அறம்: பொருள்: இன்பம்: வீடு

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சோதிப் பிரகாசம்


அறம், பொருள், இன்பம், வீடு, என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்து இருந்தார்களாம் தமிழர்கள்—தமிழ்ப் புலவர்கள் கூறுகிறார்கள். இதைக் கேட்டவுடன் நாம் மகிழ்ந்து போகிறோம்; நமது பழம் பெருமைகளை எண்ணி வியந்தும் போகிறோம்.

ஆனால், அறத்துடன் பொருள் ஈட்டித்தான் உலகத்தின் ஒவ்வொரு மொழியின மக்களும் இன்பங்களைத் துய்த்துக் கொண்டு வந்து இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் நாம் எண்ணிப் பார்க்கின்ற பொழுது, இதில் நாம் பெருமை கொள்வதற்கு எதுவும் இல்லை என்னும் உண்மை நமக்கு வெட்ட வெளிச்சம் ஆகி விடுகிறது; வீண் பெருமைகளைத் தலையில் சுமந்து கொண்டு உலகச் சந்தையில் அவற்றை விற்பனை செய்திடத் துடித்துக் கொண்டு வந்து இருக்கின்ற நமது பேதைத் தனமும் நமக்குத் தெளிவு ஆகி விடுகிறது.

எனினும், அறம், பொருள், இன்பம், என்னும் வகைப்பாடுகளை முதல் முதலாக வரையறுத்துக் கொண்டு இருந்தவர்கள் தமிழர்கள் என்பதற்காக நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். நாம் மட்டும் என்ன, மனித இனத்தின் பண்டைய வகைப்பாடு என்கின்ற வகையில், உலகத்தின் அனைத்து மனிதர்களும் இதற்காகப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். வீடு பேற்றிற்குள் பின்னர் உற்றுப் பார்ப்பதற்குக் கூட அவர்கள் தயங்கிட வில்லை!

ஆனால், இது வல்ல இப் பொழுது நமது பிறழ்ச்சனை!

நமது அறம் எது ? என்று சுந்தர ராமசாமி கேட்கிறார்; மார்க்சியத்தின் அறவியல் என்ன என்று ஜெயமோகன் கேட்கிறார்; இந்தக் கேள்வியைக் கேட்டு மிரண்டு போகின்ற கோவை ஞானியோ, மார்க்சியத்தில் இல்லாதது எதுவும் இருந்திட முடியாது என்று நிருபிப்பதற்காக மார்க்சியத்தின் அழகியல் பற்றிப் பேசி நம்மை மிரட்டுகிறார்; இவ்வளவும் போதாது என்பது போல யமுனா ராஜேந்திரன் கேட்கிறார்—காமத்தின் அறவியல் என்ன வென்று! நாட்டில் அறம் படும் பாடுதான் இப்படி என்றால், பண்பாடு படும் பாடோ மிகப் பெரும் பாடாக மாறி விட்டு இருக்கிறது.

தமிழ்ப் பண்பாட்டினைப் பாது காப்போம் என்று ஓங்கி முழங்குகிறார்கள் தமிழ் முன்னவர்கள்! இந்தியப் பண்பாட்டினைப் பாது காப்போம் என்று பொங்கி எழுகிறார்கள் இந்தியத் தலைவர்கள்! தமிழ்ப் பண்பாட்டிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்ற பொழுது எந்தப் பண்பாட்டின் பக்கம் இவர்கள் நிற்பார்கள் என்பதுதான் நமக்குப் புரிய வில்லை!

இடையில், ஈரோப்பிய மண்ணில் இருந்து விண்ணின் வழியாக இந்திய மண்ணிற்குள் மேலைப் பண்பாடு புகுந்து, மா பெரும் மரபுகளைக் கொண்ட இந்தியப் பண்பாட்டினைச் சீரழித்துக் கொண்டு வருகிறது என்று புலபல்கள், எரிச்சல்கள், ஆத்திரங்கள், ஆவேசங்கள், வேறு! இந்தியப் பண்பாட்டின் காவலர்களான தீவிர வாதிகளோ, எழுதுவது முதல் படம் பிடிப்பது வரை எப்படி அவை இருந்திட வேண்டும் என்று கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டு வருகிறார்கள்.

உயர்ந்தவர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் தாயின் கருவிலேயே மனிதர்கள் உருவாகிறார்கள் என்று இன்றும் கூட கருதுகின்ற இந்திய இழிவுகளுக்கு எதிராகத் தங்கள் சுண்டு விரலைக் கூட உயர்த்திட முடியாத இவர்கள் எல்லாம், பண்பாடு பற்றிப் பேசுவதுதான் மிகப் பெரிய நகைப்பு! (கலாச்சாரம் என்பதும் பண்பாடு என்பதும் ஒரு பொருள் கிளவிகள்தாம் என்பதால் கலாச்சாரத்தை இங்கே நாம் விட்டு விடலாம்.)

ஆனால் ஒன்று, தமிழர்களுக்கு என்று ஒரு மொழி இருப்பது போல, அவர்களுக்கு என்று ஒரு பண்பாடு இருக்கும் என்றால், அந்தப் பண்பாட்டினைப் பாது காப்பது தமிழர் ஒவ்வொருவரதும் கடமை என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்தியர் மொழி என்று ஒரு மொழி இல்லை என்ற போதிலும், அவர்களுக்கு என்று ஒரு பண்பாடு இருந்திடக் கூடும் என்றால், அந்தப் பண்பாட்டினைக் காத்து நிற்கின்ற கடமை அவர்களுக்கு உண்டு என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

அதே நேரத்தில், இல்லாத ஒன்றினை எப்படி நாம் பாது காப்பது என்பதுதான் இங்கே கேள்வி. என்றும் ருஷ்யாவில் இருந்து இராத சமுகாண்மைச் சமுதாயம் எப்படி மறைந்தது என்னும் கேள்வியினை விட சிக்கலான ஒரு கேள்வியாகவும் இது இருந்திடலாம். எனினும், இந்தியப் பண்பாட்டு வாதிகளையும் ஹிந்துத்வக் காரர்களையும் பின்பற்றுகின்ற வகையில், ஃப்ரான்ஸ் நாட்டில் ஒரு சட்டமே இயற்றப் பட்டு இருக்கிறது என்பதுதான் வரலாற்றின் நகைப்பு என்று நாம் சொல்ல வேண்டும்.

ஃப்ரான்ஸ்!

நினைத்தாலே நெஞ்சைச் சிலிர்த்திட வைக்கின்ற ஒரு வரலாற்றிற்குச் சொந்தக் கார நாடு அது!

சமன்மை! உரிமை! கிளைமை! என்று விண்ணதிர முழங்கிக் கொண்டு வந்து இருந்தவர்கள் அந் நாட்டு மக்கள்! நேரடியான நடவடிக்கைகளின் மூலம் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டி இருந்தவர்கள்! அதே நேரத்தில், மன்னனின் மகுடத்தை நெப்போலியனின் தலையில் சூட்டி மா வீரன் என்று அவனைக் கொண்டாடிக் கொண்டு வந்து இருதவர்களும் அவர்கள்தாம்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோரிக்கைகளாக எழுப்பிக் கொண்டு வந்து இருந்த தனி மனித உரிமை, கருத்துச் சுதந்தரம், தன்னாட்சி உரிமை, சமன்மை உரிமை, முதலிய பொது நாயக உரிமைகள் அனைத்தையும் பின்னர் காற்றில் பறக்க விட்டு விட்ட இந்திய ஒன்றியத்தின் தலைவர்களுக்கும் ஃப்ரான்ஸ் நாட்டின் இன்றைய தலைவர்களுக்கும் இடையேதான் எவ்வளவு நெருக்கமான ஒற்றுமை! இல்லை என்றால், எந்த எந்த உடைகளை யார் யார் எப்படி எப்படி அணிந்திட வெண்டும் என்று உத்தரவு போடுவதற்கு அவர்கள் முன் வந்து இருப்பார்களா ?

சிற்றுடைமைச் சிந்தனையின் (இது குறித்துப் பார்க்க: அ.மார்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்) விந்தையான வெளிப்பாடு என்றும் சிற்றுடைமைப் பண்பாட்டினது திணிப்பின் வெட்டியான நடவடிக்கை என்றும் இதனை நாம் வரையறுக்கலாம். அதே நேரத்தில், உலகாயதத்தின்(செக்யூலரிசம்) பெயரால் இப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருக்கிறது என்பதுதான் இதில் வேடிக்கை!

அரசாங்கத்திற்கும் மதங்களுக்கும், எனவே, கடவுள்களுக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதுதான் உலகாயதம்!எனவே, எந்த எந்த மதங்களின் வழியாக எந்த எந்தக் கடவுள்களை மக்கள் தொழுது கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப் பட்டுக் கொள்கின்ற கடமையும் பொறுப்பும், உலகாயதத்தைத் தனது கொள்கையாகாக் கொண்டு இருக்கின்ற எந்த ஓர் அரசாங்கத்திற்கும் இருந்திட முடியாது என்பது முடிபு.

அப்படி என்றால், மத மாற்றத் தடைச் சட்டம் எதையும் இயற்றிட வேண்டிய தேவையோ மதச் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் தலையிட வேண்டிய கடமையோ, இந்திய ஒன்றியத்தின் அரசுகளுக்கோ ஃப்ரான்ஸ் தேசத்தின் அரசாங்கத்திற்கோ இல்லை என்று பொருள். கட்டாய மத மாற்றங்களைப் பொறுத்த வரை, அவற்றிற்கு எதிரான பரிகாரங்களைப் பாதிக்கப் பட்டவர்கள் தேடிக் கொள்கின்ற வாய்ப்புகள், இன்று இருக்கின்ற குற்றமுறைச் சட்டங்களிலும் குடிமைச் சட்டங்ககளிலும் இல்லாமலும் இல்லை.

கட்டாயங்களால் மேற்கொள்ளப் படுகின்ற எந்த ஒரு உறவும் எந்த ஒரு நடவடிக்கையும், சட்டத்திற்கு எதிரான ஒரு குற்றமும் பாதிப்பும்தான் ஆகும் என்றால், கட்டாய மத மாற்றம் மட்டும் சட்டத்தின் பிடியில் இருந்து எப்படித் தப்பித்து விட முடியும் ?

ஆக, அடுத்தவரின் மதக் கோட்பாடுகளிலும் நம்பிக்கைகளிலும் உணவு-உடைப் பழக்கங்களிலும் தலையிடுகின்ற எந்த ஓர் உரிமையும், எந்த ஒரு குடி மகனுக்கும் எந்த ஓர் அரசாங்கத்திற்கும் அணுவளவும் இருந்திட முடியாது என்பது தெளிவு—மற்றவர்களுக்கு எதிரான குற்றங்களாகவோ தீங்குகளாகவோ அவை இல்லாத வரை!

பக்தர்கள் அணிகின்ற உடைகளுக்கும் அவர்கள் உண்ணுகின்ற உணவுக்கும், உடை, உணவு, என எதுவும் தேவைப் பட முடியாத கடவுளுக்கும் இடையே அப்படி என்னதான் ஒரு தொடர்பு இருந்திட முடியும் ? தம்மை வணங்குகின்ற பக்தர்கள், தங்கள் கால்களில் செருப்புப் போட்டு இருக்கிறார்களா, உடம்பில் சட்டை அணிந்து இருக்கிறார்களா, என்று எல்லாம் கடவுள் கவலைப் பட்டுக் கொள்வதற்கு வய்ப்புகள் எவையும் இருந்திடவும் முடியாது.

ஆனாலும், இப்படிப் பட்ட நம்பிக்கைகளை எல்லாம் பக்தர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்; இன்னும் என்ன வெல்லாமோ கூட அவர்கள் செய்து கொள்கிறார்கள்!

கடவுளை ஒரு மூடராகச் சித்தரித்து இழிவுகளை அவர் மேல் சார்த்தி விடுவதற்கும் ஒரு கொடுமைக் காரராகக் கடவுளைச் சித்தரித்துக் கொலைகளையும் கொள்ளைகளையும் அவர் மேல் கற்பித்து விடுவதற்கும் கூட அவர்கள் தயங்குவது இல்லை.

எனினும், மத கோட்பாடுகளில் தலையிடுவதற்கு எந்த அரசாங்கத்திற்கும் எந்த உரிமையும் இல்லை. மதத்தின் பெயராலோ மற்றும் பிற கோட்பாடுகளின் பெயராலோ இழைக்கப் பட்டு வருகின்ற குற்றங்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கைகளை எல்லா அரசாங்கங்களும் மேற்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. அதே நேரத்தில், மதத்தின் பெயரால் அணியப் படுகின்ற உடைகளுக்கும் வளர்க்கப் படுகின்ற முடிகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், மதத்திற்கும் இவற்றிற்கும் இடையே எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனினும், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களின் தோற்றம் மற்றும் உடைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றி இருக்கிறது ஃப்ரான்ஸ் அரசாங்கம்! மத வாதிகளின் கூற்றுகளை இவ்வளவு வினயமாக ஓர் அரசாங்கம் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டுமா ? என்னும் கேள்வி ஒரு புறம் இருக்க, வேறு பட்ட மதக் காரர்களுக்கு இடையில் நல் இணக்கத்தினை உருவாக்குவதுதான் இந்தச் சட்டம் அல்லது உத்தரவின் நோக்கம் என்று அது விளக்கமும் அளித்து இருக்கிறது.

அதாவது, வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமையை நிலவிடச் செய்கின்ற முயற்சிகளை விட்டு விட்டு, வேற்றுமைகளையே ஒழித்துக் கட்டி விடுகின்ற ஒடுக்குமுறை நடவடிக்கையினை ஃப்ரான்ஸ் அரசாங்கம் மேற்கொண்டு இருக்கிறது—நமது ஹிந்துத்வக் காரர்களைப் பின்பற்றி!

தாங்கள் விரும்புகின்ற உடைகளையும் தலை அலங்காரங்களையும் செய்து கொள்ளுகின்ற உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என்று ஃப்ரான்ஸ் அறிவித்து இருந்தால், அது பொது நயகம்(டெமாக்ரசி)! குற்றமாக இல்லாத தனி மனித விருப்பங்களில் அரசாங்கம் தலையிடுகிறது என்றால், அது வல்லதிகாரம்(டிக்ட்டேட்டர்ஷிப்); முரட்டு வாதமும்(ஃபாஸிசம்) கூட!

நாடு, மொழி, மதம், முதலிய வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்று பட்டு விடுகின்ற சிற்றுடைமைச் சிந்தனையின் ஒருமைப்பாட்டினைச் சுட்டிக் காட்டுவனவாக இந் நடவடிக்கைகள் அமைந்து இருக்கின்றன எனலாம். இல்லை என்றால், பின்-புதினவாதம் போன்ற ஃப்ரான்ஸ் நாட்டின் சிற்றுடைமைச் சிந்தனைகள் எல்லாம் இந்திய ஒன்றியத்தின் பேராசிரியர்களையும் அறிவாளர்களையும் கவர்ந்து இழுத்து இருக்க முடியுமா, என்ன ?

குறிப்பிட்ட சில உடைகளையும் அலங்காரங்களையும் மனிதர்கள் ஏற்றுக் கொண்டு இருந்த ஒரு காலத்தில் தோற்றம் கண்டு இருந்த சில மதங்கள், அம் மதக் காரர்கள்தம் பருமை நிலவரங்களின் வளர்ச்சிக் குறைவின் காரணமாக, அதே உடைகளையும் அலங்காரங்களையும் தங்கள் அடையாளங்களாக—மத அடையாளங்களாக—வலியுறுத்திக் கொண்டு வந்து இருக்கின்றன, அவ்வளவுதான்!

மற்றபடி, மனிதர்களின் பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப வளர்ந்து கொண்டு வந்து இருப்பவைதாம் உடைகளும் பிற அலங்காரங்களும் ஆகுமே ஒழிய, மதங்களாலும் கடவுளாலும் வடிவமைக்கப் பட்டு மக்களுக்குத் தரப் பட்டு இருப்பவை அல்ல!

இது போல, மக்களின் பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப நிலவிக் கொண்டு வந்து இருப்பவைதாம் அறமும் பண்பாடும் ஆகுமே ஒழிய, விண்ணில் இருந்தோ, மேல் மற்றும் ஆழ் மனங்களில் இருந்தோ உதித்து எழுந்து வந்து இருப்பவை அல்ல!

ஐந்திணை ஒழுக்கம் என்பது அடியவர்க்கு உரிய ஒழுக்கம் அல்ல வென்று தொல் காப்பியர் கூறுகின்ற அறத்தின் அடிப்படைகளைத் தொல் காப்பியர் காலத்தின் அடிமைச் சமுதாயத்து அறத்தில்தாம் நாம் தேடிட முடியுமே ஒழிய, பிற்காலத்துச் சமுதாயத்தினை அளவு கோலாகக் கொண்டு தொல் காப்பியத்திற்கு விளக்கம் அளித்து இருக்கின்ற பிற்காலப் புலவர்களின் அறப் போதனைகளில் அல்ல!

இது போல, வணிகச் சமுதாயத்தின் வளர்ச்சியிலும் சாதி சமுதாயத்தின் பொருளாதாரத்திலும்தாம் திரு வள்ளுவர் கூறுகின்ற அறத்தின் அடிப்படைகளை நாம் தேடிட முடியுமே ஒழிய, அவர் காலத்து மதங்களிலும் அவரது மேதாவித் தனத்திலும் அல்ல!

நிலைவான(எற்றெர்னல்) அறம் என்று திண்மை நிலையில் எந்த அறமும் இல்லை. மனித இயல்பான அறமோ நுண்மைப் பட்டுப் போய் உள்முகமான ஆன்மிக நிலையினை எய்தி விட்டு இருக்கிறது. (இது குறித்துப் பார்க்க: மனத்தின் விடுதலை) இந்த ஆன்மிக அறமோ கையால் ஆகாத—வெறும் நல் எண்ணங்களின் தொகுப்பான—ஓர் ஆசைதான் என்பதற்கு ஈண்டு விளக்கம் எதுவும் தேவையும் இல்லை.

இப்படி, செயற்படுத்தப் பட முடியாத ஓர் அறம்தான் ஆன்மிக அறம் என்றால், செயல் படுத்தப் பட்டு வந்து இருக்கின்ற திண்மையான அறமோ காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டு வந்து இருக்கிறது. இன்றைய நிலயில், முற்போக்கான அறமாக முதலாண்மை அறமும் பிற்போக்கான அறமாகச் சாதிய மற்றும் சிற்றுடைமை அறங்களும் நிலவிக் கொண்டு வருகின்றன. அறத்தின் இந்த முரண் நிலையினைப் புரிந்து கொள்ள முடியாத காரணத்தினால்தான், பாறையாக இறுகிப் போய் விட்ட சொற்களைப் பற்றியும் காணாமல் போய் விட்ட அறத்தினைப் பற்றியும் சுந்தர ராமசாமி பேசிட நேர்ந்து இருந்தது போலும்!

பொது நாயக உரிமை, தனி மனித மாண்பு, முதலியவற்றிற்கு ஒப்பளிப்பினயும் ஒப்புறுதியினயும் நல்குவதுதான் முதலாண்மை அறம்! ஆனால், சாதியச் சமுதாயத்தின் வயிற்றில் கருவாகி, உருவாகி, வளர்ந்து கொண்டு வந்து இருக்கின்ற முதலாண்மை, சாதியத்தை அழித்து ஒழிக்கின்ற அளவுக்கு இந்திய ஒன்றியத்தில் இன்னமும் வளர்ச்சி அடையாமல் இருப்பதுதான், தனி மனித உரிமையின் குரல் இன்னமும் இங்கே ஒடுங்கிப் போய் இருப்பதற்குக் காரணம்.

(முதலாண்மையின் வளர்ச்சியினை விரைவு படுத்துவதன் மூலமாகத்தான் முதலாண்மயினை ஒழித்திட முடியும் என்று ஏன் லெனின் கூறினார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, ஸ்தாலினிஸ்டுகளும் திரோத்ஸ்கிஸ்டுகளும் இன்னும் வெகு தூரம் சென்றிட வேண்டும் என்பது வேறு விசயம்.)

இந்த ஒடுக்கம்தான் காமம் இன்று ஒடுக்கப் பட்டுக் கிடப்பதற்கும் காரணம்! ஒரு முதலாண்மைச் சமுதாயத்தில், விடுதலையான தனி மனிதர்களுக்கு இடையே நடை பெறுகின்ற விடுதலையான காமம்தான் மனித மாண்புடன் திகழ்கின்ற ஒரு காமமாக இருந்திட முடியும். இந்திய ஒன்றியம் போன்றது ஓர் இரண்டும்-கெட்டான் சமுதாயத்தில், பொய்மையும் கபடமும் கலந்தது ஒரு போலியான காமத்தைதான் நாம் காணவும் முடியும்.

ஓர் இரண்டும்-கெட்டான் அறத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற இந்த இரண்டும்-கெட்டான் சமுதாய அமைப்பினை மறந்து விட்டு, காமத்தின் அறத்தினை வெறும் கதைகளில் போய்த் தேடிக் கொண்டு இருப்பதுதான் யமுனா ராஜேந்திரனின் குழப்பங்களுக்குக் காரணம் என்று தெரிகிறது. அதுவும், தங்கள் சொந்த வாழ்க்கைக்கும் தாங்கள் எழுதுகின்ற கதைகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளைச் சொல்வதற்குக் கூட துணிச்சல் இல்லாத கதைஞர்களின் கதைப்புகளில் இருந்து என்னத்தைதான் அவர் தெரிந்து கொள்ளவும் முடியும் ?

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்று பாடிய கணியன் பூங்குன்றனார்தம் மனித நேயத்தின் அடிப்படைகளை மனித மனத்தின் வளர்ச்சியில் மட்டும் தேடிக் கொண்டு இருப்பவர்கள், உள் மனம்-வெளி மனம், மேல் மனம்-கீழ் மனம், என்று எல்லாம் மாய்மைகளை அள்ளித் தெளித்துக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால், பூங்குன்றனாரின் மனித நேயத்திற்கு அவர் காலத்தின் உலக வணிகம்தான்—அன்றைய உலக மயமாக்கல்தான்—காரணம் ஆகும்.

மார்க்சியத்தின் அறவியல் என்ன ? என்று ஜெய மோகன் கேட்கின்ற பொழுது, மார்க்சிய வாதிகளின் அறம் என்ன ? என்று கேட்பதற்குதான் அவர் விரும்புகிறார் என்பது வெளிப்படை! ஆனால், இந்திய ஸ்தாலினிஸ்டுகளின் வசை மொழிக் கணைகளை மார்க்சிய வாதங்களாக அவர் எடுத்துக் கொண்டால், அதற்கு மார்க்சியம் எப்படிப் பொறுப்பு ஆகிட முடியும் ?

முதலாண்மை பற்றிய விள்ளனமும் ஆய்வும்தான் மார்க்சியம்! எல்லா ஆய்வுகளுக்கும் இருப்பது போல, ‘அறிவாண்மை நாணயம் ‘ என்பதுதான் அதற்கும் அறமாக இருந்திட முடியும். இதற்கும் அப்பால், மார்க்சியத்தின் அறம் என்ன வென்று ஜெய மோகன் கேட்பதில் எந்தப் பொருளும் இல்லை.

ஆக, இன்றைய நிலையில், முதலாண்மை அறமாகவும் முதலாண்மைப் பண்பாடாகவும் நமது அறமும் பண்பாடும் வளர்கின்ற வாய்ப்புகள் உருவாகிடக் கூடும் என்றால், அதற்காக நாம் மகிழ்ந்து கொள்ளலாம், அவ்வளவுதான்!

-சோதிப் பிரகாசம்.

சோதிப் பிரகாசத்தின் புதிய நூல்கள்:

ஆரியர் வரலாறு: பாகம் ஒன்று; ஆரியர் வரலாறு: பாகம் இரண்டு.

கிடைக்கும் இடம்:

பொன்மணி பதிப்பகம், 7, முதல் குறுக்குத் தெரு, சிறு தொண்டன் தெரு,

ஒண்டிக் குப்பம், மணவாள நகர், திருவள்ளூர்-602 002, தமிழ் நாடு

04116-241566.

கார்ல் மார்க்ஸ்: முதல்: பணம்: தமிழாக்கம்

வாழ்க்கையின் கேள்விகள்

வரலாற்றின் முரண் இயக்கம்

திரவிடர் வரலாறு

ஆகிய நூல்களும் கிடைக்கும்.

—-

sothipiragasam@yahoo.co.in

திண்ணையில் சோதிப் பிரகாசம்

  • ஜெயமோகன் நூலுக்கு அணிந்துரை
    Series Navigation

  • சோதிப் பிரகாசம்

    சோதிப் பிரகாசம்