அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

ஆசாரகீனன்


அரபு உலகின் பெண்களுக்கு சுதந்திரம் என்பது இன்னமும் கானல் நீராகவே காட்சி தருகிறது. பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, எந்த ஓர் அரபு நாடும் இன்னமும் பன்னாட்டு தரத்தை எட்டவில்லை என்று இடதுசாரி அல்லாத மனித உரிமைகள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரபு இனவாதம் மற்றும் அரபு ஏகாதிபத்தியத்தின் அதிதீவிர ஆதரவாளர்களான இடதுசாரிகளும், அவர்களால் நடத்தப்படும் மனித உரிமை அமைப்புகளும் ‘பல-பண்பாட்டியம் ‘ என்ற தங்களுடைய தற்கால போர்த் தந்திரத்தின் மூலம் அரபு நாடுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, மறைமுகமாக ஆதரிப்பதையும் ஏற்கனவே என்னுடைய பிற கட்டுரைகளில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க அரபு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் – இந்த நாடுகள் அனைத்திலும் நீதி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பெண்களுக்கு சாதகமில்லாத சூழ்நிலையே நிலவுவதாக விடுதலை இல்லம் (Freedom House) என்ற, அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயக்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜோர்டானில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மண்டல மாநாட்டின் போது வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பெண்களுக்கு அநீதி இழைக்கும் சட்டங்களை ஒழிக்கவும், அரசியலிலும் வணிகத்திலும் பெண்கள் பங்கு கொள்ள இருக்கும் தடைகளை நீக்கவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் தொகுப்பாசிரியர் ஸமீனா நஸீர். கொள்கை ரீதியாகவும், அரபு நாடுகளில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் இன்றியமையாதவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது, ‘மத்திய கிழக்கின் மக்கள் தொகையில் சரிபாதியினர் பெண்கள் ‘ என்று தெரிவித்தார். மேலும், ‘இந்தப் பெண்களுக்கு முழுப் பங்கு கொடுக்கப்படாவிட்டால், ஜனநாயக மயமாக்கும் இந்த முயற்சியே முழுமையடையாது ‘ என்றும் சொன்னார்.

இந்த ஆய்வானது நீதி, பெருளாதார உரிமைகள் மற்றும் சமூக பண்பாட்டு உரிமைகள் உட்பட பல துறைகளில் 16 அரபு நாடுகளிலும், சர்ச்சைக்குரிய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பகுதிகளான மேற்குக் கரை (West Bank) மற்றும் காஜா (Gaza)விலும் நடத்தப்பட்டது.

இவற்றுள் மொராக்கோ, துனிஸியா மற்றும் அல்ஜீரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ‘ஒழுங்கற்ற பின்பற்றல் ‘ என்று சொல்லத்தக்க விதத்தில், உரிமைகள் பற்றி உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட தரப்படுத்தலுக்கு அருகில் வந்துள்ளன.

பெரும்பாலான அரபு நாடுகள், குறிப்பாக இடதுசாரிகளின் அபிமானத்துக்குரிய சைக்ளாபியன் சிந்தனையான வஹாபியத்தைத் தன் பெட்ரோ டாலர்களின் உதவியுடன் உலகெங்கும் பரப்பிவரும் சவுதி அரேபியாவும், பிற வளைகுடா நாடுகளும் இந்த ஆய்வில் மிக மோசமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

உதாரணமாக, சவுதி அரேபியாவிலுள்ள மருத்துவமனைகளில் ஆண்களின் அனுமதியில்லாமல் பெண்கள் எந்த சிகிச்சையும் பெற முடியாது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் (UAE) சேர்ந்த ஒரு பெண் வேறு நாட்டு ஆணைத் திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணின் குடியுரிமை பறிக்கப்படும். ஆனால், ஆண்களுக்கு இத்தகைய கட்டுப்பாடு கிடையாது. கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் இதே போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சி நடந்ததும், அதை இடதுசாரிக் கட்சியான சி.பி.எம்.மின் சட்டமன்ற உறுப்பினர் ஆதரித்து வாக்களித்ததையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

அரபு நாடுகளில் பெண்களின் ஒட்டுமொத்த நிலை இப்படி இருந்தாலும், சொற்பமான மாற்றங்களும் ஏற்படத் தொடங்கியுள்ளன.

இந்த ஆய்வின்படி, மொராக்கோ நாடு பெண்களின் உரிமைகளை ஓரளவு அதிகப்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் பெண்களின் விவாகரத்து உரிமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன் குவைத் நாட்டில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஸமீனா நஸீர் தெரிவித்தார்.

(ராய்டர்ஸ் செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

இந்த ஆய்வறிக்கையை அரபி மொழியில் படிக்க விரும்புபவர்கள் பார்க்க: அரபி மொழிபெயர்ப்பு

மேற்கண்ட ஆய்வு நடத்தப்பட்ட முறை குறித்து அறிய: ஆய்வு விவரங்கள்

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்