந்த உணவை உண்ட பின்னர், சூடான பால், தேனீர் ஆகியவற்றை அருந்தினால், சூடும், காரமும் மிகுதியாக உணரப்படுவது ஏன் ?

இனிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நான்கும் அடிப்படைச் சுவைகள். இவற்றிற்கான சுவை முகிழ்ப் பகுதிகள் (Taste buds) நாக்கின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இனிப்பிற்கான சுவை முகிழ்ப் பகுதி நாவின் நுனியிலும், பிறவற்றிற்கான சுவைமுகிழ்ப் பகுதிகள் நாவின் பின்புறப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. மிளகாய் போன்றவற்றின் சற்று கடுமையான காரச் சுவை நாவின் பின்பகுதியில் அமைந்துள்ள வலி உணர் நரம்புகளின் (Pain sensitive nerves) தூண்டுதலால் (Stimulation) உண்டாகிறது. மிளகாய் மற்றும் மசாலா கலந்த உணவை உண்ணும்போது காரச் சுவை மேலோங்கி இருக்கும்; இந்நிலையில் உடனே சூடான தேனீர், பால் போன்ற பானங்களை அருந்தினால் ஏற்கனவேயுள்ள காரச்சுவையுணர்வு மேலும் ஊக்குவிக்கப்பெற்று மிகுந்த காரத்தை உணர்கிறோம்.

உயிருள்ள உடல் தண்ணீரில் மூழ்குவதும், இறந்த உடல் நீரில் மிதப்பதும் ஏன் ?

இறந்த உடலை நீரில் எறிந்த உடனே, முதலில் அதுவும் மூழ்கத்தான் செய்யும். இறந்த உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) நின்றுபோய் உடல் சிதையத் (Decomposition) துவங்குகிறது. இந்நிலையில் சில வாயுக்கள் (Gases) இறந்த உடலின் பள்ளமான குழிவுப் பகுதிகளில் சேர்கின்றன. இதன் விளைவாக உடல் எடை குறைந்து இலேசானதாகிறது. ஆனால் உடல் ஊதிப்போகும். இப்போது இறந்த உடலால் வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை அவ்வுடலின் எடையைவிட மிகுதியாக இருப்பதால், அது நீர்ப் பரப்புக்கு மேலே வந்து மிதக்கிறது. ஆனால் உயிரோடிருப்பவர் தண்ணீரில் இருக்கும்போது அவர் உடலின் எடையைவிட வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை குறைவாக இருப்பதால் உடல் நீரில் மூழ்குகிறது. எனவே மூழ்குவதைத் தவிர்ப்பதற்கு உயிரோடிருப்பவர் நீச்சலடித்து நீர்ப் பரப்புக்கு மேலே மிதக்கக் கற்றுக்கொள்ள வேண்டியதாகிறது.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர