அறிவியல் துளிகள்-19

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


73. நீண்ட நேர உடற்பயிற்சிக்குப் பின்னரும், கடின உழைப்புக்குப் பின்னரும் உடல் முழுதும் வலியுண்டாவது ஏன் ?

கடின உழைப்பு, நீண்ட உடற்பயிற்சி ஆகியவைகட்குப் பின்னர் உடலில் வலி தோன்று வதற்குக் காரணம் களைப்புற்ற தசைகளில் சேரும் லாட்டிக் அமிலமேயாகும் (Lactic acid). தொடர்ந்து, நாள்தோறும், ஒழுங்காக உடற்பயிற்சி செய்வோரைவிட, நீண்ட இடை வெளிக்குப் பின்னர் திடாரென செய்வோருக்கே இத்தகைய வலியுண்டாகிறது. தொடர்ந்து பயிற்சி செய்வோருக்கு தசைகள் தகைவை (Stress) ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடைந்து விடுவதால் அவர்களுக்கு உடல்வலி அவ்வளவாக உண்டாவதில்லை. திடாரென்று பயிற்சி செய்வோருக்கும், கடின உழைப்புக்குப் பின்னரும், தசைகள் தகைவுக்கு உட்பட இயலாமைக்குக் காரணம் இழந்த ஆற்றலை உற்பத்தி செய்வதற்குப் போதுமான உயிர்வளி (Oxygen) இல்லாமையே. பயிற்சிக்கு உட்படும் தசைகள் ஆற்றலை இழந்து விடுகின்றன; இழக்கின்ற வேகத்தில் ஆற்றலைப் பெறுவதற்கு இயலுவதில்லை. இந்நிலையில் உடல் தசைகள் ஆற்றலைப் பெறுவதற்கு ஓர் அவசர ஏற்பாடாக லாட்டிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் லாட்டிக் அமிலம் தொடர்ந்து பணிபுரியும் தசைகளில் சேர்ந்து வலியுண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. ஆனால் நாள்தோறும் ஒழுங்காகப் பயிற்சி செய்வோர்க்கு லாட்டிக் அமில அளவுடன் ஒத்துப்போகும் நிலை ஏற்பட்டுவிடுகிறது; மேலும் ரத்த ஓட்டமும் மிகுதியாகிறது. இதனால் அவர்களுக்கு வலியுண்டாவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

74. நீருக்கு நிறமில்லை எனினும், நீரால் உண்டாகும் பனிக்கட்டி வெண்மையாக இருப்பது ஏன் ?

நீர், நுரை (Foam) இரண்டும் வெண்மையாக இருப்பதற்குக் காரணம் ஒன்றே. நுரை என்பது நுண்ணிய குமிழ்களின் (Bubbles) கூட்டம்; பனிக்கட்டியோ ஏராளமான பனிப்படிகங்களின் (Ice-crystals) இணைப்பு. பனிக்கட்டி, நுரை இரண்டிலும் முறையே படிகங்களுக்கு இடையேயும் குமிழ்களுக்கு இடையேயும் உள்ள இடைவெளியில் காற்று நிரம்பியிருக்கும். இந்தப் படிகக் குவியல் மீது ஒளிக் கதிர்கள் விழும்போது அவை வளைந்து போவதுடன், எதிரொளிக்கவும் (Reflected) செய்கின்றன. ஆனால் எல்லாப் படிகங்களும் ஒளிக்கதிர்களை ஒரே திசையில் எதிரொளிப்பதில்லை; மாறாகப் பல்வேறு திசைகளில் அவை சிதறி விடுகின்றன. காற்றின் காரணமாக இவ்வொளிச் சிதறல் மேலும் ஊக்குவிக்கப்படுகின்றது. இச்சிதறிய ஒளியே பனிக்கட்டியைப் பார்ப்பவர் கண்களை அடைகிறது. இதுவே பனிக்கட்டி வெண்மையாகத் தோன்றுவதற்குக் காரணம். தண்ணீரைப் பொறுத்தவரை, அதனுடைய மேற்பரப்பு சமமானது, மென்மையானது; எனவே ஒளியின் சிறு பகுதியே எதிரொளிக்கப் படுகிறது. தண்ணிர்ப் பரப்பில் விழும் ஒளியின் பெரும் பகுதி நீரினுட் புகுந்து செல்கிறது; இதன் காரணமாகவே தண்ணீர் தெளிவாக நிறமின்றி காட்சியளிக்கிறது

75. பொதுவாகப் பெண்களின் தலையில் ஏன் வழுக்கை உண்டவதில்லை ?

முடி வளர்வதும், முடி உதிர்வதும் இயற்கை நிகழ்ச்சிகள். முடி உதிர்ந்த பின்னர் மீண்டும் முளைத்து வளர்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வாறு மீண்டும் முளைத்து வளர்வது நின்று போகிறது. இதற்கு, பால் தூண்டிகள் (Sex hormones) முக்கியமாக ஆண்ட்ரஜன் (Androgens) என்னும் ஆண் பால் தூண்டிகளே காரணம். முடி உதிர்வது மரபு வழிப்பட்டது என்பதை இன்னொரு காரணமாகக் கூறலாம். குடும்பத்தில் தாய் வழியாகவோ, தந்தை வழியாகவோ மக்களுக்கு இது ஏற்பட வாய்ப்புண்டு. தந்தை வழுக்கைத் தலையராக இருப்பின் அவரது மகனுக்கும் வழுக்கை உண்டாகும். மாறாகத் தாய் தான் வழுக்கையின்றி இருப்பினும், வழுக்கை ஏற்படுவதற்கான மரபணுவைத் தன் மகனுக்குச் செலுத்துவதும் உண்டு. வழுக்கை என்பது ஆண், பெண் இருபாலார்க்கும் பொதுவானதே; ஆண்களில் 40 விழுக்காட்டினர்க்கும், பெண்களில் 5 முதல் 10 விழுக்காட்டினர்க்கும் வழுக்கை ஏற்படலாம். பெண்கள் நீண்ட தலை முடியைக் கொண்டிருப்பதால் அவ்ர்களுக்கு முடி உதிர்வது வெளிப்படையாகத் தெரிவதில்லை; உதிராமலிருக்கிற மற்ற முடிக் கற்றையால் வழுக்கை மறைக்கப்பட்டு விடுகிறது. மாறாக ஆண்களுக்கு குட்டை முடி உள்ளதால் அவர்களின் முடி இழப்பு வெளிப்படையாகத் தெரிகிறது; குறிப்பாகத் தலையின் மேற்பகுதியில் வழுக்கை தெளிவாகக் காட்சியளிக்கிறது. இவை தவிர்த்து மன உளைச்சல், தோல் தொடர்பான நோய்கள், வேறு சில நோய்கள், போதைப்பொருள் பழக்கம், சில வேதிப் பொருள்கள் ஆகியனவும் தலை முடி உதிர்வதற்கான வேறு காரணங்களாகும்.

76. உயர் அழுத்த மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளிலில் இருந்து ஒரு வகை ஒலி உண்டாவது ஏன் ?

உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்பது உண்மையே. இவ்வொலி உண்டாவதற்கு கம்பியில் செல்லும் மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள தந்திகளில் தடையுண்டாகும்போது ஒலி எழும்புவதை நாம் அறிவோம். கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக ஒத்ததிர்வுக்கு (Resonant vibration) ஆட்படுகின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் கேட்கிறது

***

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

Email ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர