தேவமைந்தன்
முதலாளியத்துக்கென்று ஒரு பரம்பரை உண்டு. அப்பன், தாத்தன், பாட்டன் போல. முதலாவது, ஆகப்பழைய முதலாளியம். இது, மனிதர்களுக்குப் பொதுவாக இருந்த நிலங்களைத் தமக்கென வளைத்துப்போட்டு, ஒரே தரப்பட்டவர்களை உழுபவர் உழுவித்துண்பவர் என்று பிரித்து பண்ணையடிமைகள் பண்ணையாண்டான் என்ற நிலையை உருவாக்கியது. இரண்டாவது, பழைய முதலாளியம். இது நிலக்கிழார்கள் என்றழைக்கப்பட்ட பண்ணையாண்டார்களை ஒழித்துக்கட்டுவதற்காக அவர்களிடமிருந்த அதிகாரத்தை முற்றாகக் கைப்பற்றியது. மக்களாட்சி என்பதையே தான் பரிந்துரைக்கும் அரசுமுறையாக பழைய முதலாளியம் முன்வைத்தது. நிலவுடைமை என்ற பிற்போக்கைத் தான் எதிர்ப்பதாகவும், உயர்கல்வியும் உயர்தொழில்நுட்பமும் தனக்குச் சாதகமானவை என்றும் அறிவித்தது.
நிலவுடைமையாளர்களிடமிருந்து அதிகாரத்தை முழுவதுமாகக் கைப்பற்றி அவர்களை அவர்கள் ஆண்டான்களாக இருந்து அதிகாரம் செலுத்தி இன்புற்ற சமூகத்திலிருந்தே அன்னியப்படுத்தியதன் வழியாக, நிலவுடைமைச் சமூகத்தில் நிலவிய உறவு நிலைகளைச் செயல்படாதவை ஆக்கி, சிற்றூர் மக்களை ஒரு கொடும்பிடியிலிருந்து விடுவித்து ‘ஆசுவாச’ப் பெருமூச்சு விடவைத்தது பழைய முதலாளியம். அரசியல் – பொருளியல் அடிப்படைகளில் பண்ணையாண்டான்களின் அரக்கப்பிடியிலிருந்து சிற்றூர் மக்கள் விடுபட்டனர்.
ஆனால் மடாலயங்களும் ஆதீனங்களும் திருச்சபைகளும் தாமே நிலவுடைமை மிக்கவைகளாக விளங்கியமையால், மறைமுகமாக நிலக்கிழார்களுடன் அணுக்கமாக நடந்து கொண்டன. அதைக் கண்ட பழைய முதலாளியம், மத எதிர்ப்பு முழக்கங்களை முடுக்கிவிட்டது.
மூன்றாவது, புதிய முதலாளியம். இது, மிகவும் வளர்ந்த நாடுகளின் பேராளுமையின் நேசத்திலும் நவீன காலனியத்தின் சூழ்நிலையிலும் வளர்ந்தது. தன் உடன்பிறந்த தொழில்மயமாதலுடன் ஆரவாரமில்லாமல் அதே பொழுது காத்திரமாக இது வளர்ந்தது. நிலவுடைமையைப் பற்றி இது கொஞ்சமும் கவலைப்படவில்லை. பன்னாட்டு வங்கிகளின் ஆதரவு எப்பொழுதும் இதற்கு உண்டு. மிகவளர்ந்த நாடுகளின் நிதி உதவியும் இது கேட்டபொழுது நீளும்.
நவீன காலனியத்தின் சூழ்நிலையில் செழித்து வளரும் முதலாளித்துவத்தைச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, மியான்மர், ஈரான், பாகிஸ்தான், அரபு நாடுகள் போன்றவற்றுள் காணலாம். நவீன காலனிய நாட்டை மக்களாட்சி நிலவும் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.
பார்க்க அப்பாவித்தனமாகவும் வள்ளல் தன்மையுடனும் காணும் இந்தப் புதிய முதலாளியம், காந்தியடிகளின் கனவுகளுக்கெதிராகச் சிற்றூர்ப்புற மக்களையும் அவற்றின் வளங்களையும் மனச்சான்றில்லாமல் சுரண்டுகிறது. “என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் பொருளியல் அமைப்பு எவ்வாறு விளங்கவேண்டுமென்றால்(கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலுமுள்ள)யாவரும் உணவு உடை ஆகியவற்றின் தேவைகளால் அல்லல் உழக்கக் கூடாது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தமக்குள்ள நியாயமான வரவு செலவுகளுக்கேற்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டு போவதற்கேற்ற வேலையைப் பெற வேண்டும். இதற்கு என்ன வழி? தம் அடிப்படைத் தேவைகளுக்கான பொருளுற்பத்தியின் வழிகள் மக்களின் பிடியில் இருக்க வேண்டும். சுரண்டல்வாதிகளின் கைகளுக்கு அவை போகவே கூடாது. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பண்டங்களின் உற்பத்தி எந்த நாட்டினுடைய – எந்தக் குழுவினுடைய குத்தகைக்கோ தனியுரிமைக்கோ போய்ச்சேர்வது அநீதி. இந்த மிக எளிய கொள்கை அலட்சியம் செய்யப்படுவதாலேயே மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவதை இன்று நாம் காண நேர்கிறது. இதை, இந்த மகிழ்ச்சியற்ற தேசத்தில் மட்டுமல்ல; உலகின் பிற பகுதிகள் பலவற்றிலும் பார்க்க நேர்வது இதனால்தான்!” என்றார் காந்தி. ஆங்கிலச் சொற்களான ‘equal’ ‘equitable’ என்ற இரண்டைப் பயன்படுத்தித் திருக்குறளேபோல் இரண்டடிகளில் இவ்வாறு சொன்னார்: “My ideal is equal distribution, but so far as I can see, it is not to be realized. I therefore work for equitable distribution.” “என் விழுமியக் கோட்பாடு – சரி சமமான பங்கீடு; அது நிறைவேறாது போலத் தெரிகிறது. அதனால் நேர்மையான பங்கீடு கிடைக்க நான் உழைக்கிறேன்.”*
இந்தப் புதிய முதலாளியம் இரும்புக்கைகளால் புரட்சியை அடக்கி ஒடுக்குகிறது; திரைக்குப்பின் பாசிஸத்தை எக்கணமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது; உயர்கல்வி – உயர் அறிவியல் தொழில் நுட்பத்தை அரவணைத்துக் கொள்கிறது; அவற்றுக்கேற்ப ‘infra structure’ எனப்படும் உள்கட்டமைப்புகளைத் திடம்பட உருவாக்கிக் கொள்கிறது; தேர்தல்களையும் அவற்றில் வாக்களித்தே தீரவேண்டிய கட்டாயத்தையும் உருவாக்குகிறது; தேர்தல்களைப் புறக்கணிப்போரை உதாசீனப்படுத்துகிறது. இந்தப் புதிய வல்லாண்மையின் மிகவும் ஆற்றல்மிக்க போர்க்கருவிகள் இரண்டு – 1. உயர்கல்வி 2. உயர் தொழில்நுட்பம். இவை தொழில்மயமாதலுக்கு வழிவகுக்கின்றன. பெருத்த முதலீடுகளை எதிர்நோக்குகின்றன. மார்க்சீயத்தில் தேர்ந்த ஜோதி பாசு அவர்களைக்கூட மாநிலத்துக்கு ஒன்றும் மையத்துக்கு ஒன்றுமான பொருளியல் கொள்கையை வரவேற்கச் செய்கின்றன.
உயர்கல்வி குறித்த தமது திட்டவட்டமான கருத்தாடல்களைக் காந்தியடிகள் தெளிவாக முன்வைத்தார். நிர்மல் குமார் போசின் தெரிவுத் தொகுப்பில் இவற்றை நாம் காணலாம். இந்தியாவிலும், உலகின் எந்தப் பகுதியிலும் எந்த அளவு உச்சத்துக்கு உயர்கல்வி தரப்பட்டாலும் தமக்கு எதிர்ப்பேதும் கிடையாது என்று கூறிவிட்டு, இந்தியாவில் அடிமைக் கல்வி நீடிப்பதை மட்டுமே தான் விரும்பவில்லை என்று மொழிந்து பின்வருமாறு சொல்கிறார்:
“பொது வருவாயிலிருந்து செலவழித்துத் தரப்படும் எல்லா உயர்கல்வி வகைகளையும் எதிர்க்கிறேன். ஏனென்றால் எனக்குத் திடமான நம்பிக்கை ஒன்றுண்டு. இத்தகைய (அடிமைக்) கல்வியை இவ்வளவு செலவழித்துத் தருவது, நன்கு கற்ற வகுப்பாரிடையே வேலையின்மைக்கு மட்டுமே வழிகோலுகிறது. நம் உயர்கல்விநிலையங்களில் பயிலுகின்ற இளைஞர்களுக்கும் இளைஞியர்க்கும் அந்தக் கல்வி போதுமான உடல் – உள நலத்தைத் தருவதில்லை. மேலும் இந்தியாவில் ஓர் அயல் மொழியைக் கொண்டு நல்கப்படுகின்ற உயர்கல்வி, அறிவு மற்றும் ஒழுக்கங்களின் கணித்துப்பார்க்க முடியாத சிதைவையே நாட்டுக்குத் தந்துள்ளது. நாம் நம் சொந்தக் காலங்களில் இந்த அழிவை எடைபோட்டு உணர்ந்துகொள்ள முடியாத அளவு கழிவிரக்கத்தில் உள்ளோம். நம்முள் இந்த உயர்கல்வியை இந்த முறையில் பெற்றுள்ளவர்கள் ஒரே சமயத்தில் இந்தத் தீமையை மதிப்பிடுபவர்களாகவும் இந்தத் தீமைக்கு இலக்கானவர்களாகவும் இருப்பது – கிட்டத்தட்ட, ஓர் ஆற்றமுடியாத அரிய செப்படிவித்தையாகவே திகழ்கிறது.” காந்தியடிகள் எதிர்த்த உயர்கல்வியை ஏற்றுக்கொண்ட அறிவாளிகள், நம் நாட்டு மக்கள் வருவாயால் படித்து விட்டு, குடியேற்ற நிலத்து மக்கள் மனப்பான்மையுடன் புதிய ஆண்டைகளின் நாடுகளுக்குச் சென்று தம் அறிவை அங்கே விற்றுக்கொண்டு, தம் சக இந்தியர்கள் முன் தாம் மிக அதிகச் சம்பளம் பெறுவதாகத் தருக்கித் திரிவதை இன்றும் காண்கிறோம். காந்தியடிகள் ஆதரித்த உயர்கல்வி முறையில் படித்திருந்தால் அவர்கள் தம் சொந்த நாட்டுக்குத்தானே பயன்பட்டிருப்பார்கள்!
உயர்தொழில் நுட்பத்தைக் காந்தியடிகள் எந்த அளவு எதிர்த்தார் என்பதற்குக் கைராட்டையில் நூல் நூற்குமாறு அவர் காந்தியவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்தமை ஒன்றே சான்றாகும். காந்தி ஆசிரமத்தில் மகாதேவ தேசாய் இவ்வாறு நூல் நூற்பதை லூயிஃ பிஷர் பார்த்துக்கொண்டிருந்தபொழுது இதை உணர்ந்திருப்பார். காந்தியுடன் ஒரு வாரம் கழித்ததை அவர் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். அதை வாசிப்பவர்கள் பலவகையான உணர்ச்சிகளை அடைவது உறுதி.
உயர் அறிவியல் – தொழில் நுட்பத்துக்கெதிரான மாசேதுங்கின் வினைப்பாடுகளைப் பார்ப்போம். ஒருசமயம் மாவோ அவற்றை ஆதரித்திருந்தால், 1927ஆம் ஆண்டுக்கு முன்பே சியாங்கேசேக்’கால் தீர்த்துக்கட்டப்பட்டிருப்பார் என்று எஸ்.என்.நாகராசன் சொன்னார். “மனிதர்களே தீர்மானிப்பவர்கள் உயர்தொழில் நுட்பக்கருவிகள் அல்ல..” என்றார் மாசேதுங்.**
மக்கள் கைகளில் அடிப்படைத் தேவைகளுக்கான உற்பத்திக் கருவிகள் இருக்க வேண்டும் என்று காந்தியடிகள் கருதியது போலவே மாவோவும் கருதினார் என்பதற்கு அவர்தம் ‘மக்கள் போர்’க் கோட்பாடு சரியான சான்று. தம்மைக் கட்டுப்படுத்தக்கூடிய பொருளியல் சூழல்களை மக்கள் எப்பொழுதும் தம் கைகளுக்குள் வைத்திருப்பதற்கான வழிவகைகளை அந்தக் கோட்பாடு காட்டுகிறது.
மாவோவின் கருத்துப்படி, “பலவீனமான மக்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு பலம் மிகுந்த எதிரியைத் தோற்கடிக்கும் போர் – மக்கள் போர் ஆகும்.” உணர்வுள்ள படைப்பாளிகளான மக்களின் கைகளில் தீர்மானிக்கும் திறனை வழங்குவது ‘மக்கள் போர்’க் கோட்பாட்டின் நோக்கமாகும். உயர்தொழில் நுட்பத்தைத் தோற்கடிக்கும் பெருமுயற்சிக்கு தெளிவானதோர் அடித்தளம் இது. இந்த வழியில் மட்டுமே மேலாண்மையர் கைகளில் அறிவியலும் உயர்தொழில் நுட்பமும் தங்கி விடுவதைத் தடுக்க இயலும். ஆனால் அவை பாட்டாளி மக்களின் போர்க்கருவிகளாக மாட்டா.
சீனத்திலிருந்த டெங் குழு, ‘உற்பத்திச் சக்திகள் கோட்பாட்டை’த் தீவிரமாக ஆதரித்தது. அறிவியலும் உயர்தொழில் நுட்பமுமே அவர்கள் விரும்பிய ‘உற்பத்திச் சக்திகள்.’ இந்தக் கோட்பாட்டை மிகவும் பிற்போக்கான கோட்பாடென்று சொல்லி இடைவிடாமல் எதிர்த்தார் மாசேதுங். ‘உயர்தொழில்நுட்ப நிபுணர்களே தேசத்தின் தேவை’ என்று கூக்குரலெழுப்பிய டெங் குழுவினருக்கு, அப்பொழுதைய சீன தேசத்தின் நிலையில் உயர்தொழில்நுட்ப நிபுணர்கள் தேவையே இல்லை புரட்சிக்காரர்களே அடிப்படைத் தேவை என்றார் மாசேதுங். டெங் குழுவாரைப் ‘புரட்டுக் கும்பல்’ என்றார் மாவோ. புரட்டல் கொள்கையன், புரட்சிக்காரர்களை வெறுப்பவன்; சிவப்புப் போர்வை போர்த்திய முதலாளியன் அவன்; தன் உண்மை உருவத்தை மறைக்கவே அவன் சிவப்புப் போர்வையைப் போர்த்துக் கொள்கிறான். அவனொரு முள்ளங்கிக் கம்யூனிஸ்டு. (முள்ளங்கி, வெளியே சிவப்பாகவும், உள்ளே வெள்ளையாகவும் இருக்கிறது). எல்லாப் புரட்டல் கொள்கையரும் நவீன அறிவியலையும் உயர்தொழில் நுட்பத்தையும் அவற்றின் அடிப்படையிலான உற்பத்தி முறையையுமே தம் ஆட்சி தொடர்ந்து நடத்தப்பெறுவதற்கான மிகவும் நம்பகமான ஆயுதங்களாகக் கொண்டுள்ளார்கள். பாட்டாளி மக்கள் இத்தகைய முதலாளியத்தின் கமுக்கத்தை உணர்ந்து கொள்ளுவார்களேயானால், அவற்றை எதிர்த்துப் போராடுவதைத் தவிரத் தமக்கு வழி வேறேதும் இல்லை எனப் புரிந்து கொள்வார்கள். இந்த மக்கள் போரையே மாவோ தன் கடைசிக் காலத்தில் மகத்தான முறையில் நடத்தினார். மொழித்துறை, கலை இலக்கியத்துறை, பொருளியல் துறை, தொழில் துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, உடலுழைப்புத் துறை, அரசியல் துறை, சமூக அமைப்புத் துறை, உற்பத்தித் துறை ஆகிய துறைகளில் மக்கள் போர் நிகழ்த்தப்படவேண்டிய முறைகளைக் கூறிய அவர், அறிவியல் – உயர்தொழில் நுட்பத்துறைகளை தன்னாட்டு மயப்படுத்தும் வழியைக் காட்டினார். “இரண்டு கால்களாலும் நடப்பது” என்னும் புகழ்மிக்க குறியீட்டுத் தொடராக, இதையே அடிக்கடி அவர் தன் கருத்தாடல்களின்பொழுது பயன்படுத்தி வந்தார்.**
காந்தியடிகள் இந்தியாவுக்கும் மாசேதுங் சீனாவுக்கும் சொன்ன அறிவுரைகள் அந்த அந்த அரசியல்வாணரால் மீறப்பட்டதால் பன்னாட்டு அரசியலில் விளைந்துவரும் அந்த அந்த நாட்டின் அடையாளமிழத்தல்களை மெய்யான அரசியல் அறிவுபெற்ற நோக்கர்களே உணர்வார்கள்.
***
* Nirmal Kumar Bose(ed.), Selections From Gandhi, Navajivan Publishing House, Ahmedabad. 1948. quoted in ‘All Men Are Brothers'[Life And Thoughts Of Mahatma Gandhi as told in his own words], Unesco 1958.
** எஸ். என். நாகராசன், மார்க்சியம் – கிழக்கும் மேற்கும், நிகழ், கோவை 1993. ‘நிகழ்’ – தற்பொழுதைய முகவரி: தமிழ் நேயம், 24, வி.ஆர்.வி. நகர், ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்), கோவை-641 029.
****
karuppannan.pasupthy@gmail.com
- ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி ? (கட்டுரை: 13)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் !
- தாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு !
- வாணவேடிக்கைகளூம், உள்ளிடுங்கிய அறைகளும்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………..(10) த.ஜெயகாந்தன்
- சம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)
- திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
- கவிதைகள்
- ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.
- ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்
- காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap)
- பங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு
- மகாத்மா காந்தியின் தவறுகள்
- தமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு
- கவிதையின் அரசியல்– தேவதேவன்
- எண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்
- கூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்!
- வடக்கு வாசல் பக்தி இசைவிழா
- நான் சொலவதும் இரண்டில் ஒன்றே!
- கத்திரிக்காயும் பங்கும்..
- மொழியாக்கம்
- அப்பா வீடு
- ஜெகத் ஜால ஜப்பான்
- நினைவுகளின் தடத்தில் – (4)
- அரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்
- மாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47
- மீள்வு
- கவிதைகள்
- கீறல்பட்ட முகங்கள்
- மலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்!
- அம்மா
- சுகார்டோ