அறிவியல் துளிகள்-15

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


57. செஞ்சூடடைந்த (red hot) இரும்பு அல்லது எஃகை உடனே குளிர்வித்தால் கடினமானதாகவும், மெதுவாகக் குளிர்வித்தால் மென்மையானதாகவும் மாறுவது எவ்வாறு ?

ஒரு பொருளைச் சூடாக்கும்போது, அப்பொருளிலுள்ள அணுக்களும், மூலக்கூறுகளும் தங்களுக்குள்ளே மிகுந்த இடைவெளிவிட்டு விலகிச் சென்று விடுகின்றன. எஃகு என்பது இரும்பு கலந்த ஒரு கலப்புலோகம். எஃகைப் பொறுத்தவரை மூலக்கூறுகளின் வடிவ அமைப்பு, அணுக்களின் அமைப்பு ஆகியவற்றிலும்கூட வெப்பத்தின் காரணமாக மாறுதல் உண்டாகிறது. சூடாக்கப்பட்ட பொருள் மெதுவாகக் குளிர்விக்கப்படும்போது அதன் அணுக்கள் மெதுவாகத் தமது பழைய இடங்களுக்கு/நிலைகளுக்கு வந்து சேர்கின்றன. மாறாக சூடாக்கப்பட்ட பொருள் விரைந்து குளிர்விக்கப்பட்டால், அணுக்கள் தமது பழைய அல்லது இயல்பு நிலைக்குத் திரும்பிச் செல்ல இயலாமல் தகைவுக்கு (stress) உள்ளாகின்றன. இவ்வாறு தகைவுக்கு உள்ளான உருவமைவு (configuration) கொண்ட பொருள் கடினத்தன்மை பெற்றுவிடுகிறது. இதே காரணத்தால்தான் உயர் நீட்சி எஃகு (high tensile steel), விசைக்கு உட்படும்போது முறிந்து போகிறது; மாறாக தாழ் நீட்சி எஃகு (low tensile steel) முறியாமல் மெதுவாக வளைகிறது. இரும்பைப் பொறுத்தவரை, சூடான இரும்பை விரைந்து குளிர்வித்தால், அணுக்களின் அமைப்பு காரணமாக படிகக் கட்டமைப்பில் (crystal structure) மாற்றம் உண்டாகிக் கடினத்தன்மை ஏற்படுகிறது

58. பெட்ரோலில் இயங்கும் பொறிகளை (engines) டாசலைப் (disel) பயன்படுத்தி ஏன் இயக்க முடிவதில்லை ?

பெட்ரோல், டாசல் ஆகிய எரிபொருட்களைக்(fuels) கொண்டு இயங்கும் இரு பொறிகளும் உட்கனற்பொறிகளே (internal combustion engines). ஆயின் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை (ignition temperature) என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டாசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். அடுத்து பெட்ரோல் பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி (spark plug) ஆகும். மேலும் இப்பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் (compression ratio) குறைவு. இந்நிலையில் பெட்ரோல் பொறியில் டாசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. அடுத்து டாசல் பொறிகளில் பெட்ரோல் பொறிகளில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டாசல் பொறிகளுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டாசலையோ, டாசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.

59. சில தொலைக்காட்சித் திரைகளில் உருவத்துக்குப் பின்னால் நிழலுருவம் தோன்றுவது ஏன் ?

தொலைக்காட்சி சமிக்கைகள் (signals) ஒளிபரப்புக்காக, உயர் அதிர்வெண் கொண்ட வானொலி அலைகளைப் போன்றே செலுத்தப்படுகின்றன. இவ்வலைகள் ஆன்டெனாக்களில் சேமிக்கப்பெற்று, பின்னர் தொலைக்காட்சிப் பெட்டியினுள் இருக்கும் மின்னணு மற்றும் படக்குழாய்களால் (electronic and picture tube) படங்களாக மாற்றப்படுகின்றன. தொலைக்காட்சி ஆன்டெனாக்களைச் சுற்றி பல அடுக்கு உயர்மாடிக் கட்டடங்கள் சூழ்ந்திருக்குமானால், முற்கூறிய மின்காந்த அலைகளை, அக்கட்டடங்கள் மறிக்கும். இவ்வாறு மறிக்கப்பட்ட அலைகளையும் ஆன்டெனாக்கள் ஏற்றுக் கொள்ளுகின்றன. இந்த அலைகள் ஏற்கனவே நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சேமிக்கப்பெற்ற அலைகளைவிட ஓரளவு நீண்டிருக்கும். இவ்வலைகளால் உருவாக்கப்படும் படம் மூலப் படத்திற்குப் பின்னால் நிழலுருவமாகக் காட்சியளிக்கும்.

60. ரசகுல்லா போன்ற இனிப்புத் தின்பண்டங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பது போல, உருளைக் கிழங்கு போண்டா, மசால் தோசை போன்றவை ஏன் கெடாமல் இருப்பதில்லை ?

எந்த உணவுப் பொருளும் பாக்டாரியா என்னும் நுண்ணுயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் போது கெட்டுப்போகும். அவ்வாறு உணவுப் பொருள்களைக் கெடாமல் காக்க பாதுகாப்புப் பொருள்களைச் (preservatives) சேர்ப்பர் அல்லது குளிர்பதனப் பெட்டியில் வைத்திடுவர். ரசகுல்லா போன்ற இனிப்புத் தின்பண்டங்கள் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதற்கு அவ்வற்றிலுள்ள சர்க்கரைப் பாகே பாதுகாப்புப் பொருளாக அமைவதுதான் காரணம். ஆனால் இனிப்புப் பொருட்களையும் சுற்றுப்புற வெப்பநிலையில் சில நாட்கள் வைத்திருந்தால், நொதிவினை (Fermentation) காரணமாக அவையும் கெட்டுப்போகத் துவங்கும். எனவே நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க வேண்டுமெனில் குளிர்பதனப் பெட்டியில் வைப்பது சிறந்தது. போண்டா, மசால் தோசை போன்ற தின்பண்டங்களில், உருளைக் கிழங்கு, காய் கறிகள், மாவுப் பொருட்கள் ஆகியன மிகுதி; மிக எளிதாக பாக்டாரியாக்கள் சேர்ந்து இத்தகைய உணவுப் பண்டங்களைக் கெடுத்துவிடும்; மேலும் கெடாமல் இருப்பதற்கான எத்தகைய பாதுகாப்புப் பொருட்களும் இவற்றில் கிடையாது. எனவேதான் இத்தகைய உணவுப் பண்டங்கள் ஒரு நாளைக்கு மேல் கெடாமல் இருப்பதில்லை.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023, India குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

Email ragha2193van@yahoo.com தொ.பேசி: 91-0821-561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர