சேவியர்.
****
அந்தப் பரம்பரை வீடு
ஏலத்துக்குப் போகிறது.
வரிசை கலையாமல் வைத்த புள்ளிகள்,
குதிரைக்குளம்படிகளால்
கலையத்துவங்கியிருந்தது.
ஓரமான அந்த சாய்வு நாற்காலியில்
பிரபஞ்ச சோகத்தின் பிரதிபலிப்பாய்,
வளைந்த கைத்தடியுடன்
முதுமை அழுத்தமாய் முடிச்சிட்ட ஓர் முகம்.
பரணின் பொருட்களெல்லாம்
படிக்கட்டின் பக்கத்தில்,
தலையைக் கலைத்தாலே கத்தும் பெரியவர்
நிலை தடுமாறி இன்னொரு ஓரத்தில்.
வீட்டைச் சுற்றிலும்,
வேடிக்கை பார்க்க மட்டுமே
பழக்கப்பட்ட மக்கள்.
அசோகச்சக்கர முத்திரைத் தாள் ஒன்று
முன்பக்க தூணில்,
நாற்காலியில் மிதித்துக்கொண்டிருக்கும்
அரசாங்க அதிகாரி.
ஜனங்களுக்கு அது ஓர் பழைய வீடு
அவர்களுக்கோ
மூச்சுக்காற்று மோதி மோதி
ஜென்ம ஜென்மமாய் பொத்தி வைத்திருந்த கூடு.
யாராரோ ஏதேதோ பேசுகிறார்கள்
இறந்த காலத்துக்குள் இறைக்கப்பட்ட நினைவுகளும்,
எதிர்காலத்தின் இருட்டுச் சுவர்களுமாய்
நிகழ்காலம் கொத்தப்பட்ட நிமிடம் அது.
கைத்தடி முதியவர் திரும்பிப்பார்த்தார்,
எதையோ தேடும் முனைப்புடன்
எல்லார் முகமும் பார்த்தார்…
எங்கே ? எங்கே அவள் ? ?
அதோ, மதிர்ச்சுவரின் ஓரத்தில்,
இனியும் அழுதால் இருக்கும் பார்வையும்
பறி போய்விடுமோ எனும் பயத்துடன்,
முதுமையின் இன்னொரு முடிச்சு.
அவளின் நெஞ்சோடு
இறுக்கமாய்க் கட்டிய இருகைகளுக்குள்
இன்னும் நினைவுகள் மஞ்சள் வாசனை வீசும்,
திருமண நாள் புகைப்படம்.
***
- வசந்தத்தின் வாசல்இதுவல்ல
- என் கணக்கு வாத்தியார்
- ம்…
- திண்ணை அட்டவணை – சூன் 2001
- சுந்தர ராமசாமிக்கு இயல் விருது – 1
- அவல் புலாவ்
- ஒயின் வறுத்த சாதம் (ஒயின் ஃப்ரைட் ரைஸ்)
- நொறுங்கிய பழமை
- மூன்று கவிதைகள்
- கனவுக் குதிரைகள் (Walt Bresette நினைவாக)
- சிறியன செய்கிலாதார்…
- முத்தமிடு!
- நல்ல நாள்
- இருமை.
- மரணம்
- அரசாண்ட கூடு.
- காதலுக்கு மரியாதை ?
- இந்த வாரம் இப்படி — சூன் 17
- கடன்