மனுபாரதி
காஞ்சனா தாமோதரன் – தமிழ் எழுத்துலகில் கடந்த ஆறு வருடங்களாகக் கவனிப்புப் பெற்று வரும் பெயர். நம் ‘தென்றல் ‘ வாசகர்களுக்குக் கூட இப்பெயர் நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது. இவரது ‘X’ என்ற சிறுகதையும், ‘வரம் ‘ சிறுகதைத் தொகுப்பிற்கான விமர்சனமும் ‘தென்றலில்’ பிரசுரிக்கப்பட்டன. 1998 முதல் தமிழில் கதை மற்றும் கட்டுரை எழுதத் தொடங்கிய இவர், ‘கல்கி’ சிறுகதைப் பரிசு மற்றும் ‘கணையாழி’ குறுநாவல் பரிசு பெற்றவர். தமிழ்ச் சிறுகதைகள் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மற்றும் ஐரோப்பியச் சிறுகதைத் தொகுப்புகளில் இவரது சிறுகதைகள் இடம்பெறுகின்றன. 2001-2002-இல், தமிழ்நாட்டு வார இதழ் ‘கல்கியில்’, ‘இக்கரையில்.. ‘ என்ற தொடர்கதை மூலம் அமெரிக்கத் தமிழர் வாழ்க்கையின் சில கூறுகளை அறிமுகப்படுத்தியவர். இந்தக் காரணங்களுக்காக மட்டும் ‘தென்றல்’ வாசகர்களுக்கு இந்தப் பெயருக்குரிய பெண்மணியை அறிமுகப்படுத்த நினைக்கவில்லை.
நெல்லை மாவட்டத்தில் பிறந்து, ஐ.ஐ.டி-யில் பொறியியல் படிப்பு – அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பு – பல வருடங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகம் – இப்பொழுது சுய தொழில்கள் – என்று இந்தியாவிலிருந்து அமெரிக்கக் கனவுகளோடு வருபவருக்கு சாத்தியமான பயணப்பாதைகளில் ஒன்றில் பயணித்து வந்த இந்த இருபத்திமூன்று வருட அமெரிக்கவாசி எழுத்தாளாராய்ப் புதிய பரிமாணம் பெற்றிருக்கிறார் என்பதுதான் தென்றல் வாசகருக்கு அறிமுகப்படுத்தத் தோன்றிய முதல் காரணம். வாஷிங்டன் அருகே கணவர் டாக்டர் தாமோதரனுடனும், மகளுடனும் வசித்து வரும் இவர், எழுத்தைத் தவிர இன்னும் நிறைய நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். பார்க்க மிகவும் எளிமையாய், நம்மைப் போன்ற ஒரு அமெரிக்கவாசி என்று தோன்றும்படிதான் இருக்கிறார். எப்பொழுதும் ஒரு துடிப்பும் துள்ளலும் தெரிகிறது இவர் குரலில். ‘தென்றலு’க்கான பேட்டி என்றவுடன் ‘தன்னைப் பெரிய மனுஷியாக்கக் கூடாது ‘ என்று அன்புக்கட்டளையுடன் ஒத்துக்கொண்டார். நம் சாதாரண நிலையிலிருந்து மேலெழ ஒரு அகத்தூண்டலையும் (inspiration), நம்பிக்கையையும் பெறத்தக்க இவரது வாழ்க்கையிலிருந்து சில சுவாரசியமான கணங்களை நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
மனுபாரதி: முதலில் பாராட்டுக்கள்.. கடந்த காலத்தை அசை போடும்போது என்ன உணருகிறீர்கள் ?
காஞ்சனா தாமோதரன்: நன்றி. இப்போதுதான் இந்த மண்ணில் கால் பதித்தது போலிருக்கிறது. 23 வருடங்கள் ஓடினதே தெரியாமல், இதுவரையான ஆயுளில் பாதிக்கும் மேல் இங்கே கழிந்து விட்டது. செய்ய வேண்டியது எல்லாவற்றையும் செய்து முடித்தது போலவும், அதே சமயத்தில் இன்னும் செய்ய விரும்புவது நிறைய இருப்பது போலவும் உணருகிறேன். நிறைவும் தேடலும் கலந்த மனநிலை.
ம.பா.: எல்லாருக்கும் அமெரிக்காவில் குடியேறியது பற்றிச் சொல்ல நிச்சயம் ஒரு கதை இருக்கும். நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர் நீங்கள். ஐ.ஐ.டிக்கும் அமெரிக்காவிற்கும் வந்தது பற்றிய கதை…..
கா.தா.: நம்மூர் கல்வித் திட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இளங்கலைப் பருவத்திலேயே தொழிற்படிப்பை நிச்சயம் செய்து விடுகிறோம். கணக்கு, வேதியல், ரசாயனம் எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்ததால் பொறியியல் போகலாமே என்று தோன்றியது. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன், பெண்கல்வியைப் பெரிதாக நினைக்காத என் சமூகப் பின்னணியில், இது ஒரு பெரிய மாற்றம்தான்–என் குடும்பத்தில் எதிர்ப்புகள் இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி, சிபாரிசும் பொன்முடிப்பும் தேவைப்படாத ஐ.ஐ.டி.யில் சேர முடிந்தது. ஆனால், படிப்பை முடித்ததும் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்தக் காலத்தில், பெண் பொறியியலாளர் என்று வெளிப்படையாகவே ஒதுக்கி வைப்பதும் நடந்தது. (இப்போது இந்த நிலை மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்). தாயகத்திலேயே தங்கி வேலை பார்ப்பது என் முதல் விருப்பமாகவும், அமெரிக்காவில் மேல்படிப்பு என்பது இரண்டாவது விருப்பமாகவும் இருந்தன. முதல் விருப்பம் நிறைவேறவில்லை. இங்கே வந்து பொறியியல் முதுகலைப் படிப்பை முடித்தேன். பிறகு, வேறு துறையிலும் தேர்ச்சி பெற்று என் கல்வியறிவை விரித்துக் கொள்ள விரும்பினேன். அதனால், வணிக நிர்வாகத்தில் பி.எச்டி.யைத் தொடர்ந்தேன். வணிகம்-பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பாடங்கள் தவிர, சமூகவியல், உளவியல், விஞ்ஞான அறிதலின் தத்துவம், கணினியில் செயற்கை அறிவு, பொதுநல விதியமைப்பு என்று பல்துறைப் பாடங்கள் படித்தது என் எல்லைகளை விரித்த முக்கியமான கல்வி அனுபவம். வெறும் பாடங்களை மட்டுமல்லாமல், வேறுபட்ட பார்வைகளின்/ அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தையும் கற்ற முதிர்ச்சியான அனுபவம். பன்னாட்டு நிறுவன வேலை தொடர்ந்தது.
ம.பா.: பன்னாட்டு நிறுவன நிர்வாக அனுபவம் எப்படியிருந்தது ? எதிர்ப்புகள் ஏதாவது சந்தித்தீர்களா ? சுவாரசி
யமான அனுபவங்கள்.. ?
கா.தா.: பல்கலைக்கழகக் கல்வியை விட வேலை செய்வதன் மூலம் கற்றுக் கொண்டது இன்னும் அதிகம். தொழில் சூழலில் எதிர்ப்புகள் பற்றிக் கேட்டார்கள். போட்டிகள் நிறைய உண்டு. துரிதமாகப் பதவி உயர்வுகள் கிடைத்து முன்னேறும் போது, அதற்கு நம் திறமையைத் தவிர மற்ற எல்லாக் காரணங்களையும் கற்பிக்கப் பார்ப்பது மனித இயல்பு–எல்லாத் துறைகளிலும் நடப்பது இது. பெண், அதுவும் வெள்ளைத்தோல் இல்லாத பெண் என்றால் கேட்க வேண்டுமா ? பெண்கள் இரண்டு மடங்கு உழைத்துத் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டியிருந்தது என் காலத்திய யதார்த்தம். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், நம் திறமை, நம் உழைப்பு, நம் நேர்மை மேல் நமக்கு நம்பிக்கையிருப்பதே முக்கியம் என்ற மனோபலம் தானாகவே ஏற்பட்டு விடுகிறது; கறாரான சுயவிமரிசனத் திறனும் மெல்ல உருவாகிறது. இது அகங்காரம் இல்லை. தன்னம்பிக்கை. சுயமரியாதை. நான் சந்தித்த எதிர்ப்புகளும் போட்டிகளும் என்னை வளர்ப்பதற்கே உதவின. தளர வைக்கவில்லை. தொழில்முறையில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை வைத்து ஒரு தலையணைப் புத்தகமே எழுதி விடலாம். கலிஃபோர்னியாவாழ் ‘ஹிஸ்பானிக் ‘ மக்களைப் புரிந்து கொள்வதற்காகப் பல வாரங்கள் அங்கு தங்கி, அவர்கள் வீடுகளுக்குச் சென்று பேசிப் பழகியது ஒரு வித்தியாசமான அனுபவம். பல கலாச்சாரப் பின்னணிகளையும் சார்ந்த மக்களைச் சந்திக்கையில், நமக்கும் அவர்களுக்குமிடையே வேறுபாடுகளை விட ஒற்றுமைகளே அதிகம் இருப்பது போல் தெரிகிறது.
ம.பா.: வேலை, குடும்பம் இரண்டையும் எப்படிச் சமாளித்தீர்கள் ?
கா.தா.: நான் வேலை பார்த்த இரண்டு பெருநிறுவனங்களுமே பெண்கள் வேலை பார்க்கச் சிறந்த நிறுவனங்கள் என்று அமெரிக்காவின் ‘ஃபார்ச்சூன் ‘ வர்த்தகப் பத்திரிகை பட்டியலிடும் நிறுவனங்கள். வேலை பார்ப்பவர்களுக்குக் குடும்ப அக்கறையும் உண்டு என்பதைப் புரிந்து, அதற்கேற்ற வசதிகளை முடிந்த அளவு செய்து தரும் நிறுவனங்கள். கணவரின் ஒத்துழைப்பும் பெரிய உதவி. இவையெல்லாம் இருந்தும் கூட, குடும்பத்தையும் வேலையையும் சமநிலையில் நடத்திக் கொண்டு போவது எளிதில்லை. குழந்தையை அடுத்தவர்கள் பராமரிப்பில் விட்டுப் போவதில் எங்கள் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கிடையாது. மகளின் சிறுகுழந்தைப் பருவத்தில், எங்கள் நிறுவனங்களின் ‘ஃப்ளெக்ஸ்-டைம்/ஃப்ளெக்ஸ்-லொக்கேஷன் ‘ சலுகைகளைப் பயன்படுத்தி, நாங்களே அவளைக் கவனித்துக் கொண்டோம். எங்கள் இருவரின் வேலைகளுமே வெளியூர்/வெளிநாட்டுப் பயணங்கள் அடங்கியவை; ஒருவர் வெளியூருக்குப் போனால் மற்றவர் அப்போது பயணம் செய்யாமல் மகளுடன் இருக்கும்படித் திட்டம் போட்டுக் கொள்வோம். இந்த மாதிரிப் பல விஷயங்களில் அனுசரித்துப் போனதால், பலவும் சாத்தியமாயிற்று. கூட்டு முயற்சி வாழ்க!
ம.பா.: சாதாரண நிலையில் இருந்து மேலெழுவது என்பது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. குடும்பம், வேலை சுற்றியே சுழன்ற உங்கள் கவனம் எழுத்து பக்கம் திரும்பியது எப்படி.. ? உங்கள் படைப்புக்குத் தூண்டலாய் இருந்தது எது ?
கா.தா.: இதற்குக் கொஞ்சம் நீண்ட பதில்தான் சொல்ல வேண்டும். சிறு வயதிலிருந்தே நான் தீவிர வாசகி. கல்வி, குடும்பம், தொழில் முதலான பொறுப்புகளின் நடுவிலும் வாசிப்பை இழக்கவில்லை; ஆனால், எழுதுவதற்கு அப்போது நேரம் இருந்ததில்லை. பிறகு, இரண்டு மாறுதல்கள் நிகழ்ந்தன. முதலாவதாக, எங்கள் மகள் தன் காலிலேயே நிற்க விரும்பும் பருவம் வந்ததும், குழந்தைப் பராமரிப்புக்காக நான் ஒதுக்க வேண்டிய நேரம் குறைந்தது. இரண்டாவது முக்கியமான மாறுதல், இணையத்தில் தமிழ் என்பது. முத்து நெடுமாறனின் முரசு அஞ்சல் போன்ற தமிழ் மென்பொருள்கள் அப்போது பரவலாகப் புழங்க ஆரம்பித்திருந்தன. இணையத்தில் தமிழ்ப் பத்திரிகைகள், நாளிதழ்கள், விவாதத் தளங்கள் தலைக்காட்டத் துவங்கியிருந்தன. ‘ஆறாம்திணை ‘, ‘அம்பலம் ‘, ‘திண்ணை ‘ போன்ற மின்னிதழ்கள் ஒரு புது யுகத்தைத் தொடங்கி வைத்தன. ஆறேழு வருடங்களுக்கு முன், கலிஃபோர்னியா பாலாஜியும் சிங்கப்பூர் ராஜாராமனும் சேர்ந்து தொடங்கிய இணைய இலக்கிய விவாதத்தளத்தின் மூலமாக, இன்று ‘தென்றல் ‘ ஆசிரியராயிருக்கும் மு.மணிவண்ணன், அட்லாண்டா பெ. சந்திரசேகரன், நியூ ஆர்லீன்ஸ் இரமணீதரன், கலிஃபோர்னியா மனுபாரதி…(ஒரு புன்சிரிப்பு) ஆமாம், நீங்களும்தான்….மற்றும் கோகுல், அருளரசன் (வரதராஜன்), உதயா, பாலாஜி, வாஷிங்டன் ராம்ஜி-சுச்சு தம்பதியர், சிக்காகோ சந்திரசேகர், நியூஜெர்ஸி பத்மநாபன் கணேசன், நியூமெக்ஸிகோ வாசன், மலேசியா ஜெயபாரதி, சென்னை வாஞ்சிநாதன், டோக்கியோ வெங்கட் என்று பலரோடும் இலக்கியக் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடிந்தது. மணிவண்ணன், சந்திரசேகரன், அருளரசன், ஜெயபாரதி, வெங்கட் ஆகியோருடன் பழந்தமிழிலக்கியம் பற்றிப் பேசியது என் இளவயது இலக்கிய ஆர்வத்தை மீட்டுத் தந்தது. பிற அமெரிக்கத் தமிழ் இணைய நண்பர்களுடன் தற்கால இலக்கியப் புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டது இப்போதுள்ள எழுத்துலகுடனான தொடர்பை வளர்த்தது. தமிழ்ப் புத்தகங்களைச் சேகரிக்கும் பழக்கம் தொடங்கியது அப்போதுதான். சங்க கால இலக்கியத்திலிருந்து இன்றைய எழுத்து வரை, எங்கள் வீட்டில் இப்போது ஒரு சிறு தமிழ் நூலகம் இருக்கிறது. என் தொடர்ச்சியான வாசிப்பு, இணையத் தமிழ் நண்பர்களின் இலக்கிய ஆர்வம், இணையம்-தமிழ்மென்பொருள் தொழில்நுட்பம் எல்லாமாய்ச் சேர்ந்தே என்னை எழுத்தாளராக்கின என்று நினைக்கிறேன். இக்கரையிலிருக்கும் என்னைத் தாயகத்துடன் என் எழுத்து இன்னும் பலமாகப் பிணைப்பதை உணருகிறேன். அதுவே தொடர்ச்சியான என் எழுத்துக்கு ஊக்கமும் கூட.
ம.பா.: ‘இக்கரையில்.. ‘ – அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட 2001-2002 தொடர்கதை என்று தெரியும். நாவலாகவும் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி தென்றல் வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகம்..
கா.தா.: இரண்டு பெண்களின் பார்வையிலிருந்து சொல்லப்படும் கதை. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்று கேட்டுக் கொள்கிறாள் கிராமத்துப் பூர்வீகக்காரி. இன்னொருத்தி அமெரிக்காவும் குடும்ப அமைப்பும் தனக்கு ஏன் ஒத்து வரவில்லை என்று தத்தளிக்கிறாள். இருவரின் வருங்காலம் பற்றிய முடிவுகளும் அவர்களது கடந்த காலத்திலிருந்து துவங்குகின்றன. அதை உணரத் தொடங்குவதுதான் கதை. திடார்த் திருப்பங்களோ முழுமையான முடிவோ கதையில் கிடையாது. சிறு சிறு அனுபவக் குறிப்புகளின் (vignettes) மூலம் கதை சொல்லப்படுகிறது.
ம.பா.: இதற்கான வரவேற்பு எப்படி இருந்தது அங்கே ? வந்த சுவாரசியமான விமர்சனங்கள் ? கடிதங்கள் ?
கா.தா.: கதை கொஞ்சம் கனமாக இருக்கிறதே, வடிவம் வித்தியாசமாக இருக்கிறதே, வாசகர் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற கவலைகளை மீறி, இதைத் தொடராக வெளியிட்ட ‘கல்கி ‘ ஆசிரியர் திருமதி சீதா ரவிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தமிழக விமரிசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆரோக்கியமான — தத்தம் தனிப்பட்ட பார்வையில் குறை-நிறை சுட்டும் — விமரிசனங்களை எழுதி வருகிறார்கள். ‘அமெரிக்க, இந்தியத்தமிழ்க் கலாச்சாரங்களுக்கு நடுவில் நிற்கும் கதையை வாசிப்பது நல்ல அனுபவம்; அமெரிக்கவாழ் எழுத்தாளர் கதையின் தமிழக மண்வாசனை சுகமானது; இலக்கியதரமான தொடர்; கதை புதிது, களம் புதிது, கனமும் புதிது ‘ — இவ்வாறு தமிழக வாசகர் கடிதங்கள் பலதரப்பட்டவை. வாசகர்கள் ரசித்துப் படித்திருக்கிறார்கள் என்பதைக் கதையிலிருந்து மேற்கோள் காட்டும் பல கடிதங்கள் சொல்லுகின்றன என்றார் ‘கல்கி ‘ ஆசிரியர். (இந்த வாசக அங்கீகாரம் எனக்குமே ஆச்சரியமளித்த விஷயம் என்பதை இங்கே சேர்த்துக் கொள்கிறேன்.)
ம.பா.: அமெரிக்கவாழ்த் தமிழர்களுக்கு எப்பொழுது எழுதப்போகிறீர்கள் ? தமிழ்நாட்டு மக்களை விட இங்கிருப்பவர்களால் உங்கள் கதைக்களங்களை எளிதில் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியும் இல்லையா ?
கா.தா.: உண்மைதான், தமிழக வாசகர்களுக்குக் கதைக்களங்கள் அந்நியமானதால் ஒரு சிறு விலகலுக்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால், சில அடிப்படை மனிதப் பிரச்சினைகள் பொதுவானவை. மேலும், இன்றைய உலகக் குக்கிராமத்தில், அமெரிக்கவாழ்த் தமிழகத் தமிழருக்கும் தமிழகவாழ்த் தமிழருக்குமிடையே எந்தெந்தத் தளங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம். இணைய இதழ்கள், வாஷிங்டன் ‘முல்லை ‘ இதழ் முதலியவற்றில் அமெரிக்கவாழ்த் தமிழ் நண்பர்கள் என் எழுத்தை வாசித்திருக்கிறார்கள். ‘தென்றல் ‘ இதழிலும் விரைவில் எழுதலாம்.
ம.பா.: ‘தினமணி ‘ நாளிதழில் அவ்வப்பொழுது கட்டுரைகள் எழுதிவருகிறீர்கள். என்னென்ன விஷயங்களைப் பற்றி எழுதிவருகிறீர்கள் ? உங்கள் தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்லமுடிகிறதா ? வாசக வரவேற்பு எப்படி இருக்கிறது ?
கா.தா.: ‘தினமணி ‘ நாளிதழில் அமெரிக்கப் பொருளாதாரம், செப்டெம்பர் 11 பயங்கரவாதம் மற்றும் பின்விளைவுகள், இந்திய வம்சாவழியினரான வி.எஸ்.நைப்பாலுக்குக் கிடைத்த நோபெல் இலக்கிய விருது, செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர்த் தடங்கள் கண்டுபிடித்தது, தமிழகக் காவேரிப்பகுதி வறட்சிப் பிரச்சினை என்று பலவகைக் கட்டுரைகள். ‘கணையாழி ‘, ‘திண்ணை ‘ இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள். ‘காலம் ‘ இதழில் என்ரான் ஊழல் விவகாரம் பற்றிக் கட்டுரை. சமீபத்தில் எழுதியவை ஈராக் போர் பற்றிய மூன்று செய்திக்கட்டுரைகள். கருத்துகளையோ தகவல்களையோ சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. விஷயத்தின் சாரம் நீர்த்துப் போகாமல், ஒற்றைப்படையாய் ஆக்காமல் அதன் பல முகங்களையும் விளக்கி, எளிய தமிழில் சொல்லுவது பலருக்கும் பிடித்திருக்கிறது. காத்திரமான கட்டுரைகள் ஆங்கில இதழ்களில் மட்டும்தான் வரவேண்டுமா என்ன ?
ம.பா.: ‘தினமணி ‘யின் சிறுவர் இதழான சிறுவர் மணியில் ஒரு போட்டி நடத்தியதாக கேள்விப்பட்டோம். அந்த அனுபவம் பற்றி.. தமிழ் நாட்டுச் சிறார்கள் தமிழில் காட்டும் ஆர்வம் பற்றி..
கா.தா.: சிறுகதைப் போட்டி வைத்தோம். சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரிடமும் நல்ல வரவேற்பு. ‘சிறுவர்மணி ‘ நகரத்து மத்தியவர்க்கத்திடம் மட்டுமல்லாமல், கிராமத்துச் சிறுவர்கள், பொருளாதார அடித்தட்டுகளில் உள்ளவர்கள் என்று சமூகத்தின் பல தளத்து மக்களிடமும் போய்ச் சேர்கிறது. அதற்கு ஏற்றது போல், வந்திருந்த கதைகளும் வித்தியாசமாய் இருந்தன. அறிவியல் கதையிலிருந்து பேசும் மிருகங்கள் உள்ள கதை வரை பல வகையிலான கதைகள். வறுமை, பள்ளிப் பாடச் சுமை, பள்ளிக்கூடக் குழந்தைகளுக்குள் போட்டி பொறாமை, பெற்றோர்கள் குழந்தைகளைப் படிப்புக்காகப் படுத்தும் பாடு, என்று சில கருக்களைச் சுற்றி நிறையக் கதைகள் வந்திருந்தது இவர்களின் உலகத்தை ஓரளவு படம் பிடித்துக் காட்டுகிறது. போட்டியில் பங்கு பெற்ற சிறுவர் சிறுமியர் எல்லாருக்கும் ஆறுதல் பரிசு அனுப்பியிருந்தோம். பதில் கடிதங்கள் எழுதிய சிறார்கள் நன்றியுடன் சேர்த்துத் தங்கள் வாழ்க்கை பற்றியும் கோடி காட்டியிருந்தது மனதை நெகிழ வைத்தது. வாழ்வின் அழுத்தங்களுக்கு ஊடேயும், தமிழில் எழுதும் ஆர்வம் இவர்களுக்கு இருக்கிறது. தமிழில் எழுதுவதும் வாசிப்பதும் இளைய தலைமுறையினரிடம் குறைந்து விட்டதாய் வரும் செய்திகளின் நடுவில், இந்தச் சிறுவர் சிறுமியர் இருப்பது ஆறுதலான விஷயம். தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.
ம.பா.: .தமிழ்நாட்டில் இப்பொழுது எழுத்துலகம் எப்படி இருக்கிறது ? உங்களுக்கு அறிமுகமான பதிப்பகம், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி..
கா.தா.: கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் பல தலைமுறை எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்தித்துப் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி. எழுதும் இளைஞர்கள் உற்சாகமாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகச் சந்தையின் பல்வகைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பல பதிப்பகங்கள் இருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்களின் பதிப்புத் தரம் உயர்ந்திருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எழுத்தாளர்களும் விருந்தினராய்ப் பங்கு பெறுகிறார்கள். சென்ற முறையும் இந்த முறையுமாய் நான் பங்கெடுத்த இலக்கியக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் நிறைந்து வழியும் அரங்குகளையே பார்க்கிறேன். இந்த வருடத்தியப் புத்தகக் கண்காட்சியில் திருவிழாக் கூட்டமாம், விற்பனைத் தொகை கோடிகளில் பேசப்பட்டது. ஜோதிடம், ஆன்மீகம், சமையல், சுய உதவிப் புத்தகங்கள் நிறைய விற்கிறதாம், அடுத்ததாய்த் தற்கால இலக்கியப் புத்தகங்களாம். தற்கால இலக்கியப் புத்தகங்களைப் பலரும் வாசிக்க ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி. ஆனாலும், முன்பை விடப் பரவலாய்ப் பலருக்கும் எழுத்தறிவு/கல்வி போய்ச் சேரும் இந்தக் காலத்தில், அந்த விகிதத்துக்கு ஏற்றாற்போல் தரமான தமிழ் வாசிப்பும் எழுத்தும் கூடியிருக்கிறதா என்பது இன்னும் கேள்விதான்.
ம.பா.: உங்கள் நவீன தமிழிலக்கிய ஆங்கில மொழியாக்கத் திட்டம் பற்றி.. நோக்கம், தற்போதைய நிலை…
கா.தா.: தமிழகத்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் திட்டம். பரிந்துரைக்கும் குழு, தேர்ந்தெடுக்கும் குழு, மொழிபெயர்ப்புக் குழு உள்படத் திட்டத்தின் அங்கத்தினர்கள் தமிழரும் தமிழறிந்த அமெரிக்கரும். முதல் கட்டமாக, தமிழக எழுத்தாளர்களும் விமரிசகர்களுமாகச் சுமார் நானூறு கதைகளைப் பரிந்துரை செய்தார்கள். அவற்றிலிருந்து சில கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அடுத்த கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சிக்காகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் (அமரர்) நார்மன் கட்லர் இந்தப் பணிக்காகச் செய்த உதவிகள் முக்கியமானவை.
ம.பா.: ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் திட்டம் ஏதாவது….
கா.தா.: நல்ல புத்தகங்கள் சில மனதில் உண்டு. காப்புரிமையுள்ள எழுத்தாளர்களின் சட்டபூர்வமான சம்மதம் கிடைத்தால் இது சாத்தியமாகும்.
ம.பா.: எழுத்தில் உங்கள் தொடர்ந்த பங்களிப்பு இனி எப்படி இருக்கும் ? எதிர்காலத் திட்டங்கள்.. ?
கா.தா.: திட்டமென்று ஒன்றுமில்லை. நேரத்தைக் கோரும் பல பொறுப்புகளின் நடுவே, என் வாழ்வில் தமிழ் எழுத்துக்கும் தொடர்ந்து இடமிருக்கும் என்று நம்புகிறேன்.
ம.பா.: நீங்கள் சமூக சேவைகளையும் புரிந்து வருவதும் தெரியும். விளம்பரப்படுத்த என்று கேட்கவில்லை.. ஆர்வத்தில் கேட்கிறோம்.. அதைப் பற்றி சொல்லுங்கள். என்னென்ன செய்கிறீர்கள் ? யாருக்கு ?
கா.தா.: ஆர்வத்துக்கு நன்றி. அதிக வாய்ப்புகள் இல்லாத கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி/ முன்னேற்றம் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். பெரிய நகரத்தில் வாழாத எனக்கு, அந்தக் காலத்தில் ஐ.ஐ.டி. என்று ஒன்றிருப்பதே தற்செயலாகத்தான் தெரிய வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இப்போது அந்த நிலைமை மாறி வருகிறது என்கிறார் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரும் என் முன்னாள் பேராசிரியருமான முனைவர் அனந்த். நம் கிராமங்கள் பல வகையிலும் முன்னேறியிருந்தாலும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். தேசத்தின் மக்கள் தொகையில் பெரும்பகுதி இன்றும் கிராமங்களில்தான் வாழ்கிறது என்னும் போது, இது முக்கியமாகிறது. எனக்கு அப்போது உதவிய பலரையும் பற்றி நினைத்துக் கொள்கிறேன். சமூகத்திலிருந்து நாம் எடுப்பதில் கொஞ்சத்தையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையா ?
ம.பா.: இப்போது திரும்பிப் பார்க்கும் போது நீங்கள் நன்றி சொல்ல விரும்புவது யார் யாருக்கு ?
கா.தா.: படிக்க வேண்டுமென்ற மகளின் ஆசையையும் திறமையையும் மதித்து, குடும்பத்தினரின் எதிர்ப்புகளைச் சமாளித்த என் அம்மாவுக்கு. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் பெரும்பாலும் ஆண்கள் கல்லூரி என்று கருதப்பட்ட ஐ.ஐ.டி.க்கும், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன் மணமாகாத என்னை மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் அனுப்பி வைத்த என் அம்மா அப்பாவின் திடமான நம்பிக்கைக்கு. சிறந்த அடிப்படைக் கல்வியையும் முன்னேறுவதற்கான உந்துதலையும் எனக்கு ஊட்டி வளர்த்த என் தாயகத்துக்கு. என் இளங்கலைப் படிப்புக்கு உதவி செய்த ‘ஆனந்த விகடன் ‘ வாசன் அறக்கட்டளையின் சேவை உணர்வுக்கு. என் மேல்படிப்புக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் செய்த முழு உதவிக்கு. என் கணவரின் அன்புக்கு.
(திருமதி காஞ்சனா தாமோதரனுக்கு நன்றி சொல்லி முடித்துக் கொண்டோம். வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தத் தோன்றுகிறது. இத்தனையையும் செய்ய முடிந்த இவர், நம்மைப் போலவே அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்.)
அமெரிக்கத் தமிழ்ப் பத்திரிகையான ‘தென்றலின் ‘ மே 2003 இதழில் வெளிவந்த அறிமுக நேர்காணல் இது. பேட்டியாளர் மனுபாரதி தமிழ்ச் சிறுகதையாளர்; அமெரிக்கவாழ்க் கணினித் தொழில்நுட்ப வல்லுனர்.
thendral@chennaionline.com
thendral_manivannan@yahoo.com
- அதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)
- பித்தர்களுக்குள் பிச்சைக்காரன்
- நினைவலைகள்
- சாதனங்கள்
- சாமியும் பூதமும்
- 2 ஹைக்கூக்கள்
- போபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….! (Bhopal Union Carbide Pesticide Plant Gas Disaster, A Revi
- அறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 – எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர்
- யாதுமாகி …
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று
- அறிமுக நேர்காணல்: காஞ்சனா தாமோதரன்
- கோபி கிருஷ்ணன் மறைவு : அஞ்சலிக் கூட்டம்
- இந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)
- தமிழர் திருவிழா – ஜூலை 4, 5, 6
- நீராகிப் போன கடிதங்கள்
- நிகழ் காலம்
- உன் முயற்சி தொடரட்டும்
- வாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி
- மனிதாபிமானம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஆறு
- பறவைப்பாதம் – அத்தியாயம் 1
- களவு
- தொடர்ந்து அறுக்கப்படும் வேர்கள்
- சில நிகழ்வுகள், சில பார்வைகள்
- கூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்
- கடிதங்கள்
- அன்புள்ள அப்பாவுக்கு
- ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]
- ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3
- அரிவாள் சுத்தியலின் முடிவு : மேற்கு வங்காளத் பொருத்தமின்மை
- உன் போலத்தானோ ?
- நான் பதித்த மலர் கன்றுகள்
- தமிழ்மணவாளன் கவிதைகள்