அறிவியல் துளிகள்-20

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


77.மின்னணு வளிமத் தீப்பொறிக் கருவியை (Electronic gas lighter) இயக்கும் போது, கருவியின் நுனிப்பகுதியில் கை வைத்தால் மின் அதிர்ச்சி (shock) ஏற்படுவது ஏன் ?

தீப்பொறிக் கருவியில் உண்டாகும் பொறி உயர் அழுத்த மின்சாரத்தால் (high voltage electricity) உண்டாக்கப் பெறுகிறது. மேற்கூறிய கருவியில் அழுத்த மின்னியல் படிகம் (Piezo electric crystal) பயன்படுத்தப் பெறுகிறது. கருவியின் முன்பக்கத்திலுள்ள குமிழை (Knob) அழுத்தினால் படிகமும் அழுத்தப்பெற்று அதனால் மின் அழுத்தம் (Voltage) உண்டாகிறது. கருவியினுள் அமைந்துள்ள மின்னணுச் சுற்றினால் (Electronic circuit) இம்மின்னழுத்தம் மேலும் பெருக்கமடைந்து நுனிப்பகுதியில் அமைந்துள்ள இரு மின்முனைகளுக்கு (Electrodes) இடையே உள்ள சிறு சந்தில் செல்லும்போது மிகவும் திறன் வாய்ந்த தீப்பொறி உண்டாகிறது. அவ்வாறின்றி, குமிழை அழுத்தும்போது கருவியின் நுனியில் கைவிரலை வைத்தால், மின்னூட்டம் தீப்பொறியை உண்டாக்காமல் மாறாகக் கைவிரல் வழியே பாய்ந்து மின் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

78. மிகப் பெரிய ஒலியைக் கேட்கும்போது நாம் கண்களைச் சிமிட்டுவது ஏன் ?

மிகப் பெரிய ஒலியை அல்லது பேரிரைச்சலைப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. இத்தகைய ஒலி நமது செவி நரம்புகள் ஊடே நாம் விரும்பாத தூண்டல்களை (Impulses) உண்டாக்குகிறது; மேலும் இதன் தொடர்ச்சியாக உடலுக்கு ஏதோ அபாயம் உண்டாகப் போகிறது என்ற ஓர் எச்சரிக்கையும் நமது நரம்பு மண்டலத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அபாயத்தின் அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் கண்கள் உடனே மூடிப் பின்னர் திறக்கின்றன; அதாவது கண்கள் சிமிட்டுகின்றன. இஃது ஓர் அனிச்சைச் செயல் (Reflex action); உணர்வு நரம்புகளுக்கும் (Sensory nerves) இயக்க நரம்புகளுக்கும் (Motor nerves) இடையே நடைபெறும் நேரடிச் செய்திப் பரிமாற்றத்தின் மூலம் இச்செயல் நடைபெறுகிறது. இயக்க நரம்புகள் செய்தி வந்தவுடனே மூளையுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் உடனடியாக இந்த அனிச்சைச் செயலை மேற்கொள்ளுகின்றன.

79. சாதாரண நிலையில் ஓடத் துவங்காத தானியங்கி வாகனம், பின்னாலிருந்து தள்ளினால் ஓடத் துவங்குவது ஏன் ?

வாகனத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு பொத்தானை அழுத்தினால், துவக்கும் மோட்டார் (Starter motor) என அழைக்கப்படும் மின் மோட்டார் இயங்குகிறது. மோட்டாரின் இயக்கத்தினால் பொறியிலுள்ள (Engine) வணரி (Crank) திரும்பி, எரிபொருளின் எரியூட்டுதல் சுழற்சி (Combustion cycle) துவங்குகிறது. மின்மோட்டார் இவ்விதமாக இயங்காவிடிலோ அல்லது மின்கல அடுக்கில் (Battery) திறன் குறைந்திருந்தாலோ வாகனம் இயங்க மறுக்கும். பொறியிலுள்ள பல்வேறு உந்துதண்டுகள் (Pistons) தமது இறுதி நிலையில் இருப்பினும் வாகனம் இயங்க மறுக்கலாம். இத்தகு நிலைகளில் வணரியை எப்படியாவது திருப்பிவிட்டால் பொறியும் அதைத் தொடர்ந்து வாகனமும் இயங்கத் துவங்கும். இச்செயலை பற்சக்கர (Gear) இழுவையுடன் இணைக்கப்பெற்ற நிலையில் வாகனத்தைத் தள்ளுவதன் மூலம் எளிதாக நிறைவேற்றலாம். வாகனத்தை தள்ளுவதனால் சக்கரங்கள் சுழல்கின்றன; இச்சுழற்சி பற் சக்கர அமைப்பையும் தாக்கிச் சுழல்விக்கிறது; பற்சக்கர அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள வணரித் தண்டும் (Crank shaft) இதனால் திரும்பப்பெற்று பொறியை இயங்கச் செய்கிறது. எனவேதான் வாகனத்தைப் பின்னாலிருந்து தள்ளிப் பொறியை இயக்குவிக்கிறோம். வாகனம் பற்சக்கர அமைப்பில் சேராமல் இருப்பின் பொறியை இயக்குவிக்க முடியாது. ஏனெனில் அந்நிலையில் சக்கரங்கள் வணரித் தண்டுடன் சேர்ந்து சுழலாமல் தாம் மட்டுமே சுழன்று கொண்டிருக்கும். இதனால் வாகனம் ஓடாமல் சக்கரங்கள் மட்டுமே சுழலும்.

80. உடலில் அடிபட்டால் (Injury) சில பகுதிகளில் இரத்தம் வருவதும், சில பகுதிகள் வீங்கிப் போவதும் ஏன் ?

உடலின் எப்பகுதியிலாவது, காயம் அல்லது அடிபட்டால், தோலில் சிறாய்ப்பு உண்டாகி, அங்குள்ள இரத்தக்குழாய்கள்(Blood vessels) சேதமடைந்து இரத்தம் ஒழுகுவதுண்டு; ஆனால் எப்போதும் இச்செயல் நடைபெறவேண்டும் என்பதில்லை. கூர்மையற்ற பொருளால் உடலில் அடிபடும்போது, அடிபட்ட இடத்தில் இரத்தம் கசியாமல், வீக்கம் மட்டுமே ஏற்படுவதுண்டு. இரத்ததை எடுத்துச் செல்லும் மெல்லிய தந்துகிகள் (Capillaries) அடியின் காரணமாகச் சேதமடைந்து விடுவதால் அடிபட்ட பகுதியிலுள்ள திசுக்களுக்கு (Tissues) இரத்தம் செல்வதில் தடையேற்படுகிறது. மேலும் தந்துகியிலிருந்து வெளியேறும் ஓரளவு இரத்தம் அடிபட்ட திசுப் பகுதியில் தோலுக்குக் கீழ் சேகரிக்கப்பட்டு வீக்கமாகத் தோன்றுகிறது. அடுத்து இரத்த ஓட்டத்தின் காரணமாக மேலும் மேலும் இரத்தம் வந்து அவ்விடத்தில் சேர்கிறது; அதே நேரத்தில் குறைந்த அளவு இரத்தமே அப்பகுதிக்கு வெளியே எடுத்துச்செல்லப்படுகிறது; இதன் காரணமாக வீக்கம் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். சில சமயம் அடிபட்ட பகுதியிலுள்ள திசுக்களின் சாறும் (Juice from tissues) அப்பகுதியில் சேகரிக்கப்பட்டு வீக்கம் மிகுதியாவதற்குக் காரணமாக அமைவதுண்டு. தந்துகிகள் சரியாகி இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு வந்தவுடன், வீக்கம் குறைந்துவிடும்.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

Email ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர